காலநிலை மாற்றமும் கொசுக்கள் பரப்பும் தொற்றுநோயும்!

அண்மையில் அரேபிக்கடலோரம் உருவான ’டவ் தே’ புயல் கேரளா கர்நாடகா கோவா மகாராஷ்டிரா வழியாகப் பயணப்பட்டு குஜராத்தில் வலுவிழந்தது. இந்த ஆண்டின் மிகப்பெரும் புயலாகக் கருதப்பட்ட இது கோவா மகாராஷ்டிரா கடலோர எல்லைகளைக் கடப்பதற்கு மட்டும் மே 16 மற்றும் 17 என இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டது. வடக்கு இந்தியப் பெருங்கடலின் புயல் பருவமாகக் கருதப்படும் மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தின் முதல் புயல் மழை இது. இதே காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவில் நோய் பரப்பிக் கொசுக்களில் இருந்து பரவும் (Vector Borne Diseases) தொற்றுகளான மலேரியா மற்றும் டெங்கு அதிகம் மக்களிடையே பரவுகின்றன.

நோய் பரப்பியிலிருந்து பரவும் தொற்றுகள் என்றால் என்ன?
நோய்க்கு காரணமான கிருமிகளை கொசுக்கள் போன்ற பூச்சிகள் கடிப்பது, குத்துவது போன்ற மனிதர்களின் மீதான தாக்குதல்களின் வழியாக ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்குக் கடத்துவது நோய் பரப்பியிலிருந்து பரவும் தொற்றுகள் எனப்படும்.பெரும்பாலும் கொசுக்களே இதுபோன்ற நோய் பரப்புதலில் அதிகம் ஈடுபடுகின்றன.குறிப்பாக மூளை அழற்சி நோய், மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்டவை கொசுக்களால் பரவுகின்றன.

அந்த வகையில் மகாராஷ்டிராவின் பூனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வட் நகரத்தில் பெருமழைக்காலத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் குறித்தும் அதில் காலநிலை மாற்றத்தின் தாக்கமும் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் மகாராஷ்டிர மாநில அரசும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன.

நோய்ப்பரப்பியிலிருந்து பரவும் நோய்கள் என்றாலே அது ஏற்படுத்தும் மரணங்கள், தொற்றுச் சுமை, சுகாதார அளவிலான ஏற்றத்தாழ்வு, சமூகப்பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு, சுகாதாரப் பணிகளில் பின்னடைவு என அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். வெப்ப அழுத்தம்,புயல் மற்றும் வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் தாக்கத்தைவிட இதுபோன்ற நோய் பரவலின் தொற்றுச்சுமை மற்றும் பரவலான பாதிப்பு ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் இந்த நோய்ப் பரப்பும் கொசுக்கள் முட்டையிடுவது முதல் அது முழுக் கொசுவாக மாறுவது வரையிலான வாழ்க்கைச் சுழற்சியில் தட்பவெப்பம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் தாக்கம் இருந்தது. இதுபோன்ற நோய்ப்பரவிகளின் வளர்ச்சியும் தட்பவெப்பம் குறித்தும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மூ காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பரவுதல் தன்மை 2-3 மாதங்களுக்கு இருக்குமென்றும் அதுவே ஒரிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அந்த தட்பவெப்பத்துக்கு ஏற்ப அது குறைந்து காணப்படும் என்றும், மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் இந்தப் பரவுதல் காலம் அதிகமாகவே காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

மலேரியா பரப்பும் அனோபெலஸ் வகைக் கொசுக்கள் வளர 20-30 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெப்பம் தேவையாக இருக்கிறது.ஆனால் அதுவே ப்ளாஸ்மோடியம் விவாக்ஸ் வகை கொசுக்களுக்கு குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியஸும் , ப்ளாஸ்மோடியம் ஃபால்சிபரம் வகைக் கொசுக்களுக்கு பரவுதலுக்கான தட்பவெப்பம் 19 டிகிரி செல்சியஸாக இருக்கிறது.ஈரத்தன்மையான பருவமா அல்லது வறண்ட பருவமா என்பதைப் பொருத்தும் மலேரியா கொசுக்களின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.இருந்தாலும் மலேரியா பாதிப்பு எண்ணிக்கைக்கும் மழைக்குமா நேரடியான தொடர்பு இன்றுவரை ஆய்வு செய்யப்படவில்லை. மழை அளவைவிட மழை பெய்யும் கால அளவுக்கும் நோய் பரவலுக்கும்தான் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகளின் வழி தெரிய வருகிறது. மேலும் காற்றில் ஈரப்பதத்தன்மை 55 முதல் 80 சதவிகிதம் இருக்கும் நிலையில்தான் மலேரியா கொசுக்களின் வளர்ச்சியும் அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மலேரியா பரவுதலுக்கான தட்பவெப்ப அளவீடுகள் மற்றும் காற்று ஈரப்பத அளவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் டெங்கு பரவுதலுக்குக் கிடைக்கப்பெறவில்லை.

மகாராஷ்டிராவின் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வத் நகரங்களில் இந்த மலேரியா கொசு பரவுதல் தன்மை குறித்து மாநில சுகாதாரத்துறை 2010 முதல் 2018 காலகட்டம் வரையிலான எட்டு வருடத்தின் தினசரி மற்றும் மாதாந்திர மழை அளவை ஆய்வு செய்தது.  ஆய்வின் முடிவுகளில் வெறும் 8 செ.மீ மழை ஐந்து மாதகாலத்துக்குப் பொழிவதே மலேரியா கொசுக்கள் வளரப் போதுமான கால அவகாசமாகக் கணிக்கப்பட்டது. மேலும்  மலேரியா பரவுதலின் வருடாந்திர மற்றும் மாதாந்திர பாதிப்பு எண்ணிக்கைகளை ஆய்வு செய்ததில் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான

காலக்கட்டத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. எட்டு வருட காலத்தில் வருடாந்திர பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்திருந்தாலும் குறிப்பிட்ட இந்தக் கால அளவில் மட்டும் அந்த வருடத்தின் பிற மாதங்களுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதே 2010-2018 காலக்கட்டத்தில் டெங்கு பரவுதல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதில் 2012ம் ஆண்டு தொடங்கி டெங்கு நோய்த்தாக்கம் இதே புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வத் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர், செப்டம்பர் மாதங்களில் டெங்கு தாக்கம் அதிகம் காணப்படுகிறது. அதற்கு அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் அதிக டெங்கு தாக்கம் தென்படுகிறது. அதிகபட்சமாக 2017ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தப் பகுதியில் 600க்கும் மேற்பட்ட டெங்கு நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் மலேரியாவைவிட டெங்கு பரவலில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக அதிககாலம் மழை பொழிவது பெண் கொசுக்களுக்கான இனப்பெருக்கம் செய்யும் தளத்தை (Breeding sites) அதிகப்படுத்துகிறது.இது கொசுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நிலையில்  பெண் கொசுக்கள் கிருமிகளை தன்னுள் கடத்துவதற்கும் அதனைத் தான் கடிப்பவர்களில் பரப்புவதற்குமான வாய்ப்பையும் அதிகப்படுத்துகிறது.

இறுதியாக இந்த ஆய்வின் மூலம் காற்று ஈரப்பதம் 70 முதல் 82 சதவிகிதம் வரை இருக்கும் நிலையிலும் தட்பவெப்பம் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் நிலையிலும் மலேரியா நோய் பரவுதலுக்கான ஏதுவான சூழலாக உள்ளது என்றும் ,5 செ.மீ தொடங்கி 18 செ.மீ வரையிலான மழை அளவு நோய்ப்பரப்பிகள் இனப்பெருக்கத்துக்கான ஏதுவான சூழலாக இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் டெங்கு பரவுதலுக்கான தட்பவெப்ப நிலை மலேரியாவுக்கான தட்பவெப்ப நிலை அளவுதான் என்றாலும் இதற்கான காற்று ஈரப்பத அளவு 75 முதல் 80 சதவிகிதம் வரைத் தேவையாக இருக்கிறது.

கொரோனா பேரிடருக்கு நடுவே இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்தடுத்து புயல் எச்சரிக்கைகளைக் கணித்துள்ள நிலையில் இதுபோன்ற நோய்ப்பரப்பி வழியாக ஏற்படும் தொற்றுகளையும் கண்காணிக்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது.

 

– ஐஷ்வர்யா கோவிந்தராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments