கள்ளனும் காப்பானும்

‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா’ என் றொரு பழமொழி நம்மிடையே உண்டு. இது இடையறாது நிகழும் வாழ்வின் முரண் ஒன்றைச் சுட்டுவதாக அமைவது. காட்டுயிர்களிலும் இதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் காணலாம். அப்படி ஒரு எடுத்துக்காட்டாக குயிலையும் காகத்தையும் சொல்லலாம். குயிலைப் பற்றி பொதுவாக அறிந்ததெல்லாம் அது அருமையாகப் பாடும் என்பதும், தனக்கென கூடொன்றைக் கட்டிக்கொள்ளாமல் காக்கையின் கூட்டில் தனது முட்டைகளை பொரிப்பதற்காக இட்டுச் செல்லும் என்பதுதான். இந்தக் குயிலில் பல வகைகள் இருக்கின்றன என்று சமீபத்தில் தான் அறிந்துகொண்டேன். சுடலைக் குயில், செவ்விறகுக் கொண்டைக் குயில், அக்கா குயில்,
செங்குயில், சக்களத்திக் குயில், கரிச்சான் குயில், கோகிலம் இவையனைத்துமே குயில் களின் வகைகள் என்று அறியப்படுகின்றன. ஏன் செம்போத்து என்றறியப்படும், தமிழீழத்தின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்ட செண்பகம் கூட குயில் குடும்பத்தைச் சேர்ந்ததே. ஆனால் இந்த செண்பகம் மட்டும் ஒரு விசயத்தில் இந்தக் குயில்களில் இருந்து வேறுபடுகிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன். உருவ அளவு, தோற்றம் இவைகளில் ஒன்றோடு ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடும் இவை ஒரு விசயத்தில் மட்டும் ஒரே பண்பைக் கொண்டிருக்கின்றன. அதுதான் இந்தக் குஞ்சு வளர்ப்பு ஒட்டுண்ணி (brood parasites) பண்பு. குயில்கள் இன்னொரு வளர்க்கும் பறவையின் கூட்டில் அவைகளுக்குத் தெரியாமல் தனது முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிடும். அப்பறவைகளே அவற்றை அடைகாத்து, குஞ்சுபொறித்து, உணவளித்து, பறக்கவும் கற்றுத்தரும். இப்படி தங்களது பொறுப்புகளைத் துறந்து ஒரு ஒட்டுண்ணியைப் போல மற்றொரு பறவையிடம் அந்தப் பொறுப்பை தள்ளி விடுகின்றன. அவற்றை ஏமாற்றி எடுத்துக் கொள்கின்றன. இது ஏதோ ஒரு காக்கை ஒரு வேளை உணவை சில சமயம் ஏமாற்றி தட்டிப் பறித்துச் செல்வதைப் போன்றதல்ல. தனது அடுத்த தலைமுறையினை உண்டாக்கி உணவூட்டி வளர்த்து விடுவது என்பது அவ்வுயிரினம் தொடர்ந்து இவ்வுலகில் நிலைபெற்றிருப்பதற்கு ஆதாரமானதுமான ஒரு கடமை. உயிர் வாழ்வனவைகளின் அத்தனை திறன்களும் இக்கடமையைச் செவ்வனே செய்வதற்காகவே கூர்தீட்டப் பட்டுள்ளன. அப்படி இருக்கையில் குயில்கள் தலைமுறை தலைமுறையாக இப்படி வளர்ப்பு ஒட்டுண்ணிகளாக இருப்பது எவ்வளவு பெரிய விந்தை! காலந்தோறும் நடக்கும் இந்த செயல் முறையில் வளர்க்கும் பறவை குயிலின் முட்டைகளை சரியாகக் கண்டுபிடிக்க முடிந்தால் அத்தோடு அக்குயிலின் தலைமுறையே அழிந்துவிடும் அல்லது அந்த ஈட்டில் இடப்பட்ட முட்டைகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும். இப்படி இனங்கானப்படுவது சில வருடங்களுக்கு தொடர்ந்து நடந்தால் குயிலினங்கள் மொத்தமாக இந்தப் பூமிப்பந்தில் இருந்து காணமற் போய்விடும். இதனால் தங்களது முட்டைகளை வளர்ப்புப் பறவைகள் இனங் கான முடியாதவண்ணம் மிக நேர்த்தியாக வளர்ப்புப் பறவைகளின் வடிவத்திலும், நிறத்திலும், ஏன் ஏறக்குறைய எண்ணிக்கை யிலும் இடவேண்டிய திறனை உருவாக்கி தக்கவைத்துக் கொள்வது குயிலினத்தின் உத்தியாக இருக்க வேண்டுமல்லவா? ஒவ்வொரு குயிலினமும் தமது முட்டையின் உருவத்தையும், வடிவத்தையும் மிகவும் கவனமாக வளர்க்கும் பறவையின் (host bird) முட்டையினுடையதைப்போல இருக்குமாறு இடுவதை மிகவும் திறமை யாக பயின்றுவருகின்றன. இப்படி வளர்ப்பு ஒட்டுண்ணிகளாக குயில்கள் மட்டு மல்லாது வேறு சில பறவையினங்களும் ஈடுபடுகின்றன. அமெரிக்க கறுப்புத்தலை வாத்து, பழுப்புத்தலை (cowbird) ஆப்பிரிக்க தேன்காட்டி(honey guide) மற்றும் வைடா(whydah) போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறு வளர்ப்பு ஒட்டுண்ணிகளின் உத்திகளிலும் சில வேறுபாடுகள் உண்டு.
ஆப்பிரிக்க வைடாக்கள் வளர்க்கும் பறவையின் முட்டைகளோடு தமது முட்டைகளையும் இடுகின்றன. தோற்றத்தில் ஒன்றே போல் இருக்கிற இவைகளையும் தமது முட்டைகளென எண்ணி பொறித்து வளர்க்கின்றன வளர்க்கும் பறவைகள். குயிலினங்கள் சற்று கொடூரமானவை. தாம் முட்டையிடும் கூட்டில் உள்ள வளர்க்கும் பறவையின் முட்டையை தனது முட்டை யின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அப்புறப் படுத்தி விடுகிற கொடுமையைச் செய்யும். இதைவிட கொடூரமானது கென்யாவின் தேன்காட்டியின் முறை. இந்தத் தேன்காட்டி குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவரும்போதே வளைந்த கூர்மையான அலகுகளுடன் பிறகின்றன. இதனால் அதை வளர்க்கும் பறவையான செந்தொண்டை-ஈப்பிடிப்பானின் குஞ்சுகளை கொன்றுவிடுகின்றன. சில நாட்களில் தனது தேவை முடிந்துவிட்ட பிறகு இந்த கூர் அலகுகளும் உதிர்ந்து விடுகின்றன. தனது குஞ்சுகளைக் கொன்ற தேன்காட்டிக் குஞ்சுகளுக்கு இந்த ஈப்பிடிப் பான்கள் உணவூட்டி வளர்க்கின்றன.
இப்படி தங்களை ஏமாற்றும் பறவையின் முட்டைகளை கண்டுபிடிக்க வளர்க்கும் பறவைகளும் முயன்றே வருகின்றன. ஆனால் அதைத் திறமையாக ஏமாற்றியே வருகின்றன இந்த ஒட்டுண்ணிப் பறவைகள் என்பதை இப்பறவைகளின் இருப்பே உறுதி செய்கிறது இல்லையா? அதே போல இந்த ஒட்டுண்ணிப் பறவைகளால தங்கள் சந்ததிகளே பூண்டற்றுப்போய்விடாதவாறு இந்த வளர்ப்புப் பறவைகளும் தங்கள் இனங்காணும் திறன்களை வளர்த்துக் கொண்டே வருகின்றன என்பதற்கு இந்த வளர்ப்புப் பறவைகளின் தொடர்ந்த இருப்பே ஒரு சான்றல்லவா! இயற்கை தான் எப்படி இவ்வளவு கச்சிதமாக சமன் செய்கிறது! ஒட்டுண்ணிகளின் முட்டைகளை இனங் காணும் வளர்க்கும் பறவைகளினுடைய திறனுக்கேற்றவாறு குயில் நிறத்திலும், வடிவத்திலும், புள்ளிகளின் அமைப் பிலும் சரியாக போலி செய்து தனதுமுட்டைகளை இடுகிறது. அந்த அளவுக்கு தனது திறன்களை வளர்த்துக் கொள்ளாத பறவைகளின் கூட்டில் அத்துனை பொருத்தமாக முட்டையினை வடிவமைத்து இடுவ தில்லை. எவ்வளவு ஆச்சர்யகரமான போட்டி. அதே போல சில குயில்கள், குறிப்பாக பெண் குயில்கள் வேட்டையாடும் பறவைகளை ஒத்த உடல், நிற அமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. இதனால் இந்தக் குயிலினங்கள் தங்கள் கூடுகளின் அருகில் வரும்போது வளர்க்கும் பறவைகள் அஞ்சி தங்கள் கூட்டில் இருந்து விலகி இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் வேட்டைப் பறவைகளைப் போலுள்ள குயில்கள் தங்கள் முட்டைகளை வளர்க்கும் பறவைகளின் கூட்டில் இட்டுவிட்டு பறந்துவிடுகின்றன. இப்படி ஒவ்வொரு குயிலினமும் ஒவ்வொரு உத்தியை கடைப் பிடித்து தங்கள் முட்டைகள் குஞ்சுகளாகி வளர்ந்து செல்வதை உறுதிசெய்கின்றன.

***
சிலநாட்களாக பெய்த மழையினால் அந்த சிறிய ஓடையில் கொஞ்சம் நீரோட்டம் இருந்தது. நாணல் பூத்து எங்கும் வெண்மை விசிறிக் கிடந்தது. காலை ஒளியில் அது பட்டென பளபளக்கிறது. ஓடையின் உள்ளே நடந்து செல்ல ஒற்றையடிப் பாதை ஒன்றுள்ளது. தங்கி இருக்கும் குருட்டுக் கொக்குகளும் வாத்துகளும் ஒலியெழுப்பிப் பறக்கின்றன. அங்கு முன்பு பறந்து திரிந்த தூக் கணங்களைக் காணவில்லை. ஒரு கருவேல மரத்தில் இந்தக் குயில் தனது இணையோடு இருந்தது. ஒன்று பறந்துவிட இது கொஞ்சம் தாமதித்தது. இதைத் சுடலைக்குயில் (Pied-Crested Cuckoo, Clamator jacobinus) என்பர். 35 செ.மீ அளவுள்ள இது தலைக் கொண்டையோடு கூடிய கருப்பு உடலும் வெள்ளை மார்பும், வெள்ளையான வால் இறக்கை முனைகளையும் கொண்டது. தமிழகமெங்கும் பொட்டல் வெளிகள், முட் காடுகளில் இணையாகக் காணலாம். தென் மேற்கு பருவமழை தொடங்கும் முன் இதன் எண்ணிக்கை வலசை வரும் கூட்டத்தினால் அதிகமாவதாகவும் பருவமழை தொடங்கும் முன் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து இதன் இனம் வலசை வருவதாக ஒரு கருத்து நிலவு வதாகவும் ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ நூலில் ரத்னம் குறிப்பிடுகிறார். வண்டு, நத்தை, எறும்பு, கரையான் ஆகியவற்றைத் தேடித் தின்னுகிறது. சிலம்பன்கள் கூட்டில் அது இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் இதுவும் முட்டையிடுமாம். சிலம்பன்கள் மிகவும் உற்சாகமான பறவைகள். சதா ஒலியெழுப்பியவாறு தாவியும் பறந்தும் கூட்டம் கூட்டமாக செடிக்குச்செடி மரத் துக்கு மரம் பூச்சிகளைத் தேடிப் பறந்து திரியும் பறவைகள். அழகான கண்கள் கொண்டவை. அந்தக் கண்களில் ஏமாற்ற உணர்ச்சி எதுவும் தெரிகிறதா என்று இனிமேல்தான் கவனிக்க வேண்டும்.

 

நி.தங்கமணி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments