மூச்சுத்திணறும் வளர்ச்சி !

காற்று மாசுபாடு இந்திய நகரங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத் தலாக உருவெடுத்து வருவதை சமீபத்திய டெல்லி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வீட்டினுள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவசர அவசரமாக அமைச் சரவையைக் கூட்டிய டெல்லி முதல்வர் அண்டை மாநில விவசாயிகள் விவசாய மீதங்களை இன்னும் ஒருவாரத்திற்கு எரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நகருக்குள் எந்தக் கட்டுமானங்களையும் கட்டவும் இடிக்கவும் ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. புகையைக் கக்கும் தனியார் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப் பட்டிருக்கின்றன. அனல்மின்நிலையத்திற்கு பத்துநாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனரக சுமையுந்துகள் மற்றும் பழைய வாகனங்கள் நகருக்குள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் தூசு உறிஞ்சும் இயந்திரங்களால் சுத்தம் செய்யப் பட்டு தண்ணீர் தெளிக்கப்படுகின்றன. முன்பே பரிசோதிக்கப்பட்ட ஒற்றை மற்றும் இரட்டையிலக்க வாகனக்கட்டுப்பாடு மீண்டும் அமுலுக்கு வரவிருக்கிறது. பல பள்ளிகளும் தம் மாணவர்களுக்கு முகமூடிகளை கட்டாயமாக்கி யிருக்கின்றன. குப்பைக்கிடங்குகளில் குப்பைகளை எரிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. செயற்கை மழையைப் பொழியவைப்பது குறித்து ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவையும் தாண்டி புதிதாய் யோசனை தருபவர்களுக்கு டெல்லி அரசு பரிசும் அறிவித் திருக்கிறது. சில மாதங்களுக்குமுன் சென்னையில் ஏற்பட்ட ஹெல்மெட்களுக்கான தட்டுப்பாடு போன்று டெல்லியில் முகமூடிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சிலநூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம் ரூபாய்கள்வரை விற்கும் முகமூடிகளை வாங்கி தம்மையும் தம்பிள்ளைகளையும் காத்துக்கொள்ள தலைநகரவாசிகள் கடைகளை ஈபோல மொய்க்கின்றனர். புதிதில்லிக்கு மூச்சுத்திணறுகிறது. அவள் பிள்ளைகளின் படிப்பைவிட, சொகுசான வாகனப்பயணங்களைவிட, சரக்குப் போக்கு வரத்தைவிட, மெட்ரோ ரயிலைவிட, அனல் மின்நிலையங்களின் மின்சாரத்தைவிட, மனம் கவரும் பட்டாசு வாணவேடிக்கைகளைவிட, அவளின் உன்னத வளர்ச்சியை பறைசாற்றும் தொழிற்சாலைகளின் உற்பத்தியைவிட அவளின் மூச்சுக்காற்றின் தூய்மை அவளுக்கு இப்போது முக்கியமானதாகியிருக்கிறது. வளர்ச்சிப்பாதையா அல்லது வாழ்வுக்கானப் பாதையா என்பதில் அவள் உயிர்வாழவே அதிகம் விரும்புகிறாள் போலும்! சூழல் சீர்கேடுகளில் அரசு இயந்திரங்கள் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் நாம் அறிந்ததே. இந்நிலையில் டெல்லி அரசு காட்டும் அசுரவேகம் உண்மையில் நிலைமை கைமீறிப்போயிருப்பதையே உணர்த்துகிறது. டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு சொல்லப் படும் இரண்டு முக்கிய காரணங்களில் ஒன்று அதிகரித்துவரும் தொழிற்சாலை மற்றும் வாகனப்புகை. இன்னொன்று கங்கையின் விவசாயப் பரப்பில் அறுவடைகாலங்களில் மிஞ்சும் வைக்கோல் போன்ற பொருட்களை எரிப் பதால் ஏற்படும் புகை. இவை இரண்டோடு இப்போது தீபாவளிப் பட்டாசும் சேர்ந்து
கொண்டிருக்கிறது. ஒரு நாள் சந்தோஷம்தானே என நாம் சொல்லிக்கொள்வது நாம் எதிர்பார்த்ததைப் போன்றே பலநாள் துயரமாய் தொடர்கிறது. பரிதாபம்! எந்த விளக்குமாறாலும் “தூய்மை இந்தியா”வின் தலைநகரைத் தூய்மையாக்க முடியவில்லை! ஏன் ஐந்துநாள் பத்துநாள் தற்காலிகத் தடை? வாழ்வைத்தடைசெய்யும் அனல் அணு மின்நிலையங்களை ஒழித்துவிட்டு காற்றையும் சூரியனையும் கைக்கொள்ளக் கூடாதா? நச்சுப் புகையில் மடிவதற்குப் பதிலாய் கொஞ்ச நேரம் நம் அலங்கார விளக்குகள் அணைந்து இருந்தால்தான் என்ன? உலகிலேயே இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் ஒன்று தன்தேசத்தின் மூச்சுக் காற்றுக்காக பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தினால்தான் என்ன? தேசம் நிதானமாய் வளர்ந்தால்தான் என்ன? சாலையைத் தூய்மையாக்க விளக்குமாறு வாங்கும் அவசரத்தை நச்சுப்புகையை வெளியிடும் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் காட்டினால் என்ன குறைந்துவிடப்போகிறது? விவசாய செயல்பாடுகளின்போது வெளிப் படும் அம்மோனியா போன்ற வாயுக்கள், பூச்சிக்கொல்லிகள் கலந்த மாசுபட்ட காற்று, நிலக்கரி, பெட்ரோலியம் போன்றவை எரிக்கப்படும்போதும் பல்வேறு தொழிற் சாலைகளிலிருந்தும் வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் மற்றும் வாகனப் புகை, கட்டுமானங்கள் சுரங்கங்களில் இருந்து வெளிவரும் தூசிலுள்ள நுண்துகள்கள் ஆகியவை தீவிர உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை பலவிதமான சுவாசக்கோளாறுகளிலிருந்து, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றன. காற்று மாசுபாடு காரணமாக முன்கூட்டியே இறப்பவர்கள் (Prematured Death) எண்ணிக்கை 37 லட்சமாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதுமட்டுமின்றி காற்றில் அதிகரிக்கும் பசுமை இல்லவாயுக்கள் புவி வெப்பத்தையும் அதிகரிக்கின்றன. இவை மழைக்கு அமிலத்தன்மையைக் கொடுப்பதோடு இதனால் தாவரங்களும் விலங்குகளும் பாதிக்கப் படுகின்றன. ஒரு முந்தானையோ, தாவணியோ, கைக்குட்டையோ இல்லை, ரோட்டோரத்தில் வாங்கும் முகமூடியோ நம் நெஞ்சுக்கூட்டை நிறைக்கும் நச்சுக்காற்றைத் தடுக்கும் என்று இன்னும் நாம் நம்பிக்கொண்டிருந்தால் நம்  அறியாமை பரிதாபகரமானதுதான். சாதாரண துணிகளாலோ அல்லது மருந்துக் கடைகளில் விற்கப்படும் முகமூடிகளாலோ தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களை துளியும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியிருக்க 90 முதல் 95 சதவீதம் வரை காற்றில் கலந்துள்ள தீங்குவிளைவிக்கும் நுண்துகள்களை (PM2.5) வடிகட்டும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படும் (முகத்தில் அணியும்) காற்று வடிகட்டிகள் வாங்க எத்தனைபேரால் தன் குடும்பத்துக்கு பத்து பதினைந்தாயிரத்துக்குமேல் செலவு செய்ய முடியும்? அதுவும் அத்தனை விலை உயர்ந்த அவை நீடித்து உழைக்க வல்லவையோ அல்லது சலவைசெய்து திரும்பத்திரும்ப பயன்படுத்தத்தக்கவையோ அல்ல. மேலும் நாம் சுவாசிக்கும் காற்று முகமூடிக்கும் முகத்துக்கு மான இடைவெளியில் அன்றி அந்த வடிகட்டி வழியேதான் வடிகட்டப்பட்டு வருகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாய் இந்த விலை உயர்ந்த முகமூடிகள்கூட எந்த நச்சு வாயுக் களையும் வடிகட்டக்கூடியவை அல்ல. அசுர வளர்ச்சி காற்றைக்கெடுத்தது. இப்போது கெட்டுப்போன காற்று வளர்ச்சியை தடுக்கிறது.
நிதானமற்ற, சிந்தனையற்ற, மட்டற்ற, தொலைநோக்குப்பார்வையற்ற வளர்ச்சி மூச்சுத்திணறவைத்தது அன்று. ஆனால் இன்று அந்த வளர்ச்சிக்கே மூச்சுத்திணறுகிறது. ஆம்! காற்று மாசுபாட்டால் தடுமாறுவது மனித உயிர்கள் மட்டுமல்ல. தொழில்களும்தான். மூடப்பட்ட தொழிற்சாலைகள் முடங்கிக் கிடக்கும் மனிதர்கள் வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள். யார் இந்த இழப்புகளை ஈடு செய்யப் போவது? நம் கார்கள் முதலாய் தொழிற்சாலைகள் வரை ஒவ்வொன்றின் புகைபோக்கியிலிருந்தும் “குபுக்… குபுக்…”என வெளிவரும் கொல்லும் நச்சுக் காற்று நம் ஒவ்வொருவரின் மூச்சுக் குழாய்வழியாக நம் நுரையீரல்களுடன் இறுக பிணைக்கப்பட்டிருக்கிறது. நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கும் கொஞ்சம் கொஞ்சமாய் நம் பிள்ளைக் குட்டிகளோடு செத்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கும் இப்போது ஏறக்குறைய பொருள் ஒன்றுதான். நம்மால் இக்கேட்டிலிருந்து தப்பவே முடியாது. எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது. ஆனால் ஒன்று மட்டும் செய்ய முடியும்!

நம் மூக்குகளை மூடிக்கொள்வதைவிட நம்மால் இந்த நச்சுக்காற்றின் ஆதிமூலத்தைக் கொஞ்சம் அழுத்திமூடவோ அல்லது மூட வைக்கவோ முடியும். அது அத்தனை எளிதல்ல. ஆனால் அதைத்தவிர இப்போது வேறு நமக்கு வழியில்லை. விரல்களால் நாசியை மூடுவதைவிட நம் ஒன்றுபட்ட உரத்த குரல்களால் அரசின் கோட்டைக் கதவுகளை தட்டவேண்டிய தருணமிது. பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தி தனிநபர் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும், அனல் மின்நிலையங்களைத் தூக்கியெறிந்து மாசற்ற சூரிய மின்சக்தியைத் தூக்கிப்பிடிக்கவும், பட்டாசு வாணவேடிக்கைகளை முழுதுமாய் தடைசெய்யவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தி ஒவ்வொரு தெருமுனையிலும் தினமும் எரியும் குப்பைக்கூளங்களை கட்டுப்படுத்தவும், புகையைக் கக்கும் பழைய வாகனங்களை முழுதுமாய் தடைசெய்யவும், சிமெண்டையும் தூசையும் அள்ளி இறைக்கும் கட்டுமானங்களை முறைப்படுத்தவும், தொழிற் சாலைகளுக்கான காற்று மாசுக்கட்டுப்பாடுகளை உரிய முறையில் நெறிப்படுத்தவும் கடுமையான சட்டங்கள் இயற்றி அவற்றைத் துணிவுடனும் நேர்மையுடனும் செயல்படுத்த அரசை தொடர்ந்து உரத்த குரலில் வலியுறுத்தி செயல்படவைப்பதைவிட நம் தலைமுறை இக்கேட்டிலிருந்து தப்பிப்பதற்கு நம்மிடம் எந்த உபாயமும் இல்லை. காற்றுமாசுபாட்டில் டெல்லியுடன் யார்பெரியவன் என்ற போட்டியில் இருக்கும் சென்னை இந்த நெருக்கடியிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளப்போகிறது?
எல்லாவற்றையும் அரசு பார்த்துக்கொள்ளும் என எண்ணுவதோ அல்லது கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு ஏசி போட்டுக்கொள்வதோ கண்களை மூடிவிட்டு உலகம் இருண்டுவிட்டது என்பதைப் போலத்தான். பொதுமக்களாகிய நமக்கும் நம் காற்றைக்காக்கும் கடமை இருக்கிறது. முடிந்தவரை சிறுதொலைவுப் பயணங்களுக்கு கால்களையோ இல்லை மிதிவண்டியையோ பயன்படுத்துவது, தேவைப்படின் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, குப்பையை எரிப்பது தற்கொலை போன்றது என்பதை நம் குடியிருப்பு வாசிகளுக்கும் தெருவில் வசிப்போருக்கும் அறிவுறுத்துவது, நம் கட்டிடங்களுக்கு நச்சுக்களை வெளியிடா வர்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துவது என எவ்வளவோ சிறுசிறு செயல்களால் நம்மால் முடிந்த மட்டும் தூய்மையான காற்றுக்கு நம் பங்களிப்பைச்செய்ய முடியும். ஒரு தீபாவளிக் கொண்டாட்டம் நாட்டின் தலைநகரை வாழத்தகுதியற்ற நரகமாக்கி விட்டது. இதோ! மாநிலத்தின் தலைநகருக்காய் போகிப் பண்டிகை நெருங்கிவந்து கொண்டிருக்கிறது. பழைய பொருட்களை அல்ல பழைய சிந்தனை களைக் கொளுத்துவோம். பண்டிகைகள் நம் மனதை குதூகலப்படுத்தட்டும். உறவுகளை மேம்படுத்தட்டும். அவை நம் வாழ்வை வண்ணமயமாக்கட்டும்; மூச்சுக்காற்றை அல்ல. குறைந்த பட்சம் நாம் பிழைத்திருப்பதற்காய் பாவம் காற்றை அப்படியே விட்டுவிடுவோம்!

அலமாரி
‘அலமாரி’ – நூல் அறிமுகப் பகுதிக்கு நூல்கள் அனுப்புவோர் தங்கள் பதிப்புகளில் இரண்டு பிரதிகளை ‘பூவுலகின் நண்பர்கள்’ முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments