வரலாறு காணாத உச்சத்தை எட்டிய கார்பன் உமிழ்வு

 உலகளவில் கார்பன் உமிழ்வு 2022ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பன்னாட்டு ஆற்றல் முகமை (IEA) தெரிவித்துள்ளது.

புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான காரணி கார்பன் உமிழ்வாகும். கார்பன் உமிழ்வு அதிகரிக்கும்போது காலநிலை மாற்ற விளைவுகள் அதிகரிக்கும். எனவே, கார்பன் உமிழ்வைக் குறைத்து நிகர பூஜ்ஜிய நிலையை அடைவது என்பது உலக நாடுகளின்முன் தற்போதுள்ள மிக முக்கிய சவாலாகும். காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் உடன்படிக்கையின்படி இந்த நிகர பூஜ்ஜிய உமிழ்வு நிலையை 2050 ஆண்டிற்குள் அடைவதன் மூலமே காலநிலை மாற்ற நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க முடியும்.

 

இந்நிலையில் 2022ம் ஆண்டின் கார்பன் உமிழ்வு வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பன்னாட்டு ஆற்றல் முகமையானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு பன்னாட்டு அளவில் 36.8 ஜிகா டன் அளவிற்கு கார்பன் உமிழப்பட்டுள்ளது. இது 2021ம் ஆண்டை விட 0.9%அல்லது 321 மெட்ரிக் டன்கள் அதிகமானதாகும். அதேசமயம் கார்பன் உமிழ்வின் வளர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில் (6%) குறைவானதாகும்.

 

கார்பன் உமிழ்வின் வளர்ச்சி விகிதமானது 2022ம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட அளவினைவிட குறைவாகவே உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக மரபார்ந்த எரிபொருள் பாதைகளில் ஏற்பட்ட தடை, அதிகரிக்கப்பட்ட சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, பிற புதுப்பிக்கதக்க ஆற்றல், மின்சார வாகனங்களின் பயன்பாடு போன்றவை கார்பன் உமிழ்வை சுமார் 550 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுப்படுத்தியுள்ளது. மேலும், சீனா, கொரியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க நாடுகளில் ஆற்றல் மிகுந்த தொழில்துறை உற்பத்தியினை மட்டுபடுத்திய பொருளாதார மந்தநிலையும் சுமார் 155 மெட்ரிக் டன் அளவிற்கு கார்பன் உமிழ்வைக் குறைத்துள்ளது. இருப்பினும், அதிதீவிர வானிலை மாற்றங்களினால் ஏற்பட்ட குளிர்வித்தல் மற்றும் வெப்பப்படுத்துதல் தேவைகளின் காரணமாகவும், பராமரிப்பிற்காகவும் மற்றும் செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்ட அணுசக்தி உற்பத்தியின் காரணமாகவும் கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எரிபொருட்கள் அடிப்படையிலான கார்பன் உமிழ்வு

எரிபொருட்களின் அடிப்படையிலான கார்பன் உமிழ்வில், இயற்கை எரிவாயு மூலம் வெளியிடப்படும் உமிழ்வானது 1.6% அல்லது 118 மெட்ரிக் டன் அளவிற்கு குறைந்துள்ள அதே சமயம் நிலக்கரி் மூலம் வெளியிடப்படும் உமிழ்வானது 243 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகரித்து மொத்தமாக 15.5 ஜிகா டன் அளவிற்கு உள்ளது. நிலக்கரி மூலம் வெளியிடப்படும் கார்பன் உமிழ்வு வளர்ச்சி விகிதத்தின் கடந்த பத்தாண்டு கால சராசரி 0.4 விழுக்காடாக இருந்த நிலையில் கடந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 1.6 விழுக்காடாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், எண்ணெயின் மூலம் வெளியிடப்படும் கார்பன் உமிழ்வானது 2.5% அல்லது 268 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்து 2022ம் ஆண்டின் மொத்த உமிழ்வு 11.2 ஜிகா டன்னாக உள்ளது.

துறை ரீதியிலான கார்பன் உமிழ்வு

துறை ரீதியிலான கார்பன் உமிழ்வை ஆராயும் போது, மின்சாரம் மற்றும் வெப்ப உற்பத்தித்துறை மிக அதிகளவிலான கார்பனை உமிழ்ந்துள்ளது. இந்தத் துறையின் கார்பன் உமிழ்வானது 1.8% அல்லது 261 மெட்ரிக் டன்கள் உயர்ந்து 2022ம் ஆண்டின் மொத்த உமிழ்வு 14.65 ஜிகா டன்னாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலக்கரி சார்ந்த உற்பத்தி முறைகள் அதிகரித்ததே இதற்கு காரணமாக உள்ளது. போக்குவரத்துத் துறையிலும் கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ள நிலையில், தொழிற்துறை மற்றும் கட்டுமானத் துறையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கார்பன் உமிழ்வு குறைந்துள்ளது.

உலகளவில் மின்சாரத்திற்கான தேவை 2.7% அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தியில் கார்பனின் பங்கு 2.0% குறைந்துள்ளது. சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழியான மின் உற்பத்தியினை ஊக்கப்படுத்தியதே இதற்கு காரணமாகும்.

அதிதீவிர வானிலை, மரபார்ந்த எரிபொருட்கள், கார்பன் உமிழ்வு

கடந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அதிதீவிர வானிலை காரணமாக கோடை காலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இத்தகைய அதிதீவிர வானிலை மாற்றங்களின்போது குளிர்வித்தல் (கோடை காலத்தில்) மற்றும் ஒரு சில இடங்களில் வெப்பப்படுத்துதலுக்கான (குளிர்காலத்தில்) தேவை அதிகளவில் இருந்தது. இந்த தேவைகளுக்காக நிலக்கரி மற்றும் பிற புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்தியது சுமார் 60 மெட்ரிக் டன் அளவிலான கார்பன் உமிழ்வு அதிகரித்ததிற்கு காரணமாக அமைந்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகள் வாரியான கார்பன் உமிழ்வுகளை பார்க்கையில்,

  • மந்தமான பொருளாதார வளர்ச்சி, மட்டுபடுத்தப்பட்ட கட்டுமான செயல்பாடுகள் மற்றும் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் கார்பன் உமிழ்வானது 2021-ம் ஆண்டை காட்டிலும் 0.2% அல்லது 23 மெட்ரிக் டன் குறைந்துள்ளது.

 

  • ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் எண்ணெய் மற்றும் எரிவாயு இடையூறுகள், செயல்படாத அணுஉலைகள், வறட்சி, மின்சாரத் துறையில் அதிக கார்பன் உமிழ்வு போன்றவை இருந்தாலும், கட்டுமானத் துறையில் கணிசமான அளவில் குறைந்த கார்பன் உமிழ்வு, குறைவான நிலக்கரி பயன்பாடு, அதிகரித்த சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி போன்ற காரணங்களால் 2022ம் ஆண்டின் மொத்த உமிழ்வு அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.5% அல்லது 70 மெட்ரிக் டன் அளவிற்கு குறைந்துள்ளது.

 

  • அமெரிக்கா காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியின் மூலம் மின்சாரத்துறையில் கார்பன் உமிழ்வை குறைந்திருந்தாலும், அதிகமான இயற்கை எரிவாயு பயன்பாடு மற்றும் அதிதீவிர வானிலை மாற்றங்களின்போது கட்டுமானத் துறையில் ஏற்பட்ட உமிழ்வு போன்றவற்றின் காரணமாக முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2022ம் ஆண்டில் கார்பன் உமிழ்வானது 0.8% அல்லது 36 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்துள்ளது.

 

  • சீனாவைத் தவிர்த்த பிற ஆசிய நாடுகளின் நிலையைப் பார்க்கும்போது, நிலக்கரி எரித்தல் சார்ந்த மின்சார உற்பத்திமுறை அதிகரித்ததன் காரணமாக முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.6% அல்லது 206 மெட்ரிக் டன் அளவிற்கு கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள்

ஆற்றல் சார்ந்த பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 1% அதிகரித்து வரலாற்றிலேயே உச்ச அளவான 41.3 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடு சம (CO2-eq or carbon dioxide equivalent –  புவி வெப்பமயமாதல் சாத்தியத்தின் அடிப்படையில் பல்வேறு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தினை ஒப்பிடும் அளவீடு) அளவை எட்டியுள்ளது. 2022ல் எரிசக்தி ஆற்றல் மற்றும் தொழில்துறை செயல்முறைகளினால் வெளியான ஆற்றல் சார்ந்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் கார்பன் டை ஆக்சைடு மட்டும் 89% உமிழப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்ற நிகழ்வுகளினால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தற்போதுள்ளது போல மெத்தனமாக இருக்காமல், இன்னும் வேகமாக செயல்பட்டால் மட்டுமே பாரிஸ் உடன்படிக்கையின்படி 2050ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நிலையை அடைவது ஓரளவு சாத்தியமாகும்.

 

 

 

 

Charts :

IEA 2023; Global CO2 emissions from energy combustion and industrial processes,1900-2022,  [https://www.iea.org/data-and-statistics/charts/global-co2-emissions-from-energy-combustion-and-industrial-processes-1900-2022], License: CC BY 4.0;

IEA 2023; Annual change in global CO2 emissions from energy combustion and industrial processes,1900-2022 [https://www.iea.org/data-and-statistics/charts/annual-change-in-global-co2-emissions-from-ener gy-combustion-and-industrial-processes-1900-2022], License: CC BY 4.0;

Images :

Source : Unsplash

Report :

https://www.iea.org/reports/co2-emissions-in-2022

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments