நெகிழி மாசுபாட்டைப் பற்றிய விவாதங்கள் இன்று பெரும்பாலும் இறுதியாக ஒரே இடத்தில் வந்து நிற்கின்றன. “மக்கள் கழிவுகளை முறையாகப் பிரித்துக் கொடுப்பதில்லை”, “மறுசுழற்சியை அதிகரித்தால் பிரச்னை தீர்ந்துவிடும்”, “புதிய தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்” போன்ற கருத்துகளையே நாம் தொடர்ந்து கேட்கிறோம். இவற்றில் உண்மை இல்லையென்று கூற முடியாது. ஆனால், அவை முழு உண்மையா? அல்லது, நெகிழி நெருக்கடியைப் பற்றிய நமது புரிதலே பல ஆண்டுகளாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதா?
இக்கேள்விக்குப் பதில் தேடுகிறது, “பிளாஸ்டிக் சதி” (The Plastics Plot) என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும், “நெகிழி மாசுபாட்டிற்குப் பின்னால் இருக்கும் பெருநிறுவனங்களின் பொய்ப் பிரச்சாரத் தந்திர உத்திகள்” (The Corporate Disinformation Tactics Behind Plastic Pollution) என்ற பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்ட மையத்தின் (Center for International Environmental Law – CIEL) ஆய்வறிக்கை. இதன் மையக் கருத்து தெளிவானது. நெகிழி மாசுபாடு என்பது கழிவுகளின் பிரச்னை மட்டுமல்ல; தகவல்களைத் திட்டமிட்டு திரித்து, பொதுமக்களின் கருத்துகளையும் அரசுகளின் கொள்கைகளையும் வடிவமைக்கும் ‘தகவல் அரசியலின்’ பிரச்னையும் ஆகும்
இப்பொய்ப் பிரச்சாரத் தந்திரங்களைப் பகுப்பாய்வு செய்ய, பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்ட மையம், எழுத்தாளர் கிராண்ட் என்னிஸ் (Grant Ennis) தனது Dark PR நூலில் முன்வைத்த “ஒன்பது சூழ்ச்சிச் சட்டகங்கள்” (Nine Devious Frames) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துகிறது. Dark Public Relations (Dark PR) என்பது மக்கள் தொடர்பு (PR) உத்திகளைத் தவறாகப் பயன்படுத்தும் அணுகுமுறையாகும். இதில், நிறுவனங்கள் தங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு தந்திரங்களில் ஈடுபடுகின்றன. அவை, உண்மையைத் திரித்தல், அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகம் ஏற்படுத்தல், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பல், கொள்கை முடிவுகளைத் தாமதப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக மக்களோடான தகவல் தொடர்பு உத்திகளைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றன.
இதன் நோக்கம், பொதுமக்களின் கதையாடல்களைத் தங்களுக்குச் சாதகமாக வடிவமைப்பதாகும். ஒரு குறிப்பிட்ட கதை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலே போதும். அதன் பிறகு அக்கருத்து ஊடகங்கள், சமூக ஊடகங்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் உரையாடல்கள் வழியாகப் பரவி, உண்மையான பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
அதனால்தான், இன்று நெகிழி நெருக்கடி பெரும்பாலும் “கழிவு மேலாண்மைப் பிரச்னை” என்று மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் அது புதைபடிவ எரிபொருட்களை பிரித்தெடுப்பில் தொடங்கி, வேதிப்பொருள் உற்பத்தி, நெகிழி தயாரிப்பு, பயன்பாடு, கழிவாக மாறுதல், திறந்தவெளி எரிப்பு, நிலம் மற்றும் கடலில் பரவுதல் வரை நீளும், முழு வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட பிரச்னையாகும். இம்முழு வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றிய விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளி, குப்பைத் தொட்டியில் முடியும் கடைசி கட்டத்தை மட்டும் பொதுவிவாதத்தின் மையமாக மாற்றுவதே இத்தகவல் திரிப்பு உத்திகளின் முக்கிய விளைவு என்று CIEL கூறுகிறது.
மேலும், CIEL அறிக்கையின்படி, இக்கதையாடலை (narrative) உருவாக்கவும் வலுப்படுத்தவும் பல்வேறு தகவல் திரிப்பு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில், ‘நெகிழியால் பெரிய பாதிப்பு இல்லை’ என்ற கருத்து பரப்பப்படுகிறது. அறிவியல் ஆய்வுகளில் இன்னும் விடை கிடைக்காத கேள்விகளை மிகைப்படுத்தி, “ஆபத்து நிரூபிக்கப்படவில்லை” என்ற தோற்றத்தை இவை உருவாக்குகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மனித இரத்தம், தாயின் நஞ்சுக்கொடி, நுரையீரல் உள்ளிட்ட பல உறுப்புகளில் நுண்ணிய நெகிழித் துகள்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. நெகிழித் துகள்களில், நெகிழியின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல வேதிப்பொருட்கள் உடல்நலக் கவலைகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றை இந்நிறுவனங்கள் வசதியாகப் புறந்தள்ளி விடுகின்றன.
நெகிழியின் பாதிப்புகளை முழுமையாக மறுக்க முடியாத சூழலில், ‘தகவல் திரிப்பு’ உத்திகள் புதிய வடிவம் பெறுகின்றன. மருத்துவம், உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற துறைகளில் நெகிழியின் தவிர்க்க முடியாத பயன்பாடுகள் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகின்றன. இவை உண்மையான பயன்பாடுகள்தான். ஆனால், அந்த உண்மையான பயன்பாடுகளை முன்வைத்து, தேவையற்ற ஒருமுறைப் பயன்பாட்டு நெகிழிகளின் உற்பத்தியையும் அதிகப்படியான பொதியிடலையும் நியாயப்படுத்த முடியுமா என்பதே CIEL எழுப்பும் கேள்வியாகும்.
வாதத்தின் அடுத்த கட்டமாக, “நெகிழி இல்லாமல் நவீன வாழ்க்கையே சாத்தியமில்லை” என்ற கருத்தும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஒரு பொருள் எங்கும் காணப்படுவதால் அது தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால், மனித சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நெகிழி இல்லாமலேயே வாழ்ந்தது. இன்றும் பல பயன்பாடுகளுக்கு மாற்று வழிகள் உள்ளன. எனவே எந்தவொரு நெகிழிப் பயன்பாடும் தவிர்க்க முடியாதது அல்ல.
அடுத்ததாக, பிரச்னையை மறுக்க முடியாத நிலையில், “புதிய மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்” என்ற நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட மறுசுழற்சி, வேதியியல் மறுசுழற்சி, மட்கக்கூடிய நெகிழிகள் போன்றவை எதிர்காலத் தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்களை ஆராய்வது அவசியம்தான். ஆனால், அவற்றைக் காரணமாகக் காட்டி, இன்று எடுக்க வேண்டிய உற்பத்திக் கட்டுப்பாடு போன்ற கொள்கை முடிவுகளை ஒத்திவைப்பதே இத்தகவல் திரிப்பு உத்தியின் முக்கிய விளைவாகும்.
உத்தியின் முக்கிய எடுத்துக்காட்டாக மறுசுழற்சி முன்வைக்கப்படுகிறது. மறுசுழற்சி அவசியமானது. ஆனால், அது மட்டும் நெகிழி நெருக்கடிக்கான முழுமையான தீர்வல்ல. புதிய நெகிழி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், மறுசுழற்சியால் மட்டும் நெருக்கடியைத் தீர்க்க முடியாது. அதுபோல, “மட்கக்கூடிய நெகிழிகள்”, “சுற்றுச்சூழலுக்கு உகந்தது”, “பசுமையானது” போன்ற கூற்றுகளும் பல நேரங்களில் முழுமையான அறிவியல் விளக்கங்கள் இல்லாமல் முன்வைக்கப்படுகின்றன. இவை பச்சைப் பாசாங்குகள் (Greenwashing) என அடையாளப்படுத்தப்படுகின்றன.
பெருநிறுவன பொய்ப் பிரச்சாரத்தின் மற்றொரு முக்கிய உத்தி, பொறுப்பின் சுமையை உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோரின் மீது திசைதிருப்புவதாகும். அமெரிக்காவில், “அமெரிக்காவை அழகாக வைத்திருப்போம்” (Keep America Beautiful) என்ற பிரச்சாரம், “மாசுபாட்டை உருவாக்குவது மக்களே; அதைத் தடுக்கவும் மக்களாலேயே முடியும்” (People start pollution. People can stop it.) என்ற வாசகத்தின் மூலம் குப்பை மாசுபாட்டை தனிநபரின் பொறுப்பாக மட்டுமே சித்தரித்தது.
குடிமக்களின் பொறுப்பை மறுக்க முடியாது. ஆனால் தேவையற்ற நெகிழி உற்பத்தி, அதிகப்படியான பொதியிடல் மற்றும் பொருட்களின் வடிவமைப்பு போன்ற அடிப்படைக் காரணங்களைப் பின்னுக்குத் தள்ளும்போது, உற்பத்தியாளர்களின் பொறுப்பைப் பற்றிய விவாதம் மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிரச்னையின் மையம் நுகர்வோரின் நடத்தையை நோக்கி நகர்த்தப்படுகிறது.
இத்தகைய தகவல் திரிப்பு உத்திகளை எதிர்கொள்வதற்காக, CIEL பல முக்கிய பரிந்துரைகளை முன்வைக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது ‘தகவல் நேர்மை’ (Information Integrity) ஆகும். சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சுகாதாரம் தொடர்பான தகவல்கள் முழுமையாகவும், வெளிப்படையாகவும், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலும் பொதுமக்களிடம் சென்றடைய வேண்டும். ஆதாரமற்ற சுற்றுச்சூழல் கூற்றுகள், பச்சைப் பாசாங்குகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல், கொள்கை உருவாக்கத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்; அரசின் கொள்கை முடிவுகள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்; பெருநிறுவனங்களின் வணிக நலன்களின் அடிப்படையில் அல்ல. அதற்காக, கொள்கை உருவாக்கத்தில் பெருநிறுவனங்களின் பங்கேற்பும் அவர்களுடைய வணிக நலன்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று CIEL அறிக்கை வலியுறுத்துகிறது.
நெகிழி நெருக்கடிக்கான தீர்வாக CIEL, கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சியை நிராகரிக்கவில்லை. அவை அவசியமானவை என்பதைத் தெளிவாக ஏற்கிறது. ஆனால், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நெகிழி உற்பத்தியைக் குறைக்க வேண்டிய அவசியத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காக அது முன்னிறுத்தப்படக்கூடாது என்று அறிக்கை எச்சரிக்கிறது. தேவையற்ற நெகிழி உற்பத்தியைக் குறைத்து, மீண்டும் பயன்படுத்தும் மற்றும் மீள்நிரப்பும் (Reuse and Refill systems) முறைகளை விரிவுபடுத்தி, ஆபத்தான வேதிப்பொருட்களைக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பான பொருள் வடிவமைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அறிக்கையின் மையச் செய்தியாகும்.
நெகிழி நெருக்கடியைப் பற்றிய CIEL ஆய்வறிக்கை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது. நெகிழி மாசுபாடு என்பது கழிவுகளின் கதை மட்டுமல்ல; அது தகவல் திரிப்பின் கதையும் கூட. மக்கள் என்ன நம்ப வேண்டும், எந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டும், எந்தத் தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைக்கூட திட்டமிட்ட தகவல் பரப்புரை வடிவமைக்க முடியும்.
தகவல் திரிப்பு உத்திகளைப் புரிந்துகொள்ளாமல், நெகிழி நெருக்கடியின் உண்மையான காரணங்களையும் நீடித்த தீர்வுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எனவே, நெகிழி மாசுபாட்டுக்கு எதிரான போராட்டம் கழிவுகளைப் பொறுப்புடன் நிர்வகிக்கும் போராட்டம் மட்டுமல்ல; பெருநிறுவனங்களின் பொய்ப் பிரச்சாரத் தந்திரங்களை அடையாளம் கண்டு, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும் போராட்டமும் ஆகும். அதுவே ‘பிளாஸ்டிக் சதி’ (The Plastics Plot) ஆய்வறிக்கையின் மையச் செய்தியாகும்.
ஆனந்தி ஆரூரன்
