உங்களின் மரணம் எப்படி நேரப்போகிறது?

ரு சின்ன விஷயம்.

உங்களின் மரணம் எப்படி நேரப்போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது.

காலநிலை மாற்றம்!

வேடிக்கையாக இருக்கலாம். நமக்கு இருக்கும் பிரச்சினைகளில் காலநிலை மாற்றம் ஒரு பிரச்சினையாக தெரியாமலும் இருக்கலாம்.

உண்மையும் அப்படித்தான்.

கண் முன்னே பட்டவர்த்தனமாக நின்றிருக்கும். சாவகாசமாக வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கையில் சடாரென வீழ்த்தி கிடத்தும்.

சமீபகாலமாக உலகச் செய்திகளென பார்த்தால் நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள், Climate Change! தமிழில் ’காலநிலை மாற்றம்’ என மொழிபெயர்க்கலாம். ஆனால் தமிழக செய்திகளில் அந்த வார்த்தைகள் இடம்பெறுவதே இல்லை.

முன்னேறிய நாடுகளில் காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. காலநிலை மாற்றத்தை கொள்கையளவில் அரசுகள் ஏற்க பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மறுபக்கத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றன.

பல ரூபங்களில் தன்னுடைய இருப்பை காலநிலை மாற்றம் தொடர்ந்து அறிவித்தாலும், தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக காலநிலை மாற்றம் இடம்பெறவில்லை. தமிழக அரசின் கட்டமைப்புகளிலும் அரசியலிலும் காலநிலை மாற்றம் பற்றிய புரிதலின்மையே எங்கும் வீற்றிருக்கிறது.

எந்தவொரு பிரச்சினையும் அதன் முழுமை உணரப்படாமல், தீர்க்கப்பட முயற்சிக்கும்போது, அப்பிரச்சினை வளரும் சாத்தியமே அதிகம் உண்டு. காலநிலை மாற்றம் பற்றிய புரிதலை நம் அரசுகளும் கட்சிகளும் கட்சித் தலைமைகளும் கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சியே இந்த பதிவேடு.

காலநிலை மாற்றத்தில் அப்படியென்ன பெரிய பிரச்சினை இருக்கிறது?

சுருக்கமாக சொல்வதெனில், அடுத்த பதினைந்து வருடங்களில் நாம் அனைவரும் அழியத் தொடங்கவிருக்கிறோம்.

முதல் பார்வைக்கு ஒரு ஹாலிவுட் படத்துக்கான கதைக்கரு போல் தோன்றும் இதுவே இன்று ஒட்டுமொத்த மனித குலமும் வெவ்வேறு வடிவங்களில் சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களுக்கான ஆதார பிரச்சினை.

ஒரே நாளில் பெய்யும் மழை, வறட்சி கொடுக்கும் மழையின்மை, உணவுப் பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம் என பல்வேறு விஷயங்களை ஏதோவொரு காலகட்டத்தில் இதற்கு முன் நாம் சந்தித்திருக்கலாம். இனி அடிக்கடி நாம் அவற்றை சந்திக்கவிருக்கிறோம். இதுவரை மனித குலம் எந்த வகையில் இயற்கைக்கு பழகியிருந்ததோ அத்தகைய இயற்கையை நாம் இனி காணப் போவதில்லை.

இனி வரும் வாழ்க்கைகளும் சமூகநிலைகளும் எந்தவித முன் அனுமானத்துக்கும் உட்படாதவையாக இருக்கப் போகின்றன. காரணம், காலநிலை மாற்றம்!

எதிர்பாராதவைகளை மட்டுமே எதிர்பார்க்கும் காலத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். கண்ணை கட்டி காட்டில் விட்டவனின் நிலை. காட்டில் விட்டவன் யாரென்று கேட்டால், நாம் என்பதே பதில்!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் நிக்கோலஸ் ஸ்லோன் என்பவர் வசித்து வருகிறார். கடல் சார்ந்த பேரிடர் காப்பு நடவடிக்கைகளில் அனுபவம் பெற்றவர். ஐம்பது வயதை தாண்டியவர். ஸ்லோன் வசித்து வந்த கேப் டவுன் நகரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யவென ஆலோசித்த ஸ்லோனுக்கு ஒரு திட்டம் உதித்தது. அதாவது அண்டார்டிகா பகுதியில் இருந்து ஒரு பனிக்கட்டியை கட்டி இழுத்து வந்து கேப் டவுன் அருகே நிறுத்தி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதென ஒரு திட்டம்.

படு பைத்தியக்காரத்தனமான திட்டமாக தெரிகிறது இல்லையா?

திட்டமே பைத்தியக்காரத்தனமாக தெரிந்தால், அத்தகைய திட்டத்தை யோசிக்குமளவுக்கு தூண்டிய தண்ணீர் பற்றாக்குறை எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும்?

40 லட்சம் மக்களை கொண்டிருக்கும் கேப் டவுன் நகரம் 2015ம் ஆண்டு தொடங்கி 2017ம் ஆண்டு வரை, மூன்று தொடர் வருடங்களுக்கு கடும் வறட்சியை சந்தித்தது. மழை பொய்த்திருந்தது. 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நீர் நிலைகளின் கொள்ளளவு தரை தட்டியிருந்தது.

அதிகார கட்டமைப்பின் வசமிருந்த நீர் சேமிப்பு தீர்ந்து போன முதல் நகரமாக மாறும் கட்டத்தை கேப் டவுன் நகரம் நெருங்கியிருந்தது.  நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்றுக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதென முடிவானது. குளியல், உணவு தயாரிப்பு, துவைத்தல், பாத்திரம் கழுவுதல் மற்றும் குடிக்கவென மொத்த குடும்பத்துக்கும் ஐம்பது லிட்டர்தான் ஒரு நாளுக்கான தண்ணீர்.

ஒரு வருடத்துக்கு பிறகு நிலைமை கொஞ்சம் சரியானது. தேவையான அளவுக்கு இல்லையென்றாலும் மோசமாக இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது.

அன்றாட தண்ணீர் பயன்பாடு 50-லிருந்து 70 லிட்டருக்கு உயர்த்தப்பட்டது.
‘நிலைமை சரியானது’ என்கிற நிலையே அவ்வளவாகத்தான் இருந்தது. வேகமாக குளித்து, குளியலில் வடிந்த நீரை மீண்டும் சேகரித்து பயன்படுத்தும் நிலை. பணக்காரன் – ஏழை என்ற பேதமெல்லாம் இல்லை. எல்லா மக்களையும் சரி நிகர் சமத்துவத்துடன் பாரபட்சமே இல்லாமல் வறட்சி பாதித்தது.

விளைச்சல் பொய்த்தது. விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை காக்க, அவர்கள் வளர்த்த கால்நடைகளையே கொன்றனர். 30000க்கும் மேலான வேலைகள் பறிபோயின.  பனிக்கட்டி இழுத்து வரும் திட்டத்தை ஸ்லோனுக்கு தோன்ற வைத்தது இந்த சூழல்தான்.

ஸ்லோனின் திட்டத்துக்கான செலவு மட்டும் 1400 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. இழுத்து வரவிருக்கும் பனிக்கட்டியின் எடை 10 கோடி டன். ஏதோவொரு நம்பிக்கையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார் ஸ்லோன்.

நிக் ஸ்லோனை பொறுத்தவரை  ‘அபரிமிதமான தண்ணீர் புழங்கியிருந்த கேப் டவுனுக்கு திரும்ப செல்ல முடியாது. கடந்த 20 வருடங்களில் மட்டும் 40% மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இனியும் அதிகரிக்கவே செய்யும். கூடவே வறட்சியும் அதிகரிக்கும்’ என சொல்லும் ஸ்லோன் “குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால், முதல் நாள் மக்கள் வரிசைகளில் நிற்கலாம். இரண்டாம் நாளும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், கொலைகள் விழத் தொடங்கும்” என்றார்.

கேப் டவுன் நகரம் ஒரு உதாரணம் மட்டுமே. ஸ்லோன் சொன்னதில் துளி கூட பொய் இல்லை என்பதை நம் தமிழகம் சில மாதங்களுக்கு முன் கூட நிரூபித்தது.

2019ம் வருடத்தின் தொடக்கம் கடுமையான தண்ணீர் பஞ்சத்துடன் தமிழகத்துக்கு தொடங்கியது. சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் வறட்சி இருப்பதாக அரசு அறிவித்தது. காரணம், 2018ம் ஆண்டின் வட கிழக்கு பருவ மழையின் அளவு குறைந்ததே. இதில் சூட்சுமம் என்னவென்றால் 17 மாவட்டங்களில் பருவமழையின் அளவு குறைந்திருந்ததால் வறட்சி. மீதமுள்ள 7 மாவட்டங்களில் சரியான அளவுக்கு பருவமழை பெய்திருந்த போதும் வறட்சி.

வருடத்துக்கு வர வேண்டிய மழை குறைந்து போயிருந்ததே காரணம்!

பருவமழை பொய்த்தாலும் சரி, பெய்தாலும் சரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வகையில் தமிழகத்தின் மழை வரத்து நுட்பமாக அமைந்துள்ளது. இந்த நுட்பத்துடன் காலநிலை மாற்றம் சேருகையில் விளைவு பன்மடங்கு சேதத்தை உருவாக்குகிறது.

ஹாலிவுட் சினிமா நடிகர் லியோனார்ட் டி காப்ரியோ தன்னுடைய இணையப் பக்கத்தில், சென்னையில் நிலவிய பஞ்சத்தை குறிப்பிட்டிருந்தார். நியூ யார்க் டைம்ஸ், பிபிசி என உலக ஊடகங்கள் பல சென்னையை பற்றி பேசின. போரூர் ஏரி சில மாதங்களில் காய்ந்து வறண்ட செயற்கைக்கோள் காணொளி அதிகமாக பகிரப்பட்டது. அமெரிக்க நாட்டின் செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான பெர்னி சாண்டர்ஸ்ஸும் சென்னையை பற்றி தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

”காலநிலை மாற்றத்தை பற்றி அணுகுவதில் சமரசமே இருக்கக்கூடாது என்பதற்கு இதுவே காரணம். புதைபடிம எரிபொருள் வணிகத்தின் லாபவெறியால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது சர்வதேச நெருக்கடி”

சென்னை மெட்ரோ நகரமாக இருப்பதால், அங்கு குடிநீர் பஞ்சம் என்பது சுலபமாக உலகச்செய்தி ஆக முடிந்தது. ஆனால் பிற ஊர்களில் நிலைமை ஊடகங்கள் அறியாதது. தஞ்சாவூரில் குடிநீர் தேக்கத் தொட்டியிலிருந்து அதிக நீர் எடுத்த குடும்பத்தை தட்டி கேட்டதற்காக ஆனந்த் பாபு என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டார்.

உலகின் பல நாடுகளை போல தமிழகத்துக்கும் காலநிலை மாற்றம் புதிதொன்றுமில்லை. கடந்த சில வருடங்களாகவே காலநிலை மாற்றம் தன்னை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. நாம்தான் பொருட்படுத்த மறுக்கிறோம்.

2009ம் ஆண்டு கோபன்ஹேகன் நகரத்தில் ஐநா மன்றம் காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டை கூட்டியது. முக்கியமான ஆய்வறிக்கை ஒன்று
மாநாட்டில் வெளியிடப்பட்டது. நூறு சர்வதேச அறிவியலாளர்கள் சேர்ந்து ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை. தமிழகத்தை பொருட்படுத்தும் சேதி ஒன்றும் அதிலிருந்தது.

2100ம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 மீட்டர்கள் அதிகரித்திருக்கும் என்றது அறிக்கை. அதாவது 4 அடிகள்!

கடல் மட்டம் நான்கடி உயர்ந்தால் 2100ம் ஆண்டில் மாலத்தீவு இல்லாமல் போகலாம் என ஐநா கூறியது. கடலோர நகரங்களான மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவையும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடலுக்கடியில் சென்றிருக்கலாம் என்கிறது ஆய்வு.

ஏன் கடல் மட்டம் உயர்கிறது?

கடல் பரப்பில் வெப்பம் அதிகரிப்பதாலும் பனிப்பாறைகள் உருகுவதாலும்.

1870ம் ஆண்டில் இருந்து கடல் மட்டம் ஆண்டுக்கு 1.7 மிமீ உயர்ந்து வந்தது. கடந்த சில பத்தாண்டுகளாக அந்த அளவு ஆண்டொன்றுக்கு 2.5 மிமீ என மாறியிருக்கிறது.

கோபன்ஹேகன் நகர மாநாட்டில் மாலத்தீவின் ஜனாதிபதி, ’எந்த மாற்றமும் இல்லாமல் நிலைமை அப்படியே இருக்குமானால், நாங்கள் வாழ முடியாது. நாங்கள் இறந்துவிடுவோம். எங்கள் நாடு காணாமல் போகும்’ என பேசுமளவுக்கு நிலைமை இருக்கிறது.

தமிழகத்தில் இருந்து மாலத்தீவு ஒன்றும் அதிக தொலைவில் இல்லை. நாம் இருக்கும் அதே இந்தியப் பெருங்கடலில்தான் மாலத்தீவும் இருக்கிறது. தமிழகத்தின் தெற்கு முனையில் இருந்து 300 கிலோமீட்டர்களில் இருக்கும் அண்டை வீடு!

நான்கடிக்கு கடல் மட்டம் உயரும் என கூறிய ஆய்வில் இன்னொரு முக்கிய விஷயம் ஒன்றும் இருக்கிறது.

2100-ம் ஆண்டுக்குள் நான்கடி கடல் மட்ட உயர்வு என்பது 2009ம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2007ம் ஆண்டில் கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகம். அதாவது 2007ம் ஆண்டில் கணிக்கப்பட்டதை காட்டிலும் மிக வேகமாக புவி வெப்பமடைந்து வருகிறது.

2007லிருந்து 2009ம் ஆண்டில் இரண்டு மடங்கான வேகத்தை அளவாக கொண்டு கணக்கிட்டால், 2100ம் ஆண்டு என்பது போய் இன்னும் நெருக்கத்துக்கு வருகிறது நமக்கான காலக்கெடு!

வானிலை அல்லது காலநிலை பெரியதாக தமிழகத்தை எப்போது பாதித்தது என சற்று யோசித்து பார்த்தால், முதல் நினைவு 2015ம் ஆண்டை தோண்டி கொண்டு வரும்.

2015-ம் ஆண்டின் சென்னை மழையை யாராலும் மறந்துவிட முடியாது. பல துர்கனவுகளை கொடுத்த காலகட்டம் அது. அரசல்லாத தன்னார்வலர்களின் பணியை மெச்சும் நிகழ்வாக தொடர்ந்து நினைவூட்டப்படும் நிகழ்ச்சி!

அதே சென்னை மழை மேலும் இரண்டு விஷயங்களையும் இன்றைய சூழலில் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவு என்னவாக இருக்குமென்பது முதலாவது. காலநிலை மாற்றம் குறித்த புரிதலும் தயாரிப்பும் அரச மட்டத்தில் எப்படி இருக்கிறது என்பது இரண்டாவது.

இரண்டுமே மக்களுக்கு எதிராகவே இருக்கிறது.

டிசம்பர் 1ம் தேதி, ஒரே நாள். 494 மிமீ மழை கொட்டி தீர்த்தது. நூற்றாண்டில் இல்லாத மழை. குறைந்தபட்சம் அப்போது அப்படித்தான் சொல்லப்பட்டது.

30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடிப்படை வசதிகளை கூட தொலைத்து தெருவில் நின்றனர். அடுத்த நாளே சென்னை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் மாதத்திலேயே வட கிழக்கு பருவ மழையின் மொத்த வரத்தும் கொட்டப்பட்டு விட்டது. அதற்கு பிற்பாடும் நேர்ந்த டிசம்பர் 1ம் தேதி மழையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘நூற்றாண்டு காணாத’, ‘வரலாறு காணாத’, ‘யாரும் எதிர்பார்த்திராத’ போன்ற வார்த்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலவிய தமிழகத்தின் காலநிலைகள் வழங்கத் தொடங்கின.

வழக்கமாக பசிபிக் பெருங்கடலிலிருந்து அனுப்பப்படும் வெப்பக்காற்று ஆஸ்திரேலிய மற்றும் ஆசிய நாடுகளின் கடல்களில் காற்றழுத்த மண்டலங்களாக மாறி பருவமழையை கொடுக்கும். ஆனால் அந்த நிலை 1980களிலிருந்து மாறத் தொடங்கியது. வெப்பக்காற்று பசிபிக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு வந்து சேராமல் அங்கேயே தேக்கமடைய தொடங்கியது. அந்த மாதிரியான சூழல்களில் தென்னமேரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் பருவங்கள் பொய்க்கும். மழைக்காலத்தில் போதுமான மழை இருக்காது. வறட்சி தோன்றும். அல்லது எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டி தீர்க்கும்.

80களின் பிற்பகுதியில்  நேர்ந்த இந்த காலநிலை மாற்றத்தில் ஒரு கால அளவு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள். சில மாதங்கள் தொடங்கி இரண்டு வருடங்கள் வரை அத்தகைய காலநிலை மாற்றம் நீடிப்பதை கண்டுகொண்டார்கள். அத்தகைய காலநிலை மாற்றத்துக்கு எல் நினோ என பெயர் சூட்டப்பட்டது. ஒன்றிலிருந்து இரண்டு வருட காலத்துக்கு எல் நினோ மாற்றம் நீடிக்குமென வரையறுக்கப்பட்டது.

சென்னை தத்தளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஐநாவின் முன்னெடுப்பில், பாரிஸ் நகரத்தில் உலக நாட்டுத் தலைவர்கள் கூடி காலநிலை மாற்றத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் ஃபேபியஸ், ‘சென்னையின் எதிர்பாராத மழைவெள்ளம் நமக்கு அவகாசம் இல்லை என்பதை உணர்த்துகிறது. காலநிலை  பாதிப்புக்கான உடனடியான உறுதியான நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். இங்கிருக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை, ‘சென்னை வெள்ளத்துக்கும் காலநிலை மாற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என பதிலளித்தது.

2015ம் ஆண்டில் சென்னையில் பெய்த மழைக்கும் எல் நினோவே காரணமாக சொல்லப்பட்டது. உண்மை என்னவெனில், 2015ம் வருடத்தின் மாற்றம் இரண்டு வருடங்களுக்கு மட்டும் நீடிக்கவில்லை.

ஒரே வருடம். 2016-ன் டிசம்பர் மாதத்தில் வர்தா புயல் தமிழக கடலோரத்தை தாக்கியது. பெருமழையும் புயலுமென சென்னை தன்னை காத்துக் கொள்ள போராடியது. 24 பேர் உயிரிழந்தனர். 2017-ல் காலநிலை தன் மாற்றத்தை இன்னுமே அழுத்தந்திருத்தமாக அறிவித்தது.

ஒக்கி புயல்!

நவம்பர் 29ம் தேதி கடலோர முனையை தாக்கிய ஒக்கி புயல் தமிழகத்திலும் கேரளத்திலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஆழ்கடலுக்குள் சென்றிருந்த மீனவர்களுக்கு முறையான அறிவிப்பு முன்னமே தரப்படவில்லை. சென்றவர்கள் மீள முடியாமல் கடலில் சிக்கினர். உயிர் பிழைத்தவர்கள் பிளாஸ்டிக் கேன்களை பிடித்து நீந்தி வந்து உயிரிழந்த சக மீனவர் சடலங்களை கொண்டு வந்தனர்.

1000த்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவென தெரியவில்லை. அரசின் சார்பில் அனுப்பப்பட்ட கப்பலும் சில நாட்டிகல் மைல்களுக்குள்ளாக தன்னுடைய தேடுதலை முடித்துக் கொண்டது. மீனவப்பெண்கள் கடலுக்கு சென்ற மீனவர்களை அரசு மீட்க கேட்டு போராடினர்.

தெற்கு முனையில் உருவான ஒக்கி புயல் குஜராத் வரை பயணித்தது. ஒரு முழு பேயாட்டத்தை புயல் கட்டவிழ்த்து விட்டிருந்தது. 50 வருடங்களில் நேர்ந்த புயல்களிலேயே அதிக அழிவை கொடுத்தது ஒக்கி புயல்தான்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இதுவரை நாம் பயன்படுத்தி வந்த வழிமுறைகளை கொண்டு ஒக்கி புயலின் தீவிரத்தையோ போக்கையோ முன் அனுமானிக்க முடியவில்லை என்பதுதான்.

வழக்கமாக புயல்கள் வங்கக்கடலிலோ அரபிக் கடலிலோ தோன்றுவதுண்டு. ஆனால் ஒக்கி புயல் இலங்கையின் தென்கிழக்கு கடலோரத்தில் உருவானது. வடமேற்கை நோக்கி நகர்ந்தது. 2500 கிலோமீட்டருக்கு பயணித்து முடிந்தது. இதுபோன்ற ஒரு புயலின் போக்கு கடைசியாக நிகழ்ந்தது 1925ம் ஆண்டில்தான். அதிலும் ஒரு கட்டத்துக்கு மேல் புயல் நிலத்துக்குள் வந்து கூட பயணித்திருக்கிறது. ஆனால் இது போல் கடலிலேயே 2000 கிலோ மீட்டர்களுக்கும் பயணித்தது கிடையாது.

லட்சத்தீவை புயல் தாக்கிய பிறகு, வட மேற்கு பாதையை புயல் தொடரவில்லை. அதற்கு பதிலாக அங்கிருந்து திரும்பி மேற்கு கடலோரத்தை தாக்கியது. இது முற்றிலும் எதிர்பார்த்திராத போக்கு. இத்தகைய போக்கை அடையாளம் காண நூற்றாண்டுக்கும் முன் ஆராய வேண்டியிருக்கும்.

9 மணி நேரங்களுக்குள்ளேயே காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறியிருந்தது. வழக்கமாக இரண்டு நாட்களேனும் தேவைப்படும். அடுத்து, தீவிர புயலாகவும் மாறியது.

காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து தீவிர புயல் என்ற கட்டத்தை எட்ட 72 மணி நேரங்களாவது ஆகும். ஆனால் ஒக்கி வெறும் 40 வெறும் மணி நேரங்களில் உருவானது. குஜராத் கடலோரத்துக்கு அருகே ஒக்கி வலுவிழக்கும்போது ஏழு நாட்களுக்கு புயல் பயணித்திருந்தது. சராசரியான புயலின் இருப்பை காட்டிலும் 43 சதவிகிதம் இது அதிகம்.

ஏன் ஒக்கியின் போக்கையும் தீவிரத்தையும் முன் அனுமானிக்க முடியவில்லை?

கடந்த பத்து வருடங்களில் கடல் பரப்பின் வெப்பம் அரபிக்கடலில் அதிகரித்திருக்கிறது. கூடியிருக்கும் கடல் மட்ட வெப்பம், அப்பகுதியை கொந்தளிப்பு நிறைந்ததாக மாற்றியிருக்கிறது.

2017ம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் கடல் மற்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வில், அரபிக்கடலில் நிகழும் புயல்களின் நடவடிக்கைகளுக்கும் புவி வெப்பமாகுதலுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக நிறுவப்பட்டுள்ளது. மேலும், கடல் மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பது நிற்கப்போவதில்லை என்றும் புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரிக்கவே செய்யும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஒக்கி மட்டுமில்லாமல் அதற்கடுத்ததாக 2018ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வந்த கஜா புயலும் தெளிவாக காலநிலை மாற்றத்தை அறிவித்தது.

இந்திய வானிலை மையத்தின் கணக்குப்படி கஜா புயல் வேதாரண்யத்துக்கு அருகே கரையை கடந்து வலுவிழக்க வேண்டும்.  ஆனால் புயலின் மையம் கரையை கடந்த பிறகும் வலுவிழக்கவில்லை. மழைப்பொழிவுக்கு பிறகும் வலுவுடன் பயணித்துக் கொண்டிருந்தது. தஞ்சாவூருக்கு புகுந்து புதுக்கோட்டை வழியாக இதுவரை எந்த புயலும் சென்றிடாத திண்டுக்கல்லுக்கு சென்றது. உள்மாவட்டம் வரை வலுவிழக்காமல் பயணிக்கும் புயலென்பது இதுவரை நாம் அறிந்திருந்த காலநிலைகளிலேயே இல்லாத விஷயம்.

2019ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உருவான ஃபானி புயலும் இதே ரகம்தான். இந்திய வானிலை மையத்தின் முதல் கருத்துப்படி ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதாகவே அனுமானிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. உலக வானிலை நிறுவனம் ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என அனுமானித்தது.

இந்தியப் பெருங்கடலின் சுமத்ரா தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வங்கக் கடல் வரை பயணித்து ஏப்ரல் 25ம் தேதி புயலாக மாறியது. ஒடிசாவில் கரை கடந்ததோடு நில்லாமல் நிலத்துக்குள்ளும் பயணித்து மேற்கு வங்கத்தையும் தாண்டி வங்க தேசம் வரை சென்றது. பத்து நாட்களாக தொடர்ந்து கடலில் பயணித்தும் தீவிரம் குறையாமலிருந்த புயல் ஃபானி. பதினைந்து வருடங்களுக்கு பிறகு இத்தகைய தீவிரத்தை ஒரு புயல் கொண்டிருந்தது. எச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேரை ஒடிசா அரசு அப்புறப்படுத்தியிருந்தது.

கடந்த 126 வருடங்களில் வங்கக்கடலில் உருவான ஏப்ரல் மாத தீவிர புயல்கள் மொத்தமே பதினான்குதான். அவற்றில் நிலத்துக்குள் பயணித்தது ஒன்றே ஒன்றுதான். ஃபானி அவற்றில் இரண்டாவது புயல் ஆகும்.

தமிழகத்தை தாக்கிய சமீபத்திய புயல்களை பொறுத்தவரை ஒரு முக்கியமான ஒற்றுமையை காண முடியும். இந்திய வானிலை மையத்தால் திட்டவட்டமாக எந்த புயலையும் அனுமானிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அங்கு வேலை பார்ப்பவர்களின் திறமை குறைவு அல்ல; காலநிலை மாற்றத்தை பற்றிய நம் புரிதலின்மை!.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட நீலகிரியின் அவலாஞ்சியில் வெறும் 24 மணி நேரங்களில் 820 மிமீ மழை பொழிந்து தள்ளியதை மறந்துவிட முடியாது.

காலநிலை மாற்றம் எல்லா குட்டிக்கரணத்தையும் அடித்து காட்டி விட்டது. தமிழகமும் அதன் அரசியல் சூழலும் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் புயல் மற்றும் பேரிடரின் விளைவுகளை வெறும் குற்றம் சுமத்தும் வாய்ப்புகளாக பார்க்கின்றனவே தவிர, நீடித்த திட்டத்தையோ கொள்கைரீதியான மாற்றங்களையோ அறிவுறுத்தும் நிலையை நம் அரசியல் சூழல் வந்து சேரவில்லை. எத்தகைய பேரிடராக இருந்தாலும் அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் காலத்தில் அரசு முன்னெடுக்கும் அவலநிலையே நீடிக்கிறது.

காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுக்கு அரசியலோ அல்லது எந்தவித கட்சியின் சார்போ கிடையாது. அறிவியல் சார்பு மட்டுமே உண்டு.

காலநிலை மாற்றம் குறித்து அறிவியல் சில விளக்கங்கள் கொடுக்கிறது. சுருக்கமாக அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

காலநிலை மாற்றம் என்பது முதலில் என்ன?

காலநிலை மாற்றம் என்பது மனித குலம் இதுநாள் வரை அறிந்து வந்திருந்த பருவ காலங்கள், மழைக்காலம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றம் ஆகும்.

ஏன் இப்படி திடுதிப்பென காலநிலைகள் மாறின?

திடீரென இல்லை.

பாலை காய வைத்தால் உடனே பொங்கி விடுவதில்லை. சூடு பெற வேண்டும். ஒரு அளவுக்கான சூட்டுக்கு பிறகு கொதிக்க வேண்டும். அப்போதும் பால் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவில்லையெனில், கொதிநிலை அதிகரித்து பால் பொங்கி வீணாகும்.

காலநிலையும் அதே போல தொடர்ச்சியான மாறுதல்களை அடைந்து வந்திருக்கிறது. மாற்றம் என்பதன் முழுத் தன்மையை தற்போதுதான் காலநிலை அடைந்திருக்கிறது.

தொழிற்புரட்சி காலத்தில் வேகம் பிடித்த மாற்றம், தொழில் நுட்ப யுகத்தில் அதிவேகம் பெற்றிருக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கான அடிப்படை காரணம் என்ன?

சூரியனிலிருந்து வரும் வெப்பம் பூமியால் பிரதிபலிக்கப்பட்டு திரும்ப பூமியிலிருந்து வெளியேறும். தொன்று தொட்டு இதுவே இயற்கையாக இருந்து வந்தது.

சமீபகாலமாக பூமியில் இருக்கும் ஜீவராசிகளாலும் பிற காரணங்களாலும் வெளியேற்றப்படும் கார்பன் வாயுவின் அளவு அதிகரித்திருக்கிறது. பூமியை சுற்றி அந்த கார்பன் வாயு படர்ந்து ஒரு திரையாக ஆக்கிரமித்திருக்கிறது.  பூமியை விட்டு வெளியேற வேண்டிய வெப்பம் வெளியேற முடியாமல் திரும்ப பூமிக்கே அனுப்பப்படுகிறது.

ஆக, ஒரு முறை பூமிக்குள் நுழையும் வெப்பம் இரண்டு மடங்காக்கப்படுகிறது. தற்போது கார்பன் திரையின் அடர்த்தி அதிகமாகி இருப்பதால் பூமி கொள்ளும் வெப்பம் பன்மடங்காக்கப்பட்டிருக்கிறது.

பூமியில் அதிகரிக்கும் வெப்பம் எப்படி காலநிலையை மாற்றும்?

காலநிலைகளை கடல்களில் ஓடும் நீரோட்டங்கள் தீர்மானிக்கின்றன. நீரோட்டங்களின் வழியிலேயே கடலின் போக்கு இருக்கும். கடலின் போக்கிலேயே காற்று வீசும். காற்றின் திசையிலேயே பருவகாலங்கள் அமையும்.

பூமியில் அதிகரிக்கும் வெப்பத்தால் துருவப்பனி உருகுகிறது. உருகும் பனி கடலுக்குள் கரைகிறது. கரையும் பனி நீரோட்டத்தை மாற்றுகிறது. கடல் மட்டத்தை அதிகரிக்கிறது.

கார்பனை உறிஞ்சும் காடுகளையும் மலைகளையும் வளர்ச்சியின் பெயரால் கடந்த நூற்றாண்டில் அளவை மீறி அழித்து விட்டோம். இன்னும் அழித்தும் கொண்டிருக்கிறோம்.

கார்பனை அதிகரிக்கும் மனித நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டு, காடுகளை அழித்துக் கொண்டு, நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு, கடலுயிர்களை அழித்துக் கொண்டு தொடர்ந்து இருப்போமெனில் மனித இனம் பூமிக்கு கடந்தகாலம் ஆகிவிடும்.

த்தனை விளக்கங்களுக்கு பிறகும் காலநிலை மாற்றத்தை நம் மனம் ஏற்பதில்லை. அது புரிந்து கொள்ளக் கூடியதே.

மனித மனம் மரணத்தை திட்டமிடுவதில்லை. எதிர்பார்ப்பதுமில்லை. மனித இனமும் அழிவை எதிர்பார்த்திருக்கவில்லை. மனித இனமே பூமியின் நித்தியம் என நம்பி வந்திருக்கிறது. தற்போதைய இந்த காலநிலை மாற்றமும் அது கொடுக்கவிருக்கும் விளைவுகளும் மனிதனும் மனித இனமும் இதுகாறும் வரை நம்பி வந்த நம்பிக்கைகளையும் மனநிலைகளையும் சுக்குநூறாக உடைக்கிறது. அதை தாங்க முடியாததாலேயே நாம் காலநிலை மாற்றத்தை ஏற்க மறுக்கிறோம்.

காலநிலை மாற்றம் உண்மை என நம்புவதற்கு சுற்றி நடக்கும் விஷயங்களை சற்று கூர்ந்து கவனித்தாலே போதும். இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் சிந்தனை முறைகளில் இருந்து சற்று விலகி பார்த்தால் துலக்கமாக காலநிலை மாற்றம் புலப்பட்டு விடும்.

காலநிலை மாற்றம் வருடம்தோறும் நிஜமாகி வருவதை ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கிடைக்கும் தரவுகளை வைத்து ஐநாவின் உலக நாட்டு அரசுகள் குழு (IPCC) அறிக்கைகளாக வெளியிட்டு வந்திருக்கிறது.

இன்று நமக்கு இருக்கும் தயக்கம் 1990களில் உலக நாட்டு அரசுகளுக்கும் இருந்தது. அதீத கற்பனை போல் காலநிலை மாற்றம் அப்போது தெரிந்தது. மழை பொய்ப்பு, பஞ்சம், மக்கள் போராட்டங்கள் போன்ற விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் விளைவாக நாடுகளும் அதன் அரசுகளும் காலநிலை மாற்றத்தை உணரத் தொடங்கின. ஒரு வழியாக 2015ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் விடிய விடிய நடத்தப்பட்ட உலக நாட்டு அரசுகளின் குழு மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது.

கார்பன் வெளியேற்றத்துக்கு காரணமாக இருக்கும் உற்பத்தி நடவடிக்கைகளை குறைக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் நிறுத்துவதென நாடுகள் ஒப்புக் கொண்டன.

2030ம் ஆண்டில் உலகின் மொத்த வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயரும். 2016ம் ஆண்டிலேயே உலக வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயர்ந்திருந்தது. தற்போது நாம் 1.2 டிகிரி செல்சியஸ்ஸை எட்டி விட்டோம். இன்னும் சரியாக பதினொரு வருடங்கள்தான். 0..3 டிகிரி செல்சியஸ்ஸில் வெப்பத்தை நிறுத்தி குறைக்கத் தொடங்கினால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சரி செய்வதற்கான காலம் கிட்டும். இல்லையெனில் நிலைமை கையை மிஞ்சும்.

கார்பன் வெளியேற்றத்துக்கு அடிப்படை காரணமாக இருப்பது புதைபடிம எரிபொருட்களும் அதை சார்ந்த வாழ்க்கைமுறையும் ஆகும். பெட்ரோல், நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீதேன், ஷேல் வாயு என பூமிக்கு அடியிலிருந்து எடுத்து பயன்படுத்தப்படும் அனைத்து எரிபொருட்களுமே புதைபடிம எரிபொருட்கள்தாம்.

நீராவி எஞ்சினே தொழிற்புரட்சிக்கு ஆரம்பமென கொண்டால், தொழிற்புரட்சி தொடங்கி மனிதகுலம் பின்பற்றி வரும் வாழ்க்கைமுறை, பொருளாதாரம், வளர்ச்சி பற்றிய புரிதல், மனநிலைகள் என அனைத்தையும் நாம் உடனடியாக மாற்ற வேண்டியிருக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கான உலக நாட்டு அரசுகளின் மாநாட்டில் எட்டிய உடன்பாடு மிக மிக மெதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. நத்தையின் வேகம்!

‘எங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என க்ரெடா தன்பெர்க் என்னும் பதின்வயது பெண்ணின் தலைமையில் உலகம் முழுக்க குழந்தைகள் அரசுகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.

கிளையின் நுனியில் அமர்ந்து கொண்டு கிளைவெட்டிக் கொண்டிருக்கிறோம் நாம்.நம் குழந்தைகளை புதைக்க குழி தோண்டி கொண்டிருக்கிறோம். அதுவும் கடந்த சில வருடங்களில் மிக வேகமாகவே தோண்டிக் கொண்டிருக்கிறோம்.

ஹைட்ரோகார்பன், கூடங்குளம், ஷேல் எரிவாயு, பெட்ரோலிய மண்டலங்கள் என எல்லா நாசகார திட்டங்களும் தமிழகத்துக்கே விடிகிறது. இவற்றை வெறும் மக்களின் கருத்து கேட்புக்கு விட்டு முடிவெடுப்பதை விட, அரசின் கொள்கையளவிலேயே காலநிலைக்கு எதிரான திட்டங்கள் இவை என்ற புரிதல் இருந்திருக்க வேண்டும். அதை இன்னுமே கூட அடைந்திடாத இடத்திலேயே நாம் இருக்கிறோம்.

காலநிலை மாற்றம் பெரும்புயலாகவோ கடும்வறட்சியாகவோ உயிர் பறிக்கும் வெயிலாகவோ மட்டும் இருக்கப் போவதில்லை. இதுவரை நாம் கொண்டிருக்கும் சமூகப் பிரச்சினைகள் எல்லாமும் இனி காலநிலை மாற்றத்தையும் சூடிக் கொண்டு வரப் போகின்றன. காலநிலை மாற்றத்தை அடையும் போது ஒரு சமூகப் பிரச்சினையின் வீரியம் பன்மடங்காகிறது.

உதாரணமாக முகமது புவாசிசி என்பவரை தெரியுமா? துனிசிய நாட்டை சேர்ந்தவர். 20 வயதானவர். தெருவோரக் கடை வைத்திருந்தார்.

ஒருநாள் காலை வழக்கம்போல் கடைக்கு சென்றிருக்கிறார். சில காவல்துறை அதிகாரிகள் முகமத்தின் கடையை அகற்ற சொல்லியிருக்கின்றனர். கடையே தனக்கு வாழ்வாதாரம் என சொல்லியிருக்கிறார் முகமது. அனுமதியின்றி கடை வைத்திருப்பதாக சொல்லி, கடையில் இருக்கும் பொருட்களை வீசி எறிகின்றனர். காவல்துறை அதிகாரி முகமத்தை அடிக்கிறார். அவர் முகத்தில் துப்புகிறார். கடையை அடித்து நொறுக்குகின்றனர்.

வெறும் 20 வயதே ஆன இளைஞன். நேர்ந்த அவமானமும் இருண்ட எதிர்காலமும் அவன் மனதை அலைக்கழித்தது. கவர்னர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க செல்கிறான். கவர்னர் முகம்மதை சந்திக்க அனுமதி தரவில்லை. ‘நீங்கள் என்னை பார்க்கவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன்’ என்கிறான் முகம்மத். கவர்னர் சார்ந்திருக்கும் அரசு இயந்திரம் துருப்பிடித்து பல்லிளித்திருக்கிறது. அந்த இளைஞனுக்கு வேறு வழி தெரியவில்லை.

அருகே இருந்த எரிபொருள் நிலையத்துக்கு சென்று பெட்ரோல் வாங்கி வருகிறான். நடுரோட்டில் நிற்கிறான். ‘வேற எப்படித்தான் நான் வாழ்க்கை நடத்தணும்னு நினைக்கறீங்க’ என கத்துகிறான். பிறகு பெட்ரோலை ஊற்றி தன்னை கொளுத்திக் கொள்கிறான்.

2010ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முகம்மது பற்ற வைத்த பொறிதான் அரபு வசந்த புரட்சிக்கு வித்திட்டது.

அரபு வசந்த புரட்சி 2011ம் ஆண்டில் எகிப்தையும் பற்றியது. போராடிய மக்கள் அதிபர் ஹோஸ்னி முபார்க் பதவி விலக கோரினர். நியாயமான ஊதியம் வேண்டினர்.

அதே வருடத்தின் மார்ச் மாதத்தில் சிரிய நாட்டின் தெரா என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் கால்பந்து விளையாடுகின்றனர். பிறகு, அமர்ந்து தங்களுக்குள் ஜோக்கடித்து பேசி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் எகிப்து புரட்சி பற்றிய செய்தி. சட்டென ஒரு யோசனை தோன்றுகிறது.

இரவு ஆனதும் பள்ளிக்கூட சுவரில் கோஷங்கள் எழுதுகின்றனர். பதினைந்து வயதான பஷீர் அபசெத் என்பவர் ‘அடுத்தது நீதான் டாக்டர்’ என சுவரில் எழுதுகிறான். சிரிய நாட்டின் அதிபரான அசாத் டாக்டருக்கு படித்தவர். அடுத்த நாட்களில் அந்த இளைஞர்களை அரசு தேடி சிறையிலடைத்து சித்ரவதை செய்தது. மக்கள் வெகுண்டெழுந்தனர்.

சிரிய உள்நாட்டு போருக்கான ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்கியது.

சில தனி சம்பவங்களால்தான் சமீபத்திய பெரும் போராட்டங்களும் போர்களும் நடந்தன என்றால் நம்ப முடிகிறதா?

எப்போதும் எந்த போருக்கும் போராட்டத்துக்கும் தனிச் சம்பவம் காரணமாக இருக்க முடியாது. சமூகத்தில் இருக்கும் அழுத்தத்தை வெடிக்க வைப்பதற்கான ஊக்கியாக வேண்டுமானால் தனிச் சம்பவம் இருக்கலாம். அது போல இந்த மூன்று நாடுகளிலும் ஒரு முக்கியமான அழுத்தம் பீடித்திருந்தது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள்!

2005, 2007, 2009 ஆகிய ஆண்டுகளில் துனிசியாவை கடும் பஞ்சங்கள் தாக்கின. தவறான பொருளாதார கொள்கையால் குறைந்த வேலைவாய்ப்பு துனிசியாவின் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் என்றாலும் பருவமழை பொய்த்து பிற நகரங்களுக்கும் டவுன்களுக்கும் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள், அப்போராட்டங்கள் தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாக இருந்தனர். போராட்டங்களுக்கு ஆரம்பமாக இருந்த புவாசிசியும் ஒரு பஞ்சகாலத்தின்போது அருகே இருந்த டவுனுக்கு வருமானம் ஈட்ட வந்த ஒருவர்தான்.

2010ம் ஆண்டில் சீனாவிலும் ரஷ்யாவிலும் பருவமழை பொய்த்தது. அங்கு விளைய வேண்டிய கோதுமைப் பயிர் விளைச்சல் கடுமையான  சரிவை சந்தித்தது. அந்த நாடுகளில் கோதுமை விளைச்சல் சரிவு, உலக நாடுகளை பாதித்தது. தனக்கான உணவை, கோதுமையை இரண்டு நாடுகளில் இருந்துதான் எகிப்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. ரஷ்யாவிலும் சீனாவிலும் பொய்த்த மழை எகிப்தை கடுமையாக பாதித்தது.

2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை கடுமையான பஞ்சம் சிரியாவை தாக்கியது. விளைச்சல் பொய்த்தது. விவசாயத்தை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கைவிட்டனர். அருகே இருக்கும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அத்தனை பெரிய மக்கள் திரள் திடுமென நகரங்களுக்கு வந்ததும் அவர்களுக்கான வேலைகள் கேள்விக்குறியாயின. ஏற்கனவே வேலைகளில் இருந்தோருக்கு வேலைகள் பறிபோயின. விலைவாசி உயர்ந்தது. வறுமை பீடித்தது. சமூகத்தில் நிலையாமை உருவானது. அரசின் மீது கோபம் திரும்பியது. இன்று வல்லரசு நாடுகளின் போராக அது மாறியிருக்கிறது.

2019ம் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஐ நா சபையின் மனித உரிமை கவுன்சில் காலநிலை மாற்றத்தை பற்றிய ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. நம்பிக்கை கொடுக்கும் வகையில் அது இல்லை.

‘காலநிலை மாற்றம் அழிவின் எல்லைக்கு ஏழைகளை அழைத்துச் செல்லும்’ என அந்த அறிக்கை தொடங்குகிறது.

உணவுக்கு பஞ்சம், கட்டாய இடப்பெயர்ச்சி, நோய்கள், மரணம் போன்றவை காலநிலை மாற்றத்தால் நேரவிருக்கின்றன. 1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் வெப்பத்தை கட்டுப்படுத்தினாலுமே உலகின் 50 லட்சம் மக்கள் தண்ணீர் பிரச்சினையில் உழலுவார்கள். உணவு கிடைக்காது. வேலைகள் இருக்காது. உடல்நிலை கெடும். 400 கோடி மக்கள் அனல்காற்றை சந்திப்பார்கள்.

முக்கியமாக அரசுகளின் சோம்பலை மனித உரிமை கவுன்சிலின் அறிக்கை கடுமையாக கண்டிக்கிறது. வெற்று அவநம்பிக்கை பேச்சுகளால் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்கிறது. சர்வதேச வணிகத்துக்காக வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தேவையான பாதுகாப்புகளை கொடுத்துவிட்டு, காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் மக்களை அநாதரவாக தவிக்க விட்டு சாகக் கொடுக்கும் அரசுகளின் போக்கை வெளிப்படையாக விமர்சிக்கிறது அறிக்கை.

எல்லாவற்றுக்கும் தீர்வாக அறிக்கை சொல்லும் விஷயம் ஒன்றுதான்.

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்த இயற்கை வளங்களை சுரண்டித்தான் வளர்ச்சி எட்டப்பட்டது. முக்கியமாக புதைபடிம எரிபொருள்களே அந்த வளர்ச்சிக்கான ஆற்றலாக இருந்தது. உலகின் வேலைகளில் பெரும்பாலானவை கரியமில வெளியீட்டை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்தே இருந்திருக்கின்றன. காலநிலை மாற்றத்துக்கான தீர்வு உலக பொருளாதார வடிவங்களில் மிக ஆழமான மாற்றத்தை கொண்டு வருவதில்தான் இருக்கிறது. தொழிலாளர் பாதுகாப்பு,  வாழ்நிலைக்கான பாதுகாப்பு, வேலைகள் உருவாக்கம் ஆகியவை அத்தீர்வுக்கான முன்னெடுப்புகள்.

காவிரி மறுக்கப்பட்டு, தாமிரபரணி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு, புதைபடிம எரிபொருட்களுக்கான வேட்டைக் காடாக தஞ்சை மாற்றப்படும்போது விவசாயம் பொய்க்கும். வேலைகளை  பறிபோகும். மக்களின் வாழ்க்கைகள் தொலையும்.

அந்த நேரத்தில் மிக இயல்பாக கோபத்தின் விளிம்புகளே மக்களின் புகலிடங்களாக  இருக்கும்.

இந்தியாவின் கடைக்கோடியில் இடம்பெற்று முப்பக்கமும் கடல்கள் சூழ்ந்திருக்கும் மாநிலத்தில் காலநிலை மாற்றம் நேரடியாக நேரும் அதே நேரத்தில் சமூக விளைவுகளாகவும் பரிணமிக்கும் சூழலும் வலுவாகவே இருக்கிறது.

தமிழகத்துக்கும் அதன் அரசியல் பேசுவோருக்கும் இருக்கும் கால நிலைமாற்றம் அளிக்கும் வேலைகள் மூன்று. கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மேற்கொள்வதை கட்டாயப்படுத்துவதும் முதல் வேலை. காலநிலை மாற்றம் உருவாக்கப் போகும் சூழலியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை முன்னெடுப்பது இரண்டாம் வேலை. காலநிலை மாற்றம் கொடுக்கவிருக்கும் சமூக விளைவுகளுக்கு தயாராவது மூன்றாவது வேலை.

இயற்கைக்கு நாடு கிடையாது. எல்லைகள் கிடையாது. மொழியோ இனமோ சாதியோ கிடையாது. உலகம் மொத்தத்துக்கும் ஒரே இயற்கைதான். எந்த மூலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் உலகின் மறுமூலையில் அது பிரதிபலிக்கும்.

முதன்முறையாக வேறொரு நாட்டில் நடக்கும் பிரச்சினையின் காரணம் நம்மையும் அவர்களுடன் கொண்டு சென்று இணைக்கிறது. துனிசியாவில் முகமது புவாசிசி எரிந்ததற்கும் தஞ்சாவூரில் ஆனந்த்பாபு கொல்லப்பட்டதம் காரணம் அடிப்படையில் ஒன்றுதான். சிரியாவாகவோ மாலத்தீவாகவோ தமிழகம் மாறுவதற்கு இருக்கப் போகும் காரணமும் ஒன்றேதான்.

இதுவரை எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளுக்கு இரண்டு வகையான விளைவுகள் இருந்திருக்கின்றன. சமூக விளைவு, பொருளாதார விளைவு. இனி எடுக்கப்பட போகும் அரசியல் முடிவுகளுக்கான விளைவுகள் மூன்றாக இருக்கப் போகிறது. சமூக விளைவு, பொருளாதார விளைவு, காலநிலை விளைவு.

எதிர்காலம் கருதியும் நேர்மையான தீர்வுகளுக்காகவும் தமிழினத்தின் நீட்சிக்காகவும் காலநிலை மாற்றத்தை பற்றிய புரிதல் அரசியலிலும் அரசமைப்பிலும் இடம்பெற வேண்டியது காலக்கட்டாயம்.

இன்னுமே அரசும் அரசியல் கட்சிகளும் காலநிலை மாற்றத்தை தங்களின் கொள்கைகளிலும் திட்ட அளவிலும் கொள்ளவில்லை எனில் கடல் தமிழகத்தை கொள்ளும் காலம் வந்துவிடும்.  ஏதோவொரு காலத்தில் நாமல்லாத ஓருயிர் பூமியை தோண்டி பார்க்கும் போது காலநிலையை கூட கணிக்கத் தவறிய அறிவற்ற கூட்டமாக தமிழினம் புரிந்து கொள்ளப்படும்.

  • ராஜசங்கீதன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments