ஈரான் -அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போரின் நேரடிப் பொருளாதாரத் தாக்கத்தை உலகின் அனைத்து நாடுகளும் சந்தித்தன. ஆனால், இப்போரின் மறைமுகமான தாக்கம் குறித்து யாரும் அதிகம் பேசவில்லை.
மார்ச் 8 அன்று காலை, ஈரானின் தலைநகரமான தெஹ்ரான் நகரின் குடிமக்கள் தங்களது வீடுகளும் தெருக்களும் அடர்ந்த கரும்புகையால் சூழப்பட்ட நிலையில் கண்விழித்தனர். அமெரிக்க-இஸ்ரேல் ஏவுகணைகள் தெஹ்ரானில் உள்ள நான்கு எண்ணெய்க் கிடங்குகளையும் பெட்ரோல் விநியோக மையத்தையும் தாக்கியதன் விளைவுகள் கொடூரமான நிலையை ஏற்படுத்தியிருந்தன. அதிலிருந்து எழுந்தபுகை நகரம் முழுவதும் சூழ்ந்ததால் மக்களுக்குக் கடும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. இதன் விளைவுகள், இன்னும் மோசமாக இருக்கும் என்று ஈரானின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்திருந்தது. காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அமில மழையை ஏற்படுத்துவதோடு, மனிதர்களின் நுரையீரல்களையும் தோல்களையும் பாதிக்கும் என்றும் கூறியது.
அமெரிக்க – ஈரான் மோதலின் முதல் 14 நாட்களில் (பிப்ரவரி 28 – மார்ச் 14) 5 மில்லியன் டன் CO₂ நிகரான உமிழ்வுகள் உருவாக்கப்பட்டன. இது சிறிய அளவிலான தீவு நாடுகள் ஆண்டு முழுவதும் வெளியேற்றும் உமிழ்வுகளின் அளவைவிட அதிகம். போர்கள் மிகப்பெரிய அளவில் உமிழ்வுகளை ஏற்படுத்தினாலும், அவை ஏன் காலநிலை மாற்றம் பற்றிய உரையாடல்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன?
காலநிலை மாற்றம் எல்லைகளைக் கடந்த நிகழ்வு (Transboundary phenomenon) என்று அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் உமிழப்படும் வாயுக்கள் உலகம் முழுவதையும் பாதிக்கின்றன. அவ்வாறிருக்க, காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியலை மதிப்பீடு செய்யும் ஐக்கிய நாடுகளின் முக்கிய அமைப்பான காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) உமிழ்வுகளை ஏற்படுத்தும் போர்கள் குறித்து ஏன் அதிக அக்கறை காட்டுவதில்லை? உலகின் முக்கியப் பெருநிறுவனங்களும் நாடுகளும் குறைந்தளவு காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்தாவது போருக்கு எதிராக ஏன் குரல் எழுப்புவதில்லை? இக்கேள்விகளுக்கான பதில்கள், உலக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் யாருடைய நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்வதில்தான் உள்ளன.
வரலாற்றிலிருந்து சில துளிகள்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகள் சிதிலமடைந்திருந்தன. அவற்றின் பொருளாதாரமும் உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டிருந்தன. மறுபுறம், அமெரிக்கா மட்டுமே பெருமளவு சேதமின்றியும் பொருளாதார அடிப்படையில் முன்பு எப்போதும் இல்லாத வலிமையுடனும் வெளிவந்தது. போர் கருவிகள் உற்பத்தியானது அமெரிக்க நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை (GNP) இரட்டிப்பாக்கியது. உலகின் தொழில்துறை உற்பத்தியில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் திரண்டு இருந்தது; அமெரிக்கா புதிய உலகின் அதிபதியாக, வல்லரசாக (Global hegemon) உருவெடுத்தது.
எண்ணெய் மூலம் இயங்கும் ஆயுதங்களான டாங்குகள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்றவை இரண்டாம் உலகப் போரில் ஆதிக்கம் செலுத்தின. இதனால் எண்ணெய் மற்றும் இராணுவ போர் கருவிகளுக்கு உலகளாவிய அளவில் மிகப்பெரிய தேவை உருவானது. அமெரிக்கா போரின்போது மொத்தம் $175 பில்லியன் (ரூ.16,29,886 கோடி) மதிப்பிலான போர் கருவிகள் உற்பத்தி ஒப்பந்தங்களை வழங்கியது. அதில் பாதிக்கும் மேற்பட்டவை 33 பெரு நிறுவனங்களுக்கே சென்றடைந்தன. இதனால் அந்நிறுவனங்கள் போர்க் காலத்தில், வரிகள் போக $52 பில்லியன் (ரூ.4,84,309 கோடி) இலாபம் சம்பாதித்தன.
இதன் மூலம் பெரு நிறுவனங்கள் போர்கள் மிக உயர்ந்த இலாபம் தரும் சந்தைகள் என்று கண்டுகொண்டன. ‘பாதுகாப்புச் செலவு’ என்ற பெயரில், அமெரிக்க அரசு இப்போர்ப் பொருளாதாரத்தை சட்ட அடிப்படையிலான ஒன்றாக மாற்றியது. இதனால் பெரு நிறுவனங்கள் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டன. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் இலாபம், பெரு நிறுவனங்களைத் தங்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகளுக்காக அரசுகளுடன் மறைமுக ஒப்பந்தம் (lobbying) செய்யத் தூண்டியது.
பெரு நிறுவன செல்வாக்கின் வல்லமை
எக்ஸான்மொபில் (ExxonMobil) என்பது உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் ஒன்றாகும். இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனை தலைமையகமாகக் கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு Inside Climate News ஒரு புலனாய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கை, காலநிலை சீர்குலைவு ஏற்படும் காரணங்களையும் அதனால் உருவாகும் ஆபத்துகளையும் எக்ஸான்மொபில் நிறுவனம் குறைந்தது 1970களிலிருந்தே அறிந்திருந்தது என்பதை வெளிப்படுத்தியது. இந்நிறுவனம் அமெரிக்க அரசுடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்வதற்காக 1998 ஆண்டு முதல் ஏறத்தாழ $290 மில்லியன் (ரூ.2701 கோடி) தொகையை செலவிட்டுள்ளது. மேலும், 1998 முதல் 2014 வரை, காலநிலை மாற்றம் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்காக சில ‘நிழல் அமைப்புகளுக்கு’ ஏறத்தாழ $30 மில்லியன் (ரூ.279 கோடி) வழங்கியுள்ளது.
எக்ஸான்மொபில் நிறுவனம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் W. புஷின் பதவியேற்பு நிதிக்காக $100,000 (ரூ.9.3 கோடி) வழங்கியது. அதற்குப் பிந்தைய ஆண்டுகலில் IPCC ஆய்வுகளைப் புறக்கணிக்கும்படி அந்நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுத்தது. இதனால், பல ஆண்டுகளாக காலநிலை ஆராய்ச்சியும் IPCC முடிவுகளும் தாமதிக்கப்பட்டன.
2015 ஆம் ஆண்டு IPCC அமைப்பு உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு அளவுகோலை நிர்ணயித்தது. அதன்படி, பூமியின் சராசரி வெப்பநிலை தொழில்புரட்சிக் காலத்திற்கு முன்பிருந்த வெப்ப நிலையைவிட (Pre-industrial temperature) 1.5°C-க்கு மிகாமல் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தது. இது 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளாகும். இது காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளைத் தவிர்க்க அவசியமான ஒன்றாகும். ஆனால், எக்ஸான்மொபில் நிறுவனமோ IPCC நிர்ணயித்ததிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 ஜனவரி மாதத்தில்தான் தனது நிகர உமிழ்வின்மை (Net Zero emissions) இலக்குகளை அறிவித்தது.
இம்முதலாளித்துவப் பெருநிறுவனக் குழுக்கள் பல ஆண்டுகளாக அரசு மீதான தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இலாபம் ஈட்டியப் பின், கடந்த பத்து ஆண்டுகளில்தான் காலநிலை மாற்றத்தின் உண்மையை பொதுவெளியில் ஒப்புக்கொள்ளத் தொடங்கின. 2022 ஆண்டிற்கு முன்பாக பல ஆண்டுகளாக தெற்கு உலக நாடுகளில் (ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்) உள்ள ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவித்து வந்தன. புயல், கனமழை, தொடர்ச்சியான விளைச்சலின்மை, காட்டுத் தீ போன்ற கடுமையான பேரிடர்களால் பல இன்னல்களுக்கு இரையாயினர்.
இச்சமூகங்கள் நீண்ட காலமாக அனுபவித்த துயரங்கள்கூட முதலாளித்துவ நலன் விரும்பிகளின் அங்கீகாரத்திற்குப் பின்னர்தான் பொதுவெளியில் கொண்டுவரப் பட்டன. அதுவும், அப்பாதிப்புகள் மிகவும் நீர்த்துப்போன அளவில்தான் வெளியிடப்பட்டன. இது பொதுமக்களாகிய நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. ஏனெனில், பொதுச் சமூகம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை முக்கிய ஊடகங்கள் மூலம் பெருநிறுவனங்களின் அதிகாரம் எவ்வளவு ஆழமாக கட்டுப்படுத்துகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
எரிசக்தி மற்றும் ஆற்றல் சார்ந்த தொழில் துறையின் முதலாளிகள் அரசுகளைத் தங்கள் பிடியில் வைத்திருப்பது போதாது என்று, இப்போது தொழில்நுட்பத் துறையும் அதே முறைகளைக் கையாளுகின்றன.
எண்ணெயோடு நிற்கவில்லை
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னும், அமெரிக்கா பாதுகாப்பு என்ற பெயரில் தனது இராணுவச் செலவினங்களைக் குறைத்தப்பாடில்லை. 2024ஆம் ஆண்டில் அதன் இராணுவத்திற்காக ஏறத்தாழ $997 பில்லியன் (ரூ.93,13,300 கோடி) செலவிட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கிற்கு சமமாகும். அமெரிக்கா / இஸ்ரேல் – ஈரான் போரைச் சுற்றிய பொருளாதாரம் இன்னும் சிக்கலானதாக உள்ளது. அது இப்போது எண்ணெய் மற்றும் எண்ணெயின் எரிசக்தி கொண்டு இயங்கும் இராணுவத் தளவாடங்களை மட்டும் சார்ந்ததல்ல. இப்போர், அதன் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதற்குக் கிளவுட் தொழில்நுட்பம் (Cloud technology) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகளை ஏராளமாகப் பயன்படுத்துகிறது.
இங்கு காரல் மார்க்சை நினைவுகூறுவது அவசியமாகிறது. முதலாளித்துவ சமூகங்களில் ஆளும் வர்க்கத்திற்கே அதிக நன்மை அளிக்கும் கருவியாக தொழில்நுட்பம் மாறும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்தது வியப்பளிக்கிறது.
அது இப்போது நம் கண்முன் நடந்தேறி வருவதை பார்க்கிறோம். போரில் பயன்படுத்தப்படும் நவீனத் தொழில்நுட்பங்களை வணிக நடைமுறைகளை எளிதாக்கும் கருவிகள் என்ற பெயரில் பொதுவெளியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
காசா போரின்போது, இஸ்ரேல் இராணுவம் தன் இலக்குகளைத் துல்லியமாகக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த, மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் அஜூர்(Azure) கிளவுட் கணினி தளத்தையும் (Cloud computing platform) செயற்கை நுண்ணறிவுச் செயலிகளையும் பயன்படுத்தியுள்ளது. அதேபோல் போயிங்க் (Boeing) என்ற நிறுவனம் தயாரித்த GBU-39 சிறு விட்டக் குண்டுகளையும் (Small diameter bombs) பல குண்டுவீச்சுகளில் பயன்படுத்தியுள்ளது. அவை தாக்கிய இலக்குகளில் ரஃபா அகதி முகாம், அல்-சார்டி பள்ளி, அல்-தபாயீன் பள்ளி மற்றும் ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி ஆகிய இடங்களும் அடங்கும்.
அமேசான் (Amazon) நிறுவனம் நிம்பஸ் (Project Nimbus) எனும் திட்டத்தின் மூலம் AWS கிளவுட் சேவைகளை (Cloud services) இஸ்ரேல் இராணுவத்திற்கு வழங்குகிறது. இஸ்ரேல் அரசு காசா மக்களைக் கண்காணிக்கும் உளவுத் தகவல்களை சேமிக்க அமேசான் நிறுவனத்தின் சர்வர்கள் (Server) பயன்படுத்தப்படுகின்றன. 2023இல் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாசின் எதிர் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் இராணுவம் கூகுள், அமேசான், மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிடமிருந்து கிளவுட் சேவைகளை பெருமளவில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தள மொழியில் சொல்ல வேண்டுமானால், “இவை வெறும் டிரெய்லர் மட்டுமே, இன்னும் நாம் முழுப்படத்தை பார்க்கவில்லை.” காசாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னும் பல நிறுவனங்கள் உதவிய வண்ணம் உள்ளன. ஆனால், இந்தியாவில் நாம், போர்களுக்கு உடந்தையாக இருக்கும் இந்நிறுவனங்களைப் பற்றிச் சற்றும் பொருட்படுத்தாமல், அவற்றையே பெரும் மதிப்பிற்குரியதாகப் போற்றி வியக்கிறோம்.
அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெருநிறுவனங்கள், தங்களின் கிளவுட் தளங்களின் (Cloud platform) மூலம் சுற்றுச்சூழல் வளங்குன்றா வளர்ச்சி (Sustainable development) சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதாகக் கூறிக்கொள்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள், “How to avoid a climate disaster” (காலநிலைப் பேரிடரைத் தவிர்ப்பது எப்படி) என்ற தனது புத்தகத்தை வெளியிட்டு காலநிலை மாற்றம் குறித்த பொதுவெளி உரையாடல்களில் தன்னை முன்னணிக் குரலாக நிலைநிறுத்திக் கொண்டார். அதன்மூலம் அந்த இயக்கத்தைச் சார்ந்தவராகவும் தன்னைச் சுற்றியே இயங்குவதாகப் பொதுமக்கள் நினைக்கும் வகையில் தனது நிலையை மாற்றிக் கொண்டார். அப்புத்தகத்தில் அவர் தொழில்நுட்பங்களின் (AI, Cloud computing) விரிவான மற்றும் சுதந்திரமான பயன்பாட்டின் மூலம் மாசுகளை உமிழாத தூய ஆற்றலை உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்வதன் மூலம் காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம் என்று வாதிட்டார். ஆனால், நம் காலத்தின் மிகவும் கொடூரமான போர்களுக்காகத் தனது நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைத் தடையின்றி வழங்குவதும் நிகர உமிழ்வின்மை (Net Zero emissions) இலக்கை அடையும் வழிமுறைகளில் ஒரு பகுதியா?என்பதை அவர் உறுதியாகச் சொல்ல வேண்டும்.
அமேசான் என்னும் நிறுவனம் 2040க்குள் நிகர உமிழ்வின்மை (Net Zero emissions) இலக்கை அடைந்து விடுவதாக உறுதியேற்று அறிவித்துள்ளது. போய்ங்க் (Boeing), தனது ஸ்கோப் 1 உமிழ்வுகள் (Scope 1 emissions), ஸ்கோப் 2 உமிழ்வுகள் (Scope 2 emissions) ஆகியவற்றின் கணக்கின்படி 2020ஆம் ஆண்டிலேயே நிகர உமிழ்வின்மை (Net Zero emissions) இலக்கை அடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறது. ஆனால், ஸ்கோப் 1, ஸ்கோப் 2 உமிழ்வுகள் வரையறையின்படி பெருநிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போர்களில் பயன்படுத்தப்படுவது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. எனவே, இந்நிறுவனங்களின் மறுக்க முடியாத போர் பங்களிப்பைக் கணக்கிலெடுத்தால், இந்த உறுதிமொழிகளும் இலக்குகளும் பொருளற்றவையாக இருப்பதை உணர முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் போருக்கு உடந்தையாக இருப்பதற்கு எதிராகப் போராடிய நான்கு பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல்–காசா போர் மட்டும் 33 மில்லியன் டன் CO₂ நிகரஉமிழ்வுகளை உருவாக்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டில் ஜோர்டான் நாட்டின் மொத்த உமிழ்வுகளுக்கு ஒப்பானது. பிரிட்டிஷ் அறக்கட்டளை நிறுவனமான Conflict and Environment Observatory கணக்கீட்டின்படி, உலகளாவிய இராணுவத் துறையின் வருடாந்திர கரிமத் தடம் 2750 மில்லியன் டன் CO₂ நிகரி ஆகும்; இது உலகளாவிய மொத்த உமிழ்வுகளில் ஏறத்தாழ 5.5% ஆகும். உலகின் அனைத்து இராணுவங்களையும் ஒரு நாடாகக் கருதினால், அவை பசுமைக்குடில் வாயுக்கள் (Green House Gases) உமிழ்வில் நான்காவது இடத்தில் இருந்திருக்கும்; அதாவது, ரஷ்யாவை மிஞ்சியதாக இருக்கும்.
ஒருபுறம் நிகர உமிழ்வின்மை (Net Zero emissions) என்ற கனவை பொதுமக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்க, மறுபுறம் எதிர்காலத்தை சாம்பலாக்கும் போர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது முற்றிலும்முரண்பாடாகும். ஒரு நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருட்கள் பெருமளவு உமிழ்வுகளை உருவாக்கும்போர்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையைப் புறந்தள்ளிவிட்டு ஒரு கரிமக்குறைப்புத் திட்டத்தை (Decarbonization strategy) செயல்படுத்துமாயின், அத்தகைய செயல்திட்டம் நேர்மையானதாக இருக்க முடியாது.
தொடரும்…
கட்டுரையாளர்: பவித்ரா என். டி. மொழிபெயர்ப்பாளர் பெயர்: விவேகானந்தன் எஸ். [email protected], [email protected]
