சட்ட விரோதமான, நச்சுமிகு குப்பை எரிக்கும் கருவிகளைத் தடைத் தடைசெய்க!

சில நாட்களாகக் குப்பைகளை எரித்து அழிப்பதாகச் சொல்லப்படும் சிறியவகை குப்பை எரிவுலை கருவிகளின் காணொளிகள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு அவை வைரலாகி வருகின்றன. அவற்றைக் குறித்த சில உண்மைகளை இங்குப் பகிர்கிறோம்.

முதலாவதாக, குறிப்பிட்ட காணொளியானது எந்த எரிபொருளும் இல்லாமல் வெறும் காற்றிலேயே குப்பைகளை எரிப்பதாகச் சொல்கிறது. போடப்படும் நெகிழிக் குப்பைகள் அனைத்தும் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களாக – அதாவது எரிபொருளாக இருக்க எரிபொருள் இல்லாமலேயே எரிகிறது என்பது எத்தனை நகைப்புக்கு உரியது.

உண்மையில் இத்தகைய கருவிகள் குப்பைகளின் அளவைக் குறைக்கிறதே தவிர அவற்றை அழிப்பதில்லை. இது போன்ற எரிவுலைகள் குப்பைகளை மிக எளிதில் சூழலில் பரவக்கூடிய நச்சுப் புகையாகவும் சாம்பலாகவும் மாற்றுகின்றன.  ஒரு வாதத்திற்கு சொல்வதானால், குப்பையைத் தூக்கி சாலையில் வீசுவது இதைவிடப் பாதுகாப்பானது. அந்தளவிற்கு இவற்றை எரிப்பது மோசமானது.

இக்கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள், அரசாங்க நெறிமுறைகளின்படி குப்பைகளைப் பாதுகாப்பாக அகற்றுவதாக விளம்பரப்படுத்துகின்றன. உண்மையில், இக்கருவிகளில் குப்பைகளை எரிக்கும்போது வெளியாகும் PM 2.5 (நுண்துகள்கள்), கந்தக ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள், ஹைட்ரோ குளோரிக் அமிலம், டயாக்சின் மற்றும் பியூரான்கள் போன்ற எந்த நச்சுக்களையும் கண்காணிக்கும் அல்லது அளவிடும் எந்த வசதிகளும் இல்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, (SWM 2016) மாசுபாட்டைக் கண்காணிக்கும் கருவிகள் எதுவும் பொருத்தப்படாத இத்தகைய குப்பை எரிக்கும் கருவிகள் சட்ட விரோதமானவை என்பதோடு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இவற்றை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது உயர் வெப்பநிலையில் குப்பைகளை எரிப்பதால் நச்சுக்களை உருவாக்குவதில்லை என்று இதனை விளம்பரப்படுத்துபவர்கள் சொல்கின்றனர். ஆனால், மெர்க்குரி, காட்மியம், குரோமியம் போன்ற நம் குப்பைகளிலிருக்கும் கடும் நச்சுத்தன்மையுடைய கன உலோகங்கள் உள்ளிட்டப் பல நச்சுக்கள் எந்த உயர் வெப்பநிலையிலும் தம் நச்சுத்தன்மையை இழந்து அழிவதில்லை என்பது ஏராளமான ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் சொல்லும் உயர் வெப்பநிலையானது நடைமுறையில் குப்பைகள் எரியும் முழு கால அளவிலும் சாத்தியமில்லை. ஆகவே டயாக்சின் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுவதையும் இக்கருவியால் தடுக்க முடியாது.

நெகிழி உள்ளிட்ட நமது குப்பைகளில் கன உலோகங்கள், எளிதில் ஆவியாகக்கூடிய கரிமங்கள் (VOC’s), எரிக்கும்போது நச்சை உமிழும் குளோரின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றை எரிக்கும்போது அவை அழிக்கவோ கையாளவோ முடியாத நச்சுச் சாம்பலையும் புகையையும் உமிழ்கின்றன. கூடுதலாக, காலநிலை மாற்றத்தை ஊக்குவிக்கும் பசுங்குடில் வாயுக்களும் ஏராளமாக உமிழப்படுகின்றன. ஆகவே இது சாம்பல் கொட்டப்படும் நிலத்தையும், நீராதாரங்களையும் காற்றையும் கடுமையாக மாசுபடுத்துகிறது. இந்நச்சுக்கள் கருச்சிதைவு, மூளை நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், தோல் நோய்கள் உள்ளிட்டக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

கையாள முடியாத குப்பைகளை உற்பத்தி செய்து அவற்றைச் சந்தைப்படுத்தி லாபமீட்டும் சூழல் குற்றவாளிகளான பெரு நிறுவனங்களை அவற்றின் மோசமான உற்பத்திப் பொருட்களால் ஏற்படும் இழப்புகளுக்குப் பொறுப்பேற்காமல் தப்பித்துக்கொள்ளச் செய்ய இத்தகைய மோசடியான கருவிகள் உதவுகின்றன. மேலும் வீட்டிலேயே குப்பைகளை எரித்துக்கொள்ளலாம் என்பது போன்ற பரப்புரைகள் குப்பை மேலாண்மையில் அரசாங்கத்தின் பொறுப்பையும் தட்டிக் கழிக்க உதவுகின்றன.

எதைப்போட்டாலும் எரித்து அழித்து விடலாம் என்ற பரப்புரையின் மூலமாக மிக மோசமான – கண்மூடித்தனமான நுகர்வை இது போன்ற கருவிகள் ஊக்குவிக்கின்றன. ஏற்கனவே வேக வேகமாக இயற்கை வளங்களை இழந்து கொண்டிருக்கும் புவியின் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தத் தக்க வளங்களை இவை எரித்து வீணடிக்கின்றன. இதனால், மீள்புதுப்பிக்க முடியாத வளங்களின் தேவையும் அதிகரிக்கிறது.

கையாள முடியாத பல்லடுக்கு நெகிழி (sachets, Multilayered plastics) போன்ற குப்பைகளை எளிமையாக அழிக்க ஒரே தீர்வுதான் உள்ளது. அது அவற்றை உற்பத்தி செய்யாமலேயே இருப்பதுதான். அதற்குத் தீவிரமான விழிப்புணர்வும் அரசியல் துணிவும் உலகளாவிய ஒத்துழைப்பும் நமக்குத் தேவைப்படுகின்றன. நீண்ட கால அளவில் நாம் ஒவ்வொருவரும் இதற்காக உழைப்பது மட்டுமே அதனைச் சாத்தியமாக்கும். இது போன்ற போலியான மோசடியான தொழில்நுட்பத் தீர்வுகளில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்போடு இருந்து சூழல் நலனுக்காக உழைப்போம்.

தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு இத்தகைய மோசடியான கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிறுவனங்களின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, மக்களின் உடல் நலனை முன்னிட்டு இதுவரையிலும் விற்கப்பட்டக் கருவிகளையும் உடனடியாகத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:

ஜீயோ டாமின்

7708020668

3D render of a dark grunge display background with smoky atmosphere

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments