பேரழிவு சினிமா

3 mad max

பேரழிவுகள் குறித்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் தொற்றுநோய்கள், போர், அல்லது வேற்றுகிரக வாசிகளின் படையெடுப்பைப் பற்றியவையாக மட்டுமே இருக்கின்றன. இயற்கைப் பேரழிவுகள் என்று வரும்போது திரைப்படங்கள் ஏன் காலநிலை மாற்றத்தை ஒருவித ஒவ்வாமையுடனேயே அணுகுகின்றன?

கலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதோ, வாழ்க்கைதான் கலையைப் பிரதிபலிக்கிறதோ, எந்தக் கோணத்தில் எடுத்துகொண்டாலும் 21அம் நூற்றாண்டு ஒரு மாபெரும் ஹாலிவுட் திரைப்படத்தை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருப்பதான ஒரு உணர்வே ஏற்படுகிறது. சிறிய தொற்றாகத் தோன்றிய இப்பெருந்தொற்று, இன்று நம் முன் பேருருவம் எடுத்து நிற்கிறது. இதற்கு முன் ஆழிப்பேரலைகள், சூறைக்காற்று வீசியடிப்பது போன்ற இயற்கை நிகழ்வுகள் தொடர்பான செய்திகளும் காணொளிகளில் காட்டப்படும் காட்சிகளும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தைப் பார்க்கும் கிளர்ச்சியையே நமக்கு அளித்திருக்கின்றன. ஒரு புதிரான விஷயம் என்னவென்றால், இயற்கைப் பேரிடர்களைப் பற்றிய செய்திகளோ திரைப்படங்களோ காலநிலை மாற்றத்தைக் குறித்து மிக அரிதாகவே பேசுகின்றன.

மனித நாகரிகத்திற்கு ஏற்படும் அபாயங்களை மாபெரும் பொருட்செலவில் சித்தரிக்கும் the Book Of Eli, Mad Max: Fury Road, Alita Battle Angel  போன்ற திரைப்படங்களாகட்டும், அல்லது தொற்றுநோய்கள் குறித்த Zombieland, World War Z , Contagion, Inferno போன்ற படங்களாகட்டும், வினோதத் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் கதாநாயகனை (I Am Legend, Rise of the Planet of the Apes) பற்றிய கதைகளாகட்டும் – இவை அனைத்தும் பூமிக்குப் பேரழிவுகள் ஏற்படுவது குறித்த நமது அதீதக் கற்பனைகளைத் திருப்திபடுத்துவதாக மட்டுமே இருக்கின்றன. நாம் அன்றாடம் வெளியேற்றும் கரியமில வாயுவிற்கும் இத்தகைய பேரிடர்களுக்கும் தொடர்பிருக்க முடியும் என்பதை நம்மால் சிந்தித்துக்கூடப் பார்க்கமுடிவதில்லை.

வேறு சில படங்கள் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள மிகவும் தவறான அணுகுமுறைகளை வழிநடத்தக்கூடியவையாக இருக்கின்றன. 2003இல் வெளியான Core திரைப்படத்தில், பூமியின் மையச் சுழற்சி நின்றுவிடுகிறது. இதை மீண்டும் இயங்கச்செய்ய அணு வெடிப்புகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதே போல டேனி பாயில் இயக்கிய Sunshine படத்தில் செயலிழந்துவிடும் சூரியனைச் செயல்படுத்த அணு வெடிப்புகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கிறிஸ்டபர் நோலன் இயக்கிய Interstellar-இல் பயிர்களின் அழிவு மட்டுமே மையக் கதையாக உள்ளது. ஆஸ்கர் விருது வென்ற Parasite திரைப்படத்தை இயக்கிய பாங் ஜூன் ஹோ சில வருடங்களுக்கு முன்பு இயக்கிய Snowpiercer, காலநிலை மாற்றத்தைத் தலைகீழாக்கும் முயற்சி தோல்வியடைந்து முற்றிலும் புதியதொரு பனியுகம் உருவாகிவிடுவதைக் கதைக்களமாகக் கொண்டது. இத்தகைய படங்கள் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்கு பதிலாக அதைக் கற்பனைச் சித்தரிப்பாக மட்டுமே எடுத்தாள்கின்றன.

ஹாலிவுட் படங்களில் ஓரளவேனும் பேரழிவுகளைக் குறித்துக் கணிசமான அளவு நேர்மையாக எடுக்கப்பட்டது என்றால் ரோலண்ட் எம்மரிக் இயக்கிய The Day After Tomorrowவைக் குறிப்பிடலாம். ஜெர்மானிய இயக்குனரான இவர், independence Day, Godzilla போன்ற மாபெரும் பொதுச் சமூக நாசத்தைக் காட்சிப்படுத்தும் படங்கள் மூலம் அறியப்படுபவர்தான் என்றாலும் இவரது முந்தைய படங்களைப் பார்க்கும்போது சுற்றுச்சுழல் குறித்த பிரக்ஞை அவர் கதைகளில் இருந்துவருவதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. தமது மாணவப் பருவத்தில் இவர் இயக்கிய அறிவியல் புனைவான The Noah’s Ark Principle, விண்வெளி நிலையம் ஒன்று புயலைத் தூண்டிவிடும் அபாயத்தைச் சித்தரிக்கிறது. மற்றொரு அறிவியல் புனைவான Moon 44,

பூமியில் உள்ள கனிம வளங்கள் எல்லாம் அழிந்துவிட்ட நிலையில் அவற்றைத் தேடிப் பிரபஞ்சம் முழுதும் சுற்றித் திரியும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கதை.

ஆனால் எத்தகைய தீவிரமான சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் வெகுஜனத்திற்காகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்களில் அதன் தீவிரம் நீர்த்துப்போகவே செய்கிறது. எம்மரிக்கின் படங்களிலும் இந்தக் குறைபாட்டைக் காணமுடிகிறது. ஆனால் இவரது படங்களில் ஒரு சில காட்சிகள்  அவற்றின் அரசியல் கருத்துகளுக்காக முக்கியத்துவம் பெற வேண்டியவை. நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் The Day After Tomorrow. மாபெரும் வசூல் ஈட்டிய திரைப்படம். ஒரு சமூகப் பிரச்சினையைத் தனது கதைக்களமாக கொண்ட படைப்பு, வெகுஜன ஏற்பைப் பெறமுடியும் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால் இந்தப் படத்தின் எதிரொலியாகக் காலநிலை மாற்றம் திரைப்படங்களில் விவாதிக்கப்படும் சூழல் உருவாகாதது ஆச்சரியத்திற்குரியதே.

ஆவணப்படங்களில் சில மாற்றங்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, ஆஸ்கர் விருது பெற்ற, 2006இல் வெளியான An Inconvenient Truth. ஆனால் புனைவு இயக்குநர்கள் காலநிலை மாற்றம் குறித்துப் பேசுவதில் பெரும் தயக்கத்தையே காட்டிவருகிறார்கள். 2012 படத்தில் உலகம் அழிவதற்கான காரணங்களாகக் கடல் பேரலைகளும் சூரியப் பிழம்புகளுமே காட்டப்படுகின்றவே ஒழிய அவை மனிதச் செயற்பாட்டின் விளைவுகள் என்்பது பதிவு செய்யப்படவில்லை.

The Day After Tomorrow படத்தின் வடிவமே அது ஏன் ஒரு முதலும் கடைசியுமான முயற்சியாக நின்றுவிட்டது என்பதற்கான சில பதில்களைக் கொண்டிருக்கிறது. காலநிலை ஆராய்ச்சியாளர் ஜாக் ஹால் அண்டார்ட்டிக் பனிப்படுகையில் விழும் பெரும் விரிசலில் மாட்டிக்கொள்வதிலிருந்து தொடங்குகிறது படம். இந்நிகழ்வு குறித்து அமெரிக்கத் துணை ஜனாதிபதியின் அலட்சியத்தை அடுத்த காட்சியாக வைக்கும் இயக்குநர், மேற்கொண்டு தனது படத்தை அரசியல் கோட்பாடாக எடுத்துசெல்ல விரும்பாமல் கதையை வேறு திசையில் செலுத்துகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் டோக்கியோ நகரில் ஆலங்கட்டி மழை சரமாரியாகப் பொழிகிறது. லாஸ் எஞ்சலஸ் நகரைச் சூறைக்காற்று சிதறடிக்கிறது, மாபெரும் கடலலைகள் மான்செஸ்டரின் வானளாவிய கட்டிடங்களை மூழ்கடிக்கின்றன. நியூயார்க் நகரம் முழுதும் பனியால் சூழப்படுகிறது. இத்தகைய காட்சிகள் அறிவியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டது போல் தெரிந்தாலும் அடுத்த முறை புகை உமிழும் வாகனம் ஒன்றை வாங்குவதற்குத் திட்டமிடும்போது ஒரு சிறிய மனவுறுத்தலையாவது உருவாக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. படத்தின் இரண்டாவது பாதி முழுதும் ஜாக் தமது மகனை நியூயார்க் நகரில் தேடிச் செல்லும் பயணத்தையே நீட்டிச் செல்கிறது. மனித நாகரிகத்திற்கு நேரும் ஒரு மாபெரும் அழிவைக் காட்டிய பிறகு ஒரு இயக்குநரால் வேறு எதை நோக்கி நகரமுடியும்? இத்தகைய படங்களில் மக்கள் பார்க்க விரும்புவதெல்லாம் பேரழிவுகளிலிருந்து கதாநாயகன் தனி ஒருவனாக உலகைக் காப்பாற்றும் சுவாரசியத்தையே. ஒருவேளை சுற்றுச்சூழல் பிரச்சினை இரண்டு மணிநேர வெகுஜன திரைப்படங்களுக்குள் அடங்காத பெரும் பேசுபொருள் என்பதாலேயே படைப்பாளிகள் அவற்றைத் தவிர்க்கிறார்களா என்கிற கேள்வியும் இதனால் எழுகிறது. அப்படியே பேசினாலும் அவர்கள் முதலில் நாம் அனைவரும் அன்றாடம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையே சுட்டிக்காட்ட நேரிடும். தங்கள் பார்வையாளர்களை விமர்சிக்கும் துணிவை எந்த இயக்குநரும் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

மேலும் திரைப்படம் என்னும் மாபெரும் துறை உருவாக்கும் இயற்கை பாதிப்புகள், காற்று மாசுபாடு, பொருட்செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் படைப்பாளிகள் முதலில் விமர்சித்துக்கொள்ள வேண்டியது தங்களைத்தான்.

மெளன யுகம் தொடங்கி இன்றுவரை திரைப்படத் துறை அசாதாரணமான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. CGI போன்ற தொழில்நுட்பங்கள் நம்முடைய மிகவும் அதீதமான கற்பனைகளைக்கூடக் காட்சிப்படுத்துகின்றன. ஆனால் இத்தகைய தொழில்நுட்பத்தின் வருகை சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை எவ்வகையிலேனும் குறைத்திருக்கிறதா? திரைப்படத் தயாரிப்பு உண்டாக்கும் பாதிப்புகள் நீண்டகால விவாதமாக இருந்துவருகிறது. Lord of the Rings, The Hobbit Trilogy போன்ற தொடர்ப்படங்கள்  நேரடி வைத்துப் படம்பிடிக்கப்பட்டதால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. பெரும் செலவில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் அதனளவில் நேரடியான பல பாதிப்புகளை உருவாக்குகிறது. படம் எடுக்கப்படும் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மக்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்துகின்றன, செயற்கையாக அமைக்கப்படும் செட் படப்பிடிப்பு முடிந்த பின்பு உருவாக்கும் குப்பைகள் எனப் படத்தின் பிரம்மாண்டத்தைப் பொறுத்து பாதிப்பின் அளவும் அதிகரிக்கிறது. இன்று வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களில் திரைப்படத்துறைக்குக் கணிசமான பங்கு இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கும் அரசு பட நிறுவனத்திற்குத் தீவிரமான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைக் குறைக்க முயல்கிறது. முடிவடைந்த ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் வரை ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளுக்கும் ஏற்ப அவ்வளவு பணம் புழங்கும் இதே துறை சுற்றுச்சூழல் பராமரிப் எதிர்ப்பார்ப்பதும் சற்று முரணானதாக இருக்கிறது. ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்ட நடிகர் வாக்கின் பீனிக்ஸ் காலநிலை மாற்றத்தைப் பற்றிப் பேசியபோது அது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இத்தகைய அழிவை ஏற்படுத்தும் தன்மைகளைக் கொண்ட துறையில் இயங்கும் இயக்குனர்கள் காலநிலை மாற்றத்தைக் குறித்த விவாதத்தைத் தங்களிடமிருந்தே தொடங்க முயல்வார்களா?

  •  – நிக்கோலஸ் பார்பர், கய் காஸ்ட்லி.  தமிழில் ராகேஷ் தாரா

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments