உடல்…உயிர்…உலகு…உண்மை

டம்பார் அழியின் உயிரார் அழிவர் என்கிறது திருமூலர் அருளிய திருமந்திரம். உடலுக்கும் உயிருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த பூத உடல் அழியத் தொடங்கினால் அதனோடு சேர்ந்து உயிரும் அழிவு பெரும். உடலைப் போற்றி பாதுகாத்தால் உயிரையும் காக்கலாம் என்று அறிந்து தான் திருமூலர் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும் கூறியுள்ளார். உடலுக்கும் உயிருக்குமான தொடர்பை போன்றதுதான் உடலுக்கும் உலகுக்கும் ஆனது. இந்த உலகு சிதைவுற தொடங்கினால் நம் உடலும் அதனோடு தொடர்புடைய உயிரும் சிதைவுறும். அது தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உடல்-உயிர்-உலகம்

இந்த உலகில் ஒவ்வொரு பொருளும் சிலந்தி வலைப் பின்னல் போன்று ஏதோவொரு வகையில் நெருங்கிய தொடர்பிலேயே உள்ளன. உதாரணமாக மனித வாழ்வின் இருத்தலுக்கு உணவும் நீரும் காற்றும் அவசியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட உணவு செடி கொடிகளில் இருந்தும் மரங்களில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. (விலங்கினங்களும் ஒரு வகையில் தாவரங்களை சார்ந்தே உயிர் வாழ்வதால் அவற்றை தனியாக இங்கு குறிப்பிடவில்லை. மாமிச பிரியர்கள் மன்னித்து அருள வேண்டும்.) அந்த செடி, கொடி, மரங்கள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்தும், காற்றில் இருந்தும் நீரில் இருந்தும் பெற்றுக் கொள்கின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, கீரை, தானியம் போன்றவற்றில் இருந்து நாம் நமக்கு தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கிறோம்.

நம்மால் பூமியில் இருந்து நேரடியாக பெற முடியாத சத்துக்களை நாம் செடி, கொடி, விலங்கு போன்றவற்றின் துணைகொண்டு பெற்றுக் கொள்கிறோம். எனவே அவை ஒரு வகையில் நம் உயிர் காக்கும் தோழர்கள் ஆகின்றன. அந்த செடி கொடி மரங்களும் பூமியில் இருந்து நேரடியாக சத்துக்களைப் பெறுவதில்லை. அவற்றிற்கு உதவி செய்ய நுண்ணுயிரிகள் பல நிலத்தில் மறைந்துள்ளன. அந்த நுண்ணுயிரிகள் தான் நிலத்தின் ஆழத்தில் உள்ள சத்துக்களை கூட சுமந்து வந்து வேர்களின் வழி செடிகளுக்கு கொடுக்கின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் உணவைக் கொண்டு தான் நாம் உயிர் வளர்க்கிறோம்.

சரி, அனைவருக்கும் உணவு தரும் அந்த நுண்ணுயிரிகளுக்கு உணவு? நம் கழிவுகள் (தாவர/விலங்கு/மனித கழிவுகள் அனைத்தும் அடங்கும்) தான். இயற்கையில் அனைத்தும் பிணைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை விட இவற்றை ஓர் அரிய சுழற்சி என்றே கூறலாம். இந்த சுழற்சியில் எங்கு தடை ஏற்பட்டாலும் அது இந்த பூவுலகிலும் அதன் ஓர் அங்கமான நமது உடலிலும் அதன் அங்கமான உயிரிலும் பெரும் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

உடல்-உயிர்-உழவு

உயிர்களைக் காக்கும் பொருட்டே இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக உழவு நடைபெற்று வருகிறது. அதனால் தான் வள்ளுவர் உழந்தும் உழவே தலை என்று கூறியுள்ளார். ஆனால், கடந்த அரை நூற்றாண்டு இடைவெளிக்குள் பாஞ்சாலியின் அட்சய பாத்திரங்களாய் அமுது படைத்த நமது நிலங்கள் ஆலகால விஷத்தை காக்கும் வாசுகியாக மாறிவிட்டன.

ஆம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலின் வளர்ச்சியால் பசுமை புரட்சி என்னும் பெயரில் நம் நிலத்தில் நஞ்சினை விதைக்கத் தொடங்கினோம் இன்று அந்த நஞ்சு வளர்ந்து பன்மடங்கு பெருகி நம் உடலில் ரத்தங்களாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஓர் ஆண்டிற்கு சுமார் 500 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதாக இந்திய ரசாயன மற்றும் உர அமைச்சகம் சென்ற ஆண்டு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு மாநிலங்களவையில் வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில் 2015-16 காலக்கட்டத்தில் 510 லட்சம் மெட்ரிக் டன் ஆக இருந்த உர பயன்பாடு 2020-21 காலக்கட்டத்தில் 590 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்த 5 ஆண்டுகளில் ரசாயன உரங்களின் பயன்பாடு சுமார் 16% கூடியுள்ளது. ரசாயன உரங்கள் மட்டுமல்ல ரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி ‘மருந்து’களின் பயன்பாடும் அதிகரித்த வண்ணமே உள்ளன. 2015-16ல் 56,720 மெட்ரிக் டன் ஆக இருந்த பூச்சிக்கொல்லி பயன்பாடு 2019-20ல் 61,702 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது. இது 8.78% வளர்ச்சி. இதுவே 1965-66 காலக்கட்டத்தில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 14,630 மெட்ரிக் டன் ஆக இருந்தது.

கடந்த அரை நூற்றாண்டில் பூச்சிக்கொல்லி களைக்கொல்லி ‘மருந்து’களின் பயன்பாடு எக்டேருக்கு சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரிப்பது உற்பத்தி வளர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை அதனோடு சேர்ந்த உடல் நலக் கோளாறுகளையும் சேர்த்தே சுட்டுகிறது.

“நாம் பூச்சியை கொல்ல, களையை கட்டுப்படுத்த, என்று பல பெயர்களில் பயன்படுத்தும் நஞ்சானது 1% தான் பூச்சிகளின் மீது படுகிறது பாக்கி அனைத்தும் காற்றிலும், நீரிலும், மண்ணிலும் சென்று கலந்து விடுகிறது” என்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ராம ஆஞ்சநேயளு தெரிவிக்கிறார். அந்த காற்றைத் தான் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். [நகரத்தில் உள்ளவர்களுக்கு மாசடைந்த காற்று (polluted air) என்றால் கிராமத்தில் நஞ்சடைந்த காற்று (pesticided air). அவ்வளவுதான்!] அந்த நீரை தான் பறவைகளும் விலங்குகளும் குடிக்கின்றன. அதே நீர் தான் குளத்திலும், ஏரியிலும், ஆற்றிலும் பின்னர் நிலத்தடியிலும் கலந்து நமக்கும் தாகம் தீர்க்கிறது. நஞ்சு கலந்த அந்த மண் தான் நெல்லாகவும், அரிசியாகவும், வைக்கோலாகவும், பின்னர் பால் ஆகவும், பின்னர் தயிர், வெண்ணெய், நெய் ஆகவும் பின்னர் ஊன் ஆகவும் பின்னர் ஊண் ஆகவும் மாறி நம் உடலில் வந்த கலக்கிறது.

ஒரு வகையில் நாம் அனைவருமே சிவனை ஒத்தவர்கள் தான். அவராவது நஞ்சினை கண்டத்தில் தாங்கி உள்ளார் நாம் அனைவரும் ஒரு படி மேலே சென்று உடல் முழுவதும் சுமந்து திரிகிறோம். தவளையை தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு அடியில் தீ வைத்து விட்டால் வெப்பநிலை மாறுவது கூட தெரியாமல் எப்படி அது கொஞ்சம் கொஞ்சமாக வெந்து சாகுமோ அதுபோல சிறிது சிறிதாக நம் உடலில் சேரும் நஞ்சு நம் உடலை சத்தமின்றி அழித்துக் கொண்டு இருக்கிறது. உடல் அழிந்த பின் உயிர் மட்டும் எங்கு செல்லும். ஆனால், நாம் இவற்றை எல்லாம் சிந்திக்க நேரமின்றி வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்று, வேகமாக ஓடிக் கொண்டு இருக்கும் உலகத்தோடு நாமும் (எதற்காக என்றே தெரியாமல்) ஓடிக் கொண்டிருக்கிறோம்.

உணவு-உடல்-ஊட்டம்

சிறிதளவு நஞ்சு தானே, அதனால் என்ன? இன்றைய நவீன மருத்துவம் எவ்வளவோ ‘வளர்ந்து’ விட்டது, கொடிய பாம்பு கடி நஞ்சினை கூட ஓரிரு நாட்களில் முழுமையாக குணப்படுத்த முடியும் சூழ்நிலையில் இந்த எள்முனையளவு நஞ்செல்லாம் எம்மாத்திரம்? ஒரு காலத்தில் (60களில்) மக்கள் பசியால் இறந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பசுமை புரட்சியின் வெற்றியால் தான் இன்று நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். மேலும் பல நாடுகளுக்கும் உணவு தானியங்களை ஏற்றுமதி (இறக்குமதியும்) செய்து கொண்டிருக்கிறோம்.

இயற்கை வேளாண்மைக்கு மாறினால் மீண்டும் பஞ்சம் பசி வறுமை எல்லாம் வந்து நம்மை பீடிக்கும் என்று அறிவியலின் பெயரால், வளர்ச்சியின் பெயரால், பொய்யுரைகளை சிலர் பரப்புகின்றனர். பொய்யையே தொழுது பழகிவிட்ட நாமும் அவர்களுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டுக்கொண்டு இருக்கிறோம், அறிவியலின் பெயரால். ஆனால் என்றேனும் ஒரு நாள் உண்மை யாதென்று நம்மை நாமே கேட்டிருப்போமா? உணவென்பது வெறும் பசியைப் போக்க தானா? அப்படி என்றால் நவீன அறிவியல் வளர்ச்சியால் யாருக்கும் பசி எடுக்காமல் இருக்க ‘மருந்து’ தயாரித்து விடலாமே.

உணவே நமக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. ஊட்டமே நம்மை உழைக்க தூண்டுகிறது. உழைப்பின் மூலமே இந்த மனித குலம் இத்தனை மேன்மைகளை அடைந்துள்ளது. இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அனைத்து வளர்ச்சிகளும் உழைப்பின் பயனாக விளைந்தவையே. இத்தகைய உழைப்பிற்கு ஆதாரமான ஊட்டம் இன்று நம் உணவில் உள்ளதா? நம் உணவில் சாதரணமாக நிறைந்திருக்க வேண்டிய இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் பலவும் இன்று குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. இவை இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவில் இருந்து நம் உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள். இது போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும் போது தான் நம் உடல் வளம் குன்றி போகிறது. இதை நாம் ஊட்டச்சத்து குறைபாடு என்று பொதுவாக அழைக்கிறோம்.

இந்திய அரசின் ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (NFHS-5) இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 36% பேர் வயதிற்கு ஏற்ற உயரம் (stunted) இல்லாமலும், 19% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடை (wasted) இல்லாமலும், 32% குழந்தைகள் வயதிற்கேற்ற எடை (underweight) இல்லாமலும், 3% குழந்தைகள் அதிக உடல் எடையுடனும் (overweight) இருக்கிறார்கள் என்று கூறுகிறது. மேலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ரத்தசோகை (anaemia) 67% குழந்தைகளிடம் காணப்படுவதாகவும் கூறுகிறது. இது கடந்த NFHS-4ல் இருந்ததை விட (59%) அதிகம்.

ஏதோ குழந்தைகளுக்கு மட்டும் தான் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாக நினைத்து விட வேண்டாம். பதினைந்து முதல் நாற்பத்தி ஒன்பது வயது வரை உள்ள ஆண்களில் 25% பேருக்கும் பெண்களில் 57% பேருக்கும் ரத்தசோகை இருப்பதாகவும் அதே கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை கூறலாம். முதலாவது உணவு பன்மயம். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல்வேறு வகையான காய்கறிகள், கீரைகள், பழங்கள், பருப்பு வகைகள், பால், முட்டை, போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் விடுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம். இரண்டாவது மண் வளம். மண்ணில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருந்தால் தான் அதில் விளையும் உணவிலும் சத்துக்கள் நிறைந்து இருக்கும். அப்படி மண்ணில் உயிர்ச்சத்துக்கள் குறைவாக உள்ள பட்சத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்தியோ, நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவோ விளைச்சலை அதிகப்படுத்தினாலும் அதில் தேவையான சத்துக்களை பெற முடியாது.

இந்த இரண்டு காரணிகளில் முதலாவது எளிதாக தீர்க்கக் கூடியது தான். பல்வகை உணவுகளை மக்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் வகையில் அவர்களை பொருளாதார ரீதியில் வளப்படுத்துவது இதற்கு தீர்வாக அமையும். ஏனெனில் ஒப்பீட்டளவில் பொருளாதார ரீதியில் வளமாக இருப்பவர்கள், நகர வாசிகள், முற்பட்ட வகுப்பினர் போன்றோர் மற்ற வகுப்பினரை விட சற்று குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர் என்று அதே கணக்கெடுப்பின் மூலம் தெரிய வருகிறது.

ஆனால் இது முழுமையான தீர்வாக இருக்காது. இரண்டாவது காரணியான மண் வளத்தை மேம்படுத்தி பாதுகாப்பது தான் இன்றும் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறைக்கும் கூட ஏற்ற ஒரே தீர்வாக இருக்கும். ஏனெனில், கடந்த 70 ஆண்டுகளில் மண்ணில் அங்கக கரிமத்தின் (Soil Organic Carbon) அளவு 1% இருந்து 0.3% ஆக குறைந்து விட்டது என இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) கூறுகிறது.

இதற்கு அதீத ரசாயன பயன்பாடுகள், ஓரின சாகுபடி முறை (monoculture), காலநிலை மாற்றம் என்று பல காரணிகள் உண்டு. ரசாயன உரங்களின் பயன்பாடு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழிப்பதன் மூலம் இயற்கையான ஓர் சுழற்சியை தடுத்து விடுகிறது. இதனால் பயிருக்குத் தேவையான சத்துக்களை அது நேரடியாக பெற முடியாமல், பயிர் வளர்ச்சிக்கு மீண்டும் மீண்டும் ரசாயனங்களையே நம்பி, சூழலையும் நம் உணவையும் பாதித்தோடு அல்லாமல் உழவர்களையும் மீளா கடன் துயரில் தள்ளி விட்டது.

 

காலநிலை மாற்றமும், ஊட்டச்சத்து குறைபாடும்

 

அமெரிக்க அறிஞரான இராக்லி லோலட்சே அடிப்படையில் ஓர் கணிதத் துறை பேராசிரியர் தான். ஆனால், தாவரவியலில் தீராத ஆர்வம் உடையவர். அதன் காரணமாக பின்னாளில் தாவரங்கள் சார்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து பல ஆச்சரியமான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அவர்தான் முதன் முதலில் வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கரியமில வாயுவிற்கும் மனித உடலில் குறைந்து வரும் ஊட்டச்சத்துக்கும் உள்ள தொடர்பினைக் கண்டுபிடித்தார். அதாவது வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கரியமில வாயுவானது செடிகளால் அதிகப்படியாக நுகரப்படும் பொழுது அது செடிகளில் இருக்க வேண்டிய- அதன் மூலம் மனித உடலுக்கு கிடைக்க வேண்டிய- நுண்ணூட்டச் சத்துக்கள் குறைவதற்கு வழிவகுக்கிறது என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்வு செய்து கூறியுள்ளார். இந்த ஆய்வை மேற்கொள்ள அவருக்கு ஆர்வம் ஊட்டியது இன்னொரு கண்டுபிடிப்பு தான். ஆம், அது 1998ம் ஆண்டு. லோலட்சே அப்போது அரிசோனா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வில் இருந்தார். அப்போது ஆராய்ச்சியாளர்கள் zooplankton ல்  ஓர் விசித்திரமான மாற்றத்தை கண்டனர். Zooplankton என்பது கடலிலும் ஏரிகளிலும் மிதக்கும் ஓர் நுண்ணுயிரி. அவை நீரில் இருக்கும் பாசிகளை உட்கொண்டு உயிர் வாழ்பவை.

ஆராய்ச்சியாளர்கள் பாசிகளின் வளர்ச்சியை அதிகரிக்க அதன் மீது அதிகப்படியான வெளிச்சத்தை பாய்ச்சினர். பாசிகளும் அதிவேகமாக வளர்ந்தது. வளர்ந்த பாசிகளை Zooplankton க்கு உணவாக கொடுத்தனர். அவையும் அதிகமாக பாசிகளை உட்கொண்டனவே ஒழிய அவை பசியுடனேயே இருந்தன. காரணம் வேகமான வளர்ச்சியை அடைந்த பாசிகள் தேவையான சத்துக்களை கொண்டிருக்கவில்லை.

 

இந்த கண்டுபிடிப்பு தான் அவரை பெரியதொரு கேள்விக்கு விடை காண தூண்டியது. அது தான் அதிகமாகி விட்ட கரியமில வாயு உமிழ்வு ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கு எப்படி காரணமாகிறது என்கிற அவரது ஆய்வு. (பார்க்க: Rising atmospheric CO2 and human nutrition: toward globally imbalanced plant stoichiometry? By Irakli Loladze)

 

இப்பொழுது புரிந்திருக்கும், நான் முன்னரே கூறியது போல இந்த உலகில் அனைத்தும் சிலந்தி வலைப் போன்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று. காலநிலை மாற்றமும் சரி, ஊட்டச்சத்து குறைபாடும் சரி, உணவு உற்பத்தியும் சரி, வளர்ச்சித் திட்டங்களும் சரி அதனால் வளரும் முதலாளிகளின் வயிரும் சரி எல்லாம் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பில் உள்ளவை.  உணவுக்காக காட்டை அழித்து விளைநிலங்கள் ஆக்கி பல பறவைகள் விலங்குகளின் வாழ்விடங்களை அழித்து, சுதந்திரமாக சுற்றி திரிந்த காளைகளை ஏர் கலப்பையில் பூட்டி, பின்னர் மனித உழைப்பை குறைக்க (முதலாளித்துவ லாபத்திற்காக) இயந்திரங்களை உருவாக்கி, பின்னர் லாபத்தை பெருக்க விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைத்து, அந்த தொழில் வளர்ச்சிக்காக மீண்டும் காடுகளையும் மலைகளையும் இயற்கை வளங்களையும் சுரண்டி, நச்சு கழிவுகளை காற்றிலும் நீரிலும் கலந்து, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை அழிவு உற்பத்தி கூடங்களாக, தொற்றுநோய் பரப்பும் மையங்களாக மாற்றி, பின்னர் அந்த நோய்களை தடுக்கவும், குணப்படுத்தவும் மருந்துகளை கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமையும் பெற்று, அழிவையே தொழிலாக கொண்டு, அதன் மூலம் லாபத்திற்கு மேல் லாபமும் ஈட்டி, அந்த லாபத்தையும் 1 சதவீதத்தினர் தான் பகிர்ந்து கொள்வர் என்றால் அந்த வளர்ச்சியை தூக்கி நெருப்பில் எறியுங்கள்.

 

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரியும் ஊருக்கு ஒரு மருத்துவமனையும் இருப்பது மட்டும் வளர்ச்சி அல்ல அந்த மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும் அவசியமற்ற ஆரோக்கியமான உடல்நலமே உண்மையான வளர்ச்சி. அந்த வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் சுகாதாரமான சுற்றுச்சூழல் அவசியம். மாசில்லாத தொழிலும் நஞ்சில்லாத விவசாயமுமே அத்தகைய வளர்ச்சியைக் கொடுக்கும்.

 

([email protected])

  • அகிலன் பாலகுரு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments