ஆஸ்திரேலியா பவளப்பாறைகள் அழிவு – ஐ.நா.வின் எச்சரிக்கை; தமிழ்நாட்டிலும் ஆபத்து

புலிகளும், யானைகளும் காட்டின் சூழல் குறியீடு என்று சொன்னால், பவளப்பாறைகள் கடல் வளத்தின் குறியீடு. பவளப்பாறைகள் வளமான கடலின், சூழியல் அடையாளம். அத்தகு சிறப்பு மிக்க பவளப்பாறைகள் அழிவைச் சந்திக்கிறது என்றும், பவளப்பாறைகள் பாதுகாப்புத் திட்டம் (The Reef 2050 Plan) இலக்கை நோக்கிப் பயணிக்கவில்லை என்றும் ஆஸ்திரேலியா அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ பாரம்பரிய அமைப்பு (world heritage committee). எல்லாப் பிரச்சனைகளிலும் ஒரு அரசியல் இருப்பது போன்று, ஐநாவின் எச்சரிக்கையிலும் அரசியல் இருப்பதாகக் கருதுகிறது ஆஸ்திரேலியா. அதாவது,  யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் ஆதிக்கத்தில் 21 நாடுகள் இருப்பதால் ஐநாவின் எச்சரிக்கையில் அரசியல் கலந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். மற்றொரு புறம் உலகம் முழுக்க 83 பாரம்பரிய இயற்கை வளமிக்க பகுதிகள் (world natural heritage sites) அழிவை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்கிறது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்றழைக்கப்படும் பவளப்பாறைத் திட்டுகள் உலக பாரம்பரிய இயற்கை வளமிக்க பகுதியாக 1981ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இப்போது ஐநாவின் யுனெஸ்கோ அறிக்கைப் படி, அழிந்து வரும் பாரம்பரிய இயற்கை வளமிக்க பகுதி என்று ஆபத்தான பட்டியலில் சேர்த்து விட்டால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். பவளப்பாறைத் திட்டுகளையும், தீவுக்கூட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து விட்டால், அதனைப் பார்வையிட வருகின்ற லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா சார்ந்த நடக்கின்ற வணிகம் மூலமாக கிடைக்கின்ற வருமானத்தை ஆஸ்திரேலியா இழக்க நேரிடும், அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா பவளப்பாறைகளின் அழிவிற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுவது அந்நாட்டின் கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையின் குறைபாடுகள்தான். இந்த இரண்டிற்கும் காரணம் தொழிற்சாலைகள். ஆஸ்திரேலியாவின் நிலக்கரி வர்த்தகம் மற்றும் எரிவாயு வர்த்தகம் காரணமாக மோசமான, அளவிற்கதிகமான கரியமில வாயு வெளியேற்றம் நடக்கிறது. அதனால், வருமானத்தை முதன்மையாகக் கருதி கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பிற்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் செய்கிறது ஆஸ்திரேலியா. 2021 ஜூலை 16 முதல் 31 வரை நடைபெறவுள்ள உலக பாரம்பரிய குழுவின் 44வது அமர்வில் ஆஸ்திரேலியா நாட்டின் பவளப்பாறைத் திட்டுகளை அழிவைச் சந்திக்கும் ஆபத்தான பட்டியலில் சேர்த்து விடக் கூடாது என்று குழுவிலுள்ள நாடுகளோடு பேசி வருகிறது ஆஸ்திரேலியா. அப்படியென்றால் கூட்டம் நிறைவடையும் போது, ஆஸ்திரேலியா அரசுக்கு எச்சரிக்கையும், பரிந்துரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படலாம், ஆனால், ஆபத்தான பட்டியலில் கிரேட் பேரியர் ரீஃப் பவளப்பாறைத் திட்டுகள் சேர்க்கப்படாது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம், உலகளவிலான நிலக்கரி மற்றும் எரிவாயு அரசியலும், வளர்ந்த நாடுகளின் ஆதிக்கமும்தான்.

ஆனால், மிகமிக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஆஸ்திரேலியப்  பவளப்பாறைத் திட்டுகள் அழிவைச் சந்திக்கின்றது என்ற எச்சரிக்கை ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் முடிந்து போகிற பிரச்சனை கிடையாது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதைத்தான் ஆஸ்திரேலியா பவளத்திட்டுகள் குறித்தான ஐநா யுனெஸ்கோவின் அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது. ஆஸ்திரேலியா அரசின் கீழ் செயல்பட்டு வரும் உள்நாட்டு அறிவியலாளர் அமைப்புகளே பவளப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். யுனெஸ்கோவின்  அறிக்கையை ஆதரித்து உலகறிந்த அறிவியலாளர்கள் ஐநாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆஸ்திரேலிய பேராசிரியர்களான ஓவ் ஹோக்-குல்பெர்க் (Ove Hoegh-Guldberg), டெர்ரி ஹியூஸ்(Terry Hughes), பன்னாட்டு பவளப்பாறை சங்கத் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரியா க்ரோட்டோலி (Andrea Grottoli), காலநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் பேராசிரியர் ஜோஹன் ராக்ஸ்ட்ரோம் (Johan Rockstrom) மற்றும் கடல்சார் ஆய்வாளரும் மிஷன் ப்ளூவின் தலைவருமான சில்வியா எர்ல் (Sylvia Earle) ஆகிய ஐவர் கையெழுத்திட்ட கடிதத்தில் பவளத்திட்டுகளின் அழிவைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது பவளத்திட்டுகள் அழிந்து வருவது உண்மைதான், அதனைக் காக்க வேண்டியது அவசியமும், அவசரமும் கூட என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் பவளத்திட்டுகள் இதற்கு முன்பு, 1998, 2002, 2016, 2017, 2020 அதிகளவு வெளிர்தலை Coral Bleaching) சந்தித்துள்ளது. இயற்கையின் அமைப்பில் பவளப்பாறைகள் வெளிர்தல் அல்லது அழிவைச் சந்தித்து மீள் உருவாக்கம் அடைதல் என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், வெளிர்தலின் வேகமும், கால அளவும் பெரும் ஆபத்திற்கான அறிகுறிகளாக மாறிவிடக் கூடாது. ஆஸ்திரேலியாவில் அதுதான் நடக்கிறது. சுமார் 2300 கிமீ சதுரப் பரப்பு கொண்ட பவளத்திட்டுகளின் அளவும், அடர்த்தியும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் கோடை காலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பவளப்பாறைகள் வெளிர்தலை தமிழ்நாடு வனத்துறையினர் அடையாளம் காண்பார்கள், ஆனால், அந்தப் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து மீள் உருவாக்கம் அடையும் என்று கடற்ச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சிலநேரங்களில் வெளிர்தல் அதிகமாகிவிடும். பாதிப்பு அதிகமாக இருக்கும் போது வெளிர்தலால் பாதிக்கப்பட்ட பவளப்பாறைகள் அழிந்து விடும். அது போன்ற நிலைதான் உலகமே வியக்கும் பவள வளங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாத் தீவுகளிலும் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், ஆபத்து வருவதை ஆஸ்திரேலியா நாட்டு அரசிற்கு சுட்டிக் காட்டியுள்ளது ஐநா அமைப்பு.

கடல்வாழ் உயிரினங்களின் ஆதாரமாகத் திகழ்பவை பவளப்பாறைகள்தான். மீன்வளம் பெருகக் காரணமாகவும் இவை உள்ளன. பவளப் பாறைகளில் பலவிதமான மீன்கள், மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் வளர்கின்றன. பவளப் பாறைகளை சார்ந்து பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முட்தோல் பிராணிகளும் அதிகளவில் வாழ்கின்றன. கடலின் மொத்த பரப்பளவில் 0.2 விழுக்காடு பவளப்பாறைகள் மட்டுமே இருந்தாலும் கூட, அவை 25 விழுக்காடு அளவிற்கு கடல் உயிரினங்களை காக்கின்றன.

ஆழம்குறைந்த கடலின் அடிப்பாகத்தில் இருந்து தொடங்கி மேல் மட்டம் வரை பவளப் பாறைகள் காணப்படுகின்றன. கடலின் மேல் மட்டத்தில் உள்ள பாறைகளில் மட்டுமே பவள உயிரிகள் காணப்படுகின்றன. அதன் கீழே உள்ள பாறைகள் இறந்த பவள உயிரிகளின் கூட்டுப் பகுதிகளாகும் .

வெப்பமண்டல கடல்கள், பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கடலில் 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ள 40 முதல் 50 மீட்டர் ஆழப் பகுதிகளில் செழித்து வளர்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி பரவக்கூடிய தெளிவான கடல் நீர் மற்றும் அதில் உப்பின் அளவு லிட்டருக்கு 35 கிராமிற்கு குறைவாகவும் இருத்தல் அவசியம்.

பவளங்கள் மிகவும் குறுகிய தட்பவெப்ப வீச்சுக்குள்ளேயே வாழக்கூடியவை. ஒரு டிகிரி செல்ஸியஸ் அதிகரித்தாலும் இவற்றின் வாழ்வு அழிவை நெருங்கிவிடும். தண்ணீரின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்ததால் கூட மிகவும் மோசமான விளைவாக பவளங்கள் தங்கள் நிறங்களை இழக்கின்றன. அல்கே எனக்கூறப்படும் நுண்ணுயிரிகள் இந்த பவளங்களில் வாழ்வதால்தான் பவளங்களுக்கு செந்நிறம் வருகிறது. அதிக வெப்பமுள்ள தண்ணீர் பவளங்களிலிருந்து அல்கேவை அழிக்கிறது. இந்த அல்கே இதில் வாழவில்லை எனில் பவளங்கள் அழிந்து பவளப்பாறை அமைப்பு நொறுங்கிவிடும்.

இந்தியாவில் பவளப்பாறைகள், தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா, அந்தமான் நிகோபார், கட்ச் வளைகுடா, லட்சத்தீவு போன்ற கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே தொடர்ச்சியற்றுக் காணப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வகையான பவளப்பாறைகளைக் காணலாம் .

முத்துக்குளித்தல் நடைபெற்ற மன்னார் வளைகுடாவில் பாம்பன் முதல் மணப்பாடு வரை 160 கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதிகளில் மட்டும் அறுநூறு முத்துச்சிப்பி படுகைகள் கண்டறியப்பட்டிருந்தன. பவளத்திட்டுகளும், கடற்புல் திட்டுகளும் அதிகம்.

தமிழ்நாடு அரசு வனம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண் 962, (நாள் 10 செப்டம்பர் 1986) மூலம் இந்திய வன உயிர் பாதுகாப்புச்சட்டத்தின் பிரிவு 35(1)ன் படி, மன்னார் வளைகுடா (Gulf of Mannar – GoM), பாதுகாப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  21 தீவுகளும், தீவுகளைச் சுற்றி அமைந்துள்ள கடலின் மழைக்காடுகள் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளும் பல்லுயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் 21 தீவுகளையும், தீவுகளைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளையும் உள்ளடக்கிய 560 சதுர கிலோ மீட்டர் பரப்பை இயற்கை வளம் பேணுதலுக்கான பன்னாட்டு ஐக்கிய கூட்டுறவு (IUCN) அமைப்பின் பரிந்துரையின்படி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமாக (Gulf Of Mannar Biosphere Reserve – GoMBR), 1989ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கடல்வாழ் உயிரினங்கள் கணக்கெடுப்பில், மன்னார் வளைகுடாப் பகுதியில், 14 கடினப் பவளப்பாறை இனங்கள் (hard corals), 17 மிருதுவான பவளப்பாறை இனங்கள் (soft corals) அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 3 மீட்டர் முதல் 25 மீட்டர் ஆழத்தில், 90 முதல் 730 சதுர மீட்டர் பரப்பில், 77 பவளப்பாறை திட்டுகள் (patch reef) புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. வடக்கு பகுதியில் 15.1 சதுர கிலோ மீட்டர், தெற்கு பகுதியில் 5.4 சதுர கிலோ மீட்டர் பரப்பு என்று மொத்தம் 20.60 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இத்திட்டுகளில் 10 விழுக்காடு முதல் 52 விழுக்காடு வரை பவளப்பாறைகள் காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இத்தனை வளமிக்க பல்லுயிர்ச் சூழல் நிறைந்த மன்னார் வளைகுடா பகுதியின் பவளப்பாறைகளும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த காலங்களில் வீடு கட்டவும், சிமெண்ட் தயாரிக்கவும் வெட்டி எடுக்கப்பட்டது தடை செய்யப்பட்டு விட்டது. சில இடங்களில் மீன் தொட்டிகளிலும், ஆன்மீக வழிபாட்டிற்காகவும் பவளப்பாறைகள் பயன்படுத்தி வருகின்றனர். வளமான மன்னார் வளைகுடா பகுதியில் அதிகளவு அனல் மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடலுக்குள், கடற்கரையில் எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் மேலாண்மையின்றி தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்று அடுத்தடுத்து ஆபத்துகளை சந்திக்கும் மன்னார் வளைகுடாவில் செயற்கைப் பவளப்பாறைகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. காயம்பட்ட புண்ணுக்கு ஆறுதல்தான் செயற்கைப் பவளப்பாறைகள். எரிகிற தீயை அணைக்க வேண்டுமென்றால் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதை நாம் செய்யவில்லை. மன்னார் வளைகுடா தீவுக்கூட்டங்கள்தான் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான சுனாமி, புயல் பாதிப்புகளிலிருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மக்களைக் காத்தது/ காக்கிறது. நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் மீன் பிடித்தொழில் சிறக்க பவளத்திட்டுகள்தான் ஆதாரமாக விளங்குகின்றன. மனிதர்களால் மரங்களை நட முடியும், காடுகள் இயற்கையாகத்தான் உருவாகும். இயற்கையில் உருவான கடலடி மழைக்காடுகள்தான் பவளத்திட்டுகள். பவளத்திட்டுகளைப் பாதுகாப்பதில்தான் நமது உயிர்மூச்சும் அடங்கியுள்ளது.

– கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

படங்கள் : மன்னார் வளைகுடா பகுதியில் கண்டறியப்பட்ட அகந்தாஸ்ட்ரியா (Acanthastrea), டெனாக்டிஸ் இச்சினேட்டா (ctenactis echinata), கேலக்ஸியா கிளாவஸ் (Galaxea clavus), டுபஸ்ட்ரியா கோக்கினியா (Tubastraea coccinea) என்ற பவளப்பாறை இனங்கள்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments