திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை 2019

Kudankulam-Nuclear-Power-Plant-

ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உணரமுடிகிறது. இன்றுமட்டுமல்ல துவக்கம் முதலே இந்திய அணுசக்தி துறை சரியான பாதையில் பயணிக்கவில்லை. இந்த ஆண்டுவெளிவந்துள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் அணுசக்தியின் பங்கு குறைந்துள்ளது.

இந்திய அரசு நீண்டகாலமாக 22 உலைகள் இயங்கிவருவதாக குறிப்பிட்டாலும் ராஜஸ்தானில் உள்ள முதல் உலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மின்னுற்பத்தி நடைபெறவில்லை, சென்ற ஆண்டுதான் அந்த உலை மூடப்பட்டுவிட்டதாக அணுசக்தி துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2016ஆம் ஆண்டு இந்தியாவின் மின்னுற்பத்தியில், அணுசக்தியின் பங்களிப்பு 3.4 சதவீதமாக இருந்தது, அது 2017 ஆம் ஆண்டு 3.2ஆக குறைந்து சென்ற ஆண்டு 3.1சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் மூலம் நமக்கு கிடைத்துவந்த மின்சாரத்தின் அளவு 25%அதிகரித்துள்ளது. இந்தியாவின் மின்தேவையை பூர்த்திசெய்யக்கூடிய புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களுக்கும் அணுசக்திக்கும் இடையே இருந்த வித்தியாசம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்தாண்டில் சூரியசக்தியை வைத்து நடைபெற்ற மின்னுற்பத்தி, அணுசக்தியை பயன்படுத்தி பெறப்பட்ட ஆற்றலைவிட அதிகமாக இருந்தது. கடந்த பலஆண்டுகளாகவே காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு அணுசக்தியைவிட அதிகமாக இருந்துவருகிறது, இனி வரக்கூடிய காலங்களில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கவேசெய்யும் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

சென்ற ஆண்டு எந்தவொரு அணுவுலையும் புதிதாக மின்னுற்பத்தியை துவக்கவில்லை, கூடங்குளத்தில் கட்டப்படும் இரண்டு உலைகள் தவிர கடந்த ஒன்பது ஆண்டுகளாக 4 கணநீர் உலைகள் கட்டப்பட்டுவருகின்றன. கல்பாக்கத்தில் கட்டப்பட்டுவரும் ஈனுலைகளை பற்றி கடுமையாக இந்த அறிக்கையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு துவங்கிய கட்டுமானம் 2010 ஆம் ஆண்டு உற்பத்தியை துவக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை பலதேதிகள் குறிக்கப்பட்டு, அவையும் நிறைவேற்றமுடியாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதமாகிவருகிறது. ஈனுலைகள் குறித்து இந்திய அரசு நாடாளுமன்றத்தில் கடைசியாக தெரிவித்திருப்பது, அவற்றில் வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் “தொடர்வினை” ஆரம்பிக்கப்படுமென்றும், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்வாக்கில் மின்னுற்பத்தி துவங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈனுலைகளை கட்டுவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 3,900 கோடி ரூபாய்கள், அதுவே இப்போது 7,000 கோடியாகியுள்ளது, கிட்டத்தட்ட ஒருமடங்கு அதிகரித்துள்ளது. இதில் செலவுமட்டும் அதிகரிக்கவில்லை, 11 ஆண்டுகள் காலதாமதமும் ஆகியுள்ளது.

கக்ரபார் அணுவுலைகளின் கட்டுமானமும் தாமதமாகவும், அதிக செலவுகளுடனும் தான் நடைபெற்றுவருகின்றன.கோரக்ப்பூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள கணநீர் உலைகளுக்கான வேலைகள் இப்போதுதான் துவங்கியுள்ளன, மேலும் அரசு 10கனநீர் உலைகள் அமைக்க நிர்வாகரீதியான அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள எந்த அணுவுலைகளுக்கும் பூர்வாங்க பணிகள்கூட முடியவில்லை. ஜெய்தாப்பூர், உள்ளீட்ட எந்த உலைகளும் 2031ஆம் ஆண்டிற்கு முன்னர் செயல்பாட்டிற்கு வரப்போவதில்லை. அணுசக்தியை பய்னபடுத்தி வரும் 2031 ஆம் ஆண்டிற்குள் 22, 480 மின்னுற்பத்தி என்று இந்திய அரசு வைத்துள்ள இலக்கு “வெறும் கனவுதான்” என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது, நடைமுறையில் சாத்தியப்படப்போவதில்லை.

கடைசியாக இந்தியா இறக்குமதி செய்து நிறுவியுள்ள கூடங்குளம் அணுவுலைகளும் முறையாக செயல்படவில்லை என்று இந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கடந்தாண்டு, முதல் உலை அதன் உற்பத்தித்திறனில் 50% இரண்டாவது உலை 35% மட்டுமே உற்பத்திசெய்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது அந்த அறிக்கை, மேலும் இந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலை ஒரு யூனிட் கூட உற்பத்திசெய்யவில்லை. சென்ற ஆண்டில், ஒரு நேரத்தில் ஒரு உலை மட்டுமே உற்பத்தியை மேற்கொள்வதாக தமிழக மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தெரிவித்திருந்தாக இந்த அறிக்கை சொல்கிறது. கூடங்குளத்திலுள்ள முதல் உலை தொடக்கம் முதலே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருவதாகவும், பலமுறை பழுதடைந்து நின்றுள்ளதாகவும் பெயர்குறிப்பிட விரும்பாத இந்திய அணுசக்தி துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போராடும் மக்கள் சொல்லிவரக்கூடிய கூற்றை உறுதிப்படுத்துகிறது. உலைகள் அடிக்கடி பழுதடைந்து நிற்பது மக்களிடம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கூடங்குளத்தில் மின்னுற்பத்தி நடைபெறவில்லை என்பதை நினைவில் வைத்துத்தான் தாங்கள் மின்தேவைகளை பூர்த்திசெய்வதற்கான திட்டங்களை வகுக்கிறோம் என்று தமிழக் மின்வாரிய அதிகாரி தெரிவித்திருப்பது அவ்வுலைகளின் உண்மை நிலையை படம்பிடித்து காண்பிக்கிறது.

இந்த அறிக்கையின் மூலம், இந்திய அரசும், தமிழக அரசும் எடுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இவைதான்:

அணு சக்தியால் நம்முடைய மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை குறைந்த அளவில்கூட பூர்த்திசெய்யமுடியவில்லை, அதுவும் அதிகமான செலவுகளை செய்தபிறகும். இந்தியாவின் ஆற்றல் கொள்கை, அனல் மற்றும் அணு சக்தி இல்லாததாக இருக்கவேண்டும். அணுஉலைகளை நிர்மாணித்து மின்னுற்பத்தி செய்வதற்கு குறைந்தபட்சம் 7-10 ஆண்டுகள் வரையாகும், ஆனால் சூரியசக்தியை பயன்படுத்தி சில மாதங்களில் மின்னுற்பத்தியை ஆரம்பித்துவிடமுடியும். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை நோக்கி பயணிப்பதே அறிவிற் சிறந்த செயலாகும்.- பூவுலகின் நண்பர்கள்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments