வளர்ச்சி… அழிவின் வளர்ச்சி!

கடந்த 60-70 ஆண்டுகளாக தொடர்ந்து முழங்கப்படும் ஒற்றை முழக்கம், ‘இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம்,’ என்பதே. ‘வளர்ச்சி’ என்ற ஒற்றைச் சொல்தான் பிரதமர்கள், முதல்வர்களின் தாரக மந்திரமாக உள்ளது. விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கும் சட்டத்தை நியாயப்படுத்தும் போதும், கெயில் குழாய்கள் பதிக்கும் போதும், மீதேன் திட்டங்கள், கூடங்குளங்கள் பிரச்சனைகளின் போதும் கிராமங்களின், விவசாயிகள், நகரப் புறங்களின், இந்தியர்களின், இந்தியாவின் ‘வளர்ச்சிக்கு’ இந்த சட்டங்கள் அல்லது திட்டங்கள் அவசியம் என்றே கூறுகிறார்கள். இந்த மந்திரச் சொல்லின் உள்ளர்த்தத்தை அரசியல் கட்சியின், அதிகார மட்டத்தின் மேல் தட்டில் உள்ளவர்கள் புரிந்த அளவிற்கு மக்கள் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதுவும் படித்த பாமரர்களுக்கு, இவர்கள் எதை வளர்ச்சி என்று கூறுகிறார்கள் என்று சுத்தமாகப் புரியவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஜிடிபி (Gross Domestic Product – மொத்த உள்நாட்டு உற்பத்தி)தான் வளர்ச்சியா?

பணம் சம்பாதிப்பதும் அதன் மூலம் தேவைப் படும் சௌகரியங்களை உருவாக்கிக் கொள்வதும் தனி மனிதர்கள் பார்வையில் வளர்ச்சி என்றால் அரசுகளோ அதிக ஜி.டி.பி.தான் வளர்ச்சி என்கிறது. அதற்காக அதிக தொழிற்சாலைகள், அதிக முதலீடுகள் தேவை என்கிறது. பிரதமர் விற்பனைப் பிரதிநிதி போல, அனைவரின் கிண்டல்களையும் தாண்டி, நாடு நாடாகச் சென்று கொண்டிருக்கிறார். தொழிற்சாலைகளோ மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை மட்டும் தயாரிப்பதில்லை. கூடவே கழிவுகளையும் பரிசாக அளிக்கின்றன. கழிவுகளை என்ன செய்வது, எப்படி மேலாண்மை செய்வது என்பது அரசுகளுக்குத் தெரியவில்லை, தொழிற்சாலைகளுக்கும் தெரியவில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் முதலீடு- தொழிற்சாலைகள்- வளர்ச்சி என்ற ஒற்றைக் கண்ணி சங்கிலியில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகின் எல்லா நதி களையும் கழிவுக் கால்வாய்களாக்கி. ஐம்பூதங்களின் ஒத்த கூட்டிசைவே உலகு. உடல் என்பதை உலகிற்கு முதலில் உணர்த்தியது இந்தியாதான் என்று மார்தட்டிக் கொள்ளும் நம் இந்தியா அந்த பஞ்சபூதங்களை அழித்தால்தான் வளரமுடியும் என்று அந்தப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது… வளர்ச்சி என்ற பெயரில் ஓரடி ஏறி ஈரடி இறங்கிக் கொண்டிருக்கிறோம், அழிவை நோக்கி.

வேளாண்மைக்குள் வருவோம். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கான உணவை உத்திரவாதப்படுத்தும் இந்திய விவசாயப் பரப்பின் மண் நலமாக இல்லை. அது விளைவிக்கும் தன்மையை மிக வேகமாக இழந்து வருகிறது.

இந்தியாவின் மொத்த விவசாய நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு நிலம் அதாவது 80 மில்லியன் ஹெக்டேர் நிலம் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரால் ஏற்படும் மண்ணரிப்பால் இன்னுமொரு 40 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒரு மத்திய அரசின் கணக்கீடு கூறுகிறது. இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் ஆய்வோ 53.34 மில்லியன் ஹெக்டேர் நிலம் தண்ணீரால் ஏற்படும் மண்ணரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

‘ புண்ணிய’ நதியான கங்கை ஆண்டுதோறும் வங்காள விரிகுடாவில் தள்ளும் மேல் மண்ணின் அளவு 30 மில்லியன் டன்கள் ஆகும். இன்னொரு முக்கிய நதியான பிரம்மபுத்திராவோ 10 மில்லியன் டன்கள் மண்ணை வங்காள விரிகுடாவில் தள்ளுகிறது.

உ.பி, ஹரியானா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாசனப் பகுதிகளும், இராஜஸ்தான், மராட்டியம், குஜராத், ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் மழை குறைவான வறண்ட பகுதிகளும், ஒரிசா, குஜராத், தமிழகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் உள்ள நிலப்பரப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 6,000 முதல் 8,000 ஹெக்டேர் நிலம் பாழ் நிலமாகிக் கொண்டுள்ளதை பஞ்சாப் மற்றும் மத்திய அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. வளர்ச்சியின் அடையாளம் என்று கூறி ராஜஸ்தானில் கொண்டு வரப்பட்டது இந்திராகாந்தி கால்வாய். அந்தப் பாசனத்தின் பெரும் பகுதி விளைநிலம் இன்று கார-அமிலத் தன்மையால் பாதிக்கப்பட்டு பாழ்நிலமாகிக் கிடக்கிறது. விவசாயிகள் மண்வளம் மீட்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். நர்மதா, தபதி, மாஹி, சபர்மதி நதிகளின் பாசனப் பகுதியில் 1,73,530 ச.கி.மீ பரப்பு சதுப்பு நிலம் பாழ்நிலமாகிவிட்டது. இந்த வகையில் நிலம் பாழ்பட்டது மட்டுமல்லாமல் பாலைநிலமாதலும் (Desertification) அதிகமாகிக் கொண்டுவருகிறது. இதுவும் தவறான நிலவளப் பயன்பாட்டால் ஏற்பட்டதே. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 12.13 மித வறண்ட பகுதியும் 30% வறண்ட நிலப்பரப்பும், ஆக மொத்தம் 41.13% நிலபரப்பு, வேகமாக பாலை நிலமாகிக் கொண்டுள்ளது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் நிலை அறிக்கை-2009இல் ‘நாட்டில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தியதன் விளைவாக அதிகப்படியான தண்ணீர் உறிஞ் சப்பட்டது, நிலவளம் மிக அதிக அளவில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது, இவைகளின் விளைவாக மொத்த விளை நில பரப்பான 142 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 44 மில்லியன் ஹெக்டேர் பரப்பு கார, அமில மற்றும் தண்ணீர் தேங்கல் போன்ற பிரச்சனைகளால் விவசாயத்திற்கு தகுதியில்லாத நிலமாக மாறிவிட்டது. மேலும் கடந்த 50 ஆண்டுகளாக இரசாயன உரங்கள் மற்றும் களை, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தரைமட்ட நீரும், நிலத்தடி நீரும் அதிக அளவில் மாசுபட்டுள்ளது’ என்கிறது. மேலும் ‘இந்தியாவின் மொத்த நில பரப்பான 328.73 மில்லியன் ஹெக்டேரில் 306 மில்லியன் ஹெக்டேர் விளைநிலமாகும். இதில் 145.82 மில்லியன் ஹெக்டேர் பரப்பு பாழ்நிலமாகிக் கொண்டிருக்கிறது,’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திட்டக் குழுவின் வேளாண்மைக்கான செயல் திட்டம் வகுக்கும் குழு 11வது 5 ஆண்டு திட்ட அறிக்கையில் (11வது திட்ட அறிக்கையின் வேளாண்மைக்கான செயல் திட்டம்- சில முக்கிய பிரச்சனைகள் பகுதி) நமது விளைநிலத்தில் 3ல் 2 பங்கு நிலம் ஏதோ ஒரு வகையில் மோசமடைந்துள்ளது அல்லது நோயுற்றுள்ளது. 1/3 பங்கு நிலம் தான் விவசாயத்திற்கு தகுதியான நிலமாக உள்ளது என்று குறிப்பட்டது. இதை மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளும் நிதி அமைச்சகமும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆகாத மருமகளாக மாறிவிட்ட கிரீன்பீஸ் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் உருவாக்கிய இந்தியாவின் மண்வளம் குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கைகளில் மண்வளம் காப்பதற்காக தனி நிதி ஒதுக்கி இருப்பதும், சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் பிரதமர் மோதி அவர்கள் மண் பரிசோதனை குறித்து பேசியதும் இந்தப் பிரச்சனையின் வீரியம் உணர்ந்துதான். ஆனால் மீண்டும் சாண் ஏறி முழம் சறுக்கும் வேலைதான் நடக்கிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!??

நாட்டில் 6.30 கோடி பேர் நீரிழிவு நோயிலும், 12 கோடி பேர்- பத்தில் ஒருவர் என்ற கணக்கில் உயர் இரத்த அழுத்த நோயிலும் உள்ளனர். இவ் விரண்டும் இதய நோயை பரிசளிப்பவை. இவை போக இதர நோய்கள். 2000 ஆவது ஆண்டில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.7 கோடியாக மட்டுமே இருந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இவ்விரண்டும் பணக்கார நோய்கள். ஆனால் இன்று எல்லோருக்குமான நோயாக மாறி இருக்கிறது. மாறியிருக்கிற வாழ்தல் முறையும் வேலையழுத்தமும் உடலை இந்த நோய்களுக்கானதாக மாறியிருப்பதே காரணம். மும்பையின் நிலையை எடுத்துக் கொள்வோம். தினமும் 80 மும்பைவாசிகள் இதய நோயால் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். இது 2013-14 காலக்கட்டத்தில் நடந்த மரணங்கள். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகமாகி வருவதையும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன் இது நாளன்றிற்கு 15 பேர் என்றிருந்தது. மும்பையின் நிலை இந்தியாவெங்கும் பரவ அதிக காலமாகாது. 130 கோடி மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் இன்னும் மூன்று வேலை முழு வயிறு உண்ண வில்லை. நகரங்களில் சேரிகள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் ஸ்மார்ட் சிட்டிகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நகரத்துச் சேரிகளை நிரப்பிக் கொண்டிருப்பவர்கள் நகரங்களின் சுரண்டலால் வாழ்விழக்கும் கிராமத்தவர்களே ஒழிய வேற்று நாட்டவர்கள் அல்லர். வாழ முடியாத நிலையின் காரணமாக சுத்தமான காற்றும்- கொஞ்சம் கிடைத்தாலும் சுத்தமானதாக இருந்த தண்ணீரையும் கொசு இல்லாத இரவுகளையும் விட்டுவிட்டு சேறும் சகதியுமாக- காற்றோட்டமே இல்லாத சேரிகளில் வந்து பெரும்பான்மை மக்கள் தஞ்சம் அடை வதையே வளர்ச்சி என்று கூறுகிறோம். இந்தியா அடைந்துள்ள வளர்ச்சிக்குரிய விலையைக் கொடுத்தவர்கள் யார்? நிச்சயம் பட்டணத்தில் இருந்து கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசுகிற நடுத்தர வர்க்க மனிதர்கள் அல்ல. எங்கோ தப்பு நடக்கிறது என்று மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது ஆனால் எங்கு எப்படி என்பது மட்டும் எவருக்கும் தெரியவில்லை- மெத்தப் படித்த உயர்மட்ட அறிவு ‘ஜீவிகள்’ இந்தியாவின் வளர்ச்சி என்று கூறும் போதெல்லாம் அது அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் இந்த வளர்ச்சியில் அடஙகியவர்கள் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இந்தியா என்பது அவர்களுக்கானதும்தானே. இந்தியாவின் நதிகளில் அவர்களுக்கும் பங்கிருக்கிறதுதானே. இந்தியாவின் நிலவளம் அவர்களின் பிள்ளைகளுக்கு வேலை தரும் நிலையான முதலீடுதானே. இந்த அழிவுப் பாதையைக் கேள்விக்குள்ளாக்கும் எல்லோரையும் தேச விரோதிகள், துரோகிகள் என்று முத்திரை குத்தும் புதுப்போக்கு அண்மைக் காலமாக ஓங்குகிறது. இதன் மூலம் அரசு எதையும் சாதித்துவிடப்போவதில்லை என்பதை உணர மறுக்கிறது. இன்குளூசிவ் வளர்ச்சி என்று சில ஆண்டுகளாக பேசிக்கொண்டே அவர்களை விளிம்பிற்குத் தள்ளும் வளர்ச்சிதான் நடக்கிறது.
இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ் வாதாரங்களை அழித்துவிட்டு அடுத்த தலைமுறையின் வாழ்க்கை ஆதாரங்களை அழித்துவிட்டு இந்தியா எப்படி முன்னேறப்போகிறது. முன்னேற்றம் என்று எதைக் காட்டப்போகிறது. நோயையும், பட்டினியையும், சேரிகளையும் அதிகப்படுத்தும் வளர்ச்சி எப்படி வளர்ச்சியாக இருக்க முடியும்? இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை, எப்படி இருந்தால் இந்திய தனது இயற்கை வளங்களை சுரண்டாமல், அழிக் காமல் வளரமுடியும்? அது எத்தகைய வளர்ச்சி, அத்தகைய வளர்ச்சிப் பாதை எது, அதில் பயணிப்பது எப்படி என்பது போன்ற புரிதல்களை அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் உணர்வதற்கு முன் இங்கே நம்முடைய சௌகரியங்கள் என்ற பெயரில் நடப்பது அழிவுதான் என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். ஐயா ஆட்சியாளர்களே நீங்கள் எதை வளர்ச்சி என்று கூறுகிறீர்கள் – உங்கள் சொல்லிற்கும் செயலிற்கும் இடையே உள்ள தூரத்தை உணர்ந்திருக்கிறீர்களா? உங்களைச் சுற்றிச் சுற்றி வரும் உலக கன்சல்டண்டுகள் கூறும் பாலாறுதேனாறு கதைகளை மட்டும் நம்பி திட்டங் களைத் தீட்டிக் கொண்டிருக்கிறீர்களா என்பதை தொடர்ந்து கேள்விகள் கேட்பது அவசியம்.

‘இங்கிலாந்து இப்போது போல் இருக்க அது உலகில் பல நாடுகளை சுரண்டிக் கொண்டிருக்கிறது. இந்தியா இங்கிலாந்து போல மாற வேண்டு மானால் எத்தனை உலகங்களை சுரண்ட வேண்டும்’, என்ற காந்தியின் வார்த்தைகளை மறந்து விட்டோம். இப்போது நம்மவர்களின் வளர்ச்சியின் கனவு ‘இந்தியா அமெரிக்கா போல’ இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. பொருளாதார அடியாட்கள் இந்தக் கனவை மிகநேர்த்தியாக உலகெங்கும் விதைத்திருக்கிறார்கள். அரசின் உயர் மட்டங்களில் மட்டுமின்றி பரவலான மக்களின் அபிலாசையாக மாற்றி யிருக் கிறார்கள். வளம் குன்றாத வளர்ச்சி என்று கூறிக் கொண்டே வளங்களை அழித்தொழிக்கும் வளர்ச்சியை நம்மைப் போன்ற நடுத்தட்டு மக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வளம் குன்றாத வளர்ச்சிக் கானவர்கள் காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த ஜே.சி. குமரப்பாவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை காலத்திற்கு ஒவ்வாதது போலத் தோன்றலாம், நடைமுறை சாத்தியமற்றது
போலத் தோன்றலாம், உலக நடைமுறைக்கு பத்தாம் பசலித்தனமானதாகத் தோன்ற லாம். ஆனால் அது தான் இந்தியாவின் 130 கோடி மக்களையும் ஒரு சேர வளர்க்கும் வழியாக இருக்கும். ஏனென்றால் இருக்கும் வளங்கள் வருங்கால இந்தியர் களுக்கானது, நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் அவர்களின் பேரப் பிள்ளை களுக்கானது. வேகமாக ஒடும் வண்டியை சட்டென நிறுத்தி வேறு திசையில் செலுத்த முடியுமா, எல்லா நாடுகளும் ஒரு திசையில் செல்லும் போது நாம் மட்டும் வேறு ஒரு பாதையில் பயணிக்க முடியுமா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால் வேறு வழி? நம்முடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பள்ளிப் பையுடன் முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் சுமந்து செல்லாமல் இருக்க வேண்டுமானால், தம்முடைய பிள்ளைகளின் வாரிசுகள் மருத்துவமனைகளில் செயற்கை கரு வூட்டல் மூலம் உருவாகாமல் இருக்க வேண்டுமானால் வளர்ச்சி எது, எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை வெறும் பணம் மட்டுமே அல்லது பணத்தின் அளவு மட்டுமே என்று இருக்க முடியாது. தேவை பிரச்சனைகளை ஆத்மார்த் தமாக ஏற்றுக் கொள்வது, பிரச்சனைகளின் மூலத்தை அறிவது முதற்கட்டம். சிக்கலை பெரிதாகாமல் தடுப்பதும் ஏற்பட்ட பாதிப்புகளை மெல்ல மெல்ல சரி செய்வதும் இரண்டாம் கட்டம். இதற்கிடையில் வளங்கள் அழியாத வகையில் உற்பத்தியை அமைப்பது. இதெல்லாம் கேட்க எளிதாக இருக்கும் ஆனால் பகிரத பிரயத்தனம். ஆனாலும் நடந்தாக வேண்டும் ஆனாலும் இதை நடத்திட முடியும், நாம் வளர்ச்சி என்பது எது என்பதை உணர்ந்தும், அறிந்தும் கொள்கிறபோது, அதை நோக்கி நம் அரசுகள் செல்ல நிர்பந்தங்கள் கொடுக்கும்போது இதைச் செய்யமுடியும்.

 

அரச்சலூர் செல்வம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments