எரிகின்ற பூமியில் எண்ணெய் ஊற்றும் வங்கிகள்

oil

தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், ‘நாகரிகம்’ என்ற பண்பாட்டு விழுமியத்தின் மீது பொருளாதாரக் கூறுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. இவை மானுடப் பண்புகளையும், சித்தாந்தங்களையும் மாற்றி அமைக்கவே, அது சூழலியல் வன்முறையாக இன்று விரிவடைந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும், சூழலியல் சமத்துவத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விவாதிக்கப்படும் அளவிற்கு, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளுக்கு உள்ள கடமைகள் பற்றி பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை.

கார்பன் உமிழ்வை (Carbon Emission) அதிகரிக்கும் புதைப்படிம எரிசக்திகளான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு தேவையான நிதியை மடைமாற்றி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அவசியமான பசுமை தொழில்களுக்கு பயன்படுத்த மத்திய வங்கிகளால் முடியும். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறுவதோடு, சூழலியலை பாதிக்கும் திட்டங்களுக்கு ஊக்கமளிப்பதே கவலைக்குரிய செயல்திட்டமாக அமைந்துள்ளது. அதிலும் சில வங்கிகள், புதைப்படிம எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு நேரடியாக உதவி செய்கின்றன.

மத்திய வங்கிகளின் பணக் கொள்கையை (Monetary policy) தீர்மானிக்கும் அதிகாரிகள், காலநிலை மாற்றம் தொடர்பான போதிய புரிதலின்றி இருப்பதையே இது உணர்த்துகிறது. மேலும், சில வங்கிகள், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான இலக்குகள் தங்களுக்கு இல்லை என வாதிடுகின்றனர்.

அறிவியல் மிகத் தெளிவாக உள்ளது. புவியின் சராசரி வெப்பமானது 1.5° செல்சியஸை தாண்டாமல் வைத்திருக்கவும், காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தவிர்ப்பதற்கும், புதைப்படிம ஆற்றல் மீதான புதிய முதலீடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று International Energy Agency (IEA) ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கியானது (RBI), புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான திட்டங்களுக்கு கடன் உதவி செய்வதில் தேர்ந்த அனுபவமடையதாகவே விளங்குகிறது. இந்தியாவில் புதைப்படிம எரிசக்தி திட்டங்களுக்கான நிதியை குறைப்பது பற்றிய பேச்சுவார்த்தையை RBI முன்னெடுத்தாலும், இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எட்டப்படவில்லை என்பதே உண்மை.

தெற்கு ஆசியாவில் புதைப்படிம எரிசக்தி உற்பத்தியையும், நுகர்வையும் அதிகமாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நாடாக சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அந்த வகையில் பார்க்கப்போனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், அவற்றுக்கான கடன் உதவி செய்வதில் முன்னுரிமை வழங்குவதிலும், இந்தியாவின் மத்திய வங்கியான RBI-க்கு போதிய திறன் இல்லாதது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, RBI-யின் சொத்து மேலாண்மை (asset management) முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், RBI-யுடைய சொத்து மேலாண்மையின் பெரும்பகுதி அந்நிய செலாவணியாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் படி, RBI-யின் foreign reserves மதிப்பு சுமார் 461.8 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், RBI-ல் பணிபுரியக்கூடிய அதிகாரிகள் சிலர், RBI-யின் சொத்துகளை சூழலுக்கு உகுந்த முதலீடுகளாக மாற்ற முடியும், ஆனால் அது இன்னும் நிகழ்ந்தபாடில்லை என தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த 10 ஆண்டுகளில் RBI சில புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான கடன் வசதியை எளிமையாக்கியுள்ளது.

அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியில் RBI தனிகவனம் செலுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு Biomass உற்பத்திக்கான கடனுதவிகளை விரைவுபடுத்தியது. பிறகு, 2019ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நிதி அமைப்புகளை அதிகப்படுத்தியது. மேலும் 2020ம் ஆண்டு, விவசாயத்துக்கு தேவைப்படும் தண்ணீருக்கு, சூரிய ஒளி ஆற்றல் மூலம் இயக்கப்படும் பம்புகளை பயன்படுத்தினால் அதற்கான கடனுதவி வழங்குவது என விரிவடைந்தது. ஆனால், இவை எதுவுமே நிரந்தர தீர்வுக்காகவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய முழுமையான மாற்றத்துக்காகவும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. RBI-க்கு இன்னும் அதிக கவனமும், சூழலியல் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான முதிர்ச்சியும் அவசியமாகிறது. புதுப்பிக்கதக்க ஆற்றலுக்கான நிதி அமைப்புகளை எளிமைப்படுத்துவது போலத் தோன்றினாலும், காலநிலை மாற்றத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

உலக அளவில் நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதியுதவி செய்வதில் இந்திய வங்கிகள் 4வது இடத்தில் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 155.6 பில்லியன் டாலர்களை இந்திய வங்கிகள் நிலக்கரி சுரங்கங்களுக்கு வாரி வழங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, State Bank of India (SBI), Axis Bank, Trust Group & HDFC ஆகிய நான்கு வங்கிகள் தான், நிலக்கரி சுரங்கங்களை இந்தியாவில் உயிர்ப்புடன் வைத்துள்ளன.

இதன் வாயிலாக, காலநிலை மாற்றத்துக்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்தில் வர்க்க விடுதலையும் அடக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட 4 வங்கிகளில், 3 வங்கிகள் தனியார் என்பதை உணர வேண்டும். இந்தியாவில் தற்போது வங்கிக் கொள்கைகளில் அரங்கேறிவரும் கூத்துகளை உற்று கவனித்தால், முதலாளித்துவத்தின் பணப்பசியில் சாமானியரின் வாழ்வாதாரம் மட்டுமின்றி சூழலியல் நெறிகளும் நசுக்கப்படுவதை புரிந்து கொள்ள முடியும். வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிகளை திவாலாகும் வங்கிகளோடு இணைப்பது (merger of banks), வாராக்கடன்களை வசூலிக்க திறனற்ற கொள்கைகளை வகுத்து பெரு முதலாளிகளை காப்பாற்றுவது (Ineffective management of Non-Performing Assets), பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது (Privatising Public Sector Units) போன்ற நடவடிக்கைகளால் வங்கி சேவையானது கார்ப்பரேட்களுக்கு சாமரம் வீசும் துறையாக மாறி நிற்கிறது.

மேலும், பெயருக்கு மட்டும் பொதுத்துறை வங்கியாகவும், செயல்பாட்டில் முதலாளிகளுக்கே முதலையாகவும் விளங்கும் SBI தான் புதைப்படிம ஆற்றலுக்கான அதிகபட்ச நிதியுதவியாக 21.5 பில்லியன் டாலர் (2016-2019) தொகையை கொட்டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்க தற்போது வரை SBI ஒப்புக்கொள்ளவில்லை.

இவ்வாறு அனைத்து தரப்பு மக்களின் கருவூலமாக இருக்கும் வங்கிகளால் உருவாக்கப்பட்டுள்ள சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வு பல அடுக்குகளில் உள்ளது. சூழலியல் அமைப்புகளை பாதுகாப்பதற்கான அதிகாரங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது. இந்தியாவின் மத்திய வங்கியான RBI ஒரு தன்னாட்சி அமைப்பாக இருப்பதால், சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்யும் கொள்கை முடிவுகளை அது துணிந்து எடுக்க வேண்டும். இதில் சூழலியல் நலன் உறுதிபடுத்தப்படுவதோடு, இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகளின் ஜனநாயக பூர்வமான செயல்பாடுகளும் பாதுகாக்கப்படும்.

எனவே, சூழலியலுக்கு உகந்த பணக் கொள்கை, முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் புதைப்படிம ஆற்றல் சொத்துகளை (fossil fuel assets) தங்களது Portfolio-வில் இருந்து நீக்குதல் போன்ற புரட்சிகர மாற்றங்களை தங்களிடம் உள்ள எளிமையான அதிகாரக் கருவிகள் வாயிலாகவே மத்திய வங்கிகளால் செய்ய இயலும் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமாகியுள்ளது.

குறிப்பாக, தொழில்துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் போது, அவர்கள் மேற்கொள்ளும் உற்பத்தி மூலம் சூழலியலுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் போன்ற கணக்கீடுகள் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் பூமியின் புதிய இயல்பாக மாறிக் கொண்டிருப்பதால், இயற்கை பேரிடர்களை தாங்கி நிலைத்திருக்கும் தன்மை அத்தகைய தொழில்களுக்கு உள்ளனவா என்பதை கணிக்க வேண்டும். அடுத்ததாக, வங்கிகளின் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். ஒன்று, பசுமை பொருளாதார நடவடிக்கைகள் (green – sustainable activities), மற்றொன்று, சூழலியலை பாதிக்கும் பொருளாதார செயல்பாடுகள் (dirty damaging the climate activities).

சூழலியலை பாதுகாக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவதை எளிமையாக்குதல் (lending priorities), சலுகைகள் வழங்குதல், வட்டி விகிதத்தை குறைத்தல் போன்றவை பணக்கொள்கையின் முக்கிய அம்சங்களாக மாற்றப்பட வேண்டும். வங்கிகளில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகார மையங்களாக இருப்போர், புதைப்படிம ஆற்றலில் இருந்து வெளியேற வேண்டிய தேவையையும், அவசரத்தையும் கொள்கை ரீதியாக தெளிவாக புரிந்திருத்தல் அவசியமானதாகும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு, ஒரு நாட்டின் நிதி ஆதாரங்கள் எந்தெந்த வழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. பணம் செலவிடப்படும் முறையை நுணுக்கமாக கையாள வேண்டிய கட்டத்தில் மானுட சமூகம் பயணித்திக்கொண்டிருக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, மருத்துவம், வேளாண்மை, தொழில்நுட்பம், மனித உறுவுகள், சட்டம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து விழுமியங்களிலும் சூழலியல் கருத்துகளை செயலாக்கவும், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து காலநிலை மாற்றத்தை முறியடிக்கவும், மத்திய வங்கிகளின் பங்கு இன்றியமையாததாகிறது. ஏன் பணத்தை அச்சிடுகிறோம்? அது பூமியில் எத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறது? என்பதைக் கூட ஒரு கணம் சிந்திக்க நேரமில்லாத மத்திய வங்கிகள், இனியாவது பணத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்களா?

  • மணிஷங்கர்

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments