தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் சென்னையில் பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் நான்காவது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டார். “இனிவரும் காலங்களில் அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் காலநிலை நடவடிக்கைகளோடு இயைந்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும்” எனும் முக்கியமான அறிவிப்பும் அதில் ஒன்று.
மேலும் பேசிய முதல்வர் “நமது நாடு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளைக் ஏற்றுக்கொள்வதுபோல 2030ஆம் ஆண்டுக்குள் மாநில அளவில் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றை இலக்குகளாகக் கொண்டு செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
- முதல் அறிவிப்பு இனி வரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இயைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும்.
- இரண்டாவது அறிவிப்பு – நமது நாடு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ்,கார்பன் உமிழ்வுகளை குறைக்க. தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட சில பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டது போல், நம் மாநிலத்தின் கார்ப உமிழ்வுகளைக் குறைக்க, 2030-க்குள் செயல்படுத்தவேண்டிய மாநில அளவில் தீர்மாணிக்கப்பட்ட பங்களிப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றை இலக்குகளாக கொண்டு செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- மூன்றாவது அறிவிப்பு – தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய ஐந்து இலட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.
- நான்காவது அறிவிப்பு வரும் காலங்களில் தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் இணைந்து, பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உமிழ்வுகளைக் குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும். இளைஞர்கள் காலநிலைத் தலைவர்களாகவும், தூதுவர்களாகவும் உருவெடுக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
