உலகின் பல்வேறு காலநிலை, வானிலை ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் 2026-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வின் தீவிரத்தையும் அதன் பாதிப்பையும் உறுதி செய்துள்ளனர். இதனால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடும் வறட்சி ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் கணித்தது போலவே பருவமழையானது தாமதமாகவேத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் பருவமழை தீவிரமின்றியும் நிலவுகிறது. காவிரி உட்பட தென்னிந்திய நதிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பருவமழை பற்றாக்குறையாக உள்ளது.
ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி பருவமழை 42% பற்றாக்குறையாக உள்ளது. ஒடிஷா, மத்திய பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கரை உள்ளடக்கிய மத்திய இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 59% ஆகவும், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம், ஜார்கண்ட், பீகார் உள்ளடக்கிய கிழக்கு & வட கிழக்கு இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 41% ஆகவும், அந்தமான் & நிகோபார், கடலோர ஆந்திரா, தெலங்கானா, ராயலசீமா. கடலோரா, தெற்கு மற்றும் வடக்கு உள் கர்நாடகா, , கேரளா, தமிழ் நாடு, புதுவை, லட்சத்தவுகள் உள்ளடக்கிய தென் தீபகற்ப இந்தியாவில் பருவமழை பற்றக்குறை 28% ஆகவும், கிழக்கு மற்றும் மேற்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 22% ஆகவும் உள்ளது.

23.06.2026 அன்று ஒன்றிய வேளாண்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. விவசாய அமைச்சகம் மற்றும் ICAR இணைந்து அறிவியல் தரவுகளின் அடிப்படையில் குறைந்த மழை மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதியற்ற மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளன. பருவமழை பற்றாக்குரையால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 315 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், நீர்ப்பாசன வசதி 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 111 மாவட்டங்கள் உயர் முன்னுரிமை மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 76 மாவட்டங்கள் 25 முதல் 50 சதவீதம் வரையிலான நீர்ப்பாசன வசதியுடன் நடுத்தர முன்னுரிமை வகையில் உள்ளன.அணைகள் மற்றும் பிற நீராதாரங்கள் மூலம் ஒப்பீட்டளவில் சிறந்த நீர்ப்பாசன வசதிகள் இருப்பதால் 128 மாவட்டங்கள் குறைந்த முன்னுரிமையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பெரும்பாலானவை 12 மாநிலங்களில் அமைந்துள்ளன — மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பிகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா. இம்மாநிலங்களின் விவசாய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன
இப்பட்டியலில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் (அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர்) வறட்சி பாதிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலை எதிர்கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
சூப்பர்-எல்நினோ என்பது தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. தற்போது துவங்கியிருக்கும் சூப்பர்-எல்நினோ 2027-ஆம் ஆண்டு வரை தொடரும் என்று கூறுகின்றனர். இதனால் வெப்பஅலை, வறட்சி, நீரிடி போன்ற பல்வேறு பேரிடர்களை நாம் சந்திக்க நேரிடும். வேளாண்மையில் இதன் தாக்கம் மிக தீவிரமாக இருக்கும் பட்சத்தில், இதனை எதிர்கொள்வதற்கான ‘ஓராண்டு சிறப்பு திட்டத்தை’ தமிழ் நாடு அரசு வடிவமைக்க வேண்டும். ஒன்றிய அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது போன்ற சிறப்பு எல்நினோ கண்காணிப்பு அலகு (El Nino Monitoring Cell) தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.
இச்சிறப்பு அலகானது வேளாண்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடைத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளை ஒருங்கினைத்து முடிவெடுக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். பருவமழை அளவைக் கண்காணித்து அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் குறைந்த கால அளவில் குறைந்த நீரைப் பயன்படுத்தும் வகையிலான பயிர்களைப் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள அணைகளின் நீர்மட்டத்தைக் கண்காணித்து குடிநீர் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கான தீவனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு உடனடியாக El Nino Monitoring Cell-ஐ உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
SUBDIVISION_RAINFALL_DISTRIBUTION_COUNTRY_INDIA_cd-2
