- ஒரு குழந்தை ஆப்பிரிக்காவின் குப்பை மேட்டில் நின்றுகொண்டு எரியும் மின்னணு கழிவுகளிலிருந்து செம்பைப் பிரிக்கிறது.
- மற்றொரு குழந்தை நெகிழி கழிவுகளால் உருவாகப்பட்ட நாற்காலியில் அமர்கிறது.
- ஒரு பெண் பயன்படுத்தப்பட்ட துணிக்குவியல்களில் அணியத்தக்க ஆடைகளை தேடுகிறாள்.
இதற்கிடையில் உலகின் மற்றொரு பக்கத்தில், மக்கள் “இரண்டு வாங்கினால், மூன்று இலவசமாகக் கிடைக்கும்” (Buy 2 Get 3 Free) என்று சலுகையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், காபி கப்புகளையும் மென்தாள்களையும் (Tissue papers) நொடிக்கு டன் கணக்கில் வீசி எறிந்துகொண்டிருக்கிறார்கள். இது வெறும் வணிகமல்ல. இது வெறும் குப்பை சார்ந்த சிக்கலுமல்ல. இது “கழிவுகளின் வழியிலான காலனித்துவம்” (Colonialism by Wastage).
பெரு நிறுவனங்களின் கழிவறைதான் ஏழைகளின் வாழ்விடமா?
இன்றைய உலகம் ‘நிலைத்த வளர்ச்சி’, ‘பசுமை பொருளாதாரம்’, ‘மறுசுழற்சி’, ‘சுழற்சி பொருளாதாரம்’ போன்றச் சொற்களை மிகுந்த பெருமையுடன் உச்சரிக்கிறது. ஆனால், அழகான அச்சொற்களின் பின்னால் உலகம் பேசத் தயங்கும் ஓர் உண்மை “கழிவுகளின் வழியிலான காலனித்துவம்” (Colonialism by Wastage).
ஒருகாலத்தில் காலனித்துவ சக்திகள் ஏழை நாடுகளின் நிலம், வளம், மனித உழைப்பு ஆகியவற்றை சுரண்டின. இன்று, அச்சுரண்டல் வடிவம் மட்டும் மாறியுள்ளது. இப்போது வளங்களை எடுத்துச் சென்ற கப்பல்களின் இடத்தை கழிவுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிடித்துள்ளன. பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகள் தங்களின் அதிகப்படியான நுகர்வால் உருவாகும் நெகிழி, மின்னணுக் கழிவு, துணிக்கழிவு மற்றும் நச்சுப்பொருட்களை ‘மறுசுழற்சி’, ‘பயன்படுத்தப்பட்ட பொருட்கள்’, ‘தானமாக வழங்கப்படும் பொருட்கள்’ என்ற பெயர்களில் தெற்குலக நாடுகள்மீது திணித்துக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தொழில்மயமான நாடுகள் தனிநபர் நுகர்திறனும் நுகர்வின் அளவும் அதிகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தைகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான டன் நெகிழி, துணி மற்றும் மின்னணு கழிவுகள் உருவாகின்றன. அவர்கள் நுகர்ந்தவற்றின் மிச்சங்களான கழிவுப்பொருட்களை அவர்களே அதன் தன்மைக்கேற்ப மறுசுழற்சியோ சிகிச்சையோ செய்கிறார்களா? உரிய கழிவு மேலாண்மை நடக்கிறதா? நிச்சயமாக இல்லை. அவர்களுடைய மிக மலிவான கழிவு மேலாண்மைக்கான வழி என்பது, அக்கழிவுகளை கப்பலேற்றி ஏழை நாடுகளுக்கு அனுப்பிவிடுவதே ஆகும். பின்பு அவர்களே தங்களை வள மீட்புள்ள மற்றும் மறுசுழற்சி விகிதம் அதிகம் கொண்ட நாடு என்று மார்தட்டிக் கொள்வார்கள். உலகின் “தூய்மையான நகரங்கள்” என்று பெருமைப்படுத்திக்கொள்ளும் நாடுகள் தங்களின் தூய்மையை பாதுகாப்பதற்கு ஈடாக ஏழை நாடுகளின் மண், நீர், காற்று, மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை சிதைக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாமல் எளிதில் தொழிலை மேற்கொள்ள முடியாது. அந்நாடுகள் எந்தவொரு பெரும் நிறுவனத்தையும் ‘வெளிநாட்டு முதலீடு’ என்ற பெயரில், எந்த நிபந்தையுமின்றி தங்களின் மண், நீர், காற்று, மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை மாசுபடுத்த அனுமதிப்பதில்லை.
அப்படியானால், எது அந்த பல மில்லியன் டாலர் நிறுவனங்களின் குப்பைத்தொட்டி? எது அதன் கழிவறை?
இக்கழிவுகளின் காலனித்துவத்திற்கு மிகவும் வெளிப்படையான எடுத்துக்காட்டாக அடிக்கடி மாறும் ஆடைப் போக்கு (Fast Fashion) எனப்படும் குறைந்த விலை மற்றும் விரைவான ஆடை உற்பத்தி அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் Zara மற்றும் H&M போன்ற நிறுவனங்கள் புதிய ஆடை வடிவங்களை சந்தைக்குக் கொண்டு வருகின்றன. அதுபோல, “பயன்படுத்தப்பட்ட ஆடை நிலையங்கள்” (Thrift Shops) என்ற பெயரில், பிற நாடுகளில் குவிந்து கிடக்கும் ஆடைகள் பல்வேறு வளர்ந்து வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆடைகள் (Branded Clothes) குறைந்த விலையில் கிடைக்கின்றன என்கிற காரணத்தால், அவற்றின் நுகர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மக்கள் குறைந்த விலை, தள்ளுபடிசலுகைகள், சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் தொடர்ச்சியான நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கத்தினால் தேவைக்கு அதிகமாக ஆடைகளை வாங்கிக் குவிக்கின்றனர். அதிலுள்ள பல ஆடைகள் மிகவும் குறைந்த முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு குப்பையாக மாறுகின்றன. பின்னர் அவை ‘தானமாகும் ஆடைகள்’ அல்லது ‘பயன்படுத்தப்பட்ட ஆடைகள்’ என்ற பெயரில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. கானா (Ghana) போன்ற நாடுகளில் பயன்படுத்த முடியாத ஆடைகள் குவிந்து கிடக்கின்றன. கடற்கரைகள், ஆறுகள் மற்றும் உள்ளூர் சந்தைகள் குப்பைத் துணிகளால் நிரம்புகின்றன. அவற்றை உள்ளூர் மக்கள் ‘மேற்கத்திய நாடுகளின் மிகை நுகர்வின் எச்சங்கள்’ (Dead White Man’s Clothes) என்று அழைப்பது சாதாரண ஒன்றல்ல; அது உலகளாவிய சமத்துவமின்மையின் குரல்.

இதே நிலையை மின்னணுக் கழிவுகளிலும் காண முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி, மின்னணுக் கருவிகள் சந்தைக்கு வருகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற பெயரில் மனிதர்கள் தொடர்ச்சியான மாற்றத்திற்குள் சமூக மற்றும் மனதளவிலும் தள்ளப்படுகின்றனர். ஆனால், ‘பயன்படுத்தப்பட்ட மின்னணுக் கருவிகள்’ என்ற பெயரில் பழைய கருவிகளை ஏழை நாடுகளில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன(கொட்டப்படுகின்றன).
அங்கு குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி வெறும் கைகளால் மின்னணுக் கழிவுகளை உடைத்து செம்பு (copper), அலுமினியம் (aluminium), தங்கம் (gold) போன்றவற்றை பிரித்தெடுக்கின்றனர். இச்செயல்பாட்டின் போது ஈயம் (lead), பாதரசம் (mercury), காட்மியம் (cadmium) போன்ற நச்சுப்பொருட்கள் காற்றில் கலந்து மனித உடலுக்குள் நுழைகின்றன. இவற்றால் ஏற்படும் சுவாச நோய்கள், நரம்பியல் சார்ந்த பாதிப்புகள், தோல் சார்ந்த நோய்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகள் போன்றவை அங்கு வாழும் மக்களின் இயல்பான வாழ்வியல் என்று பிறரால் எளிமையாக கடந்து செல்லப்படுகிறது.
இன்றைய உலகம் நெகிழியைக்கூட ‘புதிய கண்டுபிடிப்புகள்’ மூலம் சமாளிக்க முயல்கிறது. “நெகிழியாலான செங்கற்கள்” (Plastic bricks), ‘நெகிழியாலான சாலைகள்’ (Plastic roads), ‘நெகிழியாலான வகுப்பறைகள்’ (Plastic classrooms), ‘மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட வீடுகள்’ (Homes made from recycled plastic) போன்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பெருமையாகப் பகிரப்படுகின்றன.
நெகிழிக்கான ‘புதுமையான தீர்வுகள்’ என்று கொண்டாடப்படும் அனைத்துத் தீர்வுகளுக்கும் நாம் முன்வைக்க வேண்டிய ஒரே கேள்வி இதுதான்: உங்களது புதிய கண்டுபிடிப்பின் பயன்பாட்டாளர் யார்? முதலாளியா, கடைநிலைத் தொழிலாளியா?. எந்த வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி இருக்கைகள் நிறைந்த பள்ளியில் பயில்வார்கள்? மண்ணினால் நிரப்பப்பட்ட நெகிழிக் குடுவைகளைக்கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கப்போவது யார்?
‘சுற்றுச்சூழல் தீர்வுகள்’ என்பது பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்காக மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. இத்தீர்வுகளும் சமூகத்தில் நிலவும் சாதி, வர்க்க அடிப்படையிலான வேறுபாட்டையே காண்பிக்கிறது. ஒருபுறம் குப்பையை உருவாக்குபவர்கள்; இன்னொரு புறம் அதன் நடுவில் வாழ்ந்து நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள். எங்கோ ஒருவரால் தூக்கி எறியப்படும் நெகிழிக் குடுவை வேறெங்கோ இருக்கும் சுற்றுச்சூழலையோ, உயிரினத்தையோ, மனிதரையோ பாதிக்கிறது. இதுவே ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் அநீதி (Environmental Injustice) ஆகும்.
மற்றொரு உண்மை என்னவெனில், நெகிழிக்கு மறுசுழற்சி என்பது ஒரு தீர்வே அல்ல. நெகிழியை எரிக்கவோ, புதைக்கவோ, சிறு துண்டுகளாக உடைக்கவோ முடியும். ஆனால், அதன் வடிவங்கள் மாறுமே தவிர அவை நமது சுற்றுச்சூழலை விட்டு அழிந்து போவதில்லை. இன்று நுண்ணெகிழிகள் (micro-plastics) குடிநீரிலும், மனித இரத்தத்திலும், கர்ப்பிணிப் பெண்களின் உடலிலும், பிறக்காத சிசுவின் உடலிலும், கடல்வாழ் உயிரினங்களின் உடல்களிலும் கலந்துவிட்டது. நெகிழி மட்டுமல்ல பெரும்பாலான நச்சுப்பொருட்களின் நிலையும் இதுதான். நெகிழி உற்பத்தியாகிவிட்டால் அதனை அழிப்பது இயலாத செயலாகும். எனவே, உலகின் ஆகச்சிறந்த முறையான சுமையற்ற சுற்றுச்சூழல், சுமையற்ற குப்பை மேலாண்மை கோட்பாடு என்னவெனில் ‘அதனை உற்பத்தி செய்யாமல் தவிர்த்தல்’ என்பதே ஆகும்.
உண்மையான சுழற்சி பொருளாதார முறை (Circular Economy) என்பது “மறுசுழற்சி” (Recycle) என்ற சொல்லிலிருந்து தொடங்கக் கூடாது; அது ‘உற்பத்தியைத் தவிர்த்தல்’ என்ற சொல்லிலிருந்து தொடங்க வேண்டும். எந்தத் தொழில்நுட்பமும் தேவையற்ற நுகர்வைத் தவிர்க்காமல் மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியாது. ஆனால், இதனை எந்நேரமும் எதையேனும் நம்மை வாங்கச்சொல்லி திணித்துக்கொண்டே இருக்கும் வர்த்தக உலகம் அனுமதிக்குமா? இன்று எளிமையாக வீட்டிலிருந்தே இணையவழியில் பொருட்களை வாங்குதல் (online shopping), உடனடியான விநியோகம் (instant delivery), பணம் கொடுக்காமலே வாங்கிக்கொண்டு பிறகு அதனைச் செலுத்துதல் (buy now-pay later), தள்ளுபடியை மையமாகக் கொண்ட நுகர்வுப் போக்கு (discount culture) ஆகியவை மனிதர்களை தொடர்ச்சியான நுகர்வுப் பழக்கத்திற்குத் தூண்டுகின்றன.
இது அவர்களை சோம்பேறிகளாகவும் மனதளவில் அதற்கு அடிமைகளாகவும் மாற்றுகிறது. இதன்மூலம் நம்மை பலவகையான நோய்களுக்கு இட்டுச்செல்கிறது. ஒவ்வொரு இணையவழியிலான பொருள் கோரிக்கைகளுக்கும் (online order) ஒரு நெகிழி சார்ந்த பை மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது; ஒவ்வொரு நெகிழிப் பையும் ஓர் எதிர்கால கழிவாக மாறுகிறது. நவீன பொருளாதாரம் என்பது மனிதர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு இயங்கவில்லை; அது முடிவில்லா நுகர்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
எனவே சிந்தித்துப் பாருங்கள், இது யாருடைய குப்பை? இதை ஏன் நமது நிலத்தில் கொட்ட அரசு அனுமதிக்கிறது? அவர்களுக்கு மட்டும் சுத்தமான காற்று, மண், நீர், வாழ்நிலை வேண்டுமென்பதால், அக்கழிவுகளை இங்கே அனுப்பிக் கொட்டுகின்றனர். அவர்களைப்போல அச்சுத்தமான காற்று, மண், நீர், வாழ்நிலையில் வாழ நமக்கோ நமது தலைமுறையினருக்கோ உரிமை இல்லையா? நாம் ஏன் இக்கழிவுகளால் பாதிக்கப்பட்டு அழிய வேண்டும், அவர்களின் நுகர்வின் விலையை நாம் ஏன் செலுத்த வேண்டும்?
ஹம்மாது நூர்தீன் [email protected]








இந்த கருத்தை மக்களுக்கு புரியும்செய்தியாக கொடுத்த உங்களுக்கு நன்றி