மக்களது நீண்டகால போராட்டத்தின் விளைவாய், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு டகட்டோ பைப்லைன் திட்டத்தை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு மாற்று இடங்களில் அந்த திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.
தங்களது நிலமும், நீரும் மாசடைய அனுமதிக்க மாட்டோம்; யாரைக் கேட்டு அந்த பைப் கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டீர்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூடி கோஷ மிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் திரண்டிருந்தனர். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. வாகனத்தில் வந்திறங்கிய அந்த அதிகாரிகள் தங்கள் கைகளில் இருந்த பெப்பர் கன்களைக் கொண்டு அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தாக்கப்பட்டனர். தாக்குதலின் உச்சமாக நாய்களைக் கொண்டு அவர்களை துரத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. யாரும் ஒரு அடி கூட அசையவில்லை. அந்த பைப் கம்பெனியை அங்கிருந்து துரத்துவதில் உறுதியாய் நின்றனர். இதே காட்சியை நம் இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், சத்திஷ்கர், ஒடிசா, தமிழ் நாட்டில் அடிக்கடி பார்த்திருப்போம். அதுவும் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே. ஆனால் மேலே கூறப்பட்ட இந்தப் போராட்டம் உலக நாடுகளிடையே தன்னை வல்லரசாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. ஆம் அதுவும் அந்நாட்டின் பூர்வகுடிமக்களுக்கு எதிராக தனது வன்முறையை கட்ட விழ்த்து விட்டுள்ளது அமெரிக்கா.
டகோட்டோ பைப்லைன் திட்டம்:
டகோட்டோ பைப்லைன் திட்டமென்பது அமெரிக்காவின் பக்கன் பைப்லைன் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவில் வடக்கு டகோட்டாவிலிருந்து தெற்கு டகோட்டோ வழியாக பாடோகவுக்கு இந்த குழாயை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. புறநகர பகுதி மக்களின் நீர் ஆதாரம் செல்லும் வழியே இந்த எண்ணெய்க் குழாயை அமைக்க அமெரிக்க அரசு, தனியார் கம்பெனிக்கு அனுமதி அளித்தது. இதுதான் மக்கள் போராட்டம் வெடிக்கக் காரணமாக அமைந்தது. குறிப்பாக அந்த எண்ணெய்க் குழாய் செல்லும் வழியே மிசோரி ஆறும் அமைந்திருந்ததால் நிலம் மற்றும் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று இந்த திட்டத்துக்கு எதிராக உள்ளூர் மக்களுடன், சமூக ஆர்வலர்கள், சூழலியல் நலம் விரும்பிகள், பழங்குடியினர் (ஸ்டாண்டிக் ராக்சியோக்ஸ்) என பலரும் இணைந்தனர். ஒபாமா தலைமையிலான அரசை தங்களது பக்கம் திரும்ப பல்வேறு கட்ட போரட்டங்களை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தனர். ஊர்வலங்கள், கருத்தரங்கள், வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 3,000க்கும் அதிகமான மனுக்கள் மாகாண ஆளுநரிடம் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அம்மக்களின் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
எங்களது நீருக்கு மதிப்பு கொடுங்கள்
ஸ்டேண்டிக்ராக் இண்டியன் ரிசர்வெஷனை சேர்ந்த இளம் குழு ஒன்று ஜுலை 2016 ஆம் ஆண்டு, ’எங்களது நீருக்கு மதிப்பு கொடுங்கள்’ (respect our waters) என்ற புதிய போராட்டத்தை தொடங்கினர். அதனையட்டி வடக்கு டகோட்டாவிலிருந்து வாஷிங்டன் வரை நடைபயணம் சென்றது இந்த போரட்டத்தின் வடிவத்தை மாற்றியது. தொடர்ந்து மக்களது போராட்டம் வீரியமானதை அடுத்து, அரசாங்கம், நாய்களையும், பெப்பர்கன்களையும் பயன்படுத்திப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் பலரை போலீஸார் கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மக்கள் விடா முயற்சியுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாலங்களில் மறியலில் ஈடுபட்டனர். தங்களது போரட்டத்தினை அமெரிக்காவின் பிற பகுதி மக்களிடமும் கொண்டுசென்றன.
வாபஸ்பெற்ற ஒபாமா
மக்களது நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாய், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு டகோட்டா
பைப்லைன் திட்டத்தை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு மாற்று இடங்களில் அந்த திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. நீண்ட கால தங்களது நிலம், நீரின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த மக்களது போராட்டதுக்கு வெற்றிகிடைத்துள்ளது.
ட்ரம்பினால் அச்சம்
ஏனெனினும் அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பின் கொள்கைகளும், செயல்திட்டங்களும் டகோட்டோ பைன்லைன் திட்டத்தை மீண்டும் துவங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இயற்கையை மிகவும் நேசிக்கும் டகோட்டோ வாசிகள் ட்ரம்ப்புக்கு எதிராகவும் தங்களது போராட்டத்தைத் துவங்க அவர்களது எல்லையில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை அன்பாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.