புகைப்படங்கள், உரைகள் மற்றும் பாடல்கள் வழியே: தெற்கு ஒடிசாவில் ‘மா மாட்டி மாலி சுரக்ஷியா மன்ஞ்‘ அமைப்புடன் ஒரு பழங்குடியினர் தினம் (Bishwa AdibasiDibas) .
ஒடிசாவின் ராயகடா மற்றும் களஹண்டி மாவட்டங்களில் அமைந்துள்ள சிஜிமாலி, குட்ருமாலி, காண்டுவால்மாலி மற்றும் மஞ்சிங்மாலி ஆகிய மலைத்தொடர்கள், ஆதிவாசி மற்றும் தலித் மக்களின் வாழ்வாதாரமாகவும், பல நூறு நன்னீர் ஊற்றுகளின் பிறப்பிடமாகவும் விளங்கும் சூழலியல் மண்டலங்களாகும். ஆனால், இம்மலைகளுக்கு அடியில் புதைந்துள்ள பல மில்லியன் டன் பாக்சைட் (Bauxite) கனிம வளத்தின் மீது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைப் பார்வை பதிந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், எவ்விதச் சனநாயக நெறிமுறைகளுமின்றி, சிஜிமாலி மலையின் குத்தகை வேதாந்தா நிறுவனத்திற்கும், குட்ருமாலி மலையின் குத்தகை அதானி குழுமத்தின் அங்கமான கலிங்கா அலுமினா(Kalinga Alumina) நிறுவனத்திற்கும் ஏலம் விடப்பட்டன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 5-வது அட்டவணை மற்றும் ‘பெசா’ (PESA) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிகளில், இறந்தவர்களின் பெயர்களிலும், ஊரில் இல்லாதவர்களின் பெயர்களிலும் போலி கையெழுத்துகளைப் போட்டு, போலியான கிராம சபைகளை (Gram Sabhas) நடத்தி மக்களின் சம்மதத்தை அதிகாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து போலியாகத் தயாரித்து இச்சூழ்ச்சி நடந்தேறியுள்ளது.

மக்கள்-இயற்கை விரோத நடவடிக்கைகளிலிருந்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபப்பசியிலிருந்தும் தங்களின் வாழ்வாதாரமான ‘நீர், நிலம், மற்றும் காட்டு வளங்களை காக்க வேண்டும் என அமைதி வழியில் போராடும் மலைவாழ் மக்கள் மீது, ஆளும் அரசாங்கமும் காவல்துறையும் இணைந்து கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. காசிபூர் மற்றும் தமூல்ராம்பூர் வட்டாரங்களில், நள்ளிரவில் வீடுகளின் கதவுகளை உடைத்து அதிரடித் தாக்குதல்கள் நடத்துவதும், மக்களைத் துன்புறுத்துவதுமாக காவல்துறை மற்றும் துணை ராணுவத்துறையின் அடாவடிப் போக்குகள் உள்ளன.
நியமகிரி இயக்கச் செயற்பாட்டாளர்களான லிங்கராஜ் ஆசாத், உபேந்திர பாக் (Upendra Bag) உள்ளிட்ட பலரும், தங்கள் சனநாயக உரிமைகளைக் கோரிய குற்றத்திற்காக ‘உபா’ (UAPA) போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகச் சொந்த மக்களையே வேட்டையாடும் அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தங்கள் பூர்வீக மலைகளைக் காக்கவுமான கூட்டுப் போராட்டத்தின் விளைவாக உருவானதுதான் ‘மா மாட்டி மாலி சுரக்ஷியா மன்ஞ்’ (Maa Mati Mali Surakhya Manch)அமைப்பு.
இப்பின்னணியில் MMMSM (‘மா மாட்டி மாலி சுரக்ஷியா மன்ஞ்- தாய்நிலம், மண் மற்றும் மலை பாதுகாப்புத் தளம’) அமைப்பின் தலைமையில், ஆகஸ்ட் 9 அன்று அப்பகுதி மக்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டின் உலகப் பழங்குடியினர் தினத்தை (பிஷ்வா ஆதிவாசி திவாஸ்) முன்னிட்டு ஓரணியில் திரண்டனர்.
இது வெறும் கொண்டாட்டத்திற்கான ஒன்றுகூடல் அல்ல;
தங்களின் தாய்நிலத்தைக் கார்ப்பரேட் கழுகுகளுக்குத் தாரைவார்க்கத் துடிக்கும் அரசிற்கு எதிரான தங்களின் சமரசமற்ற எதிர்ப்பைப் பதிவு செய்யவும் தங்கள் மீது ஏவப்படும் அரச அடக்குமுறைகளைக் கண்டித்தும், சிறையிலடைக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்காகக் குரலெழுப்பவும் எக்காரணம் கொண்டும் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற அசைக்க முடியாத உறுதியை உலகிற்கு உணர்த்தவுமே மாபெரும் திரட்சி அரங்கேறியது.
இப்பகுதியின் நான்கு புனித மலைகளான காண்டுவால்மாலி, சிஜிமாலி, குட்ருமாலி மற்றும் மஞ்சிங்மாலி ஆகியவற்றைச் சேர்ந்த ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் இதர பூர்வகுடி மக்கள் இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாகப் பங்கேற்றனர். வேதாந்தா நிறுவனத்தின் ‘அறக்கொடையில்’ இயங்கும் ஒரு அரசு மருத்துவமனைக்கு நேர் எதிரே மலை உச்சியில் அமைந்துள்ள சுங்கர் கிராமத்திலிருந்து இவர்களின் பேரணி தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட மக்கள் திரள், பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பந்தேஜி விளையாட்டு மைதானம் வரை அணிவகுத்துச் சென்றது.

பதாகையில் உள்ள வாசகம்: “ஆமா கான்வ் ர ஆமே சர்க்கார், பிதேஷி கம்பெனி நஹி தர்க்கார்” — “எங்கள் கிராமங்களை நாங்களே ஆள்வோம் – எந்தவொரு அந்நிய நிறுவனமும் இங்கு வந்து ஆள முடியாது!”


வானதிர முழக்கமிட்டபடி பந்தேஜி விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓரணியாக அணிவகுத்துச் செல்லும் செல்லும் மக்கள் திரள்.


பின்னர் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
“ஏப்ரல் 7-ஆம் தேதி நள்ளிரவில் நமது கிராமத்திற்குள் புகுந்து காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனத்தை நாம் பார்த்தோம்; இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்தான் நடந்தன.
நாம் தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து, இந்த மலைகளையும் காடுகளையும் பாதுகாத்து வருகிறோம். இதே ஆட்சியர்தான் நம்மிடம் இந்த நிலங்களுக்குப் பட்டா இருக்கிறதா என்று கேட்டவர்.
இப்போது அந்த ஆட்சியர் எனது தனிப்பட்ட எண்ணிற்குத் தொடர்புகொண்டு, 15 நாட்களில் நில ஆவணங்கள் வழங்கப்படும் என்கிறார்.
நான் சொல்கிறேன், இந்தத் தனிநபர் பட்டாக்களைக் குப்பையில் வீசுங்கள்!
இம்மலைகளும் காடுகளும் முழுதும் நமக்குச் சொந்தமானவை; மாவட்ட ஆட்சியர் நேரடியாக நமது தாய்நிலத்திற்கு வந்து, அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள ‘சமூக உரிமைகளை’ (Community rights) எப்போது ஏற்றுக்கொள்கிறாரோ, அப்போதுதான் அவர் தன் தவற்றை உணர்ந்துவிட்டார் என்று நாமும் ஏற்றுக்கொள்வோம்.
இந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள், உள்ளூர் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் என அனைவருமே கம்பெனியின் வேலையாட்கள்…இல்லை இல்லை, கம்பெனியின் தரகர்கள் (தலால்கள்)!
இதே மாதத்தின்(ஆகஸ்டு) 2-ஆம் தேதியன்று அதானி தனது சொந்த ஹெலிகாப்டரில் பறந்து வந்து, நமது ஆதிவாசி மக்களின் ‘சாஸ்பாஹு மாலி’ (Saasbahu Mali) மலையைத் திருட முற்படவில்லையா?
வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேதாந்தா நிறுவனத்திற்கு காண்டுவால்மாலி (Khandualmali) மலையின் குத்தகை தாரைவார்க்கப்படவில்லையா?
இங்குள்ள அனைத்து மலைகளையும் சேர்ந்த ஆதிவாசிகள், தலித்துகள் என நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒன்றாக இணைந்து, கூட்டாகச் சதிசெய்யும் இந்த அரசிற்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் எதிரான இந்தப்போரில் வெல்வோம்!
காங்கிரஸ், பிஜேடி (BJD) அல்லது இடதுசாரி கட்சிகள் என எந்தக் கட்சியாக இருந்தாலும், எங்களிடம் வந்து போலி ஆதரவைக் காட்டும் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் குறிப்பாக, பாஜகவையும் அதன் பிரதிநிதிகளை நாங்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறோம்!! அரசியல் லாபம் தேடுவதற்காக எங்கள் அமைப்புடன் ஒட்டிக்கொள்ள முற்படும் அவர்கள், மறுபுறம் சென்று எங்கள் மலைகளை, எங்களின் தாயை ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்!!.”

‘பெசா’ (PESA) சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட சிஜிமாலி மலையில் காவல் துறையினரும், அரசு நிர்வாகமும், கம்பெனி அதிகாரிகளும் அத்துமீறி நுழைவதைத் தடுத்து நிறுத்தி, தங்களின் நிலத்தைக் காக்கும் ஜனநாயக உரிமையைக் கையில் எடுத்ததற்காக 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் இவர்.

செரம்பாய் கிராமத்தைச் சேர்ந்த சச்சிதானந்தா மாஜி (மேலே நடுவில், நீல நிற உடையில்) மூன்று மலைகளின் மக்களுக்காகப் பந்தேஜியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான திறந்தவெளி சமையலறையை ஒருங்கிணைக்கிறார்.
மஞ்சிங்கமாலி மலையடிவாரத்தில் உள்ள செரம்பாயைச் சேர்ந்த சுனா, பர்சு மற்றும் துங்கியா மாஜி; சிஜிமாலி மலையடிவாரத்தில் உள்ள அலிகுனாவைச் சேர்ந்த ராஜேந்திரா மற்றும் தாகு மாஜி, ஜெய்சிங் மாஜி (போண்டல்), கோவிந்தா மாஜி (கந்தமால்), அர்ஜுன் மற்றும் ராஜு நாயக் (பந்தேஜி); மற்றும் குட்ருமாலி மலையின் மகனான லக்கன் மாஜி (கெர்பாய் — ஆகியோரைக் கொண்ட குழுவே, இந்நிகழ்விற்காக மூன்று மலைகளிலிருந்தும் பெருந்திரளாக வந்திருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களுக்காகப் பாசத்துடன் சமைத்தவர்கள்.


இம்மலைகளின் உண்மையான ‘ஆட்சியாளர்களாக’ விளங்கும் ஆதிவாசி இளைஞர்கள் (தங்க்ரா-தங்க்ரி – Dhangra-dhangri) அனைவரும், மாலியின் புனிதத்தைக் காக்க போரட்டக் களம் புக வேண்டும் என அப்பாடல் அறைகூவல் விடுத்தது. மேலும், ஆதிவாசி-பூர்வகுடிகளாகிய நாம் நமது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று கூடியிருந்த அனைவரிடமும் எழுச்சியை விதைத்த அப்பாடல், “நாம் இந்திய அரசியலமைப்புச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே தவிர, ஆளும் ஒடிசா அரசாங்கத்திற்கு அல்ல” என்று அதிகாரத்தின் முகத்தில் அறைந்து சொல்கிறது.
“லே லே லே லே லே லே லே லே லே லா லா லே லே ஓ சாசி பாய்” — (களஹண்டியில் உள்ள பவானிபட்டணா சந்தையிலிருந்து வீடு திரும்பும் வழியில் காவல்துறையினரால் அத்துமீறிப் பிடித்துச் செல்லப்பட்டு, 5 மாதங்கள் சிறையிருளில் தள்ளப்பட்டபோது பத்மன் நாயக்கால் எழுதப்பட்ட பாடல் இது).

நரிங்தெய் மாஜி ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
“நமது தாய்க்காகவும் தாய்நிலத்திற்காகவும் போராடியதற்காகவே நான் சிறைக்கு அனுப்பப்பட்டேன் — நமக்கு நீரையும் வாழ்வையும் வழங்கும் இந்தச் சிஜிமாலி நமது தாய் தான்.
ஒருவகையில், நான் இங்கு கூடியிருக்கும் நமக்காக மட்டும் போராடவில்லை, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும்தான் போராடுகிறேன். இனி எந்தச் சிறைக்கும் நான் அஞ்சப் போவதில்லை. ஆனால், இப்போராட்டத்தைக் கைவிடச் சொல்லி என்னை மீண்டும் மீண்டும் அலைபேசியில் அழைத்து மூளைச்சலவை செய்ய முயலும் ராயகடா மாவட்ட ஆட்சியரையும், கோராபுட் ஐ.ஜி-யையும் (IG) நான் எச்சரிக்கிறேன்.
அதேபோல எங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களையும், என் சொந்தச் சகோதர சகோதரிகளையும் நான் எச்சரிக்கிறேன் — நீங்கள் கம்பெனியிடம் சென்று 1500 ரூபாய் சல்லிக்காசை வாங்குவதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்; அப்பணத்திற்காக உங்கள் பெற்ற தாயையே விற்றுவிட்ட நீங்கள், உங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இங்கிருந்து வெளியேறுங்கள் என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன்”.
அபந்தி மாஜி ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
“ம்மலைகளின் நிழலில் வாழும் ஆண்களும் பெண்களுமாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நம்மைப் பீடித்துள்ள இந்த அரக்கனை (கார்ப்பரேட் நிறுவனங்களை) விரட்டியடிக்க வேண்டும். எங்கள் மூதாதையர் கிராமமான குர்குடியில், மாநில நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து மரங்களை வெட்டி நிலத்தை அபகரிக்க முயன்றபோது, பெருநிறுவன ஆக்கிரமிப்பை எதிர்த்துக் கொட்டும் மழையிலும் எங்கள் குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு போரட்டக்களம் புகுந்தோம். காவல்துறை எங்களை லத்தியால் கொடூரமாகத் தாக்கியது; ஆனாலும் நாங்கள் லிங்கராஜ் ஆசாத்துடன் (நியமகிரி இயக்கச் செயற்பாட்டாளர், மார்ச் 2026 முதல் சிறையில் உள்ளார்) நெஞ்சை நிமிர்த்தி உறுதியாக நின்றோம். எங்கேயோ வெகு தொலைவிலிருந்து வந்த அவர் எங்களுக்காகத் தோள் கொடுத்தார். இந்திராவதி நதியில் கலக்கும் இந்தச் சிற்றோடைகளின் தூய நீரைக் குடித்துப் பசியாறிய நாம் அனைவரும், இதற்காக ஒன்றாகக் கைகோர்த்துப் போராட முடியாதா என்ன?!”

தியாகி பிர்சா முண்டா, தியாகி ரெண்டோ மாஜி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் நினைவாக இது அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் சிஜிமாலி மலை தொலைதூர எல்லைவரை விரிந்திருக்க, அதன் சாட்சியாக, ‘மா மாட்டி மாலி சுரக்யா மஞ்ச்’ (Maa Mati Mali Surakhya Manch) அமைப்பினரால் இயற்கைக்கும் மூதாதையருக்கும்மரியாதை செலுத்தும் சடங்கு முன்னெடுக்கப்பட்டது. — அது வெறும் சடங்கல்ல; தங்கள் தாய்நிலத்திற்குச்செலுத்தும் மரியாதை, தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் உறுதிமொழி, மற்றும் தலைமுறை தலைமுறையாகத்தொடரும் தங்களின் மண் சார்ந்த வேர்களைக் காப்பதற்கான மாபெரும் பற்றுறுதி.


சனாதன் பிரதான் சிறையில் வாடும் லிங்கராஜ் ஆசாத் குறித்தும், தனது எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டு மக்களின் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகும்படி வேதாந்தா பிரதிநிதிகள் தன்னைத் தேடி வந்து பல சொகுசு வாகனங்களை (Bolero கார்களின் அணிவகுப்பை) லஞ்சமாகக் கொடுத்து பேரம்பேச முயன்ற விவகாரம் குறித்தும் உரையாற்றினார்.

“சங்ராமி ஆமே, சங்ராமி ஆமே, சங்ராம் கரி ஜீபா,
சங்ராம் கரி, தேச பாய் ஆமே ஜீபன் கு தேய் தேபா,
சங்ராம் அமா மன, சங்ராம் அமா பிராண,
சங்ராம் கரி, தேச பாய் ஆமே ஜீபன் கு தேய் தேபா.”
(பாடலின் பொருள்:
நாங்கள் போராளிகள், நாங்கள் போராளிகள், போராடியே தீருவோம்; போராடி, இந்த நிலத்துக்காக எங்கள் உயிரைக்கொடுப்போம்; போராட்டம் எங்கள் மனம், போராட்டம் எங்கள் உயிர்;
போராடி, இந்நிலத்துக்காக எங்கள் உயிரைக் கொடுப்போம்!)
சிஜிமாலி மலையை வேதாந்தா நிறுவனத்திற்கும், குட்ருமாலி மலையை அதானிக்கும் ஏலம் விட்டதிலிருந்து இந்தப்போராட்டம் தொடங்கிய நாள்முதல்; களஹண்டி மாவட்டத்தின் தமூல் ராம்பூர் (Thuamal Rampur) வட்டாரத்திலும், ராயகடா மாவட்டத்தின் காசிபூர் (Kasipur) வட்டாரத்திலும் அரங்கேறிய நள்ளிரவு அதிரடித் தாக்குதல்கள், மக்களின் உடைமைகள் நாசமாக்கப்படுதல், சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுதல் போன்ற அரச அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, கைது செய்யப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் இந்தப் பாடல் ஒரு உணர்வுமிக்க போர்க்குரலாகவும் வீரமுழக்கமாகவும் ஒலித்தது.
பெருமழையில் திரண்ட மக்களின் பல்வேறு உணர்வுநிலைகள்.



செரம்பாய் கிராமத்தைச் சேர்ந்த உலாங் தெய் மாஜியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “இந்த மாலி எங்களுக்கு வெறும் மலை அல்ல; எங்கள் தாய். தன் தாய்ப்பாலைப் புகட்டி, எந்நிலையிலும் எங்களை அரவணைத்துக் காத்தவள் அவளே. எங்கள் மூதாதையர்களுக்கும் சரி, இன்று எங்களுக்கும் சரி, பசியாற்றியவள் அவள்தான்; இனி வரப்போகும் அத்தனை தலைமுறைகளுக்கும் அவளே படியளந்து காப்பாள்”.
கட்டுரை மற்றும் புகைப்படம் - ராண்டல் சிக்வேரா ([email protected]) மொழிபெயர்ப்பு - கலை ([email protected])
