பரந்தூர் விமான நிலையம்: சில மாற்றுக் கருத்துகள்

பரந்தூர் விமான நிலையம் குறித்துப் பேசக்கூடிய அனைவரும் பெங்களூரு விமான நிலையத்தை முன்வைத்தே கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முதலில் சென்னையைப் பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு, பெங்களூரு மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது என்றால் கர்நாடகாவில் வேறு ஊர்களில் பெரிய அளவில் விமானப் போக்குவரத்து கிடையாது, இருக்கின்ற ஒன்றிரண்டு விமான நிலையங்களும் பெரிய அளவில் பயன்படவில்லை. ஆனால், தமிழகத்தில் சென்னையைத் தவிர, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்கள் முழுஅளவில் பயன்பாட்டில் உள்ளன. இதைத் தவிர சேலம், நெய்வேலி போன்ற விமான நிலையங்கள் செயல்படத் தயாராக இருக்கின்றன. கர்நாடக மக்களுக்கு பெங்களூருவை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அந்த விமான நிலையத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இப்போது என்ன செய்யவேண்டும்?

ஏற்கனவே திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு விரிவாக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகள் சில ஆண்டுகளில் முடிவுற்றவுடன், முதல்படியாக “low cost airlines” (LCC) ஐ வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு விமானங்களை தினமும் இயக்க அனுமதிக்கவேண்டும், அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் நெருக்கடி குறையும்.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து வளைகுடா மற்றும் சிங்கப்பூர் செல்பவர்கள் அருகில் உள்ள விமான நிலயத்திலிருந்தே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து வாரம் ஒருமுறை லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற விமானங்களை இயக்கினாலே போதும் சென்னைக்குப் புதிதாக விமான நிலையம் தேவைப்படாது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லக்கூடியவர்கள் ஏன் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதில்லை என்கிற கேள்விக்கு பதில் கண்டறிந்தாலே சென்னை விமான நிலையத்தில் ஏற்படும் நெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிடலாம். கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பறந்துவிடுகிறார்கள். கோவையிலிருந்து சர்வதேசப் பயணம் செல்பவர்கள் அதிகம் போகக்கூடிய விமான நிலையம் பெங்களூருதான், ஏனெனில் சென்னையை விட தூரம் குறைவு.

 

புதிய விமான நிலையத்தை ஏன் பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன?

 

இப்போதுவரை சென்னை விமான நிலையம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, அதைப்போலவே மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சி விமான நிலையங்களும். ஒருவேளை இந்த விமான நிலையங்களை மேம்படுத்தி போக்குவரத்து அதிகரித்துவிட்டால், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு வருமானம் குறைந்துவிடும். இதனால் பெரிய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன, BOOT (Build own operate transfer) வகையில் புதிய விமான நிலையத்தை எடுக்கப்போகும் நிறுவனத்திற்குப் பரந்தூர் திட்டம் வயப்படாமல் போய்விடும்.

 

அதானி போன்ற நிறுவனங்களுக்கு சின்ன சின்ன விமான நிலையங்களை இயக்கி சிறிய அளவில் இலாபம் பார்க்கும் நோக்கம் எல்லாம் கிடையாது, எல்லாமும் ஒரே இடத்தில கிடைத்தால் பெரிய அளவில் இலாபம் பார்க்கலாம் என்கிற நோக்கில்தான் சிறிய விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யாமல் தவிர்க்கப்படுகின்றன.

 

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தமிழகத்தின் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இந்தத் திட்டத்தின் தேவை குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் கருத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை எடுத்து விவாதிப்போம்.

 

  1. விமானப் போக்குவரத்திற்குச் செலவு செய்யப்படும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 326 ரூபாய் அளவிற்கு பொருளாதாரப் பயன்கள் கிடைக்கும் என்றும், மற்றும் 100 நேரடி வேலைவாய்ப்பிற்கும் 610 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

பதில்:-

 

இந்தத் தரவுகளை சரியானவை என்று எடுத்துக்கொண்டால், இந்த முதலீடுகள் மதுரை, தூத்துக்குடி, திருச்சி போன்ற பகுதிகளுக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, அந்த விமான நிலையங்களில் முதிலீடு செய்வதே சரியான முடிவாக இருக்கும். தமிழகத்தின் பிற பகுதிகளை விட சென்னை ஏற்கனவே தொழில்மயமாகி, மற்ற பகுதிகளுக்கும் சென்னைக்க்கும் இடையேயேயான இடைவெளி அதிகமாகவுள்ள நிலையில், பரந்தூரில் விமான நிலையத்தில் முதிலீடு செய்வது இந்த இடைவெளியை அதிகரிக்கவே செய்யும்.

 

  1. வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுவரும் விமான நிலையம் தன்னுடைய முழு கையாளும் திறனான 35 மில்லியன் (3.5கோடி) பயணிகள் என்கிற எண்ணிக்கையை எட்டிவிடும் என்றும் அதற்குள் புதிய விமான நிலையத்தை அமைக்கவில்லை எனில்சென்னையின் அருகாமைப் பகுதியின் வளர்ச்சி தேக்கமடையும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் புதிய விமான நிலையம் 100 மில்லியன் (10கோடி) பயணிகளைக் கையாளும் என்றும் இப்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையமும் செயல்படும் எனவும் கூறியுள்ளது.

 

பதில்:-

 

அப்படியெனில் 2050-60ஆண்டுகளில் சென்னையின் இரண்டு விமான நிலையங்களையும் சேர்த்து பயன்படுத்தப்போகும் பயணிகள் “13.5கோடி பேர்”. தமிழ்நாட்டின் மக்கள் தொகை இப்போது 7.5 கோடி, இது வரும் 2031ஆம் ஆண்டிற்குப் பிறகு குறைய ஆரம்பிக்கும் என்கிறது தேசியப் பொருளாதார ஆய்வு. அதைக் கணக்கில் எடுக்காமல், 7.5 கோடி என்கிற மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால், சென்னையில் தோராயமாக 2கோடிபேர் வாழ்வார்கள். அமைச்சர் சொன்ன தரவுகளை எட்டவேண்டும் எனில் சுமார் சென்னையில் வாழக்கூடிய 1கோடி பேர் ஒரு வருடத்திற்கு 13முறை விமான நிலையத்தைப் பயன்படுத்தவேண்டும், இதில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த அளவில் சிலர் மற்ற ஊர்களிலிருந்து வந்து போகலாம். 7.5 கோடி மக்கள் தொகையையும் எடுத்துக்கொள்ளவில்லை, காரணம் அந்தந்தப் பகுதியில் உள்ள விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அங்கே உள்ள மக்கள் அங்கிருந்தபடியே பயணம் செல்லும் வகையில் இருக்கும் என்பதால்.

 

 

  1. தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தின் அருகிலேயே உள்ள பகுதிகளான கெருகம்பாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் போன்ற பகுதிகளில் 852ஏக்கர் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்கென 2007ஆம் ஆண்டு ஒதுக்கி “விமான நிலையத்திற்கென” (classified for airport) அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த இடத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை, இந்தப் பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் யாருக்கும் வாழ்வாதாரம் அங்கேயே கிடையாது, ஆனால் பரந்தூரைச் சுற்றியுள்ள அந்த 13கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது அங்கு நடைபெறும் விவசாயமே.

 

விமான நிலைய பயன்பாட்டிற்கென அறிவிக்கப்பட்ட கெருகம்பாக்கம் பகுதியில் 852ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை என்கிற கேள்விக்கு தமிழக அரசின் அறிக்கையில் பதில் இல்லை. சில பத்திரிகைகளின் மூலம், அங்கு ஓடுபாதை அமைத்து முனையத்திற்கு வந்து சேருவதற்கான நேரம் (taxing time) அதிகமாக இருக்கும் என்பதால் இந்த யோசனையைக் கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தீர்க்கப் புதிய முனையத்தைப் பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள முனையத்தை இடித்து புதிதாக அமைத்தால் குறைந்தபட்சம் சரக்கு போக்குவரத்தைக் கையாளலாம்.

 

பூவுலகின் நண்பர்கள் விமான நிலையத்திற்கு எதிரியல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒரே சீராக அமையவேண்டும் எனில் மற்ற 4/6விமான நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்பட்டு, இன்னும் சில சிறிய விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னைக்கு கிடைக்கும் எல்லாமும் பிற பகுதிகளுக்கும் கிடைக்கும் என்கிறோம். ஆகவே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசைக் கோருகிறோம்

  • பூவுலகின் நண்பர்கள்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments