ஐரோப்பாவின் பல நாடுகள் கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைக் கடந்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிக்க பலர் ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் மற்றும் திறந்த நீர்நிலைகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அம்முயற்சியே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய சராசரி வெப்பநிலை 30.0° செல்சியஸாக பதிவாகி புது உச்சத்தைத் தொட்டுள்ளது. இது ஜூலை 2019 மற்றும் ஆகஸ்ட் 2003-ல் பதிவான உச்ச வெப்ப நிலைகளையும் விட அதிகமாகும். மேற்கு ஃபிரான்சில் உள்ள Pulluau நகரில் வெப்பநிலை 43.8°C வரை பதிவானது. இரவு நேர வெப்பநிலையும் புதிய உச்சத்தைத் தொட்டது. 58 மாவட்டங்களுக்கு அதாவது நாடின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஸ்பெயினில் ஜூன் மாதத்திற்கான உச்சபட்ச வெப்பநிலை 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் பதிவானது. Agencia Estatal de Meteorologia (AEMET) தரவுகளின்படி, பல இடங்களில் வெப்பநிலை 40°C-ஐ தாண்டியது. இங்கிலாந்தின் Met Office, ஜூன் 24–25 தேதிகளுக்கு தீவிர வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை வழங்கியது.. ஜூன் 24 அன்று தெற்கு இங்கிலாந்தில் உள்ள காஸ்போர்ட்-ல் 36.1°C பதிவாகி, ஜூன் மாதத்திற்கான புதிய உச்ச வெப்ப நிலையாகும்.
ஜெர்மனியின் தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான Deutscher Wetterdienst, தலைநகர் பான் உட்பட ப்ராங்க்பர்ட் மற்றும் கொலோன் நகரங்களிலும் பரவலான சிவப்பு எச்சரிக்கைகளை பிறப்பித்தது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா, பாசெல் மற்றும் சூரிக் நகரங்களும் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் இருந்தன.
பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகளில் பலர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என்பதும் கவலையை அதிகரிக்கிறது. வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் கண்காணிப்பு இல்லாத இடங்களில் நீந்தச் செல்கின்றனர். ஆனால் அந்த இடங்களில் நீரின் ஆழம், திடீர் பள்ளங்கள், வேகமான நீரோட்டம், உடல் சோர்வு போன்ற அபாயங்கள் அதிகமாக உள்ளன. வெப்பத்தால் ஏற்கனவே சோர்வடைந்த உடல் தண்ணீரில் திடீரென இறங்கும்போது, மூச்சுத்திணறல் அல்லது தசை இழுப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் அதிகம், அதோடு தண்ணீரும் வெப்பமாக உள்ளது.

வெப்ப அலை என்பது வெறும் வெப்பநிலை பிரச்சினை அல்ல. அது மனிதர்களின் நடத்தை, உடல்நலம், பொது பாதுகாப்பு, நகர நிர்வாகம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு பெரிய நெருக்கடி. பிரான்ஸ் அரசு பல பகுதிகளில் கடும் வெப்ப எச்சரிக்கையை அறிவித்துள்ளது. சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா இடங்களிலும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மக்கள் மது அருந்தக் கூட கட்டுப்பாடுகள் விதித்துள்ளது அந்த அரசாங்கம்.
ஐரோப்பாவின் பல நகரங்கள் இத்தகைய கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள ஏதுவாகக்கட்டமைக்கப்படவில்லை. பல வீடுகளில் குளிர் சாதன வசதி இல்லை. பழைய கட்டிடங்கள் வெப்பத்தை அதிகமாக உள் வைத்துக்கொள்ளும் (குளிர் பகுதியாக இருந்ததால்) தன்மை கொண்டவை. இதனால் இரவு நேரத்திலும் மக்கள் உடலை குளிர்விக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பகலில் அதிக வெப்பமும், இரவில் குறையாத வெப்பமும் சேர்ந்து உடலுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஜெர்மனியிலும் இதேபோன்ற கவலை எழுந்துள்ளது. அங்கும் பலர் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பிரான்சில் மட்டும் நடக்கும் தனிப்பட்ட சம்பவம் அல்ல. வெப்பம் அதிகரிக்கும் போது மக்கள் நீர்நிலைகளுக்குச் செல்வது என்பது ஐரோப்பா முழுவதும் பொதுவானதாக மாறியுள்ளது. ஆனால் பாதுகாப்பான நீச்சல் பகுதிகள், கண்காணிப்பு, எச்சரிக்கைப் பலகைகள், மீட்புக் குழுக்கள் இல்லாத இடங்களில் இது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது.
வெப்ப அலை காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பா தொடர்ந்து அதிக வெப்பம், வறட்சி, காட்டுத்தீ, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. வெப்பம் மனித உயிரிழப்புகளோடு, அடிப்படை கட்டமைப்புகளையும் பாதிக்கிறது. மின் தேவை அதிகரிக்கிறது. ரயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. சில இடங்களில் அணு மின் நிலையங்களின் செயல்பாடுகளும் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில் மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மிக முக்கியம். வெப்பத்திலிருந்து தப்பிக்க நீரில் இறங்குவது இயல்பான செயலாகத் தோன்றலாம். ஆனால், கண்காணிக்கப்படாத இடங்களில் நீந்துவது உயிருக்கு ஆபத்தானது. குறிப்பாக குழந்தைகள் தனியாக நீர்நிலைகளுக்கு செல்லக்கூடாது. மது அருந்திய பிறகு நீந்துதல், மிகுந்த சோர்வுடன் தண்ணீரில் இறங்குதல், தெரியாத ஆழத்தில் குதித்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பாதுகாப்பான, கண்காணிப்பு உள்ள நீச்சல் பகுதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிரான்சில் நடந்த 40 உயிரிழப்புகள் ஒரு எச்சரிக்கை. வெப்ப அலை என்பது வெறும் வானிலை செய்தி அல்ல. அது உயிரைக் காக்க வேண்டிய அவசர நிலை. அரசுகள் வெப்ப எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். நகரங்களில் குளிர்ச்சி மையங்கள், பாதுகாப்பான நீச்சல் இடங்கள், பொது விழிப்புணர்வு, அவசர மீட்பு அமைப்புகள் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க முயலும்போது புதிய அபாயங்களுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை செயல்பாட்டளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அரசுக்கு வைத்து வருகிறார்கள்.
ஐரோப்பாவின் அனுபவம் உலகத்திற்கே ஒரு பாடமாக உள்ளது. வெப்ப அலைகள் இனி அரிதான நிகழ்வுகள் அல்ல. அவை அடிக்கடி வரும், தீவிரமாகும், பல துறைகளை பாதிக்கும். அதனால் வெப்பத்தைக் கையாளுவது உடல்நல பாதுகாப்பிற்காக மட்டுமல்ல. அது பொதுப் பாதுகாப்பு, நகர திட்டமிடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தயார்நிலை ஆகியவற்றின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும்.
கோ. சுந்தர்ராஜன்
