கொரோனாவின் பேரிலக்கில் மனிதன் ஓரு நுண்ணுயிரி!

        

பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைகொலையுண்டதன் காரணமாகவே உலக சுகாதார அமைப்பு, கொரோனா கொள்ளை நோயை ‘உலகப் பேரிடர்’ என்று அறிவித்தது. ஆனால் சாதி, மதம், இனம், மொழி, வர்க்க பேதமின்றி உலக மக்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்த கொரோனா வைரஸ், ஒரு சமத்துவமற்ற சமூகத்தால் தோற்றுவிக்கப்பட்ட ‘சமத்துவப் பேரிடர்’. மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகப் பாகுபாடுகளோடு சுருங்கிவிடாமல், ‘சமத்துவப் பேரிடர்’ என்ற பதம் இயற்கையின் வேற்றுமைகள் மீதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

உலகமயமாக்கலின் நுகர்வுக் கலாச்சாரத்தால் எந்நேரமும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த உலகத்தை வீட்டுக்குள் அடைத்து வீதிகளில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா, ஏப்ரல் மாதம் 9ம் தேதி தூங்கி வழிந்துகொண்டிருந்த மனிதர்களிடம் ஒரு செய்தியை கிசுகிசுத்தது.அது, பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் வாழும் யனோமமி என்ற தொல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயது சிறுவனின்மரணம். நிலையற்ற வளர்ச்சியைக் கொண்ட பொருளாதாரத்தால் கட்டியெழுப்பட்ட வல்லாதிக்க நாடுகளில் ரத்தத்தை சுவைத்துக் கொண்டிருந்த கொரோனா, தற்சார்பு வாழ்வியல் முறையைப் பின்பற்றும் காடுகளின் காவலர் இனச் சிறுவனை கொன்ற நிகழ்வை நாம் எளிதாகக் கடந்து செல்ல இயலாது.

வட- மத்திய அமேசான் பகுதியான பாராவில், 87 வயது நிரம்பிய பொராரி இனத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டியின் சடலத்தை உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்கின்றனர். முன்னதாக மர்ம நோயால் அவர் இறந்துள்ளார் என்று கருதப்பட்ட நிலையில், உடற்கூறாய்வின் முடிவில் அவர் கொரோனா வைரஸுக்கு பலியானது உறுதிசெய்யப்பட்டது. மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் அவர் மரணித்த போதிலும், கொரோனாவின் வீரியத்தைப் பற்றிய புரிதல் இன்றி, அவரது ஈமச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுகாதார கட்டமைப்புகள் வலுவாக இல்லாத அப்பகுதியில், கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்த வேறொரு காரணமும் இருந்தது.

அமேசான் பழங்குடிகள் தொடங்கி உலகின் பல்வேறு காடுகளில் பரவி வாழும் பழங்குடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். ஏனெனில், மரபியல் ரீதியாக மாறுபட்ட மனிதர்களோடு இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைவு என்பதால், அவர்கள் தங்களுடைய இனக்குழுவிற்குள்ளேயே திருமணம் (inbreeding) செய்து கொள்வர். அப்போது ஒரே மாதிரியான மரபணு வரிசையை உடைய இனக்குழுவில், புதியவகை நோய்க்கிருமியால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அந்த ‘இனமே அழிந்துவிடும்’ அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே, வெளியுலகின் வாசனையே இல்லாமல், சுமார் 28 இனக்குழுக்கள் அமேசான் காடுகளில் தனிமையாக வாழ்ந்து வருகின்றன.

இத்தகைய சூழலில் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்ட யனோமமி சிறுவனின் மரணம் பழங்குடித் தலைவர்கள் மத்தியிலும், சூழலியல் செயற்பாட்டாளர்கள் சிந்தனையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. யனோமமி பழங்குடியின் பல்வேறு கிராமங்களுக்கு வெளியுலகத் தொடர்பே இல்லை. ஆனால், மிகப்பெரிய சூழலியல் சீர்கேடாக விளங்கும் தங்கச்சுரங்க பணிகளுக்கு, சட்ட விரோதமாக பெருநகர வாசிகள் அக்கிராமங்களுக்குள் ஊடுருவுகின்றனர். கொரோனாவால் இறந்த சிறுவனும் சுரங்கத்தின் அருகே வசித்தவன் என்பதுதற்போது தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி, மரபியல் மற்றும் வணிகத் தொடர்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் வெளியுலக வாசிகளின் மூலமாகத்தான் யனோமமி சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா எதிரொலிக்கு முன்பாகவே, வெளியாட்களால் தங்களுக்கு நோய்க்கிருமி பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் யனோமமி தலைவர்களுக்கு இருந்துள்ளது. சட்ட விரோதமாக தங்கள் பகுதிக்குள் ஊடுருவ முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பூர்வகுடிகளின் தலைவர்கள் கோரிக்கைவிடுத்த போதிலும் அதிகாரிகள் அலட்சியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், யனோமமி பகுதிகளில் இயங்கி வரும் தங்கச்சுரங்கங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க பிரேசில் அதிபர் பொல்சனாரோ சுழன்றடித்து வேலை செய்கிறார்.

சமூக இடைவெளிக்கும் சமூகப் பரவலுக்கும் இடையே மனிதச் சமூகம் சிக்குண்டிருக்கிறது. அழுக்கு படர்ந்த ஆடைகளோடு, ஒளி இழந்த கண்களோடு நெடுஞ்சாலைகளில் கொடும்பயணம் மேற்கொள்வோருக்காக அதிகாரத்தின் பார்வை கண்டுகொள்ளாவிட்டாலும், அன்பின் கரங்கள் அணைக்க ஏங்குகின்றன. இவ்வாறு,கொரோனாவைஎதிர்த்து மனிதம் போரிட்டுக் கொண்டிருந்த வேளையில் தான்,உலகத்துக்கு வேறொரு பரிமாணத்தைக் காட்டஅந்த நுண்கிருமி ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

அமெரிக்காவின் ப்ரோங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றுக்கு, கொரோனா தொற்று உறுதியான தகவல் வெளியானது.தற்போது அதே பூங்காவைச் சேர்ந்த 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு பூனைகளை கொரோனா ஆட்கொண்டுவிட்டது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதில், ஒரு பூனையின் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரிடம் இருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

COVID19 வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாது பிற உயிர்களையும் தாக்குவதன் காரணத்தை அறிய கொரோனாவின் செயல்திறனை தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

SARS-CoV-2 வைரஸின்வெளிப்புறத்தில் கூர்மையான புரதங்கள்(spike proteins) இடம்பெற்றிருக்கும். அந்த புரதங்களில் உள்ள Receptor-Binding Domain (RBD) உதவியுடன் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செல்களில் உள்ள angiotensin-converting enzyme-2 (ACE-2) என்ற நொதியோடு வைரஸ் இணைப்பை ஏற்படுத்தும். இணைப்பு உருவாக்கப்பட்ட பின், அவற்றின் ஊடே உறுப்புகளுக்குள் நுழைந்து, பன்மடங்கு பெருகி, உடல் முழுவதும் தாக்குதலைத் தொடுக்கிறது.

SARS-Cov-2 வைரஸ் மனிதர்களின் மீதான தாக்குதலைத் தொடங்கி 4 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், அதன் பிறழ்வு (mutation) நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதன் விளைவாக, RBD-ACE2 இணைப்பு மிக வலுவாக கட்டமைக்கப்படுகிறது. இது வைரஸுக்கு சாதகமான நிலையாகும். அதன் செயல்திறனை மாறிவரும் பிறழ்வோடு எளிதாக பொருந்தச் செய்துவிடும்.

தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சிலர் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் (virus reactivation) ஆனதும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவர் பாதிக்கப்படும் போது அறிகுறியற்ற நிலையில் (asymptomatic) நீண்ட நாட்களுக்கு வைரஸ் உடலிலேயே இருந்ததும், பிறழ்வின் வீரியத்தை நமக்கு உணர்த்துகின்றது.

எனவே, அறிவியல் ரீதியாக கொரோனாவின் தாக்குதல் களம் மனித குலம் அல்ல; ACE2 நொதி உடைய செல்கள் தான். அந்த வகை செல்கள் பூனை, சிங்கம், புலி போன்ற விலங்குகளிடமும் காணப்படுவதால் அவைகளும் கொரோனாவிடம் இருந்து தப்ப முடியவில்லை. மேலும், இந்த வகை செல்கள் அலங்கு, எறுமை, ஆடு, பன்றி மற்றும் புனுகுப்பூனை ஆகியவற்றிலும் இருப்பதால், அவற்றுக்கும் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன,

ஆனால், இது எல்லா நிலைகளிலும் சரியாக பொருந்திவரவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாய், எலி, கிளி, புறா, குயில், போன்றவற்றில் ACE2 வகை செல்கள் இருந்தாலும், கொரோனாவின் receptor utilizing capacity என்ற தாக்குதல் திறனுக்கு அவற்றின் உடல் வடிவமைப்பு ஒத்துழைக்காது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கம், புலி, பூனைகளும், தொற்று அபாயத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட உயிரினங்களும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கினங்கள் ஆகும். சுற்றுச்சூழல் நாற்கூம்பை (energy pyramid) மாற்றி அமைக்கும் வல்லமை கொரோனாவுக்கு வந்துவிடும் முன்பே நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

உலகமயமாக்கல் எட்டிப்பிடிக்க இயலாத அடர்ந்த காடுகளில் வாழும் பழங்குடியினத்தை கொரோனா சென்றடைந்திருக்கிறது என்றால், அது காடுகளின் பாதுகாப்பிற்கான அபாய ஒலி; காடுகளை அலங்கரிக்கும் உயிரினப்பன்மயத்திற்கான அச்சுறுத்தல்.

‘காடுகளே கதி’ என்று வாழ்ந்த விலங்குகளையும், பூர்வகுடிமக்களையும் கொரோனா பேரிடர் காலத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதச்சமூகத்தை பேராபத்தில் தள்ளிவிடும். ஆகவே, முன்பு இருந்ததை விட மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளியுலகத்தினருக்கும் தொல் பழங்குடி இனமக்களுக்கும் இடைவெளியை அதிகரிக்க வேண்டும். காடுகளை நம்மிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அது தான் பழங்குடிகளை காப்பாற்றும் சிறந்த வழியாக இருக்க முடியும்.

மேலும், உயிரினப்பன்மயத்தின் மீது கொரோனாவின் தாக்கம் குறித்து விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், கொரோனாவின் பிடியிலிருந்து நாம் விடுதலை அடைந்தாலும், இயல்பான வாழ்க்கையைத் தொடர ‘சூழலியல் சமநிலை’ பாதகமாக அமைந்துவிடக்கூடும். இது நீண்ட காலப்பிரச்னை, தொலை நோக்குச் சிந்தனையுடன் விரைவாகவும் தெளிவாகவும் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏனெனில், கொரோனா என்ற வைரஸ் பூமியிலிருந்து முழுமையாக துடைத்தெரியப்பட்டாலும், அது விட்டுச்சென்ற எச்சங்கள் மனித இனத்தை விரட்டிக் கொண்டே இருக்கும்.

 

 

 – மணிசங்கர்

இதையும் படிங்க.!