நெகிழியினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பின் இருக்கும் வணிகம், அரசியல் குறித்து கடந்த சில வருடங்களாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன். தொடக்கத்தில் பெரும்பாலானோரைப் போல நெகிழியை வெறும் மட்காத குப்பையாகப் பார்த்த நான் தொடர்ந்து தீவிரமாக தேடித் தெரிந்து கொள்ளத் தொடங்கிய பின்னர் தான் அது எவ்வளவு பிரம்மாண்டமானப் பிரச்சினை என்பதும் நான் அதுவரைப் பார்த்துக்கொண்டிருந்தது வெறும் சிறு துரும்பு தான் என்பதும் தெரிந்தது. நெகிழிக்கான மூலப்பொருட்களான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய மூலவேதிப்பொருட்களை அகழ்விலிருந்து, உருவாக்கி அவை பின்னர் நெகிழியாக வடிவம் பெற்று, நெகிழிப் பொருட்களாக வார்க்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இறுதியாக பல்வேறுவிதமான கழிவு மேலாண்மைச் செயல்பாடுகள் மூலம் காற்றிலும் நீரிலும் நிலத்திலும் ஒரு நிரந்தர நச்சாகச் சேர்வது வரையிலும் நெகிழியால் ஏற்படும் சூழல் மாசுபாட்டை எழுத இந்த இதழில் பக்கங்கள் போதாது.
வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் முயற்சி செய்தால் எளிதாய் இந்தப் பிரச்சனையை மனிதகுலம் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் அதன் அருகில் நெருங்கத் தொடங்கியதும் ஏற்பட்ட மலைப்பு, மிகுந்த மனச் சோர்வையே தந்தது. பல பெரு நிறுவனங்களினுடைய வணிகத்தின் அச்சாணியாக நெகிழியே இருந்ததையும், மாற்றாக ஆங்காங்கே சில நம்பிக்கையான முன்னெடுப்புகள் நடந்தாலும் அவை பொருட்படுத்தும் அளவுக்குப் போதுமானவை அல்ல என்பதையும் ஒரு கட்டத்தில் உணர முடிந்தது. தொடர்ந்து இன்னும் தீவிரமாகத் தேடித் தெரிந்து கொள்ளவும் செயல்படவும் நான் உத்வேகம் பெற்றிருந்தாலும் என் வாழ்நாளில் நெகிழி ஒழிவதைப் பார்க்கும் வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கே வந்து சேர்ந்திருந்தேன்.
இந்தக் கால கட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழியாகத் தொடர்ந்து உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் நெகிழியைக் கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் வேலை செய்யும் பலரோடு ம் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் மிகத் தீவிரமாய் தொடர்ந்து பல தளங்களில் அர்ப்பணிப்போடு இயங்கிக் கொண்டிருந்தாலும் எனக்குள் இருந்த அதே அவநம்பிக்கையை அவர்கள் ஒவ்வொருவரிடமும் உணர முடிந்தது. உலகின் ஒவ்வொரு மனிதனும் கையில் ஒரு துணிப்பையைத் தூக்கிவிட்டால் நெகிழி ஒழிந்துவிடும் என்ற அசட்டுத்தனமான புரிதலிலிருந்து விடுபட்டு, இது கச்சா எண்ணெய் ஜாம்பவான்கள் உட்பட உலகின் பொருளாதாரத்தையே சுற்றிச் சுழலச் செய்யும் பெரு நிறுவனங்களையும் அவற்றுக்கு ஊதுகுழலான அரசாங்கங்களையும் எதிர்த்து நடைபெறும் ஒரு தீவிரப் போராட்டம் என்பதையும் ஒரு விரல் புரட்சி போல இங்கு எதையும் சாதித்துவிட முடியாது என்பதையும் விரைவில் தெரிந்துகொண்டேன். இந்த உலகப் பொருளாதார அரசியலுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளோ ஏன் மாநில, தேசிய அரசுகளோ கூடப் பெரிதாய் எதையும் சாதித்துவிட முடியாது என்றும் உணர்ந்தேன். (ஆனால் அவை செய்யத்தக்க பல விஷயங்களையும் செய்ய முயற்சியெடுக்கவில்லை என்பது வேறு விஷயம்)
இந்தப் பின்னணியில் தான் உலக வரலாற்றில் முதல் முறையாக நெகிழி மாசுபாட்டைத் தடுக்க ஐநாவின் கீழ் சர்வதேச அளவில் உலக நாடுகள் பங்குபெற்ற மாநாடு கடந்தமாதம் (பிப்ரவரி 28 முதல்) நைரோபியில் நடைபெற்றது. அந்த மாநாட்டை கவனிக்கத் தொடங்கினேன். இதற்காகப் பல மாதங்களுக்கும் முன்பே உலகெங்குமுள்ள சூழல் செயல்பாட்டாளர்கள் முன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு வகையான கவன ஈர்ப்பு யுக்திகளைக் கைக்கொண்டு தத்தமது நாடுகளின் அரசுகள் நெகிழி ஒழிப்புக்கான முழு ஒத்துழைப்பைக் கொடுக்கச் செய்வதைத் தமது இலக்காகக் கொண்டு செயல்பட்டனர். இந்த அமர்வின் முடிவில் இரண்டு இலக்குகளை எட்டுவது அனைவருடைய நோக்கமாகவும் இருந்தது. ஒன்று நெகிழிப் பிரச்சனையை அதன் முழு வாழ்க்கை சுழற்சியையும் (entire life cycle of plastic) கருத்தில் கொண்டு திட்டமிடுவது. இரண்டாவது நெகிழி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ‘சட்டப்பூர்வமாக அரசுகளைக் கட்டுப்படுத்தும் வலுவுள்ள ஒப்பந்தத்தை (legally binding treaty) உருவாக்குவது.
Full Resolution Plasticபொதுவாகவே நெகிழிப் பிரச்சினையை வெறும் மட்காத கழிவாக மட்டுமே கையாளும் அரசுகள் கழிவு நீக்கப் பிரச்சினைக்கானத் தொழில்நுட்பத் தீர்வுகளை நோக்கிக் கவனம் செலுத்தியபடியே நெகிழியின் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் நிகழும் தீவிரச் சுற்றுச் சூழல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ள தவறிவிடுகின்றன. மேலும் வளர்ந்த நாடுகள் தமது நெகிழிக் குப்பைகளைச் சேகரித்து கப்பல்களில் ஏற்றி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பியபடியே, அந்தப் பின்தங்கிய நாடுகளின் தவறான கழிவு மேலாண்மையால் தான் நெகிழி கடலுக்குச் செல்கிறது என்று காலங்காலமாகக் குற்றம் சாட்டியும் வருகின்றன.அமெரிக்கா 2018 ல் மட்டும் சுமார் 8.3 லட்சம் மெட்ரிக் டன் நெகிழிக்குப்பையை ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .இன்னொருபுறம் தாமாகவே முன்வந்து நெகிழிக் கட்டுப்பாட்டை அமல்படுத்த நாடுகளுக்குக் கோரிக்கை விடுப்பது எவ்விதத்திலும் பயனற்றது என்பதையும் சட்டப்பூர்வமாக நிர்பந்திக்கத்தக்க ஒப்பந்தம் தான் வலிமையான நடவடிக்கைகளுக்கு உதவும் எனபதும் சூழல் செயல்பாட்டாளர்களால் உணரப்பட்டிருந்தது.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏறக்குறைய பல தசாப்தங்களாய் நெகிழிக்கு எதிராகப் போராடி வரும் ஏராளமான சூழல் செயல்பாட்டாளர்கள் நைரோபியில் குழுமி பிப்ரவரியில் தொடங்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு நிகழ்வுகளை உற்றுக் கவனித்து வந்தனர். முதல் முறையாக ஐநாவின் கூட்டத்தில் பெரிய அதிகாரிகள் முதல் குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள் வரை கலந்துகொண்டது இதன் பின்னிருக்கும் குடிமைச் சமூகத்தின் பங்களிப்பை உணர்த்தும். ஏறத்தாழ 700 குடிமக்கள் இயக்கங்கள் இதன் பின்னணியில் செயல்பட்டிருந்தன.
இறுதியாக கூட்டத்தின் ஐந்தாவது அமர்வில் (UNEA 5.2) மார்ச் 2 ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அறிவிப்பு வெளியானது. “மூலப்பொருள் முதல் கழிவு நீக்கம் வரையிலான நெகிழியின் முழு வாழ்க்கை சுழற்சியிலும் அதைக் கட்டுப்படுத்த, சட்டப்பூர்வமான நிர்பந்தத்தை உருவாக்கும் வலுவான” ஒப்பந்தத்தை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுத்த அனைத்து நாடுகளும் உறுதியளித்திருப்பதாக ஐ.நா அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பு அரங்கினுள் வாசிக்கப்படும்போதே தம் வாழ்க்கையை இந்த நோக்கத்துக்காகவே முழுவதுமாய் அர்ப்பணித்திருந்த அரங்கினுள்ளிருந்த சூழல் செயல்பாட்டாளர்கள் இருக்கையிலிருந்து எழுந்து, உணர்ச்சிப் பெருக்குடன் கைகளைத் தட்டி விசிலடித்து ஆரவாரம் எழுப்பியபடி ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஐநா அறிவித்தபடி இது நிச்சயமாக பூவுலகுக்கும் மனிதகுலத்துக்குமான வெற்றிதான். ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரான ஆண்டர்சன் சொன்னபடியே 2015 பாரீஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு சூழல் பாதுகாப்பில் இப்படியான மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் நம்மைத் திக்குமுக்காடச் செய்த கொண்டாட்ட நிகழ்வு எதுவும் இல்லை தான்.
ஆனால் இது நெகிழி ஒழிப்பில் ஒரு மைல்கல் என்றாலும் இமாலயப் பிரச்சனையைத் தீர்ப்பதன் சிறு தொடக்கம் மட்டுமே. நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் தீர்மானத்தின் அடுத்தகட்டமாக ஐநாவின் ‘INC’ (intergovernmental negotiating committee) என்ற குழு விரிவான ஒப்பந்தத்தை 2024 ஆம்ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கும். அதன் பிறகே களச் செயல்பாடுகளுக்கான நடவடிக்கைகள் தொடங்கும். எனினும் பல ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே அசுர வேகத்துடனும் சிறப்பான குறிக்கோள்களுடனும் நெகிழியில்லா உலகம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டன. நெகிழியின் உற்பத்தியைக் குறைப்பது, மறு பயன்பாடு அல்லது மறுசுழற்சி செய்ய முடியாத (unsustainable) ஒற்றை பயன்பாட்டு நெகிழியைத் தடைசெய்வது, பயன்படுத்திய நெகிழியைத் திரும்பப்பெறும் கட்டமைப்பை வலுப்படுத்தி மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சியை அதிகரிப்பது போன்றவை இந்த ஒப்பந்தத்தின் தலையாய நோக்கமாக இருக்கும்.
இந்தியா, உள்நாட்டில் சில குறிப்பிட்ட நெகிழிப்பொருட்களுக்கானத் தடையை இந்த ஆண்டு ஜூன்மாதம் முதல் அறிவித்திருந்தாலும் நைரோபி தீர்மானத்தின் ‘சட்டப்பூர்வமான கட்டுப்படுத்தக்கூடிய’ அம்சத்தை ‘நாடுகள் தாமாக முன் வந்து’ என்ற வார்த்தைகளின் மூலம் நீர்த்துப்போகச் செய்ய முயற்சித்தது. மாறாக ஐரோப்பிய யூனியனும் பல ஆப்பிரிக்க நாடுகளையும் உள்ளடக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானத்தின் ‘சட்டப்பூர்வ’ தன்மையை உறுதியோடு காத்தன. எனினும் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு UNEA 4 ல் நெகிழியைக் கட்டுப்படுத்த முதல் முயற்சியெடுத்ததே இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அதற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
சூழலியலாளர்கள் பொதுவாக இந்தியாவில் ஏற்கனெவே இருக்கும் சட்டங்களைப் சரியாக நடைமுறைப்படுத்தினாலே பாதி சூழல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று சொல்லுவதுண்டு. இது நெகிழிப் பிரச்சினைக்கும் பொருந்தும். இந்தியா முதன் முதலில் நெகிழிக்கழிவுகளைக் கையாள்வதற்கான தனது சட்டத்தை 1999 ல் இயற்றியது. இந்தச் சட்டம் நெகிழிப்பைகளின் தடிமன் மற்றும் உணவுப்பொருள் பொட்டலமாக்கலில் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு அது நீர்த்துப் போகச் செய்யப்பட்டு 2011 இல் புதிய சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து உலகளவில் தீவிரமாகப் பேசப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (Extended Producers Responsibility) உள்ளடக்கிய 2016 ஆம் ஆண்டின் புதிய சட்டவரைவு பெரும் புரட்சிகரமானதாகப் பார்க்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மீண்டும் 2016 ஆண்டு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது. மீண்டும் சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் உற்பத்தியாளர் பொறுப்பை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்டங்களையும் திருத்தங்களையும் ஆழமாகப் பார்த்தால் இடதுகை செய்வதை வலதுகை தட்டிவிடுவது போலத் தோன்றும். தட்டிவிடும் இந்த ‘வலதுகரங்கள்’ யாருடையவை என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இறுதியில் சிரத்தையற்ற அரசின் சட்ட நடவடிக்கைகள் வலுவற்ற சாமானிய சிறுகுறு உற்பத்தியாளர்கள் நடைபாதை வணிகர்கள்மீது மட்டும் சரியாக வேலை செய்கின்றன. அதுமட்டுமின்றி எந்த துரும்புக்கும் பயனற்ற இத்தகைய கண்துடைப்பு நடவடிக்கைகள் பிரம்மாண்ட சுற்றுச் சூழலைக் காக்கும் நடவடிக்கைகள் போல ஊதிப் பெருக்கப்படுகின்றன .உள்ளூர் அளவில் மட்டுமல்ல. உலக அளவிலும் இந்த வலது- இடது கரங்களுக்குள்ளான முரண் விரிந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆச்சரியப்படத்தக்க வகையில் மிகப்பெரும் நெகிழி மற்றும் பெட்ரோல் கெமிக்கல் ஜாம்பவான்களான ExxonMobil Corp, Royal Dutch Shell Plc and Dow Inc போன்ற நிறுவனங்கள் வெளிப்படையாகச் சமீபத்தில் நெகிழிப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நைரோபி தீர்மானம் வெற்றியடைய தங்கள் ‘அருளையும் ஆசியையும்’ வழங்குவதாக அறிவித்தன. ஆனால் பின்புலத்தில் இவர்கள் செய்த வேலையை ‘ரியூட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் அழகாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. நைரோபி கூட்டத்தில் பங்கேற்ற பலரிடம் நேர்காணல் கண்ட ரியூட்டர்ஸ் இந்த பெரு நிறுவனங்கள் நெகிழிகுறித்த தீர்மானத்தில் எவ்விதத்திலும் ‘உற்பத்தியில் கட்டுப்பாடு’ என்ற விஷயம் இடம்பெற்று விடக்கூடாது என்பதை வலியுறுத்திச் செய்த பல்வேறு லாபிகள் தெரியவந்தன. உற்பத்தியில் கட்டுப்பாடு மட்டுமே நெகிழிப் பிரச்சனையிலிருந்து உலகை மீட்கும் என்பதும் அதே நேரத்தில் இந்த நடவடிக்கை பெரு நிறுவனங்களின் கொள்ளை இலாபத்தில் கைவைப்பதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெகிழிப் பொருட்களின் உற்பத்தியைக் குறைக்கப் போவதாகவும் மாற்றுகளை அறிமுகப்படுத்தப் போவதாகவும் இந்நிறுவனங்கள் அவ்வப்போது நாடகமாடினாலும் 2040 க்குள் இன்றைய நெகிழி உற்பத்தியை இரண்டு மடங்காக்கும் நோக்கத்தோடு விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.
உலகின் மிக வலுவான வேதியியல் நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘அமெரிக்கன் கெமிஸ்டிரி கவுன்சில்’ (ACC) நைரோபி பேச்சு வார்த்தைகளை உற்பத்தியில் கட்டுப்பாடு விதிப்பதிலிருந்து திசை திருப்ப ‘நுகர்பொருள் நிறுவனங்களின்’ (FMCG) ஒத்துழைப்பைப் பெற மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றோடு பரிமாறிக்கொண்ட மின்ன்ஞ்சல் தொடர்புகளையும் கண்டறிந்திருக்கிறது ரியூட்டர்ஸ். அமெரிக்கன் கெமிஸ்டிரி கவுன்சில் மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையைத் திசை திருப்ப “Business for Plastic Pollution Action” என்ற கூட்டணியை உருவாக்கி மாதாந்திரக் கூட்டங்கள் நடத்தி அரசுகளுக்கு தங்கள் பரிந்துரைகளை அனுப்பத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி ACC மற்றும் ‘பிளாஸ்டிக்யூரோப்’ அமைப்புகள் கடந்த ஆண்டிலிருந்தே தனிப்பட்ட முறையில் அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து நைரோபியில் வரவேண்டிய தீர்மானம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தங்கள் வணிக நோக்கிலான வரைவை வடிவமைத்துக் கொடுப்பதுவரை சென்றிருக்கிறார்கள் என்கிறது ரியூட்டர்ஸ்.
பல தசாப்தங்களாக அவர்கள் கட்டமைத்து வரும் பொய்களையும் ‘முட்டுச்சந்தில்’ நிறுத்தும் தீர்வுகளையும் மீண்டும் மீண்டும் தூசுதட்டி வெவ்வேறு கவர்ச்சியான வார்த்தைகளில் தங்கள் தரப்புவாதமாக அவர்கள் முன் நிறுத்துகின்றனர். உதாரணமாக நெகிழிக்கு மாற்றான பொருட்களாகச் சொல்லப்படும் மரப்பொருட்கள், கண்ணாடி, உலோகங்கள் போன்றவற்றை நெகிழியை விட சூழல் தாக்கம் அதிகமானவையாக சித்தரிப்பது, நெகிழிக் கழிவிலிருந்து ஆற்றல் அல்லது எரிபொருள் பெறுவது போன்றவற்றைத் தீர்வுகளாகப் பேசுவது போன்றவை. உச்சகட்டமாக நெகிழியைத் தடைசெய்வது ஏழை பின்தங்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்கும் (நெகிழியால் பொதியப்படாமல் போனால் உணவுப்பொருட்கள் வீணாகும் என்பது இவர்கள் தரப்புவாதம்) சுகாதாரத்தையும் அச்சுறுத்தும் என்று ‘ஆடுநனைந்ததாம் ஓநாய் அழுததாம்’ என்ற ரீதியில் அறிக்கை வாசித்திருக்கிறார்கள். எனினும் நைரோபியில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தடுமாறச் செய்த ‘வலதுகை’ எவருடையது என்று நமக்குக் கடைசிவரை தெரியவில்லை.
இறுதியாக கனடாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சொல்வது போல “மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”.
ஆம்! மக்கள் முட்டாள்கள் அல்ல.
அவர்கள் எல்லா அரசியலையும் வணிகத் தந்திரங்களையும் அறிவார்கள். ஏனெனில் அந்த அரசியலாலும் வணிகத் தந்திரத்தாலும் தினம்தினம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் அவர்கள். இத்தனை பெரிய பொருளாதார சக்திகளுக்கு அடிபணியாமல் இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவர முடிந்திருக்கிறது என்றால் அதற்குப் பின்னிருப்பது தன்னலமற்ற குடிமைச் சமூகத்தின் அர்ப்பணிப்பே. இந்த சாதனை ஒரு துரும்பே ஆயினும் கூட இதனினும் பல மடங்கு பிரம்மாண்டமான காலநிலை மாற்றம் போன்ற பேரழிவுகளையும் குடிமைச் சமூகத்தின் ஜனநாயகப் பூர்வமான ஒன்றுபட்ட செயல்களின் மூலம் நாம் சாதிக்க முடியும் என்ற சிறிய நம்பிக்கையை இந்த வெற்றி நமக்குத் தருகிறது.
இந்த நம்பிக்கையே நாம் இறுதி மூச்சுவரை இன்னும் வேகமாய் ஓடப் போதுமானதாக இருக்கும்.
– ஜீயோ டாமின்
மிக்க மகிழ்ச்சி,பூவுலகின் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது சிறந்த பணிகள் மேலும் தொடர வேண்டும் இது குறித்து தமிழக முதல்வர் சந்தித்து முதன்மை முன்னுதாரண மாநிலமாக இதை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும்
மேலும் திரு.வைகோ போன்றோர்களை இனைத்து கொண்டு கூட்டங்கள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி.
❣️