தெலுங்கு தேசமா? அணுவுலை தேசமா?

இந்தியாவின் ஆன்மா அழுக்குப் படியாமல் வாழும் ஒரு அசலான கிராமத்துக்குள் கால் பதித்த உணர்வைத் தருகிறது கொவ் வடா. விசாகப்பட்டினத்திலிருந்து 68 கி.மீ தொலைவில் மிக அழகான பூமி. எங்கு பார்த் தாலும் செழித்து நிற்கும் பசுமை. விவசாய நிலத்தில் பல மீனவர்களும் இருக்கிறார்கள். இந்திய வரைபடத்தில் பிற மாநிலங்களாலும் மக்களாலும் கண்டுக்கொள்ளப்படாமலேயே போயிருக்கும் கொவ்வடா. இடிந்தகரை மக்களின் போராட்டம் எப்படி தமிழகம்கூட அறிந்திராத அந்த கடல் கிராமத்தை சர்வதேச போராட்ட வரைப்படத்தில் பிரதான இடம்பிடிக்க வைத்ததோ அப்படியரு போராட்டத்துக்கு தயாராக நிற்கிறார்கள் கொவ்வடா மக்கள். அழகிய கொவ்வடாவை அணுவுலை பூமியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறது இந்திய அரசும் ஆந்திர அரசும். இருபெரும் அதிகார மையங்களை எதிர்த்து போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள் கொவ்வடா மக்கள். கடந்த வாரம், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதய குமாருடனும் கூடங்குளம் போராட்டத்தை தொடர்ச்சியாக தனது கேமராவில் பதிவுசெய்து வரும் புகைப்பட கலைஞர் அமிர்தராஜ் ஸ்டீபனுடனும் கொவ்வடாவுக்குச் சென்றிருந்தேன். புகுஷிமாவிற்கு பிறகு இடிந்தகரை மக் களிடம் பார்த்த கொந்தளிப்பான உணர்வை கொவ்வடா மக்களிடமும் பார்க்க முடிந்தது. இவர்களது போராட்டத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் குஜராத்திலுள்ள மிதிரிவிரிதி கிராமத்து மக்களின் வீரியமான போராட்டத்தை பார்த்து அங்கு அணுவுலை அமைக்கும் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு, கொவ்வடா மக்களின் போராட்டத்தை ஏனோ கண்டுகொள்ளவில்லை. மக்களும் விடுவதாயில்லை. ‘‘அங்கிருக்கும் மீனவர்களும் விவசாயிகளும் பெண்களும் அணுவுலைகளை கடுமையாக எதிர்க்கிறார்கள். இங்கிருக்கும் மருந்தக தொழிற்சாலையின் கழிவு கடல் நீரில்தான் கலக்கப்படுகிறது. அதனால் கடந்த சில வருடங்களாகவே மீன் வரத்து குறைந்திருக்கிறது. இப்போது அணுவுலையும் வந்துவிட்டால் நாங்கள் எல்லோரும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்” என்று குமுறுகிறார் பாபு.

மிதிரிவிர்தி மக்களின் போராட்டத்தால் அமைய முடியாமல்போன வெஸ்டிங் ஹவுஸ் அணுவுலைகள்தான் இப்போது கொவ் வடாவுக்கு வரவிருக்கிறது. 2032க்குள் 63,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட வேண்டும் என்கிற ‘மாபெரும்’ திட்டத்துடன் தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் குறிவைத் திருக்கிறது இந்திய அரசாங்கம். இந்த திட்டத்தின் படி ஆந்திராவில் மட்டும் 30,000 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டும். அதாவது கடலோர பகுதிகளில் ஒவ்வொரு 200 கி.மீக்கும் 6000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அணுவுலைகள் அமைக்கப்படும். அத்தனை கழிவுகளும் கடலில் கொட்டப்படும் என்றால் ஆந்திர கடல்களின், மீனவர்களின் எதிர்காலமும் வாழ் வாதாரமும் பாதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் கொவ்வடாவில் அமைய விருக்கும் வெஸ்டிங் ஹவுஸ் அணுவுலை களைப் பொருத்தவரையில் அது அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு சவால் விடும் அணுவுலைகள் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்தையும் வல்லரசு ஆக யாரிடம் வேண்டுமானாலும் ஏமாறுவதற்கு தயாராக இருக்கும் அதன் பேராசையையும் பகடி செய்யும் திட்டமும்கூட. எனில் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் அமெரிக்காவிலேயே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம். வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் அணுவுலைகளை அமெரிக்காவிலுள்ள பல நிறுவனங்களே வாங்க மறுக்கின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் வெஸ்டிங் ஹவுஸிடமிருந்து அணுவுலைகளை வாங்கும் திட்டத்தை சில நிறுவனங்கள் கைவிட்டிருக்கின்றன. இது பற்றி கடந்த வாரம் சென்னை வந்த இயற்பியலாளர் சுவரத் ராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தேன். கொவ்வடாவில் அமைய விருக்கும் 6 அணு உலைகளின் விலை கிட்டத்தட்ட சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்கிறார் அவர். 4 லட்சம் கோடி செலவில் அமையவிருக்கும் ஒரு திட்டத்திற்கு டெண்டர் விடுவது போன்ற எந்த நடைமுறையும் நடக்கவில்லை. நஷ்டத்தில் இயங்கும் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனத்தை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று இந்திய அரசு எந்த விளக்கமும் தரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கொவ்வடாவில் அமையவிருக்கும் அணு வுலைகள் உலகில் இன்றைய தேதியில் வேறு எங்கும் இயங்கவில்லை.

இந்த அரசியல் எதுவும் தெரியாமலேயே கொவ்வடாவை சேர்ந்த மக்கள் அணு உலைகளை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது நிலத்தில் அமையவிருக்கும் அணுவுலைகள் அவர்களது வாழ்வாதாரத்தை விழுங்கத் தயாராக இருக்கும் பெரும்பூதம். அவர் களுடைய சாதாரண கோரிக்கையெல்லாம் அணுவுலைகளால் தங்களது எளிமையான, இயல்பான வாழ்க்கை திசை மாறிவிடக்கூடாது என்பதுதான். இன்று நேற்றில்லை, கொவ்வடாவில் அணு உலை அமையலாம் என்று பேச்சு எழத் தொடங்கிய நாளிலிருந்தே இந்த மக்கள் அதை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறார்கள். 2011ல் கொவ்வடாவில் அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் பெருமளவில் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் அணு உலை வருவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். டிசம்பர் 2012 தொடங்கி ஒரு வருடம் தொடர் உண்ணாவிரதமும் இருந்தார்கள் அவர்கள். பல அமைப்புகளும் இந்திய அளவில் அணு சக்திக்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் பல அறிவு ஜீவிகளும் இந்த தொடர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். இடிந்தகரை ஏற்படுத்திய தாக்கம் இந்த போராட்டம். இது மட்டுமன்றி இன்னும் பல விதங்களிலும் இந்த மக்கள் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கொவ்வடாவில் அடித்த புயல் இவர்களை இன்னமும் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பல குடிசைப் பகுதிகளையும் படகுகளையும் ஒரு புயல் அடித்துச் சென்றுவிட முடியும் என்றால் அணு உலை விபத்து என்ன செய்யும் என்ற இவர்களது கேள்விக்கு இன்று வரையில் பதில் இல்லை. புகுஷிமாவில் விபத்துக்குள்ளான டாய்ச்சி அணு உலைகளை விட ஒன்றரை மடங்கு பெரிது கொவ்வடாவில் அமையவிருக்கும் அணு உலை. புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல ஒரு விபத்து நிகழ்ந்தால் அதன் பாதிப்பு புகுஷிமாவை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்று அச்சப்படுகிறார்கள் இந்த பகுதியைச் சேர்ந்த ஆர்வலர்கள்.

பல வருடங்களாகவே இந்த மக்கள் அணு உலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந் தாலும் 2014ன் புயலுக்கு பிறகு கடலோரப் பகுதியில் அணு உலை அமைப்பதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து திட்டத்தை அரசாங்கம் கைவிடும் என்ற இவர்களது எதிர்பார்ப்பு இன்று பொய்யாகியிருக்கிறது. இந்த எதிர்ப்பு அரசியல் வடிவம் பெற வில்லை என்பது வேண்டுமானால் இவர்களது போராட்டத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்ப்பில் இருந்த உணர்வு நிஜம். அவர்களது பயங்கள் ஆதாரமற்றவை என்று புறம்தள்ள முடியாதவை. இதை அவர்களுடன் உரையாடும் யாரும் எளிதில் உணர முடியும். வளர்ச்சியின் பெயரில் அதிகார வர்க்கம் ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது அதை தமது எளிய வாழ்வாதாரத்தின் பேரில் எதிர்க்கும் பொதுமக்களுக்கு பெரும்பாலான இடங் களில் தோல்வியே கிடைக்கிறது. அதிகார வர்க்கம் பேசும் வளர்ச்சி என்பது யாருக்காக என்று தேய்ந்துபோன ஆனால் இப்போதும் பதில் இல்லாத கேள்வியைத்தான் கொவ்வடா போராட்டமும் எழுப்புகிறது. மக்களும் போராட்டத்தைவிட தயாரில்லை. அதிகாரவர்க்கத்தைப் பொறுத்தவரை அதை இந்தியாவை வளர்ந்த நாடாக முன்னிறுத்த ஒரு துருப்புச்சீட்டு மட்டுமே. ஆனால் போராட்டக்காரர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களது, அவர்களது சந்ததியினரது வாழ்க்கையும் அதன் ஆதாரமும் சார்ந்தது. அவற்றின் மீது தொடுக்கப்படும் வளர்ச்சி மோகத்தின் வேட்டையை தோல்விக்கு முகம் கொடுத்துக்கொண்டாவது எதிர்க்க வேண்டிய நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். இது தெலுங்கு தேசமா அல்லது அணுவுலை தேசமா என்கிற கோஷத்தை முன்வைத்து அணுவுலைகள் அற்ற ஆந்திராவை நோக்கிய தங்களது போராட்டப் பயணத்தை தொடங்கி யிருக்கிறார்கள் கொவ்வடா மக்கள். மிகப்பெரிய அதிகார மையத்துக்கு எதிரான போராட்டம் அது என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அந்த அதிகார மையம் அவர்களுக்கானதல்ல. அவர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசும் அவர்களுக்கானதல்ல. இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனாலும் எதிர்ப்புணர்வை காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். “எங்கள் குரல் கேட்கப்பட வேண்டும், எங்கள் துயரம் உணரப்பட வேண்டும், எங்கள் கண்ணீருக்கு பதில் வேண்டும், எங்கள் எதிர்ப் புக்கு நீதி வேண்டும்” என்பதே அந்த மக்களின் எதிர்பார்ப்பு. அது இடிந்தகரை அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம்.

 

கோ.சுந்தர்ராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments