மனித சமூகத்தில் வண்ணங்கள்

Ptarmigans

இவ்வுலகம் நாம் எப்பொழுதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் வண்ணங்களால் நிரம்பியுள்ளது. இயற்கை பல்வேறு வண்ணங்களை உடையது. இயற்கையின் வண்ணங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றை கண்டான். எனவே அவன் படைத்த செயற்கை பொருள்கள் பல வண்ணங்களில் அமைந்தன. ‘இக்காலத்தில் நிறத்தையும் குறிக்கும் ‘வண்ணம்’ என்ற சொல் அக்காலத்தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.’ என்று குறிப்பிடுவார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப.

எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிற வேறுபாடு இருப்பது போல மனித உடலிலும், அதாவது தோலிலும் இயற்கையின் தட்பவெப்பநிலைக்கேற்ப வண்ண வேறுபாடுகள் உண்டு. மனித இனத்தையே கூட மானுடவியலாளர்கள் வண்ணங்களின் அடிப்படையில் தான் நான்கு மரபினங்களாக பிரிக்கிறார்கள். அவை  காக்கேசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மங்கோலியர்கள் மற்றும் அமெரிக்க-இந்தியர்கள். (ஆஸ்திரேலாய்டுகள் பின்பு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது). இவை அனைத்தும் வேறுபாடுகளே தவிர ஏற்றத்தாழ்வுகள் இல்லை.  ஆனால் அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறுமைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்குரிய குறியீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.

இந்த வண்ணங்களின் அடிப்படையிலான குறியீடுகள் தான் உலக அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் நிர்ணயித்து வந்துள்ளது. இரண்டு வண்ணங்களுக்கு இடையில் நிகழும் மோதல் தான் தொடர்ந்து அரசியல் வரலாறாக இருந்து வந்திருக்கிறது என்பதை ‘ஒற்றை மைய உலகம்’ என்ற நூலில் ஈழத்து வரலாற்றாசிரியர் மு.திருநாவுக்கரசு பதிவு செய்கிறார். கறுப்புக்கும் வெள்ளைக்கும், பழுப்புக்கும் வெள்ளைக்கும், வெள்ளைக்கும் பச்சைக்கும், வெள்ளைக்கும் சிவப்புக்கும் என அந்தப் பட்டியல் நீளும். தமிழ்நாட்டு அரசியல் கூட கருப்பையும் காவியையும் மையப்படுத்தியதாக தான் இருந்து வந்துள்ளது.

எனவே மனித சமுதாயத்தில் வண்ணங்கள் என்பது வெறும் வண்ணங்கள் அல்ல. அந்த வண்ணங்களுக்குள் ஏராளமான எண்ணங்கள் பொதிந்துக் கிடக்கின்றன. இன்றைய சமூக நிகழ்வுகளிலும் அசைவுகளிலும் கூட கறுப்பு நிறம் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப்பட்டவன், கல்வியறிவு இல்லாதவன் அல்லது நாகரீகமறியாதவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுகிறது. இப்படி வரலாறு நெடுக மனிதர்கள் செய்து வந்த பல்வேறு சமூக அநீதிகளுக்கும், வண்ணங்கள் ஒரு அடிப்படையாக இருந்து வந்துள்ளது. அத்தகைய ‘வண்ணம்’ தான், இன்று ஒரு சில உயிரினங்களுக்கு எதிராக நாம் நிகழ்த்தும் சூழல் அநீதிகளுக்கும் மறைமுக காரணியாக அமைந்திருப்பதை பற்றிய கதை தான் இது.

வண்ணங்களின் பரிணாமக் கதை :

சுமார் 2.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவப்பு மற்றும் பச்சை ஆகியவற்றை ஒத்த பிற வண்ணங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் திறனுடைய கண்கள் எந்த உயிரினத்துக்கும் பரிணமிக்கவில்லை. அதன் பிறகு தான் ஒரு குறிப்பிட்ட வகை ப்ரைமேட் வகை குரங்குகள் இன்னும் அதிக வண்ணங்களை கண்டறியும் திறனையடைய  துவங்கியது.

உயிரினங்களுக்கு வண்ணங்களுக்குரிய சமிக்ஞைகள் ஏற்பட்டதற்கான  காரணமாக 1859-ஆம் ஆண்டில் சார்லஸ் டார்வின் பின்வருமாறு கூறுகிறார் : “இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின்படி, தனிப்பட்ட விலங்குகளுக்கு ‘இனப்பெருக்க அனுகூலத்தை’ (Reproductive  Advantage) வழங்குவதன் மூலம் ‘வண்ணம்’ போன்ற அம்சங்கள் பரிணமித்தன. உதாரணமாக, அதே இனத்தைச் சேர்ந்த மற்றவர்களை விட சற்று சிறந்த உருமறைப்பு (camouflage) கொண்ட உயிரினங்கள், சராசரியாக, அதிக சந்ததிகளை விட்டுச் செல்வார்கள்.”

பிற உயிரினங்களின் வாழ்வில் வண்ணங்கள் :

இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, வண்ணங்கள் எவ்வாறெல்லாம் மனிதனை தவிர்த்த பிற உயிரினங்களின் வாழ்க்கையில் பெரும் பங்களிக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி, வண்ணங்களை மனிதர்கள் தொடர்பு கொள்ளவும், கவனத்தை ஈர்க்கவும் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள் என்றால், பிற உயிரினங்களுக்கு வண்ணங்கள் ஒரு துணையை கவர்ந்து வெல்லவும், சக போட்டியாளரை வீழ்த்தவும், எதிரியை எச்சரிக்கவும் அல்லது இரை விலங்குகளிடமிருந்து தன்னை மறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆதலால், எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு அல்லது பிழைத்து இருப்பதற்கு வண்ணங்கள் முக்கியமானது என்பதை அறிவியல் நமக்குக் காட்டுகிறது.

 

  • மயில்களின் ஆடம்பரமான நீல இறகுகள் தன் இணையை கவர்வதற்காகவே இருக்கிறது.
  • மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு என மலர்கள் வண்ண வண்ணமான நிறங்களில் பூத்துக் குலுங்கும் இதழ்களை கொண்டிருப்பதும் தன் மகரந்த துகள்களை பரப்புவதற்கு தன்னை நோக்கி தேனீக்களையும், பட்டாம்பூச்சிகளையும் ஈர்ப்பதற்காகவே.

உருமறைப்பிற்காக பயன்படும் வண்ணங்கள் :

நம்மை சுற்றி ஏராளமான பறவைகள் இருந்தும் வெறும் காக்கையும், கோழியும் தான் இருக்கிறது, மற்றவை எல்லாம் அழிந்து போய்விட்டது என்பது போல ஒரு தோற்றத்தை நாம் நம்புவது தவறானது என்று பறவைகளை காணும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டப்பின் தான் உணர்ந்தேன். நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை காண நாம் நிச்சயமாக பொறுமையாக இருக்க வேண்டும். பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் பெரும்பாலும் அவற்றின் சுற்றுப்புறங்களுடன் கலக்கின்றன, எனவே அவை அதிக கவனத்தை ஈர்க்காது, இது அவற்றைக் கண்டுபிடிப்பதை கடினமாக்கும். இதனை உருமறைத்தல் (camouflage) என்பர். இராணுவ வீரர்கள் அணியும் உடைகள் இயற்கை அமைப்புகளில் காணப்படும் இலை தழைகளுக்கு இடையில் எதிரிகளுக்கு அடையாளம் தெரியாமல் பதுங்கி இருக்க உதவுவது போல.

புலி-மான் கதை :

​​இந்த உருமறைப்பு விலங்குகள் உலகில் மிகவும் ஆச்சரியமான முறைகளில் செயல்படுகிறது. உதாரணமாக, நம் கண்களுக்கு நன்கு புலப்படும் ஆரஞ்சு வண்ண புலிகளுக்கு கூட தன்னுடைய இரையை வேட்டையாட இந்த உருமறைப்பு உத்தி தான் உதவுகிறது. ஏனெனில், நம் கண்களுக்கு தான் புலி ஆரஞ்சு வண்ணத்தில் கருப்பு வரிகளை கொண்ட உயிரினம். புலிகள் ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பது புலிகளுக்கும் தெரியாது, அவை வேட்டையாடும் மான்களுக்கும் தெரியாது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை ஒத்த வண்ணங்களை அடையாளம் காணும் திறன் கொண்ட கண்கள் மான்களுக்கு இல்லை. புலியின் ஆரஞ்சு வண்ணம் மான்களுக்கு பச்சை நிறமாக தான் காட்சியளிக்கும். 100 முறை வேட்டையாடும் புலிகளுக்கு 10 தடவைக்கும் குறைவாக தான் வெற்றி கிடைக்கும். அதற்கு காரணம், புள்ளி மான்கள் புலிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சில சமயங்களில் காடுகளின் கண்களாக செயல்படும் லங்கூர் குரங்குகளின் சமிக்ஞைகள் உதவுகின்றன. அதுவே சாம்பார் மான்களுக்கு வேறு ஒரு விதத்தில் இயற்கை ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி வைத்துள்ளது. பிற மான்களைப் போலவே சாம்பார் மான்களுக்கும் குறைந்த கண்பார்வை தான் உள்ளது. ஆனால் அவற்றின் காதுகள் செயற்கைக்கோள் தட்டுகள் போன்றவை. ஒரு புலி தெரியாமல் ஒரு கிளையை அல்லது இலையை மிதித்து, அது இலேசாக முறியும் சத்தம் கேட்டால், தொடங்குவதற்கு முன்பே வேட்டை முடிந்துவிடும். ஆரஞ்சு வண்ண தோல்கள் இல்லாமல், புலி வேட்டையின் வெற்றி வாய்ப்பு இதையும் விட குறைவாகவே இருக்கும். எனவே, புலிகளின் வண்ணம் தான் அவை உயிர் வாழ்வதற்கு திறவுகோலாக இருக்கிறது.

உருமறைப்பின் வகைகள் :

விலங்குகள் மற்றும் பூச்சிகள் தங்கள் சுற்றுப்புறங்களுடன் கலக்க பல்வேறு வழிகளில் இந்த உருமறுப்பு உத்தியை பயன்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து வழிகள் :

  • color matching – வாழும் சூழலுக்கேற்ப தங்கள் உடலின் நிறத்தை இயல்பாக கலந்து விடுவது.
  • disruptive coloration – தங்கள் சுற்றுப்புறங்களுடன் கலக்க உதவ ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்துவது. புள்ளிகள், கோடுகள், மற்றும் அவற்றின் உடலில் சமச்சீரற்ற வடிவங்கள் விலங்கின் வெளிப்புறத்தை உடைக்க உதவும்.
  • self-decoration – தங்களைச் சுற்றியுள்ள சூழலில் உள்ள மண், இலை, செடி, பாசி ஆகியவற்றையே கலக்கப் பயன்படுத்துவது.
  • active camouflage – சில விலங்குகள் தங்கள் நிறங்களையும் வடிவங்களையும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளன, அவை அவற்றின் சுற்றுப்புறங்களுடன் கலக்க உதவுகின்றன.
  • mimesis – இரை விலங்குகள் மற்றும் பூச்சிகள் சில நேரங்களில் இலைகள், கிளைகள் மற்றும் வேட்டையாடும் விலங்குகள் ஆர்வம் காட்டாத பிற பொருட்களைப் போல ஒப்புபோலி செய்வது.

வண்ணங்கள் அடிப்படையில் மறைமுகமாக நாம் நிகழ்த்தும் சூழல் அநீதியின் கதை :

இந்த ஐந்தில் active camouflage என்னும் உத்தியை பயன்படுத்தி உயிர் பிழைக்கும் சில உயிரினங்களை பற்றியும், காலம் காலமாக இயற்கை தேர்வின் அடிப்படையில் பரிணமித்து வளர்த்துக் கொண்ட இந்த வெற்றிகரமான உத்தி, கடந்த இருபது ஆண்டுகளில் மனிதர்களின் செயல்பாடுகளால் எப்படி தங்கள் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விட்டிருக்கிறது என்பதை காண்போம்.

சில விலங்குகள் பருவத்துடன் வண்ணங்களை மாற்றுகிறது. இந்த பருவகால மாறுபாடு ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் சுற்றுச்சூழலுடன் கலக்க உதவுகிறது. சில விலங்குகள் அவற்றின் சுற்றுப்புறத்திற்கு எதிராக கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பரிபூரணமாக உருமறைப்புகளை உருவாக்கியுள்ளன. ஆனால் அந்த சுற்றுப்புறங்கள் மாறும்போது என்ன நடக்கும்? நிச்சயமாக, விலங்குகளும் மாற வேண்டும். மாறியும் இருக்கிறது.

பனிப்பிரதேசமான ஆர்க்டிக் முழுக்க இப்படி பருவங்களுக்கு ஏற்ப உருமறைப்பு செய்து தான் பல உயிரினங்கள் இரை விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்கின்றன. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கேன்கோம் மலைகளில் (Cairngorm Mountains) பருவத்திற்க்கேற்ப குளிர் காலங்களில் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு வெள்ளை வண்ணத்தில் காணப்படும், பிறகு கோடை காலங்களில் அதுவே வெறும் பாறைகளாக கபில (brown) வண்ணத்தில் காணப்படும்.

ptarmigans

இந்த கேன்கோம் மலைகளில் அப்படி பருவங்களுக்கேற்ப தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட பறவை தான் டாமிகன் (ptarmigan). அளவில் நம்மூர் கவுதாரி போன்றும், வடிவத்தில் புறா போன்று சிறிய தலை உடையதாகவும் இருக்கும். டாமிகன் பறவை மட்டுமன்றி, ஆர்க்டிக் பிரதேசத்தின் நரிகள், முயல்கள், மரநாய்கள் ஆகிய பல உயிரினங்கள் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் கபில வண்ணம் கொண்ட தங்கள் தோலை முழு வெள்ளை நிறத்திற்கு மாற்றிக் கொண்டு தான் உயிர் பிழைக்கிறது. ஏனெனில், இந்த திறந்த வாழ்விடம் டாமிகனை இரை விலங்குகளுக்கு எளிதில் உணவாக்கக் கூடியதாக அமைந்துள்ளது. எனவே, இங்கு வாழும் உயிரினங்களுக்கு சரியான வண்ணத்தில் இருப்பது மிகவும் முக்கியமானது. இப்படி உருமாறுவதால், அங்கு வாழும் உயிரினங்கள் ஒரு கூர்மையான கண்களுடைய கழுகுக்கு கூட புலப்படாது. எனவே பருவங்களுக்கேற்ப வண்ணங்களை மாற்றுவது தான், சில விலங்குகளுக்கு, தான் ஒரு உணவாக மாறுவதைத் தவிர்க்க ஒரே வழி.

“கெய்ர்ன்கோர்ம் பீடபூமியை சுற்றி ஆண்டுதோறும் நீடிக்கும் பனி திட்டுகளுடைய பகுதிகள் உள்ளன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், ஐந்து, ஆறு முறை பனி முற்றிலும் போய்விட்டது. 200, 250 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏழு முறை மட்டுமே நடந்த மாற்றம், தற்போது காலநிலை மாற்றத்தால் இப்படி அடிக்கடி மாற்றமடைந்து அங்கு வாழும் உயிரினங்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது.” என்கிறார் இந்த மலைகளின் இயற்கை வரலாற்றை கடந்த 30 வருடங்களாக கண்காணித்து வரும் நிபுணர் ஜிம் கார்ன்ஃபூட் (Jim Cornfoot).

இத்தகைய மாறுதல்களால், அங்கு வாழும் உயிரினங்கள் உருமறைத்துக் கொள்ள சில இடங்கள் மட்டுமே உள்ளன, மற்றபடி ஆண்டு முழுவதும் இரை விலங்குகள் கண்களில் படும் அளவுக்கு வெளிப்படையான சூழலில் வாழும் கட்டாயத்திற்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன. உலக வெப்பமயமாதலால், விஷயங்கள் இப்போது மிகவும் ஆபத்தான முறையில் மாறிவருகின்றன. பனி உறையில் சமீபத்திய குறைவு அங்கு வாழும் உயிரினங்களின் வாழ்க்கையை மிகவும் அபாயகரமானதாக ஆக்குகிறது. இந்த மாற்றங்கள் வடக்கு அரைக்கோளத்தைச் சுற்றியுள்ள பெரும்பான்மையான விலங்குகளைப் பாதிக்கின்றன.

குறைந்து வரும் பனி  இந்த விலங்குகளை பல்வேறு இறை விலங்குகளின் இரவு உணவாக முடிவதற்கான வாய்ப்புகளை 10% அதிகரித்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில், பனியுறை இழப்பு இந்த விலங்குகளை ஆண்டுக்கு எட்டு வாரங்கள் வரை சுற்றுப்புறத்தில் இருந்து அம்பலப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இந்த மாற்றம் அவற்றின் வருடாந்திர இறப்பு விகிதத்தை கிட்டத்தட்ட கால் பகுதி அதிகரிக்கும். இவை விரைவாக தகவமைத்துக் கொள்ள முடியாவிட்டால், அவை முற்றிலும் அழியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையோடு இயைந்து வாழும் வழியை நாமும் பின்பற்றுவதில்லை, பிற உயிரினங்கள் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்து வருவதற்கும் பெரும் தடையாக இருக்கிறோம் என்பதற்கான சான்று தான் மேலே விவரித்த டாமிகனின் கதை. இயற்கை வரலாற்றில் இந்த ஒரு அவலப் பெருமை வேறு எந்த உயிரினத்துக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

உயிர்ப்பன்மை என்பது அழகிற்காக அல்லது மனித இனம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்ற மற்றொரு இனங்களுக்கு  சில வகையான தார்மீக பொறுப்பு காரணமாக நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று அல்ல. உணவு உற்பத்தி, சுத்தமான காற்று, சுத்தமான நீர், கார்பன் உமிழ்வை குறைத்தல், ஊட்டச்சத்து மறுசுழற்சி ஆகியவை வேலை செய்ய உயிர்ப்பன்மை ஒரு அடிப்படை புதிர் ஆகும். பல்லுயிரினங்கள் இல்லாத கிரகம் ஒரு செயல்படும் கிரகம் அல்ல. வெறும் 50 ஆண்டுகளில், மனிதகுலம் உலகளாவிய வனவிலங்கு தொகையில் 68%-ஐ அழித்துவிட்டது. இந்த பல்லுயிரினத்தை இழப்பது பூமியில் நமது சொந்த இருத்தியலை இழப்பதற்கு சமம். சுருங்கக் கூறின், உயிர்ப்பன்மையை காப்பாற்றுவது என்பது ஒன்றும் நாம் பிற உயிரினங்களுக்கு ஆற்றும் சேவை அல்ல, மாறாக அது மனித சமூகங்கள் பிழைத்திருப்பதற்கான கருவூலப் பெட்டியாகும்.

     – சரவணன், விசை

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments