எனக்கு இன்னொருபேர் இருக்கு….முத்து!

இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்தப் பறவையை நான் கேரளத்தின் கொலப்புளி என்ற ஊரில் படம் பிடித்தேன். இது என்ன பறவை என்று அப்போது எனக்குத் தெரியாது. சிட்டுக்குருவியைவிட சற்றே பெரிதாக இருந்தது என்றுதான் நினைக்கிறேன். எனக்கு ஞாபக மறதி அதிகம். சற்று தொலைவில்தான் இருந்திருக்க வேண்டும். இரண்டு புகைப்படங்களே எடுத்திருந்தேன். என்னுடைய கணக்கில் அது குறைவானதுதான். நான் குறைந்தது ஒரு பறவையை பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட முறை படம் எடுப்பேன், அதற்குள் அது பறந்து விடாமல் இருந்தால். பிறகுதான் சற்றே விலகி வேறொரு கோணத்தில், அந்தப் பறவையின் சிறப்புத்தன்மை அல்லது தனித்தன்மை, கண்கள், பறவையின் பின்புலம் இவைகுறித்து கவனம் செலுத்த ஆரம்பிப்பேன். அந்த முறை அதையெல்லாம் செய்வதற்கு முன் என் கவனம் அங்கே என் நண்பரின் வீட்டில் நடந்த சிறு விளையாட்டில் ஈடுபட்டு விட்டது. இச்சிறு பறவை பறந்து விட்டது. அது எனக்களித்திருந்த சிறுபொழுது இப்படி சட்டென்று முடிந்து விட்டது. நான் புகைப்படக்கருவியில் இந்தப் பறவை இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது. ஆனால் தெளிவாக இருந்தது என்று சொல்லுமளவுக்கு இருக்கவில்லை. ஏனெனில் நான் உடனே வேறொரு கிளையை, மரச்செறிவைத் தேட ஆரம்பித்தேன்.
பிறகு வீட்டுக்கு வந்தபிறகு அந்த இரண்டு படங் களும் அவ்வளவு கவரும்விதமாக இல்லை என்று நினைத்தேனோ அல்லது இன்னும் தெளிவாக எடுத்திருக்கலாம் என்று நினைத்தேனோ, ஏதோஒன்று. நான் எனக்குக் கிடைத்த வெகு சொற்பமான நேரத்தில் அந்த இரண்டு படங்களையும் தேடித் தீட்டிக்கொண்டு வர முயலவில்லை. பல மாதங்கள் கழித்து வேறொரு படத்துக்காக இந்த படங்களைப் பார்த்தபோது இந்தப் பறவை என்னை உறுத்துப் பார்த்தது. அதற்கு உருண்டையான பெரிய கண் வேறு. இது ஏதோ ஒரு குருவி என்று கடந்துபோக முடியாத அளவுக்கு என்னை பிடித்து நிறுத்துகிறது. இந்தியாவில் மட்டும் 1300க்கும் மேலான பறவையினங்கள் இருக்கின்றன என்ற தகவல் என்னை அயர்ச்சியடையவே செய்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் பறவையையும் ஒரு குருவி என்று தாண்டிச் செல்லமுடியாத அளவுக்கு அது தெளிவான சில அடையாளங்களோடு இந்தப் படத்தில் பதிவாகி இருந்ததால், இது என்ன பறவையாக இருக்கும் என்று திடீரென என்னையே கேட்டுக் கொண்டேன். அதன் அலகு நிச்சயம் தானியங்களைத் தின்கிற குருவிகளுடையதல்ல. தேன் உண்ணும் சிட்டின் அலகுமல்ல. பூச்சிகளை பிடித்துத் தின்னும் பறவைகளின் அலகை ஒத்ததாகத்தான் தோன்றியது. ஏதேனும் ஈ பிடிப்பானாக இருக்கலாம் என்று நினைத்தேன். அலகின் அடிபுறத்தில் இருக்கும் மயிர் போன்ற அமைப்பும்கூட ஈ பிடிப்பான்களை ஒத்ததாக இருந்தது. ஈ பிடிப்பான்களின் படங்களையும் தேடினேன். ஆசிய பழுப்பு ஈ பிடிப்பானாக இருக்குமோ என்றுதான் நினைத்தேன். இந்தப் பறவையின் கழுத்தோ, மார்போ, வயிறோ படத்தில் இல்லை. நன்றாகத் தெரிவதெல்லாம் செம்பழுப்பு நிற உடல் மேற்பாகங்களும் அழகான கண்ணும்தான். விக்கிபீடியா ஆசிய பழுப்பு ஈ பிடிப்பானின் உடல் மேற்பாகம் சாம்பற்பழுப்பு என்றது. படங்களிலும் அப்படித்தான் தெரிந்தது.

இந்தப் பறவையின் ஆலிவ் பழுப்பு நிற உடல் மேற்பாகமும், சாம்பற் பழுப்பு நிறத்தில் இருந்து வேறுபட்டிருந்தது. இரத்தினத்தின் ‘தமிழ்நாட்டுப்பறவைகள்’ பார்க்கும்போது இது பழுப்பு மார்பு ஈ பிடிப்பானாக இருக்கலாமோ என்று தோன்றியது. சலீம் அலியும் விக்கிபீடியாவும் பழுப்பு மார்பு ஈ பிடிப்பானின் செட்டைகளின் விளிம்பும் (edges of the flight feathers), தோகையடியை மறைக்கும் சிறகுகளும் (tail coverts) செங்காவி (rufous) நிறமாக இருக்கும் குறிப்பிட்டார்கள். இவையே இதை ஆசிய பழுப்பு ஈ பிடிப்பானிடமிருந்து தெளிவாக வேறுபடுத்திக்காட்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதை அடையாளம் காண உதவியது. இறுதியாக என்னை ஒயிலாகத் திரும்பிப் பார்த்த அலகின் அடிப்பகுதியும், கால்களும் வெளுத்த தசை யின் நிறத்தில் இருந்தது இது பழுப்பு மார்பு ஈ பிடிப்பான்தான் என்பதை உறுதி செய்தது. ஆசிய பழுப்பு ஈ பிடிப் பானின் கால் களும் பாதங்களும் கருமை நிறத்தில் இருந்தன.

இந்த பழுப்பு மார்பு ஈ பிடிப் பான்கள் வட கிழக்கு இந்தியாவிலும் மத்திய, தென் சீனத்திலும், வடக்கு பர்மாவிலும், தாய்லாந்திலும் இனப்பெருக்கம் செய்கின்றனவாம். தென்னிந்தியாவுக்கு குறிப்பாக கேரளம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கும் இலங்கைக்கும் வலசை வருகின்றன. இதன் வயிறு ஒரு கருந்திராட்சையின் அளவுக்கு இருக்குமா? நிச்சயம் நன்கு தேறிய அரை நெல்லிக்காயைவிட பெரிதாய் இருக்காது. அதை நிரப்பும் இதன் உணவு குறைந்தபட்சம் வடகிழக்கு மாநிலமொன்றில் இருந்து இலங்கைவரை விசிறியடிக்கப்பட்டுள்ளது. இது பிடிக்கும் பூச்சிகளில் இதன் பெயர் எழுதப்பட்டிருக்குமா? எட்கர் லீ ஓ போட் லேயார்டு ((Edgar Leopold Layard) ஆங்கிலேய இயற்கையியலாளர். இவர் 1800களின் முற்பாதியில் இலங்கையில் 10 வருடங்கள் இருந்தபோது இராபர்ட் டெம்ப்ளீட்டனுடன் இலங்கையின் பறவையினங்களை ஆராய்ந்தார். அப்போது தன்னிடம் இந்தப் பறவையைக் கொண்டு வந்து காட்டிய தன்னுடைய முத்து என்கிற தமிழ்ச் சமையற்காரரின் பெயரால் இதற்கு  Muscicapa Muttui என்ற பெயரை வைத்தார். கழுத்தைச் சற்றே திருப்பி அது விசாரிக்கும் தோரணையை இப்போது மறு படியும் பார்க்கும்போது நினைக்கிறேன் யாரேனும் அப்போது முத்து என்று அழைத்திருப்பார்களோ!

 

(இந்த பறவையின் அறிவியல் பெயர் ஒரு தமிழரின் பெயரில் அழைக்கப்படுகிறது)

நி.தங்கமணி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments