அலேட்டா பான்: ஒரு நிஜமான அம்மா

 

 

அலேட்டா பான் என்பது அவர் பெயர். ஆனால் மக்கள் அவரை மம்மா (அம்மா) அலேட்டா என்றே அழைக்கிறார்கள். இந்தோனேஷியாவில் மொல்லோ பழங்குடியின பிரிவைச் சேர்ந்த அலேட்டா போராடியது, மிகப்பெரிய சுரங்க நிறுவனங்களை எதிர்த்து.

அலேட்டா வாழும் திமோர் தீவு காடுகளும் மலைகளும் வளங்களும் நிறைந்த பகுதி. எண்ணை, தங்கம், மாக்கல் ஆகிய வளங்கள் அந்த பகுதியில் நிறைந்திருந்தன. பல வருடங்களாக சுரங்க நிறுவனங்கள் அனுமதியில்லாமல் மாக்கல்லை எடுத்து வந்த நிலையில், காடுகளும் நதிகளும் அழியத் தொடங்கின. கூடவே சேர்ந்து அழியத் தொடங்கியது மொல்லோ இனத்தின் அடையாளமும்.

இறுதியாக அவர்கள் அழிக்கத் தொடங்கியது முதிஸ் மலை பகுதியை. மொல்லோ மக்களின் வாழ்வாதரமான நதிகளுக்கிடையில் அந்த மலை அமைந்திருந்தது. இனி பொறுக்க முடியாது என்று அலேட்டா முடிவு செய்தார்.

இனப் பெரியவர்களின் அனுமதியோடு 150 பெண்களை திரட்டி சுரங்கத்தின் தொடக்க இடத்தில் தறியுடன் அமர்ந்து கொண்டார். வேறு எதுவும் செய்யவில்லை. 150 பெண்களும் வரிசயாக இடத்தை மறித்து உட்கார்ந்து கொண்டு  அவர்களது பாரம்பரிய நெசவு வேலையைப் பார்க்க தொடங்கினார்கள். “அது வெறும் நெசவு மட்டுமல்ல, போராட்டம் மட்டுமல்ல. நெசவுக்கு நாங்கள் பயன்படுத்தும் பொருட்களும் நிறங்களும் முழுக்க முழுக்க இயற்கையானது. இயற்கையுடன் எங்களுக்கு இருக்கும் தொடர்பை வலியுறுத்தும், நினைவுப்படுத்தும் போராட்டமாக அதை நாங்கள் பார்த்தோம்” என்று அலேட்டா பின்னாளில் ஒரு பேட்டியில் சொன்னார்.

ஒரு வருடம் அந்த போராட்டம் நீடித்தது. அந்த ஒரு வருடமும் சமையல், சுத்தம் செய்தல், குழந்தைகளை பார்த்துக்கொள்ளுதல் என்று அனைத்து வீட்டு வேலைகளையும் ஆண்கள் செய்தார்கள். இளைஞர்கள் போராடும் பெண்களுக்கு உணவு கொடுக்கும் வேலையை பார்த்தார்கள்.

ஒரு வருடம் நீடித்த போராட்டத்தின் முடிவில் சுரங்க நிறுவனத்தார் பணியை கைவிட்டு வெளியேறினார்கள்.

“எங்கள் இனத்திற்கு ஒரு தத்துவம் உண்டு. அதன் படி நாங்கள் பூமியை எங்களது உடலாக பார்க்கிறோம். கற்கள், எலும்புகள். நீர், ரத்தம். நிலத்தை சதையாகவும் காடுகளை முடியாகவும் பார்க்கிறோம். இதில் எதை இழந்தாலும் நாங்கள் செயலிழந்தவர்களாகிவிடுவோம்” என்று அலேட்டா சொன்னார்.

இயற்கை வளங்களை புனிதமாக பார்க்கிறார்கள் மொல்லோ இன மக்கள். காடுகளிலிருந்துதான் அவர்கள் உணவையும் மருந்தையும் சேகரிக்கிறார்கள். நெசவுக்கு தேவையான நிறங்களை செடி கொடிகளிலிருந்து பெறுகிறார்கள். பல தலைமுறைகளாகவே இந்த பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயற்கையோடு அவர்களுக்கு இருக்கும் உறவையும் மிக புனிதமான ஒரு பந்தமாகவே அந்த மக்கள் பார்க்கிறார்கள். திமோர் தீவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நிலத்தின், நீரின், மரங்களின் பெயர்கள்தான் பெரும்பாலும் சூட்டப்படுகின்றன. மொல்லோ இன மக்களைப் பொறுத்தவரையில் அவற்றை இழப்பதென்பது அவர்களது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்கு சமமானது.

1980களில்தான் மலைகளிலிருந்து மாக்கற்களை வெட்ட சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது உள்ளூர் அரசு. அந்த அனுமதி தரப்பட்ட போது வழக்கம் போல உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டார்கள். காடழிப்பும் சுரங்கப் பணியும் தொடங்கிய கையோடு அழிவும் தொடங்கியது.  நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்ந்தன. நதிகளின் கீழ்நிலையில் வாழ்ந்த மக்களுக்கு நதி மாசு மிகப்பெரிய ஆபத்தாக இருந்தது.

இந்த செயல்பாடுகள் எல்லாம் மிக விரைவிலேயே மொல்லோ மக்களின் உரிமைகளுக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வரும் என்பதை அலேட்டா உணார்ந்திருந்தார். மலையை சுற்றி வாழ்ந்த இனத்தவர்களு அவருடைய ஆதாரமான செய்தி இதுதான்: நமது வாழ்க்கையை இயற்கையிடமிருந்து பிரிக்க முடியாது.

இந்த செய்தியை பரப்புவதற்காக 1996ல் ஒரு அமைப்பைத் தொடங்கினார் அலேட்டா. தொடக்கத்தில் மூன்று பெண்கள் மட்டுமே அலேட்டாவுடன் இணைந்தார்கள். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குச் சென்று இந்த செய்தியை பரப்புவதுதான் இவர்கள் பார்த்த வேலை. பல நேரங்களில் ஆறு மணி நேரங்கள் கூட பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த பயணத்தில் அலேட்டா பிரச்னைகளை சந்திக்காமல் இல்லை. ஒரு முறை அவர் மீது கொலை முயற்சி நிகழ்ந்தது. அதன் பிறகு தனது குழந்தையுடன் காட்டுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் அலேட்டா. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் குடும்பத்தை பிரிந்திருந்தார். சுரங்க நிறுவன்ங்களில் கொலை முயற்சிகளிலிருந்து தப்பிக்க அவ்வபோது இடம் மாறி மாறி வாழ்ந்து வந்தார்.

மொல்லோ இன மக்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள், அடித்து துன்புறுத்தப்பட்டார்கள்.

இந்த எல்லா நெருக்கடிகளையும் மீறி இயக்கத்தை வளர்த்தெடுத்தார் அலேட்டா. அதன் பிறகுதான் 150 பெண்கள் உட்கார்ந்து நெசவுப்போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று நிகழ்வும் அரங்கேறியது. உணவுக்கும், நெசவுக்கான சாயப்பொருட்களுக்கும், மருந்துகளுக்கும் எப்போதும் பெண்கள்தான் மலைகளில் அலைவார்கள். போராட்டத்தின் முன்னணியில் அவர்கள் நின்றதும் பொருத்தமாகவே இருந்தது. இந்த போராட்டம் வேறு எப்படி நடந்திருந்தாலும் வெற்றியை சந்தித்திருக்குமா என்பது சந்தேகமே. 2007ல் சுரங்க நிறுவனங்கள் அந்த இடத்தை காலி செய்தன.

இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றதற்காக கோல்ட்மேன் சுற்றுசூழலுக்கான விருதை 2013ல் பெற்றார் அலேட்டா.

இப்போது அலேட்டா மக்களுடன் சேர்ந்து காடு மலைகளை வரைவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்த பகுதிகளில் அந்த மக்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையை நிலை நிறுத்துவதுதான் இதன் நோக்கம். தவிர, எதிர்கால ‘வளர்ச்சி’ திட்டங்கள் விடுக்கும் மிரட்டல்களிலிருந்து தமது இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இது உதவும் என்று அவர் நம்புகிறார்.

“உங்களால் எதை உருவாக்க முடியுமா, அதை மட்டுமே நீங்கள் விற்க வேண்டும்” என்கிறார் அலேட்டா.

இப்போது வரையில் மொல்லோ இன மக்கள் அப்படிதான் வாழ்ந்து வருகிறார்கள்.

 

-கவிதா முரளிதரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments