வேண்டும் விசாலமான பார்வை!

 

 

பூனை, நாய், யானை, கரடி, மயில், குயில், பென்குயின், பட்டாம்பூச்சி இப்படி மென்மையான, கொழு கொழு வென, சாதுவான கண்ணைக் கவரும் வண்ணங்கள் நிறைந்த உயிரினங்களைப் பெரும்பாலான மனிதர்களுக்கு பிடிக்கும். அதேநேரத்தில் பாம்பு, பல்லி, தவளை, வௌவால், சிலந்தி போன்ற உயிரினங்களைப் பார்க்கையில் பெரும்பாலான மனிதர்களுக்கு அருவருப்பு அல்லது ஒரு பயம் ஏற்படும்‌. மனிதர்களின் அழகியல் சார்ந்த (அதாவது உருவம், பன்பு, வண்ணம்)  பார்வை இதற்கு மிக முக்கியக் காரணம்.

 

அழகியல் பார்வை தாண்டிய உணர்ச்சிகள் ‌சார்ந்து பார்க்கும் பார்வை என ஒன்று இருக்கிறது.  கர்ப்பிணியான யானை ஒன்று விபத்தால் இறந்து விட்டால் அதன் மீது பெரும் வருத்தமும் அக்கறையும் ஏற்படும். இது எப்படி நமது இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடும்போது தேசப்பற்று அதிகமாகிறதோ அதுபோல். ஆனால் அதே ஒரு ஆண் யானை விபத்தில் இறந்து போயிருந்தால் அதே வருத்தமும் அக்கறையும் இருக்குமா என்பது சந்தேகமே.

எப்படி நமக்குத் தெரிந்த நியாய தர்மங்களை வைத்துக்கொண்டு டிஸ்கவரி தொலைக் காட்சியில் மான்குட்டியை துரத்திக் கொண்டிருக்கும் புலி தோற்றுப் போனால் பெரும் சந்தோஷம் அடைவோமோ அப்படி. இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் உலகில் உள்ள உயிரினங்களை தம் விருப்பு வெறுப்புகளுடன் பார்க்கிறார்கள்.

இவ்விரண்டுப் பார்வைகளைவிட மனித மேலாதிக்க பார்வை (Anthropocentrism) மிக முட்டாள்தனமான சூழலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியப் பார்வை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது என்றும், பின்பு மனிதர்கள் முடிவு செய்யும் உயிரினங்கள் மட்டும் தான் இந்த உலகில் வாழ வேண்டும் என்று எண்ணுவது. பல நேரங்களில் மதங்களையும் இதற்குத் துணைக்கு அழைத்துக்கொள்வார்கள் இவர்கள். இவர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கப்பட்டு எந்த உயிரினங்களும் இல்லாத தோப்பு மிக அழகாகத் தெரியும். அதேநேரத்தில் பல பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கும் ஒரு புதர்ச் செடி தேவையற்றதாக தோன்றும். அனைத்தையும் மனிதனை மையப்படுத்தியேப் பார்ப்பது.

மூட நம்பிக்கைகளால் சில உயிரினங்களை மட்டும் கடவுளுக்கு நிகராக வைத்துக்கொண்டு, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக இருக்கும் மலைகளில் கோயில்களைக் கட்டி அங்கு உள்ள உயிரினங்களின் வாழ்வியலில் இடையூறு செய்வதும் இன்னொருவகை. இவை எல்லாவற்றிற்கும் சூழலைப் பற்றிய புரிதல் சரியாக இல்லாததே காரணம்.

பெருவாரியான மனிதர்களால் வெறுக்கப்படும் வெளவால்களின் மலத்திலிருந்து தான் பிட்சர் எனும் செடி தனக்கான 34 சதவிகித ஊட்டச்சத்தைப் பெருகிறது. தவளைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தின் சிறந்த குறிகாட்டிகளாக இருக்கின்றன. செரிமானத்துக்கு ஏற்றவாறு பற்கள் இல்லாத கிழட்டு புலி அல்லது தாய்ப் புலி தனது குட்டிகளுக்காக மான் குட்டிகளை வேட்டையாடும். பல்லிகள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளைச் சாப்பிட்டு அதன் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க உங்களுக்கு உதவுகிறது. பாம்புகள் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பையும் சூழலையும் அமைக்க உதவுகின்றன. அவை எலிகளை வேட்டையாடி அதன் எண்ணிக்கையை கட்டுக்கோப்புக்குள் வைக்கின்றன.

இந்தியாவில், கிட்டத்தட்ட 20% பாம்புகள் மட்டும் தான் விஷம் கொண்டவை, மீதமுள்ள 80% விஷமற்றவை. ஆனால் நாம் பாம்பைக் கண்டாலே, “அடி, பாம்பு விஷம் கொண்டது.” “கொல்லாமல் விட்டால், அது நம்மைப் பழி வாங்கும்” என்று தான் காலம் காலமாக சொல்லி வருகிறோம். குறைந்தபட்சம் நச்சுப் பாம்புகளையும் நச்சற்றப் பாம்புகளையும் பிரித்தறியும் விழிப்புணர்வும் பெறவில்லை. மிருகங்கள் மனிதர்களைப்போல் பழிவாங்குவது இல்லை. பல நேரங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாக்குகின்றன.

நாம் வாழும் இந்த பூமியின் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் சூழலின் அமைப்பில் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள், மரங்கள் செடிகொடிகள் என எல்லாவற்றிற்கும் ஒரு புதிரான இணைப்பு இங்கு இருக்கிறது. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களைச் சார்ந்து தான் வாழ்கின்றன. ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை அதிகமானாலோ குறைந்தாலோ அது மற்ற உயிரினத்தின் எண்ணிக்கையைப் பாதிக்கும். தேனீக்கள், யானைகள், கோபர் ஆமை, ஹம்மிங் பறவைகள் போன்ற “ஆதார உயிரினங்கள்” (keystone species) இயற்கைச் சூழலுக்குத் தரும் பங்களிப்பு மிக அதிகம்.

சூழியலமைப்பு (eco system), உணவுச் சங்கிலி (food chain) போன்றவை பற்றி ஆழமாகத் தெரிந்துகொண்டால் நாம் இந்த இணைப்பை உணரலாம். இதுவே உயிரினங்களின் உயிரியல் சார்ந்த அறிவியல் பார்வைக்கு நம்மை எடுத்துச் செல்லும். மனிதர்களின் பார்வை எப்படியோ அப்படியாகவே “உலகில் உள்ள அனைத்து மிருகங்களும் மனிதனை ஏதோ ஒரு அச்சத்தோடு பார்க்கிறது” என்று சூழலியல் எழுத்தாளர்  ஜீயோ டாமின் அவர்களின் வரிகள் மனிதர்களை மௌனமாகவும் வருத்தமாகவும் குற்ற உணர்ச்சியுடன் ஒப்புக்கொள்ள வைக்கும்.

சூழலைப் பற்றிப் படிப்பது, இயற்கை நேயம் என்பதெல்லாம் பொழுதுபோக்கு என்கின்ற எண்ணம் மாறவேண்டும். டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி சானல்கள் வேடிக்கைக்கானது, குழந்தைகளுக்கானது போன்ற எண்ணங்கள் மாற வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றால்‌ சுயநலம் அற்று இருக்க வேண்டும் என்பதல்ல. மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, பூச்சி இவைகள் நலமாக இருந்தால்தான் நம்மால் நலமாக வாழ முடியும் என்பதை உணர்ந்து சுயநலத்தோடேனும் இயற்கையை நாம் காக்க வேண்டும். புறச்சூழல் அறிவு என்பது மனிதர்களின் செழுமையான வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும்.

இயற்கை மற்றும் உயிரின்ங்கள் பற்றி நுட்பமாகத் தெரிந்துகொள்ள இணையத்திலும் புத்தகங்களிலும் ஏராளமானத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. தியடோர் பாஸ்கரன், எழுத்தாளர் நக்கீரன்,  கோவை சதாசிவம், ச.முகமது அலி, மா.கிருஷ்ணன் போன்ற இயற்கையியல் எழுதாளர்களின் நூல்கள் காடுகள் காட்டுயிர்கள் பற்றி ஆழமாகத் தமிழில் அறிந்துகொள்ள முக்கியமானவை. சூழல் சார்ந்த கட்டுரைகள் ஆவணப்படங்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்து சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், காடுகளைக்கூட உருவாக்க வேண்டியதில்லை. விலங்குகளை வேட்டையாடுதல், காடுகளை ஆக்கிரமித்தல், காடுகள் அழிப்பு, மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தொந்தரவு கொடுத்தல் போன்ற செயல்களை தவிர்த்தால் அதுவே நாம் சூழலுக்குச் செய்யும் பெரும் பங்களிப்புதான்.

டோடோ பறவைகள் உட்பட நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் மனிதர்களால் எத்தனையோ உயிரினங்கள் அழிந்து விட்டன. இன்று‌ம்‌ வன விலங்குகளின் எண்ணிக்கை மனிதர்களால் மிகக் குறைந்து கொண்டே வருகிறது. விலங்கு இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இன்னும் 50 ஆண்டுகளில் இல்லாமல் போகலாம் என்கின்றனர் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு நாள் யானைகள் அழிந்துவிடும் அன்று உங்கள் குழந்தையிடம் இதுதான் யானை என்று ஒரு படத்தையோ, ஓவியத்தையோ காட்டிச் சொல்லிக் கொடுக்கும் நேரம் வரும் என்று சூழல் நோக்கிய உங்கள் பார்வையை உணர்ச்சிகளுக்குள் மட்டும் அடக்குவது சூழலுக்கு எந்த வகையிலும் பயன் தராது. அல்லது ஒரு யானை எவ்வளவு அழகாய் இருக்கிறது என்று அழகியல் சார்ந்த பார்வையில் உங்களை விட்டுச் செல்ல விரும்பவில்லை. யானை என்பது கடவுளின் அவதாரம் என்று மதம் சார்ந்த பார்வையில் சிந்தித்தும் பயனில்லை.

யானைகள் ஏன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியம்? யானை ஏன் ஆதார உயிரினம்?  யானைகளின் எண்ணிக்கை எதனால் குறைந்து வருகிறது? இது போன்ற சூழலைக் காக்கும் பொறுப்புணர்வோடு சேர்ந்த விசாலமான அறிவியல் பார்வை வேண்டும் என்பது கட்டாயம் இன்று. ஆம் தன்னையும், சூழலையும் காக்க மனிதர்களுக்கு வேண்டும் விசாலமான பார்வை.

– அருண் தட்ஷன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments