சுத்தமாகும் காற்று: சாதித்த நகரங்கள்

உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல்களுள் தீவிரமானதாகவும் மனித உடலுக்கு அதிக தீங்க விளைவிக்கக்கூடிய ஒன்றாகவும் காற்று மாசுபாடு உள்ளது. குறிப்பாகக் குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய விளிம்புநிலை மக்கள் காற்று மாசுபாட்டினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் காற்று மாசுபாட்டிற்கும் உள்ள தொடர்பை எளிதில் விளக்குகிறது. இதய நோய், சுவாசக்கோளாறு மட்டுமின்றி குழந்தைகள் நலன், குறைப்பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது போன்றவற்றிலும் காற்று மாசுபாட்டின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

கிராமப்புற பகுதிகளை ஒப்பிடுகையில் அதிகளவிலான வாகனங்கள், தொழிற் கட்டமைப்புகள் மற்றும் இடநெருக்கடி காரணமாக நகரங்களில் காற்று மாசுபாடு மிகுதியாக உள்ளது. இதனை நகரங்களின் சமூக, பொருளாதார மற்றும் உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகளைக் கொண்டு உணர முடியும். இத்தகு தீவிரமான காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள உலகம் முழுவதும் பல்வேறு திட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் Breathe Cities மற்றும் C40 (உலகம் முழுவதுமுள்ள 97 நகரங்களின் மேயர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு) என வகைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்பற்றி Breathe Better என்ற அறிக்கை அண்மையில் வெளியானது. இவ்வறிக்கையின் மூலம் மேற்காணும் நகரங்களில் 2010 முதல் 2024 வரையிலான கால அளவில் காற்றின் தரத்தினை ஆய்வு செய்தபோது 19 நகரங்களில் நுண்துகள் மாசு (PM2.5) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு 20 விழுக்காடு முதல் 45 விழுக்காடு வரை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க மேற்கொள்ளப்பட்ட பொதுவான திட்டங்கள் மற்றும் செயல்முறைகளை அறிக்கை விவரித்துள்ளது. இது காற்று மாசுபாட்டிற்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஒரு படிப்பினையாகவும் உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.

முன்னேற்றத்தை விளக்கும் தரவுகள்

உலகம் முழுவதுமுள்ள C40 மற்றும் Breathe Cities கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நகரங்களின் 2010 முதல் 2024 வரை உள்ள காற்றின் தரத்தின் தரவுகளை ஆராய்கையில் பீஜிங் நகரத்தில் 48 விழுக்காடும், வார்சா நகரத்தில் 46 விழுக்காடும் PM2.5 எனப்படும் நுண்துகள் மாசின் அளவு குறைந்துள்ளது. அதேபோல, நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் மற்றும் ரோட்டர்டாம் நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடு மாசின் அளவு முறையே 44 விழுக்காடு மற்றும் 43 விழுக்காடு அளவிற்குக் குறைந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக 19 நகரங்களில் குறைந்தளவு 20 விழுக்காடு அளவிற்கு மாசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்த இந்நகரங்கள் மேற்கொண்ட பொதுவான வழிமுறைகளை ஆராய்கையில் கீழ்காணும் இரண்டு கூற்றுகள் மெய்யாகின்றன.

 

 

  • 15 ஆண்டு கால அளவிற்குள்ளேயே காற்று மாசினை கணிசமான அளவு குறைக்க முடியும்.

 

  • தெளிவானத் திட்டமிடலும், கூட்டு முயற்சியும் தொடர்ந்தால் மட்டுமே இத்தகு மாற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியும்.

நகரங்களுக்கிடையிலான பொதுக் கூறுகள்:

காற்று மாசுபாட்டை கணிசமான அளவில் கட்டுபடுத்திய 19 நகரங்களுக்கிடையே உள்ள பொதுவான கூறுகளாகக் கீழ்காண்பவற்றை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வலிமையான ஆதாரங்களும் பொறுப்புணர்வும்:

19 நகரங்களும் காற்று மாசுப்பாட்டைக் கண்காணிப்பதில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பங்கள், உணர் கருவிகளைப் பயன்படுத்தியதோடு, பெரும்பாலான நகரங்கள் இத்தகவல்களை பொதுமக்கள் அணுகும் வகையிலும் வெளிப்படையாக வைத்துள்ளன. தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் மாசின் மூலங்களைக் கண்டறிந்தும், அதனடிப்படையில் திட்டங்களை முன்னிலைப்படுத்தியும், மேம்படுத்தியும் கட்டமைப்புகளை வலுப்படுத்தியும் இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளன. தரவுகளைப் பொதுவெளியில் வெளியிடுவதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றதோடு அவர்களின் பொறுப்புணர்வையும் விளக்கச் செய்ததும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக, பீஜிங் நகரத்தில் 70-ற்கும் மேற்பட்ட மையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்தர உணர் கருவிகளையும், செயற்கைகோள்மூலம் தொலைவிலிருந்து உணரும் கட்டமைப்புகளையும் பயன்படுத்தியது மாசின் காரணிகளைக் கண்டறியவும், உள்ளூர் உமிழ்வுகள் மற்றும் வட்டார அளவிலான போக்குவரத்து உமிழ்வுகளை வகைப்பிரிக்கவும் அதற்கு ஏற்ற வகையில் செயல்படவும் வழிசெய்தது.

 

 

இத்தகு தரவுகளை லண்டன் நகரத்தில் தொடர்ச்சியாக ஆராய்ந்து பொதுவெளியில் பகிர்ந்தது வாகனங்களால் ஏற்படும் மாசினை குறைக்க உதவியது. இதேபோல் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினை பொதுவெளியில் வெளியிட்டதன் மூலம் சிறு துறைமுகங்கள், தொழிற்கட்டமைப்புகள் அருகே காற்று மாசுபாடு அதிகளவில் இருப்பதனையும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல்நலனில் இதனால் ஏற்படும் தாக்கத்தினையும் பொதுவெளியில் வெளியிட்டதும் மக்கள் காற்று மாசின் தீவிரத்தை அறிய உதவியது.

மிதிவண்டிகளும், நடைபாதைகளும்

பெரும்பாலான நகரங்கள் தனியார் போக்குவரத்தில் செய்த மாற்றங்களும் கணிசமான பலனைக் கொடுத்துள்ளது. குறிப்பாக நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதைகளின் கட்டமைப்புகளை விரிவுபடுத்தியது, பொதுஇடங்களில் வாகன நிறுத்துமிடங்களின் பரப்பளவை குறைத்தது போன்றவை நீண்ட கால அளவில் மக்களின் நடத்தை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி நகரங்களின் வாழ்வியல் தரத்தை மேம்படுத்தியது.

எடுத்துக்காட்டாக ஆம்ஸ்டர்டாம் மற்றும் ரோட்டர்டாம் நகரங்கள் மிதிவண்டி மற்றும் நடைபாதை கட்டமைப்புகள் விரிவுபடுத்துதல், சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை மறுகட்டமைப்பு செய்து பசுமையான வெளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்தி மோட்டார் வாகன பயன்பாட்டை மட்டுபடுத்துதல் போன்றவற்றில் அதிக முதலீடு செய்தன. இதேபோல ஹெய்டெல்பெர்க், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், வார்சா போன்ற நகரங்களும், மேலும் சீனாவின் பல நகரங்களும் இத்தகு நடைபாதை மற்றும் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவித்துள்ளன.

அமெரிக்க நகரங்களில் பெரும் பகுதியைக் கார் நிறுத்துமிடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் சான் பிரான்சிஸ்கோவில் தற்போது மூன்று விழுக்காடு நிலம் மட்டுமே கார் நிறுத்துமிடங்களாக உள்ளன.

மேம்படுத்தப்பட்ட பொதுபோக்குவரத்து:

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 19 நகரங்களில் பெரும்பாலானவை தங்களது பொதுப்  போக்குவரத்தை பெருமளவில் மாற்றியமைத்துள்ளன. டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சார பேருந்துகளை இயக்குதல், மெட்ரோ மற்றும் இரயில் இணைப்புகளை அதிகரித்தல் போன்றவை நீண்ட கால அளவில் தனியார் போக்குவரத்திலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மக்கள் மாற வழிவகுக்கின்றன.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சீன நகரங்களில் பெரும்பாலானவை இம்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஷென்சென் நகரின் பேருந்துகள் முழுவதும் மின்சாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஜெர்மெனியின் ஹெய்டெல்பெர்க்கின் பேருந்துகளில் 60 விழுக்காடும், போலந்தின் வார்சாவில் 40 விழுக்காடும், லண்டனின் 25 விழுக்காடும் மின்சார பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளதோடு, ஒரு சில நகரங்களின் டிராம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

 

மின்சார வாகனங்களை ஊக்குவித்தல்:

மேற்கண்ட நடவடிக்கைகள் நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நேரத்தில்  பெரும்பாலான நகரங்கள் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மானியங்கள் வழங்கியும் மூலம் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்துள்ளன.

எடுத்துக்காட்டாக, பாரிஸ் நகரில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும்(Charging Station) நிலையங்களும், பீஜிங் நகரில் 3000க்கும் மேற்பட்ட மின்னேற்றும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தகு நிலையங்களுக்கு மானியம் வழங்குதல் பெரும் கட்டமைப்புகளில் இத்தகு நிலையங்களைக் கட்டாயமாக்குதல் போன்ற முன்னெடுப்புகளையும் சான் பிரான்சிஸ்கோ, ஷென்சான் போன்ற நகரங்கள் ஏற்படுத்தியுள்ளன.

பழைய மற்றும் மாசுமிகு வாகனங்களைக் கட்டுப்படுத்துதல்:

பெரும்பாலான நகரங்கள் குறிப்பாக ஐரோப்பிய நகரங்கள் பழைய மற்றும் மாசுமிகு வாகனங்கள் நகரின் ஒரு சில பகுதிகளுக்குள் நுழைய விதிமுறைகளை வகுத்து அவற்றின் புழக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளன. மேலும், இத்தகு வாகனங்களைச் சரியாக மறுகட்டமைப்பு செய்யவும், சரியான வாகனங்களை வாங்கவும் நிதி உதவி வழங்குதல் போன்ற கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளன.

குறிப்பாக, பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரம் ஒட்டுமொத்த நகரத்தினையும் குறைந்த உமிழ்வு பகுதிகளாக அறிவித்து அதிக மாசு உமிழும் வாகனங்களின் பயன்பாட்டினை நகரம் முழுவதும் தடை செய்துள்ளது. பாரிஸ் நகரம் ‘பள்ளிக்கூட தெருக்கள்’ என்ற திட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகு வாகனங்களின் பயன்பாட்டை மட்டுபடுத்தியுள்ளது.

சமையல் மற்றும் வெப்பமூட்டலுக்கு மாற்று எரிபொருட்கள்

நிலக்கரி மற்றும் திட எரிபொருட்கள் போன்ற அதிக மாசினை உமிழும் எரிபொருட்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு சில நகரங்களில் அவற்றிற்கு மாற்றாக மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தும் வகையில் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றன. இது அதிக பாதிப்புள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ஆதாயங்களை வழங்கியுள்ளது.

இதில் பீஜிங் நகரம் 13 லட்சம் வீடுகளில் நிலக்கரிக்கு பதில் எரிவாயு அல்லது மின்சார பயன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பாரிஸ் நகரின் நகராட்சி சேவைகள் முழுவதுமாகப் புதுப்பிக்கதக்க ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. வார்சா நகரம் வீடுகளில் நிலக்கரி பயன்பாட்டைத் தடைசெய்துள்ளதோடு மாற்று எரிபொருட்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.

பல்நிலை ஒழுங்கமைவு: திட்டமிடுதல் முதல் அமைப்பு தொடர்பா மாற்றம் வரை:

காற்று மாசுபாட்டை குறைப்பதை சாத்தியப்படுத்திய அனைத்து 19 நகரங்கள் அமைந்துள்ள நாடுகள் மற்றும் வட்டார அளவிலான திட்டங்களும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளன. குறிப்பாக வாகனங்களின் உமிழ்வு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் ஐரோப்பிய நகரங்களிலும், வட அமெரிக்க, சீனாவின் தேசியளவிலான திட்டங்கள் அப்பகுதிகளிலுள்ள நகரங்களின் காற்று மாசுபாட்டை குறைப்பதில் பெருமளவு பங்காற்றியுள்ளன.

ஐரோப்பா மற்றும் சீனாவில் தொழிற்துறைகளில் நிலக்கரிக்கு மாற்றான எரிபொருட்களை ஊக்குவித்ததும் அப்பகுதிகளில் உள்ள காற்றின் தரத்தை மேம்படுத்துதலில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதன்மூலம் ஒரு நகரத்தின் காற்றின் தரம் எவ்வாறு உலகளாவிய திட்டங்களிலிருந்து வட்டார அளவிலான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்வரை பல்வேறு படிநிலைகளைச் சார்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களில் நான்கு நகரங்கள் Breathe Cities என்ற முன்னெடுப்புடன் இணைந்து செயல்பட்டுள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையின் முக்கியத்துவம்

இவ்வாறு பல்வேறு வழிமுறைகளின் மூலம் மேற்கண்ட 19 நகரங்களும் நுண்துகள் 2.5 மற்றும் நைட்ரஜன் – டை – ஆக்ஸைடை 20 முதல் 50 விழுக்காடு குறைந்துள்ளதை அறிய முடிகிறது. இத்தகு தொடர்ச்சியான செயல்பாடுகளின் தேவையினையும் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகள், வழிமுறைகள், கூட்டு முயற்சிகள் போன்றவற்றின் தாக்கம் காற்று மாசுபாட்டைக் குறைக்க எவ்வாறு உதவும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

ஆசியா போன்ற அதிவேகமாக நகர்மயமாகி வரும் பகுதிகளில் தூய்மையான கட்டமைப்புகள் மற்றும் முறையான சீரமைப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்த பொருளாதார வளர்ச்சி என்பது நீடித்த மாசுபாட்டை தடுக்க எந்தவகையிலும் உதவாது. பீஜிங், லண்டன், வார்சா மற்றும் பிற நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பார்க்கும் போது,  எந்தவொரு நகரமும் சரியான செயல்முறைகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியினையும், காற்றின் தரத்தினையும் ஒன்றாக மேம்படுத்த முடியும் என்பதனை அறிய முடிகிறது.

காலநிலை நெருக்கடிகளால் பொது சுகாதாரத்தில் கடுமையான பாதிப்புகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், மேற்கண்ட நகரங்களின் அனுபவத்தின் மூலமும், அவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் மூலமும் சரியான தலைமை, அமைப்பு தொடர்பான மறுசீரமைப்பு மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகள்மூலம் இத்தகு பாதிப்புகளைத் தடுத்து முன்னேற முடியும் என்பது நிருபணமாகிறது என அறிக்கை கூறுகிறது.

Source:

https://breathecities.org/wp-content/uploads/2026/03/Breathe-Better-Report.pdf 

  • விக்னேஷ் குமார் கோ

[email protected]

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted