வாழ்க்கையில் எந்த இலக்குகளுமின்றி எனக்கே எனக்கேயான பிரச்சினைகளுடன் காற்றின் போக்கில் அலைந்த ஒரு காலத்தில் அப்பாவின் அழுத்தத்தின்பேரில் கல்லூரியில் கட்டுமானப் பொறியியலைத் தேர்ந்தெடுத்திருந்தேன். என்றாலும் நாளடைவில் அதில் கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வம் தொற்றிக்கொள்ள அதுவே பின்னர் சிந்தனையும் பேச்சும் மூச்சுமாக மாறிவிட்டிருந்துது. ஒரு கட்டத்தில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் எவரொருவரையும்போலவே எனக்குள் எனக்கே எனக்கான ஒரு மாளிகை கட்டும் கனவு துளிர்விடத் தொடங்கியிருந்தது.
இளங்கலைப் பொறியியல் படித்து முடித்ததும் பெங்களூரில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் சைட் எஞ்சினியராக வேலையில் சேர்ந்திருந்தேன். கிராமத்துப் பின்னணியிலிருந்து ஒரு பெருநகரத்திற்கு வந்து அதுவும் உயர்தட்டு வர்க்கத்தினருக்கான வீடுகளின் கட்டுமானங்களில் ஈடுபட்டிருந்த அனுபவம் எனக்குள் தீவிரமான தாக்கங்களை உருவாக்கத் தொடங்கியிருந்தது.
பொதுவாகவே கலை ஆர்வம் இருந்த எனக்கு, வீடுகளின் உள்ளலங்கார வடிவமைப்புகளில் (Interior design and decoration) அதீத ஆர்வம் தொற்றியிருந்தது. அப்போது மிகப்பிரபலமாக இருந்த உள்ளலங்காரங்கள் குறித்தப் பல்வேறு பருவ இதழ்களைப் பொக்கிஷம்போல வாங்கி வாசிக்கத் (படம் பார்க்கத்) தொடங்கியிருந்தேன். பார்க்கும் கட்டிடங்களின் உள்ளலங்காரங்களில் எல்லாம் மிகச்சிறந்தவையும் கவர்ச்சிகரமுமாக இருந்தவை எல்லாம் என் கனவில் உருவாகிக்கொண்டிருந்த எனக்கே எனக்கான கனவு மாளிகையில் இடம்பிடிக்கத் தொடங்கின. “இப்படித்தான் இருக்க வேண்டும் எனது வரவேற்பறை, இப்படித்தான் இருக்க வேண்டும் கதவுகள், இப்படித்தான் இருக்க வேண்டும் சுவர்கள்…” என்று எனக்குள் உருப்பெற்று வந்த அந்த கனவு இல்லமானது என் வாழ்விற்கும் ஓட்டத்திற்கும் புதிய அர்த்தத்தைக் கொடுக்கத் தொடங்கியது.
தொடர்ந்து முதுகலைப் பொறியியல் படிக்கச் சென்று அடுத்து கட்டுமான வடிவமைப்புத் துறைக்கு மாறிவிட்ட போதிலும் எனக்குள் உருப்பெற்று வந்த கட்டிடம் பழையன களை ந்து புதியன புகுவதுபோல புதிது புதிதாய் நான் தெரிந்துகொண்ட அம்சங்களை உள்ளடக்கி புதுப்பொலிவு பெற்று வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் என் கனவிலிருந்த வசந்த மாளிகையை வரைபடமாக்கி அதற்கு உயிரூட்டவும் தொடங்கிவிட்டேன்.
அந்த ‘சிறிய’ மாளிகை வெளிப்புறத்தில் மைசூர் அரண்மனைபோன்று கம்பீரமாகவும் உட்புறமோ உயிரோட்டமுள்ள திருவாங்கூர் அரண்மனைபோன்றும் இருந்தது. அதன் பின்புறம் ஒரு விசாலமான புல்வெளியுடன்கூடியத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தின் நடுவே ஒரு சிறிய செயற்கை நீரூற்றுடன்கூடிய அல்லிக் குளமுமும் அதில் மீன்களும் நீந்திக்கொண்டிருந்தன. சுற்றிலும் வெண்ணிற அன்னங்கள் வலம்வந்து கொண்டிருந்தன. வீட்டின் பின்புறம் இருந்த சுவர்களால் மறைக்கப்படாத உணவு உண்ணும் அறை, தோட்டத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது. தோட்டத்தின் எஞ்சிய மூன்று பக்கங்களிலும் நீண்ட திண்ணைபோன்ற ஓட்டுக் கூரை வேய்ந்த திண்ணை சூழ்ந்திருந்தது. திண்ணையின் சுவர்களில் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட ஓவியங்களும் பழங்காலக் கலைப்பொருட்களும் பதிக்கப்பட்டிருந்தன. நீண்ட விசாலமான அந்தத் திண்ணையை கற்தூண்களும் மரத்தாலான உத்திரங்களும் தாங்கி நின்றன. மேலேயிருந்து பார்த்தால் அந்த விசாலமான தோட்டம் வீட்டோடு திண்ணையால் இணைக்கப்பட்டு காரைக்குடி வீடுகளின் நடு முற்றம்போல அமைந்திருந்தது. இந்த தோட்டமே அந்த கனவு மாளிகையின் ஆன்மாவாக அமைந்திருந்ததால் நான் என் ஓய்வு நேர்த்தையும் வேலை நேரத்தையும் கழிப்பதற்கான எல்லாமுமாக அதுவே இருந்தது. வீட்டின் படுக்கையறைகளும்கூட குட்டி நூலகமும்கூட தோட்டத்தை நோக்கியபடி விசாலமான பால்கனிகளைக் கொண்டிருந்தன.
புதிய புதிய கற்றல் அனுபவங்களோடும் அவதானிப்புகளுடனும் வரைபடம் ஒவ்வொரு நாளும் திருத்தப்பட்டு முழுமை பெறத் தொடங்கவும் விரிவான மதிப்பீடும் தயாரிக்கத் தொடங்கினேன். தோசையைவிட இட்டிலி விலை மலிவு என்று வயிற்றை நிறைக்க எனக்குப் பிடிக்காத இட்டிலியை உண்ணும் ‘பேச்சிலர்’ வாழ்க்கைச் சூழலில் இருந்தபோதும்கூட, யாரை வைத்துக் கட்டுமானங்கள் செய்வது வேலையாட்கள் எங்கிருந்து வருவார்கள் எங்கே தங்குவார்கள் கட்டுமானப் பொருட்கள் எங்கே வாங்குவது என்பது வரையிலும் சிந்தனைகள் நீண்டன. அந்த கனவு மாளிகையில் அடுக்குவதற்கான கலைப்பொருட்களும்கூட வீட்டில் சேகரமாகத் தொடங்கின. நான் சென்னைப் பெருநகரில் இப்போது வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட என் ஆன்மா நிலைகொண்டிருந்த என் சொந்த கிராமத்திலேயே என் மாளிகையும் உருவாகிக்கொண்டிருந்தது.
இந்த சூழலில்தான் திருமணமும் தொடர்ந்து கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டமும் எனக்கு பூவுலகின் நண்பர்களோடான அறிமுகமும் சூழல் குறித்த விரிவான வாசிப்பும் துளிர் விட்டுக்கொண்டிருந்தது. எனது வாசிப்பு ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து, ஆனி லியோனர்டின் ‘பொருட்களின் கதை’ புத்தகத்தை என் சிந்தனைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தபோதுதான் அந்தக் கனவு மாளிகை சரிந்து விழத் தொடங்கியது.
ஆபரணத்துக்கான தங்கம் எப்படி எடுக்கப்படுகிறது என்று ஒருவர் ஒரு முறை அறிந்துகொண்டால் (அவர் சமூக – சூழல் அக்கறையும் உள்ளவராக இருப்பின்) அவருக்குத் தங்கத்தின்மீது கடும் வெறுப்பு வந்துவிடுமென்றும் அவர்கள் ஒருபோதும் அதன்மீது ஆசைகொள்ள மாட்டார்கள் என்றும் சொல்வார்கள். என் நினைவு தெரிந்த நாளிலிருந்தே தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் அணிந்தே பவனி வந்திருந்த நான் ‘பொருட்களின் கதை’ வாசிப்பினூடாக இனியெப்போதும் தங்க ஆபரணங்கள் உட்பட அத்தியாவசியமற்ற கைக்கடிகாரம்கூட அணிவதில்லையென்ற முடிவிற்கு வந்திருந்தேன். அப்போதுதான் திருமணமாகியிருந்த சூழலில் எனது ‘அந்தஸ்த்தையும் கெத்தையும்’ காட்டுவதற்கான ஒன்றை நான் தவிர்ப்பது என் மனைவிக்கு மட்டுமின்றி எனக்குமேகூட சங்கடம் தருவதாகவே இருந்தது. என்றாலும் என்னைப்போன்ற இத்தகைய ‘பிரிவிலேஜ்ட்களின் எளிமை’கூட ஒரு சமூக மூலதனம்தான் என்பதையும் நான் பின்னாளில் உணர்ந்துகொண்டேன். அதாவது எல்லா வசதிகளும் வளங்களும் வாய்க்கப்பெற்ற ஒருவர் சற்று எளிமையைக் கடைபிடிப்பதால் உண்மையில் அவர் இழப்பதாய் எண்ணும் எதனையும் இழப்பதில்லை என்பதோடு, அதுவேகூட ஒரு மதிப்பாகவும் கெத்தாகவும் விரைவில் மாறிவிடுகிறது.
பொருட்களின் கதை என்னை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க நான் உற்பத்திப் பொருட்களின் (நுகர்பொருட்களின்) சூழல் தாக்கம் குறித்து அதீத கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தேன். இந்தச் சூழலில் எனது கனவு மாளிகை கொஞ்சம் கொஞ்சமாக என் மனதிற்குள்ளேயே சிதிலமடைடைந்து உடைந்து நொறுங்கத் தொடங்கியது. என்றாலும் இது என் வாழ்விற்கு முன்பு கொடுத்திருந்த எந்த அர்த்தத்தையும் இப்போது கெடுத்துவிடவில்லை. மாறாக புத்தம் புதிய அதிக நியாயமான அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டிருந்தது. அதே காலகட்டத்தில் நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டில் வீட்டு முதலாளியால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், புறநகர்ப் பகுதியில் ஒரு அடுக்கத்தில் வீடு (flat) வாங்குவது என்று முடிவு செய்தோம். சென்னையில் அதுவரையில் வீடு வாங்கிக் குடியேறும் எண்ணமோ அதற்கான சேமிப்புகளோ வருவாயோ அப்போது இல்லையென்றாலும் வங்கிக் கடனின் தயவோடு விரைவாகவே அந்த காங்கிரீட் கட்டிடத்தில் குடியேறினோம். விசாலனமானதொரு தோட்டத்திற்கான கனவு ஆறுக்கு ஆறு அடி பால்கனியாகவும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று தயக்கத்தோடே உருவான சிறு மாடித்தோட்டமாகவும் சுருங்கிப் போனது.
இந்த நாட்களில், எனது கவனம் நான் கல்லூரி காலத்தில் என் தனிப்பட்ட ஆர்வத்தினால் தெரிந்துகொண்டிருந்த மரபுக் கட்டுமானங்கள் மற்றும் லாரி பேக்கர் பாணியிலான கட்டுமானங்களைக் கூடுதலாக அறிந்துகொள்வதை நோக்கித் திரும்பியது. அதுபற்றி அதிகம் வாசிக்கவும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுதவும் தொடங்கினேன். இதுவே செத்துப்போயிருந்த எனது காங்கிரீட் கனவு மாளிகைக்கு மீசையும் மருவும் வைத்து மரபுக் கட்டுமான வீடாக மாற்றத் தொடங்கியது. என்றாலும் இது எனது ஆசையே அன்றி தேவையல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நிலையை நான் இப்போது அடைந்துவிட்டிருந்தேன். ஆம், ஆர்கானிக் சர்க்கரை என்றால் எப்படி வாய்நிறைய அள்ளித் தின்னவேண்டியதில்லையோ அப்படியே மரபுக் கட்டுமானமும்கூட என்று புரிந்துகொண்டிருந்தேன்.
இன்றும்கூட எனக்குள்ளேயே இருக்கும் ஒரு சூழல் நலன் விரும்பியும் நுகர்வு மோகியும் அடிக்கடி மோதிக்கொள்ளும் களமாக இது அமைந்திருக்கிறது. அந்த நுகர்வு மோகி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘சின்னதாய்’ ஒரு ‘எளிய’ வீட்டிற்கான கனவை என்னுள் தூண்டிக்கொண்டே இருக்கிறான். நான் அதனை நிராகரித்து விடாதிருப்பதற்கான நியாயங்களை அவன் எப்போதும் தயாராய் வைத்திருக்கிறான். இந்த நியாயங்களோடு கூடவே ‘நாலுபேரடங்கிய’ நம் சமூகத்தின் அழுத்தம் வேறு. எப்போதெல்லாம் நான் மரபுக் கட்டுமானங்களிடம் நெருங்கிச் செல்கிறேனோ அப்போதெல்லாம் இந்த ‘புதிய மரபு மாளிகைக்கான’ நியாயங்கள் உக்கிரமாகின்றன. ஆனால், ஏராளமான இந்த நியாயங்களுக்கு எதிராக என்னுள் இருக்கும் சூழல் நலன் விரும்பிக்கு இருக்கும் ஒரே நியாயம் என்னவென்றால், ‘என்னதான் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு இரண்டாவது வீடு’ என்பது ஒரு அநியாயம் என்பதே!
சற்று ஆழமாக உற்றுநோக்கும்போது புறச்சூழல்களின் அழுத்தத்தைப் புறந்தள்ளிவிட்டால் – எனக்குள் எழும் பேராசையை – என்னால் மிக எளிதாகவே புறந்தள்ளிவிட முடிகிறது. கலைப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆவல் கொண்டவனாய் இருந்த நான் இப்போது என்னைச் சுற்றிலும் குவிந்துகிடக்கும் குறைந்தபட்சப் பொருட்களையும்கூட வெறுப்பவனாய் மாறியிருக்கிறேன். பலரும் வியக்கும் பிரம்மாண்டங்கள் என்னைக் கடுப்பேற்றுகின்றன. வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் மெத்தென்ற ‘சோபா’, ‘டைனிங் டேபிள்’ என எனது பெரும்பாலான நுகர்பொருட்கள் என்னைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் சுமையாகிப் போயின. தினமும் தண்ணீர் தேவைப்படும் ஒரு பூச்செடிகூட என் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இல்லை.
நான் மிகவும் விரும்பி வாங்கியக் கைக்கடிகாரம் (பின்னாளில் அதனை நண்பருக்குக் கொடுத்துவிட்டேன்) மட்டுமின்றி வாசித்து முடித்த – வாசிக்காத புத்தகங்கள்கூட இப்போது சுமையாகிப் போயின. புத்தகங்களை வாங்கிக் குவித்து அடுக்கி அழகு பார்த்த நான் அவற்றை அள்ளி வழங்கி என் சுமையைக் குறைத்துக் கொள்பவனாகிவிட்டேன். “எப்படி இவ்வளவு நல்ல புத்தகங்களையெல்லாம் தூக்கி குடுக்குறீங்க?” என்று பலரும் கேட்கிறார்கள். மீண்டும் மீண்டும் தேவைப்படும் என்ற புத்தகங்களைத் தாண்டி பெரும்பாலான புத்தகங்களை நான் கொடுத்துவிட்டிருந்தேன். என்னால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்று எனக்கே சற்று வியப்பாக இருந்தது. உண்மையில் நான் எதனையும் இழக்கவில்லை என்பதையும் என்னை அழுத்திக்கொண்டிருந்த எனது நுகர்பொருட்களின் சுமையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் ஆழமாய் உணர்ந்தேன்.
என்றாலும், இது எப்போதும் எளிதான முடிவாக இல்லை. எதையாவது தேடுவதற்காய் அமேசானின் ஆன்லைன் அலமாரிகளைத் துழாவும்போது சில நேரங்களில் எனக்குள் எங்கோ உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மிருகம் விழித்துக்கொள்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏவாளிடம் விலக்கப்பட்ட கனியை நீட்டி – அவளுக்கு நுகர்வு போதையேற்றி – அவளைக் கடவுளுக்கு எதிரான முதல் பாவத்தை செய்யத் தூண்டிய அந்த ஆதி பாம்பு, என்னையும் சூழ்ந்து கொள்கிறது. நான் இப்படி ஒரு போதையூட்டும் – ஏமாற்றும் பொருளாதார வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணரவே எனக்கு சில நிமிடங்கள் பிடிக்கிறது.
சில நேரங்களில் விழித்துக் கொள்வதற்கு முன்பே சில பொத்தான்களைச் சொடுக்கி எளிமையாகிப்போன ‘Gpay’ பணப்பரிவர்த்தனையை முடித்து அந்தப் பாம்பிடம் நான் தோற்றுப்போகிறேன். உயிரியல் ரீதியாக என்னில் சூழல் விழிப்புணர்வு என்னிடம் எந்த மாற்றத்தையும் உருவாக்கிடவில்லை. நான் இன்னும் ஏவாளின் அதே பலவீனமான மரபணுக்களையே சுமந்து கொண்டிருக்கின்றேன். ஒரு ஆப்பிளைக்காட்டி என்னை ஏமாற்றிவிட முடியாது என்றாலும்கூட ஒரு ‘கிரீமி ஜிகர்தண்டாவால்’ என்னை வீழ்த்திவிட முடியும்.
ஆனாலும், இனி ஒருபோதும் ஒரு மாளிக்கான கனவை என்னால் சுமக்க முடியாது. அதன் பிரம்மாண்டமும் சூழல் தாக்கமும் தரும் அழுத்தத்தை என்னால் தாங்கவே முடியாது. எனக்குக் கிடைத்த இந்த விழிப்பே போதுமானது என்று கருதுகிறேன்.
தங்களை வெளிக்காட்டிக் கொள்வதற்காக நுகர்பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனிதர்களை நான் கடந்த காலங்களில் சற்றுக் கடுமையாகவே அணுகியிருக்கிறேன். என் பலவீனங்களையும் மனிதரின் இயல்பூக்கங்களையும் ஆழமாகப் பார்க்கும்போதுதான் இதனை சற்று கனிவோடு அணுகியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. கெத்தாக வெளிப்படுத்தலுக்கான உணர்வானது கையாள்வதற்கு சவாலான மனிதரின் இயல்பூக்கம் என்று புரிந்துகொண்டிருக்கிறேன். என்றாலும் மனிதர்கள் தங்கள் பழைய மாளிகைகளை உடைத்து புதிய அர்த்தங்களைத் தம் வாழ்வில் வரிந்துகொள்ள முடியுமென்று என் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது.
மனிதர்களை அவர்களுடைய கலாச்சாரமும் பண்பாடுமே விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. விலங்குகளைப்போல மனிதர்கள், இயல்பூக்கங்களின்மீது பழிபோட்டு தப்பித்துவிட முடியாது. பாலியல் வல்லுறவில் ஈடுபடும் ஒரு குரங்கின் இயல்பூக்கமானது ஆடம்பர – சொகுசு நுகர்பொருட்களை வாங்கும் மனிதனின் இயல்பூக்கத்தை நியாயப்படுத்திவிட முடியாது. நாம் கலாச்சாரத்தாலும் பண்பாட்டாலும் ஒழுக்க விதிகளாலும் ஒட்டுமொத்தத்தில் சிந்தனையால் வழிநடத்தப்படுபவர்களாய் இருப்பதாலேயே மனிதர்களாய் இருக்கிறோம்.
நம் இயல்பூக்கங்களை வெல்ல ஆழமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நம் இயல்பூக்கங்கள் பெருநிறுவனங்களின் நலன்களுக்காகக் கையாளுகை செய்யப்படுகின்றன என்று நாம் உணர வேண்டியிருக்கிறது. இந்த உணர்வு நொறுக்கும் மாளிகைகளின் எச்சங்களில்தான் நம் வாழ்வு துளிர்க்க முடியும்.
ம. ஜீயோ டாமின்