“மனிதன் இயற்கையிலிருந்துப் பெற்று வாழ்கிறான் – அதாவது, அவனது உடல் இயற்கை என்பதாக இருக்கிறது – எனவே அவன் செத்து மடியாது இருப்பதற்காக அவன், இயற்கையுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மனிதனின் சிந்தனை மற்றும் செயல்படும் வாழ்கை இயற்கையோடு பிணைக்கப்பட்டதாக இருக்கிறது என்றுரைப்பதன் எளிய பொருள்விளக்கம் என்னவெனில், இயற்கை தன்னில்தானே பிணைக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது என்பதாம். ஏனெனில், மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிறான்” (Economic and philosophic Manuscripts) என்று கூறும் மார்க்ஸ், தனியுடைமை சமூகம் மனித இனத்தின் இயற்கை மீதான தொடர்பை அறுத்து விடுகிறது என்கிறார்.
தனியுடைமை, மனிதன் இயற்கையோடு கொண்டுள்ள உறவையும், சமூகத்தோடு கொண்டுள்ள உறவையும், சக மனிதனோடு கொண்டுள்ள உறவையும், மனித சாரத்தையும் தகர்கிறது என்று கூறுகிறார். இதனை அந்நியமாதல் (Alienation) என்று மார்க்ஸ் அழைக்கிறார்.
“உழைப்பு, மனிதனிடமிருந்து அயற்பட்டுப்போன நிலையில் அது,
- இயற்கையை மனிதனிடமிருந்து அயற்படுத்துகிறது.
2.மனிதனை அவனிடமிருந்தும், அவனுடைய தனிப்பட்ட சொந்த நடவடிக்கைகளிலிருந்தும், அவனுடைய இன்றியமையாச் செயல்பாடுகளிலிருந்தும் அயற்படுத்துகிறது.
இவ்வாறெல்லாம் அயற்படுத்தும், அயற்பட்டுப்போன உழைப்பு, மனிதனைத் தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களிலிருந்தும் அயற்படுத்துகிறது. அது, அவனுடைய உயிரின இயல்பு சார்ந்த வாழக்கைக்கான வழிவகை என்பதாக மாற்றிவிடுகிறது. முதலில் அது, உயிரின இயல்பு சார்ந்த வாழ்க்கையையும், தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை அதனுடைய உண்மையான இயல்பு இல்லாதவாறு மாற்றியமைத்து, அதை வெறுமனே உயிரின – வாழ்க்கைத் தேடல்களுக்கு மட்டுமே என்பதாகச் செய்து முடிக்கிறது. அத்தோடு அவ்வுயிரின வாழ்க்கை இயல்பையும் இல்லாதவாறு மாற்றியமைத்து ஓர் அயற்பட்ட வடிவமாகவும் செய்து முடிக்கிறது” என்கிறார் மார்க்ஸ் (Economic and philosophic Manuscripts).
“மனிதர்களுக்கிடையே உள்ள பொருள்வகை உறவுகளாகவும், பொருட்களுக்கிடையே உள்ள சமுதாய உறவுகளாகவும் தெரிகின்றன” என சமூக உறவுமுறையே பொருட்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்படுகிறது என்கிறார் மார்க்ஸ். எல்லாவற்றையும் பண்டமாக, நுகர்வாக, சந்தையாகக் காணும் இந்த மனநிலையை “பண்டங்களின் வழிபாடு” (Fetishism of Commodities) என்றழைக்கிறார் மார்க்ஸ்.
“நாம் இயற்கையிலே மட்டும் வாழ்ந்து வரவில்லை, மனித சமுதாயத்திலும் வாழ்ந்து வருகிறோம். இயற்கைக்கு இருப்பது போலவே இதற்கும் ஒரு வளர்ச்சி வரலாறும் அறிவியலும் உண்டு. எனவே, சமுதாயம் பற்றிய அறிவியலை – அதாவது, வரலாறு மற்றும் தத்துவம் வகைப்பட்ட அறிவியலென்று சொல்லப்படுகிறவற்றின் மொத்தத் தொகையை – பொருள்முதல்வாத அடித்தளத்தோடு இசைவுபடுத்துவதும் பின்னர், இந்த அடித்தளத்திற்கேற்ப அதனை மறுநிர்மானம் செய்வதும்தான் பிரச்சினையாக இருந்தது” எனக் கூறுவதால், இயற்கையின் இயங்கியலைப் புரிந்துகொண்டு, செயற்கையான மனித சமூகத்தில் நிகழ்த்தப்பட]வேண்டிய மாற்றம் பற்றி பேசுகிறார் எங்கெல்ஸ் (லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்).
முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள சுரண்டல் பற்றியும், மூலதனக் குவிப்பு பற்றியும், உடமை பற்றியும் மார்க்சியம் பலவாறு ஆராய்ந்துள்ளது. உற்பத்தியின் மீதான உடைமைப் (ownership of production) பற்றி மட்டுமல்லாமல், உற்பத்தி முறையில் (mode of production) நிகழ்த்தப்படவேண்டிய மாற்றம் குறித்தும் பல மார்க்சிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உற்பத்திமுறையில் மாற்றம் என்பது அரசியல் நிகழ்வால் மட்டுமே நடைபெறக்கூடிய ஒன்று. சமூக, பொருளாதார அறிவியல் மற்றும் இயற்கையின் இயங்கியல் அடிப்படையில் அடுத்தகட்ட உற்பத்தி முறையை நாம் கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளது.
அதாவது, சுற்றுச்சூழலை மையாகக் (Ecocentric) கொண்ட, வளங்குன்றா வளர்ச்சியின் அடிப்படையிலான உற்பத்திமுறை என்பதே மார்க்சிய பார்வையாக இருக்கமுடியும். தற்போது நடைமுறையில் உள்ள மனித சமூகத்தை மையமாகக் (Anthropocentric) கொண்ட உற்பத்திமுறை, மாற்றியமைக்கப்பட வேண்டும்.
முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாற்றாக, இயற்கை இயங்கியலோடும் அதன் அடிப்படை கூறுகளோடும் இயைந்த சோசலிச உற்பத்தி முறையையே மார்க்சியம் முன்வைக்கிறது.
தற்போதைய நிலையில் சீனத்திலும், முன்னாள் சோவியத்திலும் உற்பத்திமுறையின் உடைமை மட்டுமே மாற்றியமைப்பட்டது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற சூழல் சீர்கேடுகள், சீனத்திலும் நிகழ்ந்தன. பெய்ஜிங், காற்று மாசிற்கும் தலைநகரமாக உள்ளது. (சீனத்தில் இருப்பது சோசலிச உற்பத்தி முறையா என்பது தனியாக விவாதிக்க வேண்டிய ஒன்று). இதற்கு மாற்றாக கியூபாவில், இயற்கை வேளாண்மைக்கும், சூழலை மையப்படுத்திய வளர்ச்சிக்கும், நகர்ப்புர உணவு உற்பத்தி முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
1960களில் ரெய்ச்சல் கார்சன், தொழிற்புரட்சிக் காரணமாக நிகழ்ந்துள்ள சீர்கேடுகளை, அறிவியல்பூர்வமாக விளக்கி “மெளன வசந்தம்” என்னும் புத்தக்கத்தை வெளியிடுகிறார். இந்த புத்தகத்தை அப்போதே கேஸ்ட்ரோ கியூப மக்களிடம் கொண்டு சென்றார் (Richard Lewontin & Richard Levins, Biology Under Influence – Dialectical Essays on Ecology, Agriculture, and Health). தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா முன்வைத்த சூழலியல் சோசலிசத்தை, தென் அமெரிக்க சோசலிசக் கட்சிகள் பின்பற்றுகின்றன.
மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறை நீக்கப்பட்டு, பரவலாக்கப்பட்ட, தற்சார்புடைய உற்பத்தி முறை என்பதே புதிய உற்பத்தி முறையின் அடிப்படையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, நகர கட்டமைப்போ, கிராம கட்டமைப்போ தன்னளவில் உணவு உற்பத்தியிலும், மின்சார உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். நிலப்பகுதியை மையப்படுத்திய உணவு உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுப்போக்குவரத்து பரவலாக்கப்பட வேண்டும். அறிவியல்-தொழில்நுட்பங்கள் சமூக உடைமையாக இருக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றத்திற்குத் தேவையானவற்றைத் தவிர்த்த, பிற ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி குறித்தான தேவைகள் விவாதிக்கப்பட வேண்டும். இவையனைத்தும் தனியுடைமை நீங்கி சமூகத்திலேயே சாத்தியமாகும்.
- மு.வெற்றிச்செல்வன்