காலநிலை மாற்றத்தின் புதிய குழந்தை ‘கொரோனா’

            

ஆண்டாண்டு காலமாக, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தொற்று நோய் தாக்கங்கள் குறித்து ஆய்வாளர்கள் விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சூழலியல் கூறுகளுக்கும், ஏந்திகளின் வளர்ச்சி (vector growth), இறப்பு விகிதம், இனப்பெருக்கம் போன்ற சுகாதார விழுமியங்களுக்கும், வலிமையான தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. கிருமிகள் குறித்தான தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்யும் போது, ஒவ்வொரு தீவிர வானிலை நிகழ்வுக்குப் (extreme weather event) பின், தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் மிகப் பெரும் சுகாதார சீர்கேடாக ஏந்திகள் வழி நோய்கள் பார்க்கப்படுகின்றன. அளவில் சிறிய கொசுக்கள் தொடங்கி குரங்கு, பன்றி உள்ளிட்ட விலங்குகள் வரை, ஏராளமான உயிரினங்கள் தொற்று நோய்களின் ஏந்திகளாக செயல்படுகின்றன.

அந்த வரிசையில், இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘கொரோனா’ வைரஸ், உண்மையில் மனிதர்களை நேரடியாகத் தாக்கவில்லை. கொரோனா வைரஸ் கிருமியின் வழிப்பாதை இன்னும் தெளிவாக கண்டறியப்படாத நிலையில், நோய் தொற்றுக்கு வௌவால்கள ஏந்திகளாக செயல்படுவதாக அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவில், எறும்புண்ணிகளை உணவுக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் முதலில் வௌவால்களுக்குப் பரவி, அவற்றிலிருந்து எறும்புண்ணிகள் மூலம் மனிதர்களை வந்தடைந்திருக்கலாம் என்று கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா வைரஸின் தோற்றத்திலிருந்து, அது மனிதர்களை வந்தடைந்த பாதை என்பது உண்மையில் ஏந்திகளால் நிறைந்தது அல்ல; சூழலியல் வன்முறைகளால் மட்டுமே நிறைந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், பல்வேறு வகையான தொற்று நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. 1980களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹெச்.ஐ.வி(HIV) வைரஸ், மனித குரங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியது. 2004-07 காலகட்டத்தில் பல நாடுகளை நடுங்கச் செய்த ஃப்லு (flu) பறவைகள் மூலமாக மனிதர்களை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டு பன்றிகள் வழியாக ஸ்வைன் ஃப்லுவும், சார்ஸ் (sars) மற்றும் எபோலா (ebola) போன்ற வைரஸ் கிருமிகள் வௌவால்கள் மூலமாகவும் பரவியதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மனிதர்களாகிய நாம் எல்லா கால கட்டங்களிலும் விலங்குகளிடமிருந்து நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளோம். ஆனால், சமீபகாலமாக அதி வேகத்தில் மாறிவரும் சூழலியல் கூறுகளால், இம்மாதிரியான நோய் தொற்றுகளும் அதிகரித்து வருகின்றன. நகர வாழ்வியலும், இடம்பெயர்தல்களும், தற்போது நிலவிவரும் சுகாதாரக் கேடுகளுக்கு மேலும் வலுசேர்க்கின்றன.

சுத்தம், சுகாதாரம் போன்றவை மனிதர்களுக்கே உரித்தானவை என்பதால், பெரும்பாலான விலங்குகள் ஏதோவொரு வகையான வைரஸ் அல்லது பேக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை தன்னகத்தே கொண்டிருக்கும். மேலும், புதுப்புது உயிரினங்களைத் தாக்குவதன் மூலம் (எ.கா. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதன் மூலம்) நோய்க்கிருமிகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. பேருயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் போரிடும் நோய்க்கிருமிகள், அதில் வெற்றியடைய தங்களை பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்திக் கொள்கின்றன. அதே போல், வெவ்வேறு வகையான கிருமிகளுடன் மோதும் போது, விலங்குகளின் (மற்றும் மனிதர்களின்) நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுவடைந்து கொண்டே இருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், 2003ம் ஆண்டு உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட மக்களில் 10 விழுக்காடு நோயாளிகளை காவு வாங்கியது. ஆனால், அதன் பின் வந்த, இதே போன்ற மற்றொரு நோய்க்கிருமியான ஃப்லு, 0.1 விழுக்காடு மக்களை மட்டுமே கொலையுண்டது.

அதுமட்டுமின்றி, மனிதர்களின் வாழ்வியல் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், 35 விழுக்காடு மக்கள் மட்டுமே நகரங்களில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது 55 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், சூழலியல் பாதுகாப்புக்கு ஒவ்வாத வகையில் எழுப்பப்பட்டுள்ள இன்றைய பெரு நகரங்கள், அவற்றின் உள்கட்டமைப்புகள், பிற உயிரினங்களான எலி, அனில், குருவி, காகம், குரங்கு ஆகியவற்றுக்கு பூங்கா மற்றும் புல்வெளிகளில் இருப்பிடங்களை உருவாக்கியுள்ளன. இதனால், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களின் தாக்கமும் அதிகமாகியுள்ளன.

புதிய உயிரினங்களுக்குப் பரவும் புதிய நோய்கள், மற்ற நோய்களை விட மிகவும் ஆபத்தானவை. எனவே தான், புதிதாகத் தோன்றும் நோய்களைப் பற்றி நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதாகிறது. இம்மாதிரியான கொடிய நோய்களின் தாக்கத்திற்கு முதன்மையாக பாதிக்கப்படும் இனக்குழுக்கள், எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். சாதியின் கோரக் கரங்களிலும், வறுமையின் தீராப் பிணியிலும் சிக்கித் தவிக்கும் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வியலானது, கொடிய நோய்க்கிருமிகள் மனித இனத்தை முழுமையாக சென்றடைவதற்கான பாலமாக அமைந்துவிடுகிறது.

சாக்கடை சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல், குப்பைக் கூளங்களை அகற்றுதல் போன்ற சுகாதாரப் பணிகளை பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்ய விளிம்புநிலை மக்கள் பணிக்கப்பட்டுள்ளதால், நோய்க்கிருமிகளின் ஏந்திகளாக (vectors) அவர்கள் மாறுகிறார்கள்.

மேலும், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கிடைக்காததால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும். அதிலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம்.

நகரமயமாக்குதலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலைவாய்ப்புகளுக்காக நகரங்களை நோக்கி பயனப்படுவதும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக, மக்கள் தொகையால் பிதுங்கி வழியும் பெருநகரங்களில், காற்று இடைவெளி (air space) மிகவும் குறைந்து போகிறது. இதனால், நோய்க்கிருமிகள் நிறைந்திருக்கும் சிறிய அளவிலான காற்றையும் அதிகமான மக்கள் சுவாசிக்க நேரிடுகிறது.

காடழிப்பு, கடுமையான காட்டுத்தீ போன்ற மனிதத் தவறுகளால் உண்டாகும் சூழலியல் கேடுகள், கொரோனா மாதிரியான நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு வழிகோலுகின்றன. நாம் காடுகளை அழிக்கும் போது, உண்மையில் வன விலங்குகளின் வீடுகளை அழிக்கிறோம். அவ்வாறு அழிக்கப்படும் காடுகள், விலங்குகள் வாழத் தகுதியற்ற இடமாக மாறுகிறது. இருப்பிடத்தை இழந்து அகதிகளாக சுற்றித் திரியும் விலங்குகள், உணவுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் நவ நாகரிக மனிதர்களின் உலகத்துக்குள் வர வேண்டியுள்ளது. அப்போது காடுகளில் உயிரற்று செயலற்று இருந்த வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள், அவ்விலங்குகளினூடே மனிதர்களை வந்தடைவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, வௌவால்களின் வாழ்விடங்கள்  அழிக்கப்பட்டுவருவதால், இருப்பிடம் தேடி அவை விரக்தி அடைவதாகவும், அதனால் அவற்றின் எச்சில், சிறுநீர், மலம் போன்றவை, நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கத்திற்கு காரணியாக அமைவதாகவும், ஆய்வுக் கட்டுரை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இவ்வாறு, பல்மடங்கு பெருகும் நோய்க்கிருமிகள் கூடுதலான விலங்குகளுக்கு நோய் தொற்றை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து, விலங்குகளின் இருப்பிடம், வாழ்வியல், வாழ்விடம், உணவுச் சங்கிலி முதலானவற்றை சூழலியல் சிக்கல்களும், காலநிலை மாற்றமும் அழித்தொழித்து வருகின்றன என்பது புலப்படுகிறது.

மேலும், மனித உடலின் இயல்பான அதிக வெப்ப நிலையானது, பூஞ்சை மற்றும் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள பயன்படும் இயற்கை அரண். இதன் காரணமாகவே, சூரிய ஒளி வெப்பத்தை தாங்கும் ஆற்றல் மனிதர்களுக்கு அமைந்துள்ளது. ஆனால், நோய்க்கிருமிகள் அப்படிப்பட்டவை அல்ல. மனிதர்களின் தன்மைக்கு முற்றிலும் முரணானவை. நோய்க்கிருமிகள் பெரும்பாலும் குளிர்ந்த தட்பவெப்ப நிலையிலேயே இயங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், 33 வகையான வைரஸ்களில் 28 வைரஸ்கள், 15,000 ஆண்டுகளாக பனிப்பாறைகளில் உறைந்திருந்தது தெரியவந்துள்ளது. புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி, பல்லாயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த கிருமிகள், வெளியுலகத்திற்குள் அடிஎடுத்துவைக்கத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, வெப்பத்திற்குத் தகுந்தவாறு தகவமைத்துக் கொண்டு, பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டத்தை நோக்கி அக்கிருமிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நம்முடைய சமூகமும், அரசாங்கமும், புதிதாகத் தோன்றும் நோய்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகி தீர்வு காண முயல்கின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தால் மொத்த உயிர்களும் பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறக்கின்றன; மறுக்கின்றன. நம் சுற்றுச்சூழலை எவ்வளவு தூரம் மாற்ற முயற்சி செய்கிறோமோ, அவ்வளவு தூரம் சூழலியல் அமைப்புகள் (eco-systems) மாற்றம் அடைகின்றன என்பது தான் நிதர்சனம். அந்த மாற்றம், இயற்கைக்கு எதிரான நிலையிலிருந்து இயக்கப் படுவதால் எண்ணிலடங்கா நோய்களின் உருவாக்கத்திற்கு அது வித்திடுகிறது.

இது நாள் வரை, உலகிலுள்ள மொத்த கிருமிகளுள் வெறும் 10 விழுக்காடு மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மீதமிருக்கும் கிருமிகளின் தோற்றம், வீரியம், பரவும் திறன் ஆகியவற்றைக் கண்டறிந்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய கடமை அறிவுசார் உலகத்திற்கு உள்ளது. அறிவியல் முன்னேற்றங்களும், சுகாதாரத்திற்கான உலக நாடுகளின் முதலீடுகளும், நல்வாழ்விற்கு வெளிச்சம் பாய்ச்சும் ஒளிக்கீற்றுகளாக அமையலாம். ஆனால், உயிர்களின் இருத்தியலுக்கான சிக்கல் என்பது தவறான நகரமயமாதல் கொள்கை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சூழலியல் கூறுகளில் தான் உள்ளது.

சுகாதாரத்தை மேம்படுத்துதல், கழிவு மேலாண்மை மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற முறைகளை கையாண்டு நோய்க்கிருமிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் சீரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். கொரோனா முதலான வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் குழு பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய சார்ஸ், நிபா வைரஸ்களை நாம் கட்டுப்படுத்திவிட்டோம். இன்றைய கொரோனாவை பின்வரும் நாட்களில் அறிவியல் உலகம் அழித்துவிடக்கூடும். ஆனால், நாளை வேறொரு நோய்க்கிருமி, புதுமையான தாக்குதல் திறனுடன், காலநிலை மாற்றத்தால் கட்டவிழ்த்துவிடப்படலாம். அப்படியொரு நோய்க்கிருமியைத் தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளை மேற்கொள்ளப் போகிறோமா அல்லது அத்தகைய சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் சூழலியல் அமைப்புகளைப் பேணிப் பாதுகாக்கப் போகிறோமா என்பதில் தான் நம்முடைய பகுத்தறிவு புதைந்துள்ளது.

– மணிசங்கர்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments