கொரோனா காலத்திலும் சிதைக்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி சட்டம்

 

  • 2011 முதல் 2020 வரை – சூழலியல் சட்டங்கள் சுமார் 300 முறை  திருத்தப்பட்டுள்ளது.
  • 2020- புதிய சட்ட வரைவு முன்மொழியப்பட்டது.
  • 2020-2021- புதிய சட்ட வரைவின் மீது எந்த முடிவும்  எடுக்கப்படவில்லை, ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள  சட்டம் 33 முறை  திருத்தப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக,  பல்வேறு வகையான  திட்டங்களுக்கு   சூழலியல் அனுமதியளிக்கும் நடைமுறையானது, நிறுவனங்களுக்கு சாதகமாக எளிதாக  தொழில் புரியும் வகையில்  செயல்படுத்தப்பப்பட்டு வருவது  கேள்விக்குள்ளாகியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் இந்திய சட்டங்கள் மீதானத்   தாக்குதல்  என்று தான் இதனைக் கூற வேண்டும்.

உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு,  சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய  அமைச்சகம் (MoEFCC), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை,2020 ன்  (EIA)   வரைவை(DRAFT)   வெளியிட்டது.  இந்த வரைவில்   தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புத்  திட்டங்கள் ஆகியவற்றிற்கு எளிதில் சூழலியல் அனுமதியளிக்கும்  நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றை வரையறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ,முதற்கட்டமாக  இந்த வரைவின் மீது   பொது மக்களின் கருத்தைப் பெறுவதற்காக,  இரண்டு மாதம் கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கால அவகாசம் போதுமாதாக இல்லை என்று சர்ச்சை எழுந்ததையெடுத்து காலஅவகாசம், மேலும் ஆகஸ்ட் 11,2020 வரை நீட்டிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, இந்த வரைவில் சூழலியல் பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்பதற்காகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இந்த வரைவில்,  திட்டங்களுக்கு  முன் மற்றும் பிறகான  சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்கான  செயல்முறையை வரையறுத்தல், எண்ணற்ற பிரிவுகளில் கீழ் வரும் திட்டங்களுக்கான   பொதுமக்கள் கருத்துக் கேட்பினை தவிர்த்தல்  மற்றும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின்  (EAC) செயல்பாட்டில் ஒன்றிய அரசின் மேற்பார்வையை அதிகரித்தல்  போன்ற சில மோசமான திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு  முழுஊரடங்கின் போதும்  எண்ணற்ற மக்கள் இயக்கங்கள்  மற்றும் மக்கள், அரசிடம் எப்படியாவது  தங்களது  பொருளாதாரத்தை  காப்பற்றுங்கள் என்று  கோரிக்கை விடுத்த நிலையிலும் , ஏறத்தாழ 2 மில்லியன் மக்கள்,  இந்த வரைவு குறித்து  தங்களது   கருத்தைத் தெரிவித்திருந்தனர். பெரும்பாலானோர் இந்த வரைவு திரும்பப்பெற வேண்டும் என்றும்,   தங்கள் கருத்தை முன்வைத்திருந்தனர்.

இந்த சமயத்தில்,இந்த வரைவை மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்றும்,  மக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை  நீட்டிக்க  வேண்டும் என்றும்   கோரி,   நான்கு மாநில  (டெல்லி, கர்நாடகா, கேரளா மற்றும் சென்னை)  உயர்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.   இந்நிலையில், ஜூன் 2020 அன்று,   இந்த வரைவை பிராந்திய  மொழிகளில்,  மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென  டெல்லி  உயர்நீதிமன்றம்,  சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு  உத்தரவிட்டது.

ஆனால்,  டெல்லி  உயர்நீதிமன்றத்தின்  இந்த உத்தரவுக்கு எதிராக,  ஒன்றிய அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையின்  போது,  டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய அந்த உத்தரவையே   உச்சநீதிமன்றமும்  உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,ஒன்றிய அரசு   மொழிபெயர்த்து  வழங்கவேண்டும்  என்ற   தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய  வேண்டுமென, டெல்லி  உயர்நீதிமன்றத்தில்   சீராய்வு மனுவையும்   தாக்கல் செய்தது. மேலும்,   இந்த மனுவின்  மீதான விசாரணையின் போது 5 ல் 4 முறை, ஒன்றிய அரசு  அதிக கால அவகாசம் எடுத்துக்கொண்டது  கவனிக்கத்தக்கது.

இதேபோன்று, கர்நாடக உயர்நீதிமன்றமும் இந்த வரைவு மீதான  இறுதி அறிவிப்பை  வெளியிட சுற்றுச்சூழல்  அமைச்சகத்திற்கு  தடை விதித்திருந்தது. மேலும்,  இந்த  வரைவை, மொழிபெயர்த்து வெளியிட்டால்  விளக்கங்கள்  கூறுவதில் சிக்கல் ஏற்படும்  என்று காரணங்கள் சொல்லி தட்டிக்கழித்து  வந்த சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒருவழியாக  செப்டம்பர்  2020 ல் இந்த வரைவை,  22 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து   வெளியிட்டது. ஆனால் இன்று  வரை, இவை  மக்கள் எளிதில் அணுகும் வகையில் இல்லை .

பொதுமக்களின் கருத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பதில்கள்:

சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம்,  இந்த புதிய  வரைவு  கொண்டு வரப்பட்டத்தற்கான காரணமாக,கடந்த ஒன்பது ஆண்டுகளின்  தேவையை  பூர்த்தி செய்யும் விதமாக, தற்போது   ஒரே வரைவாகக்   கொண்டு வரப்பப்பட்டுள்ளதாகத்   தெரிவித்திருந்தது.ஆனாலும், அமைச்சகத்தின்  இந்த காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை  என்றே சொல்லலாம். மேலும் ,இந்த வரைவின்  மூலம் எவ்வித  பயனும் ஏற்படப்போவதில்லை. கடந்த ஒரு வருட காலமாக ,  2020 ஆம் ஆண்டின்  வரைவில் பரிந்துரைகளின்  அடிப்படையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்    எதிர்காலம் குறித்து   சிந்தித்து  கொண்டிருக்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு,2006  ஆனது,  ஏறத்தாழ  30 க்கும் மேற்பட்ட மாற்றங்களைச் சந்தித்துள்ளது. மேலும், கடந்த காலத்தில்   53 சட்டத்திருத்தங்களையும்  200 க்கும் மேற்பட்ட அலுவலக உத்தரவுகளும் இதனை நீர்த்துப் போகும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம், புதிய வரைவு 2020 மீது பெறப்பட்ட கருத்துகளை  தீவிரமாக பரிசீலிக்கவுள்ளதாக  ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும், கடந்த 2020 செப்டம்பர்  மாதமே, இந்த  புதிய வரைவு 2020 மீது பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்ய,    சிஎஸ்ஐஆர்-தேசிய சூழலியல் பொறியியல் ஆய்வு மையத்திற்கு  சுற்றுச்சூழல்  அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும்,    கடந்த மார்ச் 2020 வரை   அமைச்சகம்  கொண்டுவந்த திருத்தங்கள் மற்றும் உத்தரவுகள் மீதான மக்கள்  கருத்துக்களுக்கு அப்போது  முக்கியத்துவம்  அளித்து வந்த ஒன்றிய  அரசு, தற்போது  மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது சிக்கலான விஷயம் என்று  கருதுகிறது.

எங்களின் ஆய்வின் படி, கடந்த ஓராண்டில்  மட்டும்,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை,  2006 ஆனது,   24 அலுவலக உத்தரவுகள் மற்றும் 9 சட்டத்திருத்தங்கள்  வழியாக 33 முறை திருத்தப்பட்டுள்ளது. இந்த எல்லாச்  சட்டத்திருத்தங்களும், மக்களின்  கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்  என்ற   இந்திய அரசியல் சாசனத்தின்   சூழலியல் பாதுகாப்பு விதிக்கு புறம்பாக  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்,  ஒன்றிய அரசு  முன்மொழிந்துள்ள    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை  2020 ஆனது  ரகசியமாகவும்,  அவசரமாகவும்   கொண்டுவரப்பட்டுள்ளதே இதில்  மக்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படவில்லை   என்பதைத்   தெளிவுபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த அக்டோபர்/நவம்பர் 2020 மக்களின்  கருத்துகளை  பெற  தீவிரம் காட்டிய ஒன்றிய அரசு,  அதே காலகட்டத்தில், கடந்த  செப்டம்பர் 2020 லிருந்து இதுவரை,     சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை,2006ல் 26 திருத்தங்களை  மேற்கொண்டுள்ளது. அதில் மொத்தமாக இதுவரை  மொத்தமாக  33  திருத்தங்கள்  கொண்டுவரப்பட்டுள்ளது  கவனிக்கத்தக்கது.

EIA மீது  தொடரும்   தாக்குதல்கள்:

இந்த  33 திருத்தங்களில், 7 திருத்தம்  கொரோனா காலத்தை  காரணமாகக் கூறி, மத்திய ,மாநில வல்லுநர்  மதிப்பீட்டு குழு மற்றும்  அதிகாரிகளின் காலநீட்டிப்பு உத்தரவும்  அடங்கும் என்று தெரிவித்து  சூழலியல் அனுமதி பெறவேண்டிய  திட்டங்களுக்கு  கால  நீட்டிப்பும், மருந்து தயாரிப்பு  விலக்கு அளித்ததும்  உத்தரவிட்டிருந்தது.  எனினும்  மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு  விலக்களித்தது  மட்டுமல்லாது , அனல் மின்நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கம், கனிம மற்ற இதர புவிசார் திட்டங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே,  இந்த நடவடிக்கைகள் கொரோனா என்பதைவிட,     பணமதிப்பிழப்பு  நடவடிக்கை, முறையற்ற ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்தப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு  அறிவிக்கப்பட்ட  தேசிய அளவிலான  முழு ஊரடங்கு ஆகியவற்றினால் ஏற்பட்ட  பொருளாதார  சரிவை ஈடுகட்ட  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே  என்பது வெளிப்படையாக  தெரிகிறது.

அட்டவணை  1: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அறிவிப்பு 2006 ல்  மார்ச் மார்ச் 23,2020 முதல் மே 10,2021 வரை மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள்.

Source: இந்த சட்டத்திருத்த வரைவில் சுரங்கத் திட்டங்கள்  குறித்த ஒரு திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்த அட்டவணை  சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான  அமைச்சகத்தின்  இணையத்தில்  வெளியிடப்பட்டுள்ள    உத்தரவுகள்,  மேற்கொண்ட  திருத்தங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த  பிப்ரவரி 2021 CSIR-NEERI வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த வரைவின்  முக்கியமான எட்டு  அம்சங்களில்  உள்ள  பிரச்சனைகளைக் கண்டறிந்தது.

அவை,1)விளக்கமளித்தல் 2)திட்ட வகைப்படுத்துதல்  3)சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தயாரித்தல் 4)பொது ஆலோசனை , 5) சுற்றுச்சூழல் அனுமதி செல்லுபடியாகும் காலம் , 6) கண்காணிப்பு, 7) மீறல்களைக் கையாளுதல் ( பிந்தைய ஒப்புதல்கள்) மற்றும் 8) சில திட்டங்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகள் ஆகியவையாகும்.

CSIR-NEERI வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், புதிய  வரைவில் உள்ள  பிரச்சனைகள் ஒட்டுமொத்தமாக  பகுப்பாய்வு செய்யப்பட்டு அது   குறித்தான  பார்வை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.  இதனால்  எண்ணற்ற பிரச்னைகள் விடுபட்டுள்ளதாகவும்,    பலர் சமர்ப்பித்துள்ள கருத்துக்களில் மதிப்பீட்டு செயல்முறையில் உள்ளப்   பிரச்சனைகளும், இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டுமெனவும்  போன்ற உள்ளார்ந்த பிரச்சனைகள்  கூறப்பட்டிருந்ததாகவும்,  ஆனால், அவை இந்த அறிக்கைக்கான ஆய்வில் கணக்கில்  எடுத்து கொள்ளப்படவில்லை  என்றும்  அந்த அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது.

இந்த வரைவை  இறுதி செய்ய அமைச்சகம் ஏறத்தாழ  725 நாட்களை எடுத்துக்கொண்டது, மேலும் மொழிபெயர்ப்பு குறித்து சிக்கலில் எண்ணற்ற நாட்களையும்  வீணடித்துள்ளது. எனவே, மக்களின் உயர்வான  கருத்துக்களுக்கும்,விமர்சனங்களுக்கும்  மதிப்பளிக்கும் வகையில்  சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் மேற்கொண்ட, ஒரே ஒரு  நடவடிக்கை இந்த  CSIR-NEERI  அறிக்கை மட்டுமேயாகும். எவ்வாறாயினும்,எங்களது ஆய்வின் படி,   EIA 2006 ல் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லா திருத்தங்களும் CSIR-NEERI  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள  எட்டு அம்ச பிரச்சனைகளில் அடங்கிவிடுகிறது. மேலும்  , அந்த  திருத்தங்கள் அவ்வாறே தற்போது தயார் செய்யப்பட்டுள்ள புதிய  EIA 2020 வரைவிலும் இடம்பெற்றிருக்கிறது

இந்நிலையில்,  மக்களின் கருத்துக்கு  அரசு முக்கியத்துவம் அளிப்பதாக தோற்றத்தை உருவாக்கும், அதே வேளையில், தனித்தனியாக எண்ணற்ற  மாற்றங்களை கொண்டு வந்து  துண்டுதுண்டாக சட்டத்தில் திருத்தம் செய்துகொண்டிருக்கிறது .கீழ்காணும் அட்டவணையில்    CSIR-NEERI அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள  எட்டு அம்சங்களில்  உள்ள பிரச்சனைகள் பட்டியலியிடப்பட்டுள்ளது.

அட்டவணை 2–  EIA  2006 ல் உள்ள முக்கியமான திருத்தங்களுக்கு எதிராக  EIA  அறிவிப்பு 2020 ன் பரிந்துரைக்கப்பட்டுள்ளவை   மற்றும் பொதுமக்களின் கருத்து மீதான மத்திய அமைச்சகத்தின்(MoEFCC) ஆய்வில் அடையாளம் காணப்பட்ட   சிக்கலுக்குரிய பிரச்சனைகள்.

Source:கொரோனா காலத்தில்  மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், இந்த அட்டவணை  சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான  மத்திய அமைச்சகம்  அதன்  இணையத்தில்  வெளியிட்டுள்ள    உத்தரவுகள், மேற்கொண்ட  திருத்தங்கள்  மற்றும்    CSIR-NEERI அறிக்கை அடிப்படையிலேயே  தயாரிக்கப்பட்டுள்ளது

கேள்விக்குறியாகும்  நேர்மறையான திருத்தங்கள்:

மேலும், இந்த திருத்தங்களில் எடுக்கப்பட்ட சில நேர்மறையான மாற்றங்கள் கூட (அட்டவணை 2 இல் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது)முதல் கட்டத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது, உதாரணமாக திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தால் நியமிக்கப்படும்   ஆலோசகர்,   திட்டத்தினால் ஏற்படும் முக்கியமான பிரச்சனையைக் கண்டறியாமல் தரமற்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்தால், அவரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆலோசகர் பட்டியலில் இருந்து நீக்கலாம்  என்பதாகும்.

இதேபோன்று, அந்த வரைவில் செய்யப்பட்டுள்ள மற்றொரு திருத்தத்தில் நிபுணர் மதிப்பீட்டு குழு கவனம் செலுத்தவேண்டிய பிரச்சனைகளை தெரிவிக்க வழிவகை செய்கிறது, ஆனாலும் வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் சமரசமான  முறையில் நியமிக்கப்படும் மதிப்பீட்டு குழு உறுப்பினர்களால் இது தொடரவே செய்கிறது என்று சூழலியல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா கூறுகிறார். இந்தக் குழு உறுப்பினர்களின் பணிக்காலம் முடிந்தும் , கொரோனாவை காரணமாகக்  கூறி நீட்டிக்கப்பட்டுள்ளது உற்றுநோக்கப்பட  வேண்டியது.

மேலும்,இதர சூழலியல் நெறிமுறைகளும் தலைக்கு  மேல் கத்தி தொங்குவதைப் போன்று  மிகவும் அபாயகரமான நிலையில்  உள்ளது. குறிப்பாக,விலக்களிக்கப்பட்ட அளவுகோல்கள் மற்றும்  வாயு உமிழ்வு தரநிர்ணையத்தை உறுதிப்படுத்துவதற்கான   இறுதி காலநீட்டிப்பு, அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியிடப்படும் சாம்பல் பயன்பாட்டு இலக்கு, நிலக்கரி ஏலம் மற்றும் சுரங்கப்பணிகள்  சீர்திருத்தம் ஆகியவை அபாயநிலையில்  உள்ளது. அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்று அதிகரித்து பேரிடராக  உருபெற்றுள்ள  நிலையில்  குறிப்பாக   நகர்ப்புற நடுத்தர வர்க்கத்து  மக்கள் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த அரசு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதே,  மக்களின் நலனில் இந்த அரசு   அக்கறைக் கொள்ளவில்லை  என்பதற்கு  சான்றாக உள்ளது. இந்த போக்கு இன்று என்றில்லை நெடுநாட்களாகவேத்  தொடர்ந்து கொண்டே  வருகிறது.

இந்த ஒன்றிய அரசு எப்போது பதவி ஏற்றதோ, அப்போதிருந்தே இந்தியா கடலோர பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம் மற்றும்  மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகள் ஆகியவற்றை பெரும் நிறுவனங்கள்  தொழில் புரிவதற்கு ஏதுவாக மாற்றிவருகிறது. இதன்காரணமாக இந்திய ஒன்றியத்தின் சூழலியல்,உடல்நலன் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், கடந்த  ஆண்டு உலகெங்கும் கொரோனா தொற்று பெரும் பிரச்சனையாக  நிலவிய  நிலையிலும்  ஒன்றிய அரசு பெரும் நிறுவனங்கள் தொழில்  புரிவதற்கு   ஆதரவாக  திட்டங்கள்  வகுத்து வந்தது வருத்தத்திற்குரியது.

எப்போதெல்லாம், இந்திய சூழலியல் பாதுகாப்பு  நெறிமுறைகளை  தளர்த்துவதில் ஒன்றிய அரசு அவசரம் காட்டுகிறதோ, அப்போதெல்லாம் ‘பொருளாதார சரிவை ஈடுகட்டுகிறோம்’  என்றே  தெரிவித்து  வருகிறது. இந்நிலையில், இப்போது  முன்மொழியப்பட்டுள்ள  கொடும் சட்டத்தின் வரைவும், சூழலியல் பாதுகாப்பின் மீது  அரசு நடத்தும்   எண்ணற்ற சிறிய சிறியத் தாக்குதல்களும்,   ஒரு கத்தியைப் போல நம் தலைக்கு  மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நாட்டின் குடிமக்களாகிய நாம்  மனித வரலாற்றிலேயே  காணாத  மிகப்பெரிய  சுகாதாரப்   பிரச்சனையை  எதிர்கொண்டுவரும் அதேவேளையில், இந்த அரசோ   சூழலியல் சட்டங்களை தளர்த்துவதில்  முன்னெப்போதையும் விட,   அவசர அவசரமாக நிறுவனங்களுக்கு ஆதரவாக  செயல்பட்டுவருவதும்   வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கட்டுரையாளர்கள்: மீனாட்சி கபூர் , சூழலியல் சட்டங்கள்  மீதான  சுயாதீன  ஆய்வாளர். கிரித்திகா எ .தினேஷ்  சுயாதீன  சூழலியல் வழக்கறிஞர்; தி வயரில் வெளியான கட்டுரை

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments