சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்

சென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த  “நச்சுப்” பயணம்

 

சாலைகள் பயணத்தின் ஓர் முக்கிய அங்கம். பயணத்தின் போக்கை தீர்மானிப்பது சாலைகள்தான். பயணத்தின் போக்கையும், பயணத்தின் நோக்கத்தையும் தெளிவாக இந்த சாலைகள் அதன் வடிவில் உணர்த்தின. சூரிய ஒளி புவியின் மீது படும் முன்னரே எங்கள் பயணம் துவங்கியது. பயணங்கள் மனிதனை ஆற்றுப்படுத்தும், தெளிவுபடுத்தும்.  எங்கள் பயணமும் அப்படிதான். ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை வெள்ளை நகரம் எனவும், பூர்வகுடிகளை கூவம் நதிக்கு வடக்கே குடியமர்த்தி அதனை கருப்பு நகரம் என பிரித்தனர். சுதந்திரதிற்குப் பின்னும் அந்த மனநிலை இல்லை என்றாலும் நகர அமைப்பும், சுழல் அமைப்பும் இப்பிரிவினை எடுத்துக்காட்டுகிறது. 95% பிற பகுதியில் உள்ள சென்னைவாசிகள் கண்டிராத சென்னையை இப்பயணம் மூலம் கண்டோம். அழிந்துவரும் சென்னை என்று பல்வேறு காரணங்களுக்காக பிற பகுதி சென்னையை பேசிய பலர், அழிந்த சென்னையை பற்றி அறியாத பல தகவல்கள் இப்பயணத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

பயணத்தின் ஒரு பகுதி வரை சற்றும்  இடையூறு இல்லாமல் சென்று கொண்டிருந்தோம், அந்த இடையூறற்ற பயணம் சிறிதுதூரம்தான். அதன் பின், சூழலும்  மாறியது, சாலையும் மாறியது. நல்லதண்ணி ஒடைகுப்பம் என்கிற ஊர்ப் பெயரை மட்டுமே காதுகளில் கேட்டோம், ஆனால் ஊரை காணமுடியவில்லை. என்ன, “ஊரைக் காணவில்லையா, சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி கிராமம் அழிக்கப்பட்டதைப் போல் இங்கே ஒரு ஊர் காணாமல் போயுள்ளது.  நல்லதண்ணி ஓடைக்குப்பம் என்கிற ஊரே, சென்னை துறைமுகம் கட்டப்பட்டதின் விளைவாக ஏற்பட்ட மண் அரிப்பால் அழிந்துவிட்டது, அதுவும் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில்.

அழிந்த அந்த கிராமத்திற்கு சாட்சியாய் இருப்பது கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரு கோவில் மட்டுமே. அதுவும் எப்போது மூழ்கி அழியும் என கூற முடியாத நிலையில் உள்ளது. மண் அரிப்பால் மணல் திட்டுகள் பெரிதும் பாதிப்படைகிறது. இந்த மணல் திட்டுகள் நிலத்தடி நீருடன் கடல் நீர் கலக்காமல் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும் எத்தனை நல்லதண்ணி குப்பங்கள் தன் தடயங்களை இழக்க போகின்றன எனும் அச்சத்துடனே எங்கள் பயணம் அடுத்த இடத்தை நோக்கி கிளம்பியது.

 

ஒற்றையடி சாலை, சற்று குண்டும் குழியுமான சாலைகள் முழுமையான வடசென்னையை அடைந்து விட்டதை உறுதிப்படுத்தின. அடுத்து பர்மா நகர் மைதானத்தில் இருந்து 1970ல் தொடங்கப்பட்ட அனல்மின் நிலையத்தினை பார்த்தோம். ஒரு அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் 35-40 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த அனல்மின் நிலையத்தினை 2017 மார்ச் மாதம் தான் மூடப்பட்டது. அதனை மீண்டும் புதுப்பிக்கும் வேலைப்பாடுகளுடன் விரிவாக்கப் பணிகளும் அரங்கேறி கொண்டு இருந்தது. பின் VLC பாலத்தில் இருந்து இரண்டு பெரிய அனல் மின்நிலையங்களையும், அதன் அருகாமையில் எழில் மிகுந்த அலையாத்திகளையும், அங்குள்ள கழிமுகப்பகுதியின் தற்போதைய அவல நிலையையும் கண்டு கவலையானோம். இந்த அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் அதிக வெப்பம்(சுமார் 60-70℃) உள்ள நீரை அப்படியே கடலில் கலக்கப்படுகிறது. இந்த நீரால் அங்குள்ள மீன் வளம்குறைந்து மீனவர் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அங்குள்ள கழிமுகத்தினில் உள்ள புழுக்களை எடுத்து இறால் பண்ணைகளுக்கு விற்கும் அளவிற்கு அவர்களின் பொருளாதார நிலையை சுருக்கியுள்ளது. இந்த இரு அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் குளங்களையும், அவை ஏற்படுத்தியுள்ள சூழலியல் சீர்கேட்டையும் கண்டு கலக்கம் கொண்டோம்.

“வெள்ளை பிசாசாக” மாறியுள்ள அச்சாம்பல்களை குளங்களுக்கு கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்பட்டுள்ள  விரிசல்களில் இருந்து வழிந்த நீர் கலந்து சிறிய “சாம்பல் ஓடையாகவே” அங்கு மாறியுள்ளது.  அதுமட்டுமல்லாமல் இன்னொரு புதிய அனல்மின் நிலையமும் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதை அங்கு கான முடிந்தது. இந்த புதிய அனல் மின் நிலயத்திற்காக அமைக்கப்பட்டுவரும் சாம்பல் குட்டையின் நேரெதிரில் உள்ள “பரவலில்” இருந்த நீர் எங்களை ஏதோ செய்தது.

கடும் வெப்பத்தை தாங்கி நிற்கும் கருவேலம் மரங்களே பட்டுப்போய் இருந்த காட்சி எங்களை திகைக்கச்செய்தது, அந்த நீர் எவ்வளவு மாசடைந்து உள்ளது என்பதை தெளிவாகவே காட்டியது. அருகாமை  கிராமமான செப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார   கிராமங்களில் நிலத்தடி நீரும் மோசமாக  மாசடைந்துள்ளது. அங்கு குடிநீராக மெட்ரோ நீரும் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதும் தெரியவந்தது. கொரோனா காலம் எப்போது முடியும், எப்போது நாம் இந்த முகக்கவசங்களை வீசி எறிவோம் என நினைத்து கொண்டு இருக்க, அங்குள்ள மக்களுக்கோ அந்த முகக்கவசங்கள் உடலின் ஒரு உறுப்பகாவே மாறிவிடும் அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது. அந்த கிராமங்களுக்கான பேருந்து வசதியோ, சாலை வசதியோ துளியும் இல்லை. ஒரு சபிக்கப்பட்ட இடத்தை போல் அக்கிராமம் அவல நிலையில் காட்சி அளித்தது.

சாலைகள் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டது போல இப்பகுதியைக்கண்ட பின்னர் எங்களை ஒரு ஆழ்ந்த சோகம் சூழ்ந்துகொண்டது. பேருந்தில் நாங்கள் சென்றாலும் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்ல நேர்ந்தது. வெறும் குழிகள் நிறைந்த மண்சாலைகளே உள்ள பகுதி அது. சில பறவைகள் அப்பகுதியில் தென்பட்டது. அப்பகுதியின் இயற்க்கை அழகை எடுத்துக்காட்ட அப்பறவைகள் அங்கு வந்ததோ அல்ல அப்பகுதியின் மாற்றம் அறியாமல் வந்து ஏமாற்றம் கொண்டதோ தெரியவில்லை அது அந்த பறவைகளுக்கு தான் வெளிச்சம். அப்பறவைகள் தங்களின் அவல நிலையினை எடுத்துக்காட்டி, வரப்போகும் திட்டத்தினை தடுக்க வலியுறுத்த வந்திருக்கிறது என்பதை “காட்டுப்பள்ளி தீவில்” தான் உணர்ந்தோம். கருங்காலி கழிமுகத்தில் உள்ள மணல் குன்றுகள் இயற்கை அரணாக உள்ளதையும், அங்கு கிடைக்கும் சிப்பிகளை சேகரித்து அங்குள்ள பெண்கள் தங்கள் பொருளாதரத்தை அமைத்து கொண்டுள்ளனர் என்பதனையும், பின் அந்த தீவில் வரவிருக்கும் அதானியின் துறைமுகத்தையும் பற்றி விரிவாக தெரிந்துகொண்டோம்.

வரப்போகும் அதானியின் துறைமுகம்

சென்னை துறைமுகத்தால் ஏற்ப்பட்ட கடல் அரிப்பினையே இன்னும் சரிசெய்ய முடியாமல்  தவிக்கின்றோம்.இன்னும் எத்தனை குப்பங்களை அல்ல கிராமங்களை இழக்க போகிறோம் என தெரியவில்லை.  வரப்போகின்ற காட்டுப்பள்ளி துறைமுகம் தற்போது உள்ள மூன்று துறைமுகங்களை காட்டிலும் 3 மடங்கு பெரிதாக உள்ள துறைமுக திட்டம். அதானியின் இந்த திட்டம் முழுக்க முழுக்க சென்னை மாநகரத்தை அழிக்க  கூடிய திட்டமாகவே உள்ளது. ஏனென்றால் இந்த துறைமுகம் கொற்றலை ஆற்றின் பெரும் பகுதியை அக்கிரமைக்கிறது. அது கடலில் சேரும் இரு கழிமுகத்தையும் அழிக்கப்போகிறது. கொற்றலை ஆறு தான் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை விட அதிக அளவு நீரை கடலில் சேர்த்தது, சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ருகிறது. அக்கழிமுகங்களை சுருக்குவதன் மூலம் பெரும் பேராபத்துகளை நாம் சந்திக்க நேரிடும். இதன் சுற்று வட்டார பகுதி முழுக்கவே ஒரு சதுப்பு நிலப்பகுதியாகும். இப்பகுதிகள் சுற்றுச்சுழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அவற்றை நாம் தனியாக திட்டம் தீட்டிப் பாதுகாக்க தேவையில்லை, அதன் இயல்பை அழிக்காமல் இருந்தாலே போதுமானது.  வரப்போகும் அதானியின் துறைமுகத்தை நாம் தடுக்காவிட்டால் பெருமழையோ, வெள்ளமோ, புயலோ தேவையில்லை. சிறு மழை பெய்தாலே நம் இல்லங்களில் தண்ணீர் புகுந்துவிடும் என்பதனை புரிந்து கொண்டோம்.

காட்டுப்பள்ளியில் வரவிருக்கும் அதானி துறைமுகம் சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாய் கட்டப்போகும் ஒரு துறைமுகாமாகும். இதில் மக்கள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் என அழிக்க திட்டமிடப்பட்ட்டுள்ளது. இதில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பினை, கடலில் உருவாக்க உள்ளனர். அதாவது, அந்த 2000 ஏக்கர் அளவிற்கு மணல்களை கொட்டி ஒரு நிலப்பரப்பை உருவாக்கும் திட்டம் அது. ஏற்கனவே இருக்கும் துறைமுகத்தினால் ஏற்ப்பட்ட கடல் அரிப்பினை தடுக்க இயலவில்லை. இதில் இன்னொரு பெரிய துறைமுகம் எவ்வளவு விளைவுகளை ஏற்ப்படுத்தும் என நினைக்கும் போதே தலை சுற்றுவது போல் இருக்கிறது.

வரப்போகும் பிரச்சனை ஒரு பகுதியை மட்டும் சார்ந்தது அல்ல. திருவள்ளூர் மாவடத்தில் பெரிய அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது. இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்தால் விவசாயம் முழுமையாக அழிந்து போகும் சூழல் உருவாகும். மேலும் காலநிலை மாற்றத்தினால் பல சூழலியல் பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ள நாம், உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகும். இதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தினால் காற்றுமாசு மேலும் அதிகரிக்கும்.

வெள்ளப்பெருக்கு, குடிநீர் தட்டுப்பாடு, நில அபகரிப்பு, விவசாய நிலங்கள் அழிப்பு, காற்றுமாசு போன்ற பல்வேறு பிரச்சனைகளை இந்த ஒரு திட்டத்தினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் உண்டாகும் அபாயம் உருவாகியுள்ளது. நல்லத்தண்ணி குப்பங்களை போல் எத்தனை கிராமங்கள் தங்கள் தடயங்கள் இழக்கப்போகின்றன என்கிற அச்சம் நீங்கி எத்தனை பெரும் நகரங்கள் அழியபோகின்றதோ எனும் அச்சம் தொற்றிக்கொண்டது.

இந்த பயணம் முதலில் அழிந்த பகுதி, அழிந்து கொண்டிருக்கும் பகுதி, அதானி துறைமுகத்தால் அழிய போகும் பகுதி என மூன்று கட்டங்களாக பிரித்து கொள்ளலாம். வரும் தலைமுறையினர் காட்டுப்பள்ளி பகுதியை அழிந்த பகுதி என குறுப்பிட்டு இன்னொரு நச்சுப் பயணம் வராமல் தடுப்பது நம் கையில்தான் இருக்கிறது.

(கடந்த ஞாயிற்றுக்கிழமை, (10.01.2021) சென்னையின் “நச்சுக் கழிவுகளில் அமிழும் வடசென்னை” நோக்கிப் பூவுலகின்  தன்னார்வலர்கள், இளையோர் பயணம் குறித்து லோகேஷின் அனுபவ பகிர்வு …)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments