முரண்களை நோக்கி நகரும் மனித சமூகம்

 

மாற்றம் ஒன்றை தவிர எல்லாம் மாற கூடியது என்கிறார் மார்க்ஸ். மாற்றம் என்பது இயற்கையானது. இயற்கையில் நிகழும் மாற்றம் கூட, தொழில் புரட்சிக்கு முன்பாக, இயற்கையானதாக இருந்தது. மனித செயல்கள் காரணமாக சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. காலநிலையிலும் மாற்றம் நிகழ்ந்து வருவது நாம் அறிந்ததே. இயற்கை அமைப்புகளில் மட்டுமல்ல சமூக அமைப்பிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இப்படி நிகழும் மாற்றங்கள் மனித சமூகம் உள்ளிட்ட பல்லுயிர்களை நிச்சயமாக பாதிக்கும் என்பதை பரிணாம வரலாறு கூறுகிறது. மாற்றங்களை விளக்குவதும் மட்டு போதாது, சமூகத்தை சமநிலை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டும் என்றும் கூறுகிறது மார்க்சியம்.

மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் (adaptability) கொள்ளும் தன்மையுள்ள உயிரினமே தப்பி பிழைக்கும் என்று டார்வின் கூறுகிறார். மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தகவமைக்கும் தன்மை எல்லா உயிர்களுக்கும் உள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை. மாறும் சூழலுக்கு ஏற்ப மனித சமூகம் தகவமைக்கும் தன்மை எல்லா வர்க்க மக்களுக்கும் சாத்தியமா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஒருபுறத்தில் குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினர் காலநிலை மாறுதலுக்கு காரணமாக இருக்கின்றனர். யார் இந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள்? மேற்கு உலகை சார்ந்த மரபுவழி எரிசக்தி உற்பத்தியாளர்களை அந்த வர்க்கமாக அடையாளப்படுத்தலாம். காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தம், காலநிலை மாற்றத்திற்கான காரணிகளாக 32 நாடுகளை கூறுகிறது.

ஒருவகையில் அதே வர்க்கம் தான் மாறும் சூழலுக்கு ஏற்ப அனைத்து மக்களும் தங்களை பாதுகாத்து கொள்ளும் உரிமையை பெறாமல் தடுக்கின்றன. உலக நாடுகளின் அரசுகளை கட்டுப்படுத்தும் சில அமைப்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இதனை சாதிக்கின்றனர். சுருக்கமாக கூற வேண்டுமானால் சிறியளவிலான வர்க்க குழு, உயிரழிவு காலத்தை (extinction) நோக்கி நம்மை தள்ளுகிறது. இவ்வுலகில் உள்ள பல்லுயிர்களையும் தள்ளுகிறது. ஒரு பேரழிவை நிகழ்த்தி இறுதியில் அந்த வர்க்கம் தப்பி பிழைக்கவும் கூடும்.

முரண்களை பற்றி:

இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம் இயற்கையில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே என பொருள் முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே. அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கிடையே உள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையே உள்ள முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியேயாகும். இம் முரண்பாடுகளின் வளர்ச்சியே, சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளி, பழைய சமுதாயத்தை அகற்றி புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. பொருள் முதல்வாத இயங்கியல், புறக் காரணிகளை ஒரு போதும் புறக்கணிப்பதில்லை. புறக்காரணிகள் மாறுதல்களுக்கான சூழ்நிலை; அகக்காரணிகளே மாறுதல்களுக்கான அடிப்படை; புறக்காரணிகள் அகக் காரணிகள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள் முதல்வாத இயங்கியல் கருதுகின்றது”   என்று மாவோ, “முரண்களை பற்றி” என்னும் கட்டுரையில் கூறுகிறார்.

சமூகத்தில் நிகழும் எந்த ஒரு மாற்றமும் அகக் காரணிகளாலும், புறக் காரணிகளாலும் நடைபெறுகின்றன என்று கூறுகிறார் மாவோ.  அகக் காரணிகள் என்பது மனித சமூகத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை குறிக்கிறது. உதரணமாக சாதி, மதம், இனம், வர்க்கம், கலாச்சாரம், தேசம் போன்ற அமைப்புகளை கூறலாம். இந்த அமைப்புகள் காரணமாக பல மாற்றங்களும், முரண்களும் மனித சமூகத்தில் நிகழ்ந்து உள்ளது என்பதை நாம் அறிவோம்.   அதே நேரத்தில் சமூக மாற்றங்களுக்கு, சுற்றுச்சூழல் சார்ந்த புறக் காரணிகளின் அழுத்தங்களையும் நாம் மறுத்துவிட முடியாது. சூழல் மாற்றம் காரணமாக பல பழங்குடி சமூகங்கள் அழிந்துள்ளன. பல சமூக நிலைகள் மாறியுள்ளதை வரலாறு நமக்கு கூறுகிறது. இதன் அடிப்படையிலேயே மனித சமூகம் மாற்றம் அடைந்துள்ளதாக மாவோ கூறுகிறார்.

கொரானா தொற்றுக்கு பின்பான சமூகம் எத்தகைய முரண்களை கொண்ட சமூகமாக இருக்கப் போகிறது என்பதற்கான கேள்வியில் இருக்கிறது, நமது இருத்தலியலுக்கான விடை. கொரானா தொற்று உருவாகக் காரணமாக இருந்த  சூழல் சிதைவில் இருந்து ஆராய்ச்சியை துவங்க வேண்டிய காலம் இது. கொரானா தொற்றுக்கு பின்பான உலக அமைப்பு எத்தகைய முரண்களை கொண்டு இருக்கும் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

இயற்கை அமைப்புகள்:

ஒவ்வொரு தனி மனிதனையும் இரண்டு அமைப்புகள் கட்டுப்படுத்துகின்றன: சமூக அமைப்பு, இயற்கை அமைப்பு. இந்த இரண்டு அமைப்புகளும் பல்வேறு அமைப்புகள்  கொண்டதாக உள்ளது.

பால்வீதியிலுள்ள ஞாயிற்றுக் குடும்ப அமைப்பு, பல மண்டலங்களை கொண்ட பூவுலகு அமைப்பு, இப்படி இயற்கை பல அமைப்புகளை கொண்டுள்ளது. இயற்பியல் விதிகளின் அடிப்படையில் இந்த அமைப்புகளை நாம் அறிகிறோம். நமக்கான உயிர்வளி (oxygen), மழை, வெயில், போன்றவற்றை இந்த அமைப்புகளே தருகின்றன. மனித சமூகம் மட்டுமல்ல எல்லா உயிரினங்களும் இந்த அமைப்புகளைச் சார்ந்தே உள்ளன. பூவுலகின் அமைப்பில், ஒவ்வொரு உயிரும் தான் வாழ்வதற்கான நிலைகளை உருவாக்கிக் கொள்கின்றன. அதனைச் சார்ந்தே உயிர்கள் வாழ்கின்றன. இதனை சூழல் அமைப்பு என்று கூறலாம்.

இயற்கையின் அனைத்து செயல்பாடுகளும் ஒருவித சுய ஒழுங்குபடுத்தும் இயக்க முறையின் (Homeostatic Mechanism) அடிப்படையில் இயங்குகிறது. அதாவது நீர், நிலம், காற்று போன்ற உயிரற்ற அங்கங்கள், உயிர்ப்பன்மை மற்றும் பிற இயற்பியல் அங்கங்கள் ஒன்றொடு ஒன்று ஒருங்கிணைந்தவையாக செயல்படுகிறது.

உயிர்ச் சூழலை உண்டாக்கியதில், உயிரினங்கள் மற்றும் உயிரில்லா பொருட்களின் பங்கு ஒன்றோடு ஒன்று கலந்துள்ளது. இதனை “கயா” கோட்பாடைக் கொண்டு விளக்குகிறார் ஜேம்ஸ் லவ்லாக். எந்த ஒரு உயிரினமும் மற்றொரு உயினத்தோடு சார்பு இல்லாமல் வாழ முடியாது. இதனை கூட்டுயிரித்துவம் (Symbiosis) விளக்குகிறது. இயற்கையின் அடிப்படை விதிகள் இவை. அதேபோல இயற்பியலியலும் எந்த ஒரு பொருளும் தனித்து இயங்குவதில்லை என்பதை நமக்கு சார்பியல் தத்துவம் கூறுகிறது. இப்படியான அமைப்பு முறைகள் அனைத்தும் பல லட்சம் கோடி வருட பரிணாமத்தின் காரணமாக இன்றுள்ள நிலையில் தகவமைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற சுற்றுச்சூழலில் தான் மனித சமூகம் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ முடியும்.

சமூக அமைப்புகள்:

மனித சமூகம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட பல அமைப்புகள் உள்ளன. சாதி, மதம் போன்ற கலாச்சார அமைப்புகள்,  தேசம், அரசு போன்ற அரசியல் அமைப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மையமாக இருந்து சமூகத்தை இயக்குவது பொருளாதார அமைப்புகள்.   சமூக அமைப்புகள் அனைத்தும் மனித சமூகத்தால் உண்டாக்கப்பட்டவை. தொழில் புரட்சிக்கு பின்பு உருவாகியுள்ள சமூக அமைப்புகள் பல, இயற்கை அமைப்புகளிடம் அதிகம் முரண்பட்டவையாகவே உள்ளன. குறிப்பாக பொருளாதார அமைப்புகள், அதுவும் 90களுக்கு பின்பான உலகமய பொருளாதரார அமைப்புகள் இயற்கை வள அழிப்பையும், சுரண்டலையும் முன்னெடுக்கிறது. இந்த அமைப்பை அரசியல் அமைப்புகளும், கலாச்சார அமைப்புகளும் பாதுகாக்கின்றன. இயற்கையிடம் இருந்து அந்நியப்பட்ட சமூக அமைப்பில் வாழ்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர்.

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் நம்மை கட்டுப்படுத்துகின்றன. இதில் இயற்கை அமைப்புகளிடம் முரண் கொண்டு வாழ முடியாது. ஆனால் சமூக அமைப்பில் முரண் கொண்டு வாழலாம். சமூக அமைப்பில் நமது செயல்பாடுகள் இயற்கை அமைப்புகளுக்கு முரண் கொண்டு இருப்பதால் தான் காலநிலை மாற்றம், சூழல் சீர்கேடுகள், கொள்ளை நோய் போன்றவற்றை எதிர்க் கொள்கிறோம்.

சமூக அமைப்புகளை இயற்கைக்கு இயைந்த அமைப்பாக மாற்றாமல் நம்மால் உயிர் வாழும் சூழலை பாதுகாக்க முடியாது. முக்கியமாக சமூகம் கட்டமைத்துள்ள உற்பத்தி அமைப்பையும், அதனை கட்டுப்படுத்தும் உலக வர்த்தக கழகம் போன்ற உலகமய பொருளாதார அமைப்புகளை மாற்றுவதும், நீக்குவதும் காலத்தின் தேவை.  இத்தகைய மாற்றங்களை நோக்கி மனித சமூகம் செல்லத் தடையாக இருப்பது பல சமூக, பொருளாதார முரண்பாடுகள். இந்த முரண்பாடுகளை எதிர்கொள்வதோடு மாறி வரும் காலநிலை காரணமாக உருவாகி வரும் முரண்களையும் எதிர் நோக்கயுள்ளோம்.

முரண்பாடுகளை உருவாக்கும் முக்கிய சமூக அமைப்புகளை இப்படி வரிசைப்படுத்திக் கொள்ளலாம்:

1) உலகெங்கும் வளர்ந்து வருகிற வலதுசாரித் தன்மை அதன் காரணமாக உருவாகி வரும் போர்ச் சூழல், அணுஆயுதக் குவிப்பு, முற்றதிகாரத்தன்மை (Totalitarian).

2) மதவெறித் தன்மை, கலாச்சார – பண்பாட்டு தூய்மைவாதம்.

3) பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அல்லது வர்க்க வேற்றுமை.

4) இந்திய சமூகத்தில் நிலவி வரும் சாதியத் தன்மை, பிற நாடுகளில் நிலவி வரும் இனவெறி தன்மை.

5) பாலின ஒடுக்குமுறைகள்.

மனித சமூகத்தின் இயற்கை சுரண்டல், உற்பத்தி முறை காரணமாக உருவாகி வரும் மாற்றங்களை இப்படி வரிசைப்படுத்திக் கொள்ளலாம்:

1) காலநிலை மாற்றம்

2) ஓசோன் மண்டல பாதிப்பு

3) அழிந்து வரும் உயிர்ப்பன்மைய அமைப்புகள்

4)  உணவு உற்பத்தி பாதிப்புகள்

5) நீர்ப் பற்றாக்குறை.

இவை அனைத்தும் இயற்கை அமைப்புகளில் நிகழ்ந்து வரும் முக்கிய மாற்றங்கள். இந்த மாற்றங்கள் மனித சமூகத்தில் பல முரண்பாடுகளை உண்டாக்கக் கூடும். உயிர் வாழும் சூழல் கொண்ட நிலப்பகுதி என்பது அரிதாகி வருகிறது. அப்படியான நிலப்பகுதிகளை கைப்பற்ற மனித சமூகம் தனக்குள்ளாக போட்டி போட  இருக்கிறது. இப்படி துவங்கும் போட்டி சிறு போராக மாறி, பெரும் போராக வெடிக்கலாம். தொழில்நுட்பங்களும், ஆயுதங்களும், பொருளாதார – சமூக அதிகாரமும் பெற்றுள்ள வர்க்கம் இந்த போரை நடத்தும், தங்களை பாதுகாத்துக் கொள்ளும். இதில் எளிய மக்கள் அழியக் கூடும், உயிர்ப் பன்மையும் அழியும். தற்போதைய உற்பத்தி முறை, அரசியல் நிலவரம் நீடிக்குமானால் நம் எதிர்காலம் இதுவாகதான் இருக்கக் கூடும்.

அப்படி நடக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியது:

1) சமூக மக்களாட்சியை(social democracy) வளர்த்தெடுப்பது.

2) சமூக உற்பத்தி முறையை வளர்த்தெடுத்தல்.

3) நீடித்த நிலைத்த வளர்ச்சியை முன்னெடுத்தல்.

4) சூழல் நீதி, சமூக நீதியை உறுதி செய்தல்.

5) மக்களாட்சிக்கான உலக அமைப்புகளை உருவாக்குதல்.

இந்த நோக்கங்களை வென்றெடுக்க பல மக்கள் இயக்கங்கள் தேவை. சூழலியல் பிரச்சனைகள், சமூக பொருளாதார பிரச்சனைகள் உள்ள பகுதிகளில் தன்னியல்பாக மக்கள் போராட்டங்களும், இயக்கங்களும் உருவாகி வருவதை நாம் காண முடிகிறது. வாழ்வுரிமை அடிப்படையில் இவை உருவாகின்றன. எளிய மக்கள் வென்றெடுத்த மக்களாட்சி உரிமைகளைக் காக்க மக்கள் இயக்கங்கள் உருவாகின்றன. மையமாக அமையாத இத்தகைய போராட்டங்கள்/இயக்கங்கள், சூழலியல் அரசியல் அறிவோடு இயங்க வேண்டிய தேவை உள்ளது. அதன் மூலம் மட்டுமே சூழலியல் நீதியை அடைய முடியும். இயற்கையின் இயக்கவியலை அடிப்படையாக கொண்ட மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்றவற்றோடு சூழலியலை இணைப்பதன் மூலம் அரசியல் சூழலியலை (Political Ecology) கருத்துருவாக்கம் செய்யலாம்.  தற்போதைய நிலையில் சூழலியல் இயக்கங்கள், பிரச்சனைகள் சார்ந்தவையாக மட்டுமே உள்ளன. அப்படி அல்லாமல், சமூக பொருளாதார நிலைகளை, முரண்களை உணர்ந்த இயக்கங்களாக மாற வேண்டும். சூழலியல் என்பது ஆன்மிகம் போல பரப்படும் நிலை எந்த தீர்வையும் தராது. இயற்கை என்பது இயக்கவியல் மூலம் மட்டுமே அறியப்பட கூடியது. அதுபோல சமூகத்தை புரிந்து கொள்ளவும் இயக்கவியல் நடைமுறை தேவை. இப்படியான மையபுள்ளியை அரசியல் அறிவியல் கொண்டே சூழலியல் இயக்கங்கள் அடைய முடியும். அப்படியான அரசியல் அறிவியலும், இயற்கை அறிவியலும் இணைந்த அரசியல் சூழலியலே இன்றைய தேவை.

நூறு பூக்கள் மலரட்டும் ! ஆயிரம் சிந்தனைகள் வளரட்டும் !!

  • மு.வெற்றிச் செல்வன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments