30 ஆண்டுகளில் 100 கொரோனாக்கள்: வைரஸ் பரவியதன் பின்னணியில் நிகழ்ந்த காலநிலைச் சீர்கேடு!

நீங்கள் சென்னையின் அந்திவானத்தை ரசிப்பவர் என்றால் அதில் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் வௌவால்களைக் கவனித்திருக்கக் கூடும். பெரும்பாலும் அவை பழந்தின்னி வௌவால்கள். உண்மையில் நம்மால் கற்பனைக் கூடச் செய்து பார்க்க முடியாத எண்ணிக்கையில் வௌவால்களில் வகையினங்கள் உள்ளன. உலகில் உள்ள மொத்த பாலூட்டி ஜீவன்களில் 30 சதவிகிதம் வௌவால்களா இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் வௌவால்களின் வகையினங்கள் மட்டும் 128. அவை பறக்கு விதம், வாழுமிடம் ஆகியவற்றைக் கொண்டு இந்த வகையினங்கள் பிரித்து அறியப்படுகின்றன.

 

இப்படி உலகம் முழுக்க இருக்கும் வௌவால்களின் வகையினங்கள் காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்வதால் கொரோனா வைரஸ் சர்வதேசத் தொற்றுப் பரவியிருக்கக் கூடும் என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் போஸ்ட்டெம் காலநிலைத் தாக்க ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். உலகில் தற்போது அதிகரித்து வரும் தொற்றுநோய்களில் 60 சதவிகிதம் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுபவை. குறிப்பாக காட்டுயிர்களில் இருந்து பரவுகின்றன. பாலூட்டிகளுக்குப் பரவும் வைரஸ்களின் மொத்தக் கொள்முதல் களமாக வௌவால்கள் இருப்பதால் இந்த நோய்ப்பரவுதல் சங்கிலியில் அவை முக்கியப்பங்கு வகிக்கின்றன.

 

இவற்றில் மூன்றில் ஒரு பங்கு வௌவால்களில் மொத்தம் 3000 வகையான கொரோனா வைரஸ்கள் இருப்பதாகவும் அவை பெரும்பாலும் மனிதர்களுக்குப் பரவும் தன்மையுடயதாக இருப்பதாகவும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் மற்றும் எதிர்ப்புத்திறன் ஆய்வுத்துறையின் ஆராய்ச்சிகளின் வழியாக நமக்குத் தெரிய வருகிறது. இந்த வைரஸ்களில் அதிக மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மெர்ஸ்(MERS) மற்றும் சார்ஸ் கொரோனா வைரஸ் 1 (SARS CoV1)மற்றும் சார்ஸ் கொரோனா வைரஸ் 2 (SARS CoV2) ஆகியவையும் அடக்கம்.

தெற்கு சீனாவின் யுனான் மாகாணக் குகைகளில் வசிக்கும் வௌவால்களில்தான் கொரோனா வைரஸ் 1 மற்றும் கொரோனா வைரஸ் 2 ஆகியவற்றுக்கு நெருங்கிய தொடர்புள்ள கொரோனா வைரஸ்களின் தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதே பகுதியில்தான் மரநாய்களும் எறும்புத்திண்ணிகளும் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பகுதியிலிருந்து வேட்டையாடப்பட்டு வூகான் மற்றும் காங்டாங் நகரச் சந்தைகளுக்கு எடுத்து வரப்படும் இந்த விலங்குகள் வழியாகக் கொரோனா தொற்றுப் பரவியிருக்கலாம் என்கிற யூகத்தை முன்வைக்கிறார்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கக்கழகம் மற்றும் ஜெர்மனி காலநிலைத் தாக்க ஆய்வுக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை நேரிடையாக அந்தப் பகுதியின் வௌவால் வகையினங்களின் வளத்தைப் பொருத்தது. ஆக அதிக வகையிலான வௌவால்கள் காணப்படும் இடத்தில் மனிதர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் வைரஸ்கள் இருக்கவோ, பரவவோ அல்லது பரிணாம வளர்ச்சி அடையவோ அதிக வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் வௌவால் வகையினங்களின் பெருக்கம், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது, அவற்றின் வசிப்பிடச் சூழலில் ஏற்படும் மாற்றம் அதன் புவியியல் பரப்பீட்டில் (Geographical distribution) தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதன் விளைவாக அதன் வசிப்பிடம் விரிவடைகின்றன அல்லது அவை ஒரு பரப்பிலிருந்து மற்றொரு பரப்புக்கு இடம்பெயருகின்றன. இவற்றால் வைரஸ்கள் இடம்பெயர்வதோடு மட்டுமல்லாமல் புதிய சூழலுக்கு ஏற்ப அவை தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் நிலையில் புதிய வகையான வைரஸ் வகையினங்கள் உருவாதலுக்கான களத்தை உருவாக்கித் தருகின்றன.

இப்படியான சாத்தியக்கூறுகளை முன்வைத்துப் பார்க்கும்போது வௌவால்களின் இடப்பெயர்வுகளால் கூட மனிதர்களில் சார்ஸ் கொரோனா வைரஸ்களின் பரவுதல் ஏற்பட்டிருக்கலாம் என்னும் யூகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

 

1901 – 2019 , என்னவெல்லாம் மாறியிருக்கிறது?

இந்த யூகத்தைத் தனக்கான ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்ட கேம்பிரிட்ஜ் ஆய்வாளர்கள் குழு, 1901 முதல் 2019 வரையிலான மிக நீண்ட காலகட்டத்தின் மாத சராசரி வெப்பநிலை (Monthly mean temperature) , மழை அளவு, மேகமூட்ட விவரம் (cloud cover) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஆகியவற்றைத் தனது கூறுகளாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறது. மேலும் 1901-1930 மற்றும் 1990-2019 காலக்கட்டத்தின் வளிமண்டலக் கரியமிலச் செறிவின் (Atmospheric carbondioxide concentration) அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் வழியாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் இருந்த இயற்கைத் தாவரங்களின் பரப்பீடும் அவற்றின் தற்போதைய பரப்பீடும் ஒப்பிடப்பட்டன.

இதே காலவரையறையில் வௌவால் வகையினங்களின் பரப்பீடு அதன் நிகழ்வு எல்லை (Extent of occurrence) மற்றும் வசிப்பிடத்துக்கான தேவைகள் ஆகிய கூறுகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டன. இயற்கைத் தாவரங்களின் பரப்பீட்டையும் வௌவால்களின் பரப்பீட்டையும் கொண்டு இருவேறு கால அளவில் குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள்ளான வௌவால் வகையினங்களின் வளம் (Species richness)கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவில் மத்திய ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மியான்மர், லாவோஸ் மற்றும் முக்கியமாகச் சீனாவின் யுனான் மாகாணத்தின் பெரும்பகுதிகள் என வௌவால் வகையினங்களின் பெருக்கம் இந்தப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

 

தற்போது பரவிவரும் கொரோனா மட்டுமல்லாமல் இதற்கு முன்புப் பரவிய எபோலா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என உலக வரலாற்றின் மிகமுக்கிய வைரஸ் தொற்றுகளும் மேலே குறிப்பிட்டிருக்கும் அதே நிலப்பகுதிகளில் இருந்துதான் பரவின என்பதைத் தற்செயல் நிகழ்வாகப் பார்க்கமுடியவில்லை.

ஆய்வின் முக்கியத் தகவலாக, யுனான் மாகாணத்தில் மட்டும் கடந்த 1990-2019 காலக்கட்டத்தில் 40 புதிய வௌவால் வகையினங்கள் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் ஒவ்வொரு வௌவால் வகையினமும் சராசரியாக 2.67 கொரோனா வைரஸ்களைத் தன்னுள் கொண்டிருப்பவை. இப்படி வௌவால் வகையினங்களில் இருந்து இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மொத்தம் 100 வகைக் கொரோனா வைரஸ்கள் உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். மெர்ஸ் வைரஸ்கள் உருவான கிழக்கு ஆப்பிரிக்காவிலும் வௌவால் வகையினங்களின் பெருக்கம் குறைந்த அளவில் தென்படுவதாக இவர்களது ஆய்வுகள் சொல்கின்றன.

வௌவால் வகையினங்களின் வளங்கள் அதிகரிப்பதும், வளிமண்டல கரியமில வாயு அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் கடந்த நூறு ஆண்டுகளில் வெப்பமண்டலப் புதர்காடுகள் (Tropical shrublands) , பெரும்பாலும் வெப்பமண்டலச் சமதளப் புல்வெளிகளாகவும் (Tropical savannas) இலையுதிர்காடுகளாகவும் (Deciduous woodlands) மாறிவிட்டதாலும் பாலூட்டி விலங்கினங்களில் கொரோனா வைரஸ்கள் பரவுதலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. இதே பகுதிகள்தான் பிறகு விவசாய நிலங்களாகவும் தொழிற்சாலைகளின் விரிவாக்கங்களாகவும் மனிதர்கள் குடிபெயர்ந்த நகரங்களாகவும் மாறியிருக்கின்றன.

இந்தத் தரவுகளைச் சேகரிக்கும்போது வேட்டையாடுதல், பிற விலங்கினங்களின் ஊடுருவல் மற்றும் சூழல் மாசு ஆகிய பிறகூறுகளை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வைரஸ் பரவுதலைத் தடுக்க விலங்குச் சந்தைகளின் மீதான கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது, மருத்துவத் தேவைகளுக்காக விலங்குகளைப் பயன்படுத்துவது அவற்றை உணவாக உட்கொள்வது போன்றவற்றுக்குத் தடை விதிப்பது போன்ற பொதுவான தீர்வுகளை ஆய்வாளர்கள் முன்வைத்தாலும் அவை அத்தனை நாடுகளுக்கும் பொருந்துவதாக இல்லை.

 

தடுப்பூசிகளும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளும் தீர்வாகுமா?

மிகமுக்கியமாக விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களின் சூழல் இயங்கியல் (Ecological dynamics) குறித்த ஆழமான புரிதல் சர்வதேச நாடுகளுக்குத் தேவை. ஆனால், தற்போதைய சூழலில் நாடுகள் வெறுமனே தங்கள் வசம் உருவாக்கி வைத்துள்ள தடுப்பூசிகளை மட்டும் தங்களுக்குள் பரிமாறி வருகின்றன அல்லது வைரஸ் ஆராய்ச்சிகளில் முதலீடு செய்து வருகின்றன. தேசிய வைரஸ் ஆராய்ச்சிக் கழகம் அமைப்பது, கடுந்தொற்று விளைவிக்கும் நுண்ணுயிரிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கான ஒன்பது உயர்தரப் பரிசோதனைக் கூடங்களைக் கொண்டுவருவது என வைரஸ் ஆராய்ச்சிகளுக்கான முதலீட்டில் இந்தியாவும் தன் பங்குக்குத் தன்னை விரிவுபடுத்துக் கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் வைரஸ்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிடும்போது மேலே குறிப்பிட்டிருக்கும் 3000 கொரோனா வைரஸ் வகையினங்கள் அத்தனைக்கும் இந்த ஆய்வுக்கூடங்களில் தீர்வு கிடைக்கும் என்பது எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தாலும் எத்தனை ஆய்வுக்கழகங்கள் அமைத்தாலும் நிகழச் சாத்தியமற்ற ஒன்று . மேலும் இவை தடுப்பூசிகளுக்கான ஆய்வுக்களமாக இருக்குமே ஒழிய தொற்றுக்கான ஆணிவேரை அலசும் வாய்ப்புகள் இவை எதிலும் உருவாகாது. மாறாக இவற்றை அலசும் சிந்தனையுள்ள மாணவர்களை உருவாக்குவதில் இந்திய அரசு முதலீடு செய்ய வேண்டிய காலத்தேவை உருவாகியிருக்கிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்துப் பள்ளிக்கல்வி தொடங்கி அரசே ஆழமான செயல்முறை பாடத்திட்டங்களைக் கொண்டுவருதல் போன்ற அடிமட்ட அளவிலான செயல்பாடுகள் இதற்கு அவசியம், காலநிலை மாற்றம் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலியல் செயற்பாட்டாளர்களைத் தேசத் துரோகிகளாக அணுகும் போக்கை விட்டுவிட்டு அவர்களை இதற்கான பாடதிட்ட வடிவமைப்புக் குழுக்களில் இணைப்பது பகுத்தறிவு மிக்கச் செயலாக இருக்கும். மற்றொருபக்கம், அடுத்ததொரு வைரஸ் பேரழிவு நிகழ்வதற்கு முன் மிச்சமிருக்கும் வெப்பமண்டலக்காடுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. காலநிலைச் சீர்கேட்டுக்குத் தடுப்பூசிகள் தீர்வல்ல.

-ஐஷ்வர்யா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments