கருத்துக் கேட்புக் கூட்டங்களின்றி குப்பை எரியுலைத் திட்டங்களைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு!

குப்பை எரிவுலைகள் போன்ற பெரும் நாசம் விளைவிக்கும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகளுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவைக் கைவிடுக!

பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

 

வெறும் பொருளாதார நலனை மையமாகக் கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளால் கையாள முடியாத குப்பைகள் மலைபோலப் பெருகி வருகின்றன. இவற்றை உற்பத்தியிலேயே தடை செய்வதை விடுத்து கடுமையான மாசு ஏற்படுத்தும் குப்பை எரிவுலைகளில் எரிக்கச் செய்யும் முறையைப் பரவலாக்க அரசுகள் தொடர் முயற்சி எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, குப்பை எரிவுலைகளை கடுமையான மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் பட்டியலான சிவப்புப் பட்டியலிலிருந்து நீலப்பட்டியலுக்கு மாற்றியது ஒன்றிய அரசு. அடுத்த கட்டமாக இக்குப்பை எரிவுலைகள் உள்ளிட்டத் திட்டங்களை அத்தியாவசிய சேவைகள் என்று வகைப்படுத்தி அவற்றுக்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது.

ஒன்றிய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது கடந்த அக்டோபர் மாதம், குப்பை எரிவுலைகள் உள்ளிட்ட ‘Common Municipal Solid Waste Management Facility – CMSWMF’ எனப்படும் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டம், 1974 மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம், 1981 போன்ற வலுவான சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இவை அதிக மாசை ஏற்படுத்தாத நீலப் பிரிவாக (மாசு கட்டுபாடு தொடர்பான அளவீடு) வகைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு ஒரு சில சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளதால், இவற்றை அத்தியாவசிய சுற்றுச்சூழல் சேவைகளாகக் கருதி (EES) ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய திட்டங்களைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006 லிருந்து விலக்களிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

ஒன்றிய அரசானது, திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள்(Common Municipal Solid Waste Management Facility)  மனித மற்றும் சுற்றுச்சூழல் நலத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, கழிவுகளை வளமாக மாற்றிச் சுழற்சி பொருளாதாரம் மற்றும் வளங்குன்றா வளர்ச்சி போன்றவற்றை ஊக்கப்படுத்துவதுடன் காற்று, நிலம் மற்றும் நீர் மாசுபாட்டை தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் இத்திட்டங்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006லின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் என மேலோட்டமாகக் கூறினாலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து குப்பைக் கிடங்குகள் மற்றும் ஆபத்தான குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலைகள் போன்றவற்றையும் அத்தியாவசிய சுற்றுச்சூழல் சூழல் சேவைகளாகக் கருதி விலக்கு அளிப்பது சுற்றுச்சூழல் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திச் சூழலிலியல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்.

குப்பை எரிவுலைகள் மிக மோசமான சூழல் – சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது சமீபத்தில் வெளியான பல்வேறு ஆய்வுகள்மூலம் உறுதியாகியிருக்கிறது. சென்னையில் செயல்பட்டு வந்த குப்பை எரிவுலை தொடர்பான ஆய்வுகள், டெல்லி மற்றும் ஹைதராபாத் எரிவுலை தொடர்பான செய்திகள் குப்பை எரிவுலைகள் ஒருபோதும் பாதுகாப்பானதாக இருக்கவே முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, முன்னதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் குப்பை எரிவுலை போன்றவற்றை மாசுபாட்டை ஏற்படுத்தும் துறைகளுக்கான வகைபடுத்துதலில் அதிக தீங்கை ஏற்படுத்தக்கூடிய சிவப்பு பட்டியலிலிருந்து அத்தியாவசிய சுற்றுச்சூழல் சேவைகள் என வரையறுத்து நீலப் பட்டியலுக்கு மாற்றியிருந்தது. மேலும் இவற்றின் மாசு சார்ந்த அளவீட்டினை மாசு ஏற்படுத்துபவர்களையே அளவிடச் செய்யும் வகையில் வழிவகை செய்திருந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கும் அதேசமயம் அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

பெரும்பாலும், இத்தகைய ஆபத்தான குப்பைக் கிடங்கு, குப்பை எரிவுலை போன்ற அமைப்புகள் விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. தற்போது இத்தகைய திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ்  முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பு, பாதிக்கப்படும் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் அடிப்படை உரிமையை மறுத்து அவர்களின் குரலை மேலும் ஒடுக்கச் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.

இது போன்ற ஆபத்தான திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை, நீர் மற்றும் காற்று மாசுபாடு போன்ற சட்டங்கள் போன்றவையும், மாசு கட்டுப்பாடு வாரியங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பே போதும் என்று கூறும் அறிவிப்பு, இத்தகைய திட்டங்களுக்கான அனுமதியை விரைவாக வழங்க வழி செய்வதோடு மட்டுமல்லாமல், பாதிப்பு வருவதற்கு முன்பே தடுக்காமல், பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் அமைந்திருப்பது மிக ஆபத்தானதும், அலட்சியமானதுமாகும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி முன் அனுமதி பெறாமல் அவை செயல்பட ஒப்புதல் வழங்கங் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் அமைச்சகத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது.

எனவே, சுற்றுச்சூழலுக்கும் மக்கள் நலனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திட்டங்களுக்கு எளிதில் அனுமதி அளிக்கும் வகையிலான இம்முடிவை உடனடியாகத் திரும்பபெற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், குப்பை எரிவுலை போன்ற ஆபத்தான திட்டங்களைச் செயல்படுத்தும் முடிவுகளையும் கைவிட வேண்டுமெனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.

ஆபத்தான அறிவிப்புக்கு எதிராக உங்கள் கருத்தைப் பதிவு செய்ய let india breath ஏற்படுத்தியுள்ள கீழ்காணும் வசதியைப் பயன்படுத்தவும்: https://www.letindiabreathe.org/v2/wte-is-not-blue

தொடர்புக்கு:

ஜீயோ டாமின்

7708020668

ஒன்றிய அரசின் அறிவிப்பு: https://parivesh.nic.in/publicdocument/UPLOAD_OM_NOTIFICATION/IA_DOCS/1006_07102025053503.pdf

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted