சுற்றுச்சூழல் குற்றங்கள்; ஓர் அறிமுகம்

முன்னுரை:

உலக நாடுகள் அனைத்தும் 2017 ஆம் ஆண்டு புவியின்அதிகபடியானவெப்பநிலையை உணரத் தொடங்கியிருக்கின்றன. நாசாவின் ((NASA) அறிக்கை ஒன்று, இவ்வாண்டு முன்னெப் பொழுதும் இல்லாத அளவிற்கு புவியின் வெப்பநிலை 0.99கு செல்சியஸ் உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளது. இதனால் ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே அனைத்து உலக நாடுகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) மற்றும் வளங்குன்றா வளர்ச்சி (sustain able development) குறித்து அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்ககின்றன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சூழலியல் சார்ந்த மாற்றங்கள், உலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களின் இருத்தலுக்கும் அச்சம் விளைவிப்பதாக உருப் பெற்றுள்ளது. எனவே சுற்றுச் சூழல் என்பது வளங்குன்றா வளர்ச்சி, அமைதி மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கு அடிப்படையாக உள்ளது. தற் பொழுது நமது சுற்றுச் சூழல் மிகப்பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றச்செயல்கள் உலகளாவிய பிரச்சனையாக உருவாகி, சுற்றுச் சூழலுக்கும் சூழலியலுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒரு வினை ஊக்கியாக மாறி வருகிறது. உலக அளவில் அதிகப்படியான சூழல் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே யிருக்கின்றன. இத்தகைய மாற்றங்கள் கடை நிலையில் உள்ள மக்களையும், உயிரினங்களையும் வெகுவாகப் பாதிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆகவே சுற்றுச் சூழல் சார்ந்த சட்டங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும், குறித்து ஆராய வேண்டிய கட்டாயம் நம்மிடையே இப்போது மேலோங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றம் என்றால் என்ன, அவற்றின் வகைகள் மற்றும் தாக்கங்கள் குறித்து ஓர் அறிமுகத்தை இந்தக் கட்டுரை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

எது சுற்றுச்சூழல் குற்றம் ?

எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால் சட்டத்திற்குப் புறம்பான ஏதேனும் ஒரு செயல், நேரடியாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாயின், அதுவே சுற்றுச்சூழல் குற்றம் என வரையறுக்கப்படுகிறது. விளக்கமான வரையறை – எந்தவொரு செயலானது உள்நோக்கத்துடன், அறிந்து, அச்செயலின் விளைவுகள் பற்றி
கவலைப்படாது அல்லது எந்தவொரு கட்டுப்பாட்டையும் புறக்கணிக்கின்ற செயல், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறுவதாக இருக்கின்றதோ அதுவே சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றமாக கருதப்படும். மேற்சொன்ன வரையறையானது சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் குறிக்கும். எனவே, ஒரு தனிநபர் குப்பையை அதற்கான இடத்தில் கொட்டாமல், பொது இடத்தில் கொட்டுவதும், பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான மாசுக்களை ஏற்படுத்துவதும் இதில் அடங்கும்.

சுற்றுச்சூழல் குற்றங்களின் வகைகள்:

சட்டத்திற்குப் புறம்பான ஏதேனும் ஒரு செயல், நேரடியாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாயின், அதுவே சுற்றுச்சூழல் குற்றம் என வரையறுக்கப்படுகிறது. விளக்கமான வரையறை – எந்தவொரு செயலானது உள்நோக்கத்துடன், அறிந்து, அச்செயலின் விளைவுகள் பற்றி கவலைப்படாது அல்லது எந்தவொரு கட்டுப்பாட்டையும் புறக்கணிக்கின்ற செயல், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறுவதாக இருக்கின்றதோ அதுவே சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றமாக கருதப்படும்.

சுற்றுச்சூழல் என்பது எவ்வாறு பல தரப்பட்ட, பன்முகத் தன்மையை தன்னுள் கொண்டுள்ளதோ அது போலவே சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றங்களும் பன்முக தன்மை கொண்டவை.

(i) காட்டுப் பகுதிகளில் வாழும் உயிரினங்களான மான், யானை, புலி, சிங்கம் மற்றும் பறவைகள், ஊர்வனவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொல்வதும் (வேட்டையாடுதலும்), கடத்திச் சென்று விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். காட்டு உயிரினங்கள் என்று கூறும் பொழுது மிருகங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் அது மரம், செடி, கொடிகளையும் உள்ளடக்கியதே ஆகும்.

(ii) காட்டுப் பகுதிகளிலோ அல்லது பிற பகுதிகளிலோ சட்டத்திற்கு எதிராக மரங்களை வெட்டுவதும், அதனைக் கடத்துவதும் குற்றமாகும். நம்மில் பல பேர் சந்தன மரக் கடத்தல், செம் மரக் கடத்தல் குறித்து செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம், படித்திருப்போம்.

(iii) கடல்களில் காணப்படும் அரியவகைத் தாவரங்களை அழித்தல், மீன் வளங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட வழிமுறைகளில் மீன் பிடித்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் விலங்குகளை வேட்டையாடுதலும் குற்றமாகும்.

(iv) நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் திடக்கழிவு மேலாண்மை என்பது மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. திடக் கழிவுகளை முறையாக வகைப்படுத்தி, அரசு பரிந்துரைத்துள்ள வழிமுறைகளில் அவற்றை அகற்றவேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காக் குப்பை, மருத்துவக் கழிவு, இரசாயனக் கழிவு, மின்னணுக் கழிவு என வகைப்படுத்தி, சேகரித்து அவற்றைத் தக்கமுறையில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அகற்றவேண்டும். ஆனால் அதிகப்படியான இடங்களில் குப்பைகள் வகைப்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக் குறியே! இவ்வாறு விதிகளுக்கு எதிராகக் குப்பை களைக் கொட்டுவதும் குற்றமாகும்.

(v) அரசு மற்றும் தனியார் தொழிற் சாலைகளிலும், இரசாயன ஆலைகளிலும் இருந்து வெளியேற்றப்படும் ஒவ்வொரு கழிவு பொருட்களும் அரசின் பரிந்துரைக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட பின்தான் வெளி யேற்றப் பட வேண்டும். ஏதேனும் ஒரு வகையில் அக்கழிவு பொருட்கள் காற்று, நிலம், நீர் மற்றும் வளி மண்டலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துமாயின் அது குற்றமாகும். தற்பொழுது எத்தனை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விதிகளை மதித்து செயல்படுகின்றன?

(vi) சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஆற்று மணல்களை அள்ளுதல், தாது மணல்களை கொள்ளையடித்தல், கனிமங்களை வெட்டி எடுத்தல் (தங்கம், நிலக்கரி, கிரானைட் போன்றவைகள்) சுற்றுச் சூழலுக்கு எதிராக செய்யப்படும் பெருங்குற்றங்களாகும். தமிழகத்தை பொருத்தமட்டில் ஆற்று மணல் கடத்தல் மற்றும் கிரானைட் வெட்டியெடுதல் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

(vii) உலக நாடுகள் அனைத்தும் ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் க்லோரோப்லோரோ கார்பன் (CFC) எனப்படும் வாயுவின் பயன் பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் இச்சூழலில், சர்வதேசச் சட்டங்களுக்கு எதிராக CFC வாயு கடத்தப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதும் குற்றமாகும்.

அதிகரிக்கும் ஆபத்து மற்றும் தாக்கம்:

மேற்சொன்ன வெவ்வேறு வகையான சுற்றுச் சூழல் குற்றங்கள் பல்வேறு வழி முறைகளில் இயற்கைக்கும், மனிதன் உட்பட பல உயிரினங்களுக்கும் ஆபத்தை விளை விப்பதாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, அளவுக்கு அதிகமாக மரங்களை வெட்டுவது, அம்மரத்தைச் சார்ந்து வாழும் உயிரினம் மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலுக்கும் அடிகோலிடுகிறது. தாதுக்களை வெட்டியெடுத்தல் புதுப்பிக்க முடியாத வளங்களை அழிக்கின்றது. அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல், மீன் வளத்தைக் குன்றச் செய்வதோடு மட்டுமல்லாமல் டால்பின், நீலத்திமிங்கலம், வெள்ளை திமிங்கலம் போன்ற மீன்களின் அழிவிற்கு வித்திடுகிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் திடக்கழிவு மேலாண்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருப்பெற்றுள்ளது. முறையற்ற வகைகளில் குப்பைகளைச் சேகரிப்பதும், கொட்டுவதும், எரியூட்டுவதும் மனிதர்களுக்கு பலவித தற்காலிக மற்றும் நீண்டகால உடல் நலக்குறைவுகளை ஏற்படுத்துகின்றன. மேற்சொன்ன செயல்கள் ஒரு சங்கிலித் தொடர் முறையில் பல்வேறு வகைகளில் இயற்கைக்கும், மனிதர்களுக்கும் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பும் (UNEP), சர்வதேச காவல்துறையும் (INTERPOL) இணைந்து நடத்தியஆய்வின் மூலம் சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றங்களின் வளர்ச்சி மற்றும் தாக்கத்தை நாம் அறிந்துகொள்ளலாம். உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்களின் மதிப்பு 258 பில்லியன்அமெரிக்கடாலர்கள் (தோராயமாக 16 இலட்சம் கோடி ரூபாய்) வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் மற்ற குற்றங்களான போதைப்பொருள் கடத்தல் (தோராயமாக 22 இலட்சம் கோடி ரூபாய்), ஆயுத கடத்தல் (தோராயமாக 19 இலட்சம் கோடி ரூபாய்), ஆட்கடத்தல் (தோராயமாக 10 இலட்சம் கோடி ரூபாய்) போன்ற குற்றங் களோடு ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள், உலக அளவிலான ஒட்டு மொத்த குற்ற நடத்தைகளில் மூன்றாம் இடம்பிடித்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது. இது மட்டுமல்லாமல், இவ்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் ஏழு விழுக்காடு வரை சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன.

முடிவுரை:

இத்தகைய மிகப்பெரும் குற்றமானது ஆட்சி யாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்காததற்கு காரணம் என்ன? சுற்றுச்சுழலுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததற்கு காரணம் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குரிய பதிலை ஆராய்வதற்கு முன்னால் மக்கள் எதனை குற்றம் என்று நினைக்கிறார்கள் என நாம் அறியவேண்டும். பொதுவாக எந்த ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயல் தனிநபரையோ, குடும்பத்தையோ
பாதிக்கின்றது என்றால் அச்செயலைக் குற்றமாக கருதுகிறோம். எனவேதான் நம் வீட்டில் திருட்டோ, கொள்ளையோஅல்லது பிற நபரால் காயப்படுத்தப்பட்டாலோ, மிரட்டப் பட்டாலோ காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றோம். மேற்சொன்ன நிகழ்வுகளில் நாம் நேரடியாக ‘பாதிக்கப் படுகிறோம்’. எனவே தான் காவல் துறையில் புகார் தெரிவிக்கின்றோம். ஒருவேளை நாம் எந்த நிகழ்வுகளாலும் பாதிக்கப்படவில்லை எனில் புகார் தெரிவிப்பதைப் பற்றிய எந்த எண்ணமும் நமக்கு வராது. ஆகவே, எந்த ஒரு குற்றச் செயலிலும் ‘பாதிக்கப் படுதல்’ (victimisation) என்பது ஒரு முக்கிய காரணி. சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்ற நடத்தைகளில் நேரடியாகப் பாதிப்பிற்கு உட்படுவது சுற்றுச் சூழல் மட்டும்தான், எனவேதான் என்னவோ நாம் “சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் நமக் கென்ன என்று பெரும்பான்மையான மக்கள் நினைகின்றார்கள்”. ஆனால் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம் – நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது மக்களை தான் பாதிக்கின்றது என்ற உணர்வு ஏதும் இன்றி நாட்களைக் கடத்தி சென்று கொண்டிருக்கிறோம். இதனால் தான் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரசு மற்றும் மக்கள் மத்தியில் போதுமான புரிதல் இல்லை என நம்புகிறோம்.இனிமேலாவது சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் மீது கவனம் செலுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து, மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் நலமான இருத்தலை உறுதி செய்வோம்.

பிரகாஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments