பசுமைத் தேர்தல் பரப்புரை 2026; நெகிழியைத் தவிர்க்க அரசியல் கட்சிகளுக்குக் கோரிக்கை.

பசுமைத் தேர்தல் பரப்புரை 2026

ரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ணையத்திற்கும் பூவுலகின் நண்பர்கள்  கோரிக்கை.

தமிழ் நாட்டில் தேர்தல்காலம் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். 5,67,07,380 வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர்களைத் தேர்தல் ஆனையம் அடையாளம் கண்டுள்ளது. தேர்தலில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. இன்னும் சில நாட்களில் முழு வீச்சில் தமிழ் நாட்டில் பிரச்சாரங்கள் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கட்சிகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகள், வீதி நடைகள், மக்கள் சந்திப்புகளில் எண்ணற்ற அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பொது இடங்களில் கூடுவார்கள்.

கெடுவாய்ப்பாகத் தமிழ் நாட்டில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டு நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என அத்தனை கூடுதல்களுமே டன் கணக்கிலான குப்பைகளை உருவாக்குகின்றன. அவை பொறுப்பற்ற முறையில் விடப்படுவதால் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. போகிப் பண்டிகைக்குப் பிறகான காலையில் சாலைகளில் கொட்டிக் கிடைக்கும் குப்பைகளும், காணும் பொங்கலின்போது கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளுமே இதற்குச் சாட்சி.

இந்நிகழ்வுகளைப் போன்றே தேர்தல் பிரச்சாரங்களும் அதிகளவிலான குப்பைகளை உருவாக்குகின்றன. இவை சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு தூய்மைப்பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை உண்டாக்குகிறது. குறிப்பாகச் சுவரொட்டிகள், விளம்பரத் தட்டிகள், தோரணங்கள், பதாகைகள், கட்சிக் கொடிகள், தண்ணீர் புட்டிகள், துண்டுகள், தொப்பிகள்,  துண்டுப் பிரசுரங்கள், கட்சிச் சின்னங்கள் ஆகியவை சூழலில் பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழி மற்றும் ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. சூழலுக்குகந்த வகையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கூடப் பரப்புரை முடிந்தவுடன் மேற்கூறிய பொருட்கள் அப்படியே கைவிடப்படுகின்றன. இவை கால்வாய்கள், ஆறுகள், நீரோடைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கின்றன. பாலி வினைல் குளோரைடால் (Poly Vinyl Chloride PVC) தயாரிக்கப்படும் பொருட்கள் எரிக்கப்படும்போது நச்சு வாயுக்களை உருவாக்குகின்றன. குப்பைகளை உட்கொள்ளும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. நிலமும் நீரும் மாசாகின்றன.

பெரிதும் கண்டுகொள்ளப்படாத இப்பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டியது அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் முதன்மைக் கடமையாகும். தேர்தல் ஆணையங்கள் இவற்றை 100% உறுதிப்படுத்த வேண்டும். 1999, 2003, 2004, 2008 மற்றும் 2018 எனப் பல்வேறு காலகட்டங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியையும், கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பொருட்களை மட்டுமே தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்த வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் கோரிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையமும்தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

1. பதாகைகள், வாசல் தோரணங்கள், போஸ்டர்கள், தட்டிகள், மற்றும் பிற பிரச்சார உபகரணங்கள் தயாரிக்க PVC, ஃப்ளெக்ஸ், நைலான், கொரியன் துணி, பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பொருட்கள் முழுவதுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். மாற்றாக, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்த 100% பருத்தித் துணி அல்லது பருத்தி-காகித கலவையில் தயாரிக்கப்பட்ட பதாகைகளும், மறுசுழற்சி செய்யக்கூடிய போலி எத்திலீன் தாள்களும் பயன்படுத்தப்படலாம். அலங்காரத்திற்கு பயன்படுத்தும் கொடி, தோரணங்கள் முழுவதுமாகப் பிளாஸ்டிக் இல்லாததாக இருக்க வேண்டும்.

2. தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து அலுவலக தேவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

3. பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், வீதி நடைகள், பேரணிகள், மக்கள் சந்திப்புகள் என எல்லாவற்றிலும் — தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் (disposable) பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதை உறுதிப்படுத்த வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பும் கடமையுமாகும்.

4. ஒலி மாசுவைக் குறைக்க சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரி இதைக் கண்காணிக்க வேண்டும்.

5. வாக்கெடுப்பு முடிந்தவுடன் அனைத்து பதாகைகள், வாசல் தோரணங்கள் மற்றும் பிரச்சார உபகரணங்களைக் கட்சிகளே அகற்றி, வகைப்படுத்தி, உரிய மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைத்து அறிவியல்பூர்வமாக மறுசுழற்சி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

6. அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிமனைகளில் — பிளாஸ்டிக் அலங்காரங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

7. தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணவு வழங்கும்போது  பிளாஸ்டிக் கொள்கலன்கள், தட்டுகள் தவிர்த்து, இரும்பு தட்டுகள் மற்றும் கண்ணாடிக் கோப்பைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

8. பிரச்சார வாகனங்களை அலங்கரிக்க PVC, பிளாஸ்டிக், தெர்மோகோல் முழுவதுமாகத் தவிர்த்து — பருத்தி துணி, காகிதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

9. ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

10. மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

11. காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடை ஏற்படுத்திக் குப்பைகளை அதிகளவில் உருவாக்கும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments