இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 5.9 மில்லியன் டன் லித்தியம்! வரமா?சாபமா?

வெள்ளைத் தங்கம் என்றழைக்கப்படும் லித்திய படிமங்கள் சுமார் 5.9 மில்லியன் டன் அளவிற்கு ஜம்மு காஷ்மீரிலுள்ள ரியாசி மாவட்டத்தின் சலால் ஹைமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கர்நாடகாவில் மிகச்சிறிய அளவில் லித்தியம் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அளவிலானது. இந்த கண்டுபிடிப்பு பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், தங்கள் பகுதியை உலகளவில் முக்கியத்துவம் பெற செய்யும் எனவும் கூறப்படுகிறது.

செல்போன், கணினி, மின்சார வாகனங்கள் மற்றும் பிற மின் சாதனங்களுக்கான மின்கலம் (battery) உற்பத்தியில் லித்தியத்தின் பங்கு மிக கணிசமான அளவில் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக உலகெங்கிலும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், லித்தியத்திற்கான உலகளாவிய தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே லித்தியம் ‘வெள்ளைத் தங்கம்’ என்றழைக்கப்படுகிறது. குறிப்பாக 2030ம் ஆண்டில் மின்கலஂ தயாரிப்பில் மட்டும் லித்தியத்திற்கான தேவை சுமார் 95 சதவீதம் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2030ம் ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் 30 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க இந்தியா முயற்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை சிலி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா மற்றும் சீனா ஆகிய நாடுகளே லித்திய உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. உலகிலேயே மிக அதிகமான லித்தியம் பொலியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் தொழில்நுட்ப குறைபாடு போன்ற காரணங்களால், அதனை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. உலகில் கண்டுபிடிக்கப்பட்ட லித்திய படிமங்களில் தென்னமெரிக்க நாடுகளான பொலிவியா, சிலி மற்றும் அர்ஜெண்டினாவில் மட்டும் சுமார் 75 சதவீத படிமங்கள் உள்ளது. இதன் காரணமாகவே இந்த பகுதி ‘லித்திய முக்கோணம்’ என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட லித்தியத்தின் அளவு எதிர்காலத்தில் லித்தியம் தொடர்பான உற்பத்தியில் இந்தியாவிற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சார வாகனங்கள் மற்றும் பல மின் சாதனங்களில் லித்தியம் – அயான்(Li) மின்கலங்களே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றின் ஆயுட்காலம் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை மட்டுமே. தற்போது உள்ள மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்தி இந்த மின்கலஂங்களை மறுசுழற்சி செய்வது மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான வழிமுறையாக உள்ளது. இருப்பினும் இதற்கான மாற்று மறுசுழற்சி முறைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் முடிவு மறுசுழற்சி வழிமுறைகளை எளிதாக்கி அதிகளவிலான மின்கலங்களை மறுசுழற்சி செய்ய வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

பொதுவாகவே சுரங்கப் பணிகள் சுற்றுச்சூழலுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், புவி வெப்பமயமாதலில் மிக முக்கியப் பங்கு வகிப்பவையாகவும் உள்ளன. சுரங்கத் தொழிலானது உலகெங்கிலும் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, உயிர்பன்மய அழிவு, வறட்சி, நிலச்சரிவு உட்பட பல்வேறு சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்நிலையில், சுரங்கங்களிலுள்ள லித்திய படிமங்களிலிருந்து தோராயமாக ஒரு டன் லித்தியத்தினை உற்பத்தி செய்ய சுமார் 2.2 லட்சம் மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

லித்தியம் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சிலி நாட்டின் வடக்கிலுள்ள அட்டகாமா பகுதியில் வசிக்கும் கொல்லா பூர்வகுடி மக்கள் இந்த லித்திய சுரங்களால் ஆறு, ஏரி மற்றும் குளம் போன்ற நீர்நிலைகள் முற்றிலும் வற்றி வறட்சி ஏற்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதன் காரணமாக பெரும்பாலான மக்கள் நகரங்களை சென்றுவிட்டதாகவும், இத்தகைய நிகழ்வுகள் பூர்வகுடிகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் 18ற்கும் அதிகமான பூர்வகுடி மக்கள் இதே போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், இத்தகைய சுரங்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் அருகிவரும் உயிரினங்கள் உட்பட பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சிலியின் இத்தகைய லித்திய சுரங்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பூர்வகுடி மக்களும் தொடர்ச்சியாகப் போராட்டகளை நடத்தி தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜெண்டினாவிலும் சலினாஸ் கிராண்டெஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள லித்திய சுரங்களால் இதே போன்ற சூழலியல் பாதிப்புகள் பெருமளவில் ஏற்படுவதுடன், சுமார் 33-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நெவாடா பகுதியில் ஏற்கனவே சில லித்திய சுரங்கங்கள் அமைந்துள்ள நிலையில் புதிதாக ஒரு சில சுரங்கத் திட்டங்கள் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், இத்தகைய சுரங்கங்கள் சுற்றுச்சூழலையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் மிக கடுமையான அளவில் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் 1865ம் அமெரிக்க ராணுவத்தால் பையூட் பூர்வகுடி மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடம் உட்பட, தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சிவப்பு மலைகளின் மக்கள் (People of Red Mountain) என்ற அமைப்பினர் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நாடான செர்பியாவில், சர்வதேச சுரங்கத் துறையில் முன்னணி நிறுவனமான ரியோ டின்டோ, சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் லித்திய சுரங்கம் தொடர்பான துறையில் முதலீடு செய்ய முன்வந்தது. ஆனால், ஏற்கனவே ஐரோப்பியாவின் மிக மாசடைந்த நாடுகளில் ஒன்றான செர்பியா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவே ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் செலவழித்து வந்த நிலையில், இந்த லித்திய சுரங்கம் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மக்களும் பல மாதங்களாக தெருவில் இறங்கிப் போராடியதை தொடர்ந்து இந்த சுரங்கத் திட்டத்தை அந்நாட்டு அரசு கடந்த 2022ம் ஆண்டு ரத்து செய்தது.

இவ்வாறு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள லித்திய சுரங்களால் நீர், நிலம், காற்று மாசடைதல் ஏற்படுவதுடன், நீராதாரங்கள் மற்றும் மக்களின் பிற வாழ்வாதரங்களின் இழப்பு என்பது இதில் உள்ள மிகப்பெரும் பிரச்சனையாகும்.

லித்தியத்திற்கான சுரங்கங்கள் மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு கனிம சுரங்கங்களால், சுற்றுச்சூழல் மற்றும் சமூகநலனில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து உலகளாவிய சுற்றுச்சூழல் சட்டக் கூட்டணி (ELAW) என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு.

சுரங்களில் உள்ள அமில வடிகால்களாலும், மாசுக்கள் மற்றும் கழிவுகள் நீரில் கசிவதாலும் நீர் நச்சுத்தன்மை உடையதாக மாறுகிறது. இது தவிர மண் அரிப்பின் காரணமாகவும், சுரங்கப் பணிகளுக்காக அதிகளவில் நீர் எடுக்கப்படுவதாலும், சுரங்கம் அமைந்துள்ள பகுதியிலும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுரங்கப் பணிகளின் போது வெளியேற்றப்படும் புகை மற்றும் தூசுக்களால் காற்று மாசு ஏற்படுகிறது. இது மனிதர்களுக்கு பல்வேறு வகையிலான உடல்நல குறைபாடுகளை உருவாக்குகின்றது. மேலும், ஒலி மாசு மற்றும் மண்வளச் சீர்கேடும் இத்தகைய சுரங்களால் நிகழ்கிறது. அப்பகுதியிலுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்வாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவற்றின் அழிவிற்கும் வழிவகுத்து, அப்பகுதியின் உயிர்ப்பன்மயத்திற்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பெரும் சுரங்கங்களை அமைக்கும்போதும் அப்பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றும்போதும் பலர் குறிப்பாக பூர்வகுடி மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களையும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் இழக்க நேரிடுகிறது. மேலும், சுரங்கப் பணிகளுக்காக பிற பகுதிகளைச் சேர்ந்த மிக அதிக அளவிலான மக்களை சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் குடியேற்றுவது நிலம் மற்றும் நீர் தட்டுபாட்டிற்கும், சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுக்கிறது. மேலும், மிகப்பெரிய அளவிலான கனிம சுரங்கங்கள் காட்டுப்பகுதிகளில் அமைக்கப்படுவதால் லட்சக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. புவியின் கார்பன் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கும் காடுகளின் அழிவானது காலநிலை மாற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயற்கைப் பேரிடர்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்குவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலகெங்கிலும் வெளியேற்றப்படும் பசுங்குடில் வாயுக்களின் மொத்த அளவில் 4 முதல் 7 சதவீதம் வரை பல்வேறு வகையான சுரங்கம் தொடர்பான பணிகளில் இருந்து வெளியேறுவதாக வேறுசில அறிவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஏற்கனவே பரவலாக பயன்படுத்தப்படும் புதைபடிம எரிபொருட்களுக்கு மாற்று தேவைப்படும் நிலையில், லித்தியமும், அவை சார்ந்த சுரங்கப் பணிகளும் உண்மையிலேயே ஒரு சிறந்த நீண்டகால மாற்று சக்தியாக இருக்க முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Images

Source : Unsplash.com

References

  1. https://www.livemint.com/news/india/india-finds-big-lithium-reserve-in-jk-11675962724095.html
  2. https://www.bbc.com/news/world-asia-india-64592700
  3. https://www.mckinsey.com/industries/metals-and-mining/our-insights/lithium-mining-how-new-production-technologies-could-fuel-the-global-ev-revolution
  4. https://www.rsc.org/periodic-table/element/3/lithium
  5. https://www.bbc.com/future/article/20220105-lithium-batteries-big-unanswered-question
  6. https://www.euronews.com/green/2022/02/01/south-america-s-lithium-fields-reveal-the-dark-side-of-our-electric-future
  7. https://www.dw.com/en/living-planet-the-problem-with-lithium-mining/audio-46211787
  8. https://www.bbc.com/news/world-europe-60081853
  9. https://www.abc.net.au/news/2022-01-21/serbia-backs-out-of-controversial-rio-tinto-lithium-mine/100771758
  10. https://www.dw.com/en/us-has-huge-lithium-reserves-but-concerns-mount-over-mining/a-64103024
  11. https://dialogochino.net/en/extractive-industries/35354-white-gold-the-violent-water-dispute-in-argentina/
  12. https://www.nrdc.org/stories/lithium-mining-leaving-chiles-indigenous-communities-high-and-dry-literally
  13. https://www.statista.com/statistics/268790/countries-with-the-largest-lithium-reserves-worldwide/
  14. https://www.bbc.com/news/world-latin-america-64355970
  15. https://www.dw.com/en/serbia-activists-block-roads-to-protest-lithium-mine/a-60436812
  16. https://www.dw.com/en/serbia-cancels-plan-for-lithium-mine-following-protests/a-60502362
  17. https://www.elaw.org/files/mining-eia-guidebook/Chapter1.pdf
  • விக்னேஷ் குமார் கோ
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments