ஆனைமலை புலி காப்பகத்திற்கான ESZ நிர்ணயம்; வரைவு அறிவிக்கை வெளியிட்டது ஒன்றிய அரசு.

ஆனைமலை

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள ஆனைமலை புலி காப்பகத்திற்கான சூழல் கூருணர்வு மண்டலத்தை (Eco Sensitive Zone – ESZ) வரையறை செய்து அதன் மீதான  பொதுமக்கள் கருத்தைப் பெறுவதற்கான வரைவு அறிவிக்கையை 29.11.2024 அன்று வெளியிட்டுள்ளது ஒன்றிய வன அமைச்சகம்.

தமிழ்நாட்டில் உள்ள 5 புலி காப்பகங்களில் ஆனைமலை புலி காப்பகமும் ஒன்றாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. 958.59 ச.கி.மீ. உள்ளமண்டலப் பரப்பும், 521.28 ச.கி.மீ. வெளி மண்டலப் பரப்பும் என மொத்தம் 1479.87 ச.கி.மீ. பரப்பைக் கொண்ட இப்பகுதி 2007 ஆம் புலி பாதுகாப்பிற்கான காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மற்றும் கோவை மாவட்டத்தின் வால்பாறை மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஆகிய நான்கு தாலுகாக்களின் பகுதிகளை உள்ளடக்கி இக்காப்பகம் அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட பகுதியாகச் சரணாலயமாக, தேசியப் பூங்காவாக இருக்கும் பகுதியை அதன் எல்லையிலிருந்து பத்துக் கிலோமீட்டர் வரைக்கும் ESZ அறிவிக்க வேண்டும். அந்த வகையில் ஆனைமலை புலி காப்பகத்தின் எல்லையின் வடக்குப் பகுதியில் 3.8 முதல் 10 கி.மீ. வரைக்கும், வடகிழக்கில் 0 – 1.0 கி.மீ. வரைக்கும், கிழக்கில் 0 – 2.6 கி.மீ. வரைக்கும், தென்கிழக்கில் 1.7 – 7.6 கி.மீ. வரைக்குமான 767.57 ச.கி.மீ. பகுதிகள் ESZ ஆக வரையறுக்கப்பட்டு வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்குப் பகுதிகளில் உள்ள காடுகளை ஏற்கெனவே கேரள அரசு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளதால் அங்குச் ESZ எல்லையானது 0 கி.மீ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிவிக்கை மீது கருத்து தெரிவிக்க விரும்புவோர் Secretary, Ministry of Environment, Forest and Climate Change, Indira Paryavaran Bhawan, Jorbagh
Road, Aliganj, New Delhi-110 003 என்கிற முகவரிக்குக் கடிதம் வாயிலாகவோ, [email protected] என்பதற்கு மின்னஞ்சல் வாயிலாகவோ தங்கள் கருத்துகளை அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ESZ ஆக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் 183 கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் 54 வால்பாறையில் உள்ள 54 தேயிலைத் தோட்டங்களும் அடங்கும்.  இந்த வரைவு அறிவிக்கை இறுதி செய்யப்படும் பட்சத்தில் ESZ பகுதிகளில் சுரங்கம், குவாரிகள், கல் அரவை ஆலைகள், அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், பெரிய நீர்மின் திட்டங்கள், நச்சுமிகு பொருட்களின் உற்பத்தி, மர அறுவை ஆலைகள், செங்கல் சூளைகள், கழிவு நீரை வெளியேற்றுதல், பெரிய நிறுவனங்களால் அமைக்கப்படும் வணிக ரீதியிலான கால்நடைப் பண்ணைகள் உள்ளிட்டவை முற்றிலும் தடை செய்யப்படும். மேலும் 19 வகையான நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்படும். ஆனால், பொதுமக்களின் குடியிறுப்புகளோ பிற வாழிடங்களோ பாதிக்கப்படாது.

ESZ அறிவிக்கை செய்வதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு 9.02.2011 அன்று வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலானது மூன்று வகையாக ESZ ஆக அறிவிக்கை செய்யப்பட பகுதிகளில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.

  1. முற்றிலும் தடை செய்யப்பட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் (prohibited Activities)
  2. ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடுகள் (Regulated Activities)
  3. அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் (Permitted Activities)

 

 

இக்காப்பகமானது கிழக்கில் பரம்பிக்குளம் புலி காப்பகம், தென் மேற்குப் பகுதியில் இரைவிகுளம் தேசியப் பூங்கா மற்றும் சின்னர் கானுயிர் சரணாலயம் ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. ஆனைமலை புலி காப்பகம் பல அரிய , அருகிவரும் மற்றும் அபாயத்தில் உள்ள கானுயிர்களைக் கொண்டுள்ளது. 70 க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், 70 வகையான நீர்நில வாழ்விகள், 120 வகையான ஊர்வன, 300 வகையான பறவைகள் மற்றும் 80 வகையான பாலூட்டிகள் இக்காப்பகத்தில் வாழ்கின்றன. குறிப்பாக, யானை, பெருங்கணத்தான், கடமான், புள்ளிமான், காட்டெருது, காட்டுப் பன்றி, நீலகிரி மந்தி, கரடி, இருவாசி உள்ளிட்ட கானுயிர்கள் இங்கு காணப்படுகின்றன.

– செய்திப் பிரிவு

ATR Draft Notofication
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments