“அப்பன் சோத்துக்கு அலையும்போது மகன் கோதானம் (பசுதானம்) செய்தானாம்” என்றொரு வழக்கு உண்டு. தனது சகோதரர்கள் பசியால் வாடும்போது அவர்களை வைத்தே உணவு சமைத்து, அந்த உணவை சந்தையில் கொண்டுபோய் விற்கும் ஒருவனைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
உணவு, உடை, பாதுகாப்பான வீடு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறவே இயலாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நம் நாட்டிலிருந்து 8.3 லட்சம்கோடி மதிப்பிலான இரும்பு, தொழிற்சாலை எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் (Engineering Goods) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது மட்டுமல்ல, 5 லட்சம்கோடி மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்கள், 3 லட்சம்கோடி மதிப்பிலான நகைகள், 2.1 லட்சம்கோடி மதிப்பிலான வேதிப்பொருட்கள், 1.8 லட்சம்கோடி மதிப்பிலான மருந்துகள், 1.2 லட்சம்கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள், ஒரு லட்சம்கோடி மதிப்பிலான பருத்தி உள்ளிட்ட கைவினைப் பொருட்கள், 72 ஆயிரம்கோடி மதிப்பிலான அரிசி போன்றவை 2022ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் சுமார் 22 கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர். 121 நாடுகளின் பட்டியலில் பசியால் வாடுவோரின் தரவரிசையில் (Global Hunger Index) 107ஆம் இடத்திலிருக்கும் இந்தியா 127 நாடுகளின் பட்டியலில் அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் தரவரிசையில் 18ஆம் இடத்திலிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் (கோவிட் காலத்தில்) மட்டும் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 விழுக்காட்டை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இறக்குமதியும் அதிகமாகச் செய்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். எதை இறக்குமதி செய்கிறது? எதை ஏற்றுமதி செய்கிறது? என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
அரிசியை ஏற்றுமதி செய்யும் இந்தியா மறுசுழற்சி என்ற பெயரில் அமெரிக்க ஐரோப்பியரின் குப்பைகளை இறக்குமதி செய்கிறது. பெரும்பாலும் நாம் இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய், தாதுக்கள், எந்திரங்கள் போன்ற உற்பத்திக்கான மூலப்பொருட்களாக இருக்க ஏற்றுமதி செய்வதோ மதிப்பு கூட்டப்பட்ட நுகர்பொருட்களாகவும் இறுதிப் பொருட்களாகவும் (Finished Products) இருக்கின்றன.
இந்தியா மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இப்படித்தான் கணிசமான அளவிலான பொருட்கள் அந்த நாடுகளின் குடிகளுக்காகவன்றி ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பொருட்களுக்கான உற்பத்தி வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதாலும் அரசு வருவாயை அதிகரிப்பதாலும் அரசாலும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றன. எனினும், இந்த வேலை வாய்ப்புகளும் பணப்புழக்கமும் தேவையிலிருப்போருக்கு பலனளிப்பவையாக இருந்திருந்தால், ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் 22 கோடிபேர் வறுமையில் இருந்திருக்க மாட்டார்கள். இந்தப் பொருளாதார நலன்கள் யாருக்கானவை என்பதை விவரிக்க இங்கு இடமில்லாததால் தவிர்க்கிறேன்.
இன்னொருபுறமோ, பொருட்களின் உற்பத்தியும் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. உற்பத்தி இருந்தால் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வும், சூழல் சீர்கேடுகளும், இயற்கை மற்றும் மனித வளச்சுரண்டலும் நிச்சயம் இருக்கும். ஆனால், பக்கத்து ஊரின் தேவைக்கான உற்பத்திக்காக நம்மூரின் வளங்கள் ஏன் சுரண்டப்பட வேண்டும்? ஏன் நம்மூரின் தொழிலாளர்கள் சுரண்டப்பட வேண்டும்? ஏன் யாரோ ஒருவரின் நலனுக்காய் நாம் சூழல் சீர்கேடுகளை அனுபவிக்க வேண்டும்? ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளுக்கான தன்னிறைவை நம் சொந்த நாட்டின் குடிகளே எட்டாத நிலையில், ஏற்றுமதிக்காக உற்பத்தியை எப்படி நாம் நியாயப்படுத்த முடியும்?
கெடுவாய்ப்பாக, மூன்றாம் உலக நாடுகளின் நிலமானது வளர்ந்த நாடுகளுக்கான நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் சமையல்கூடமாகவும் அவர்களின் கழிவுகளை சுமக்கும் கழிவறையாகவுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம்; ஆயத்த ஆடைகளின் உற்பத்தியை மட்டும் எடுத்துக்கொண்டாலே, அவற்றின் உற்பத்திக் கேந்திரமான திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவை செய்திருக்கும் சூழல் நாசங்களை நம்மால் உணர முடியும். இன்னொரு உதாரணமாக தோல் தொழிற்துறையையும் சொல்ல முடியும்.
சூழல் சீர்கேடுகள் மட்டுமின்றி, இன்று காலநிலை மாற்ற நெருக்கடியை உலகம் எதிர்கொண்டு வரும்நிலையில் ஒவ்வொரு நாடும் தனது கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு உற்பத்திப் பொருளின் உற்பத்திக்கான நியாயங்களையும் அவற்றின் கார்பன் வழித்தடத்தைக் குறைக்கும் வழிகளைப் பற்றியும் நாம் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இந்த பின்னணியில் இந்தியாவின் முக்கியமான சுற்றுச்சூழல் இதழான ‘Down to Earth’ ன் அக்டோபர் இதழில் வெளியான தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தபோது எனக்குக் கடும் அதிர்ச்சியே ஏற்பட்டது.
“அறிவியல் மற்றும் சூழல் மையத்தின்” (CSE) ஆய்வறிக்கையான “Decarbonising India: Iron & Steel Sector” இன் ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வில் கணிசமான பங்குவகிக்கும் (5%) இரும்பு மற்றும் எக்கு உற்பத்தியை எப்படி ‘கரிமநீக்கம்’ (Decarbonising) செய்வது என்று அந்த தலையங்கம் பேசுகிறது. இந்தியாவின் தற்போதைய இரும்பு எக்கு உற்பத்தியானது ‘Blast Furnace’ மற்றும் ‘Basic Oxygen furnce’ எனும் வழிமுறைகளை பயன்படுத்திப் பெறப்படுவதையும் அதை ‘Direct Reduced Iron’ (DRI) எனப்படும் முறைக்கு அதுவும் நிலக்கரிக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி செய்யுமாறு மாற்றியமைப்பதன்மூலம் உமிழ்வைப் பெருமளவு குறைக்க முடிவதோடு அந்த குறைப்பினால் ஈட்டப்படும் கார்பன் சேமிப்பானது (Carbon space) இரும்பின் உற்பத்தியை இன்னும் மூன்று மடங்கு உயர்த்த உதவுமென்றும் இதன்மூலமாக இந்தியா உமிழ்வைக் குறைப்பதோடு வளர்ச்சியையும் எட்ட முடியுமென்று தலையங்கம் குறிப்பிடுகிறது.
இந்த தொழில்நுட்ப மாற்றத்திலும் அதுகொடுக்கும் உமிழ்வு ஆதாயத்திலும் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இங்கு ஒரு சிறிய முரணும் வேறுசில கொள்கைசார் பிரச்சினைகளும் இருப்பதாக உணர்கிறேன். முதலாவது முரணாக இருப்பது, ஒன்றில் நாம் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதன் வழியாக உமிழ்வைக் குறைக்க முடியும் அல்லது புதிய தொழில்நுட்பத்தின் வழியாக உற்பத்தியை அதிகரித்து அதே உமிழ்வைத் தொடரமுடியும். உற்பத்திப் பெருக்கத்தையும் (அதாவது தலையங்கம் சொல்லும் வளர்ச்சியையும்) உமிழ்வுக் குறைப்பையும் ஒரே நேரத்தில் எட்ட முடியாது.
அடுத்த சிக்கலாக நான் பார்ப்பது, வளர்ச்சியை அதாவது உற்பத்தியை அதிகரிப்பதன்மூலம் உள்நாட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமென்று தலையங்கம் குறிப்பிடுகிறது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய இரும்பு மற்றும் எக்கு உற்பத்தியாளராக இருக்கிறது. எனினும் பெரும்பாலானோருக்கு தங்கள் பாதுகாப்பான வீட்டுக்கான இரும்பு கிடைக்கக்கூடியதாக இல்லை என்பது ஏன் என்று தலையங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால், 1050 கோடி மெட்ரிக் டன் இரும்பு உற்பத்தி செய்து இத்துறையில் முன்னணியில் இருக்கும் சீனாவோடு ஒப்பிடும்போது வெறும் 100 கோடி மெட்ரிக் டன்களே இந்தியா உற்பத்தி செய்வதாகவும் 2030 இல் எதிர்பார்க்கபடும் வளர்ச்சியான 300 கோடி மெட்ரிக் டன் உற்பத்தித்திறன் இலக்கை எட்டினாலும்கூட அது மிகவும் குறைவாகவே இருக்குமென்றும் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறது தலையங்கம்.
உலகில் தனிநபர் சராசரி இரும்பு பயன்பாடானது 229 கிலோகிராமாக இருக்க இந்தியாவில் வெறும் 160 கிலோகிராம் இரும்பே நுகரப்படுகிறது என்று குறிப்பிடும் தலையங்கம் உலக சராசரியான 229 கிலோகிராம் நுகர்வில் ஆகப்பெரும்பாலான நுகர்வை எந்த நாடுகள் செய்கின்றன என்பதையும் இந்தியாவில் 160 கிலோகிராம் நுகர்வில் அடித்தட்டு மக்களுடையது என்னவாக இருக்கிறது என்பதைக் குறித்தும் அக்கறை கொள்ளவில்லை. அதாவது உற்பத்தி செய்யப்படும் இரும்பானது ஒருபுறம் தேவைக்கு அதிகமாக நுகரப்படுவதையும் இன்னொருபுறம் அடிப்படைத் தேவைகளே நிறைவேற்றப்படாததையும் கண்டுகொள்ளாமல் உற்பத்தியை இன்னும் அதிகரித்தால் எல்லாருடைய தேவைகளும் தானாகவே நிறைவு செய்யப்படும் என்று கருதுவதுபோலத் தெரிகிறது.
இது சந்தைப் பொருளாதரா அர்த்தத்தில் “trickling down effect” என்று சொல்லப்படும் வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட சிந்தனையாகத் தெரிகிறது. அதாவது பெரிய பாத்திரத்தில் செல்வம் பொங்கி வழியும்போது பக்கத்திலிருக்கும் சிறுசிறு பாத்திரங்களும்கூட நிரம்பும் என்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. ஆனால், உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை போன்ற அண்மையில் வெளியான முக்கியத்துவமிக்க அறிக்கைகள் இதற்கு நேர்மாறான சித்திரத்தையே நமக்குத் தருகின்றன.
இன்னொருபுறம், இந்தியா தனது மொத்த இரும்பு மற்றும் எக்கு உற்பத்தியில் கணிசமான பங்கை அதாவது 2021-22 நிதியாண்டில் மட்டும் சுமார் 13.5 கோடி மெட்ரிக் டன்னை 170 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது ஆயிரம் சதுர அடிகொண்ட 38 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு போதுமான இரும்பின் அளவாகும். இதுவே அரசு தொகுப்பு வீடுகளான 400 சதுர அடி வீடுகளாக இருந்தால் ஒரு கோடிக்கும் மேலான வீடுகளை, ஏற்றுமதி செய்யப்படும் இரும்பைக் கொண்டு நம்மால் கட்டிவிட முடியும். சொந்த வீடற்ற பலகோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம் அண்டை நாடோடு போட்டிப்போடுவதற்காக தனது இரும்பு உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த உற்பத்தி அதிகரிப்பு உண்மையில் யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும்?
இன்னும் ஒரு அபத்தமான கருத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த தொழில்நுட்ப மாற்றமானது மிகஅதிக செலவு பிடிக்கக்கூடியது என்று குறிப்பிடும் தலையங்கம் இதற்கான நிதியை (இதுபோன்ற பல்வேறு தொழிற்துறைகளை பசுமையாக மாற்றியமைப்பதற்காக) உலக நாடுகளிடமிருந்து பெறுவதுதான் இந்தியா வரும் ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் (எகிப்தில் நடந்த உச்சி மாநாட்டுக்கு முந்தைய இதழ்) பேசவேண்டியது என்கிறது. அதாவது, இந்தியாவில் மொத்த இரும்பு உற்பத்தியில் கணிசமான பங்கைச் (45%) செய்யும் ஜிண்டால் (JSW), டாடா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL) மூன்று நிறுவனங்களும் தம் உற்பத்தியில் உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்பச் செலவை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக வளர்ந்த நாடுகள் தரவேண்டிய நிதியிலிருந்து இந்தியா பெற்றுத்தர வேண்டுமாம்.
இந்தப் பரிந்துரையானது ஐ.நா.வின் அழுத்தத்தால், நாளை வளர்ந்த நாடுகள், தாம் தரவேண்டிய நிதியை ஒருவேளை தந்துவிட்டால்கூட அது யாருக்கு மடைமாற்றப்படும் என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் விளிம்புநிலை மக்களை காலநிலை மாற்ற அபாயங்களிலிருந்து மீட்கவும் ஏராளம் நிதி தேவைப்படும் நிலையில், எதிர்கால வளர்ச்சியை முன்னிட்டு பெருநிறுவனங்களுக்கு நிதி வழங்குவது போன்றவைதான் வளர்ந்த நாடுகள் செய்ய வேண்டிய காலநிலை நீதி என்பதுபோன்ற தோற்றத்தை தலையங்கம் உருவாக்குவது அதிர்ச்சியளிக்கிறது.
உண்மையிலேயே இந்த தொழில்நுட்ப மாற்றத்தால் தற்போது ஒரு மெட்ரிக் டன் இரும்புக்கு 2.2 மெட்ரிக் டன்னாக இருக்கும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 1.5 மெட்ரிக் டன்னாக குறையுமென்றால் நிச்சயம் வரவேற்கத்தக்கதே. ஆனால், அவ்வாறு ஈட்டப்படும் கார்பன் வெளியானது வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கான உற்பத்தியை ஈடுசெய்ய மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பயன்படுத்தக்கூடாது. கெடுவாய்ப்பாக, இந்தியா இரும்பு உற்பத்தியை மும்மடங்காக்குவது என்பது இரும்புத்தாது அகழ்வையும் அதற்காக காடழிப்பையும்கூட மும்மடங்காக்கும் என்பதைத் தலையங்கம் கவனிக்கத் தவறியிருக்கிறது.
முழுக்க முழுக்க தங்கள் இலாப நோக்கத்துக்காக மட்டுமே உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கார்பன் வரிவிதிப்புகள் செய்து, அவற்றைத் தாம் ஈட்டும் இலாபத்திலிருந்து தமது உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டியதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமேதவிர வளர்ந்த நாடுகளிடமிருந்து அவற்றுக்கு நிதி பெற்றுத்தருவது அல்ல. அதே நேரத்தில், இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் நியாயமாகப் பங்கிடப்படுவதையும் உறுதி செய்வதுதான் விளிம்புநிலை மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய நீதியாகும். வேறெதுவும் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சூழல் அநீதியாகவே இருக்கும்.
குறிப்பாக இரும்பை எடுத்துக்கொண்டால் கட்டிடங்கள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், தனிநபர் வாகனங்கள், அத்தியாவசியமற்ற நுகர்பொருட்கள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான எந்திரங்கள் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்கள் தவிர்த்து இவை எதுவும் உண்மையில் ஒரு நாட்டிற்கு சூழல்ரீதியில் (காலநிலை மாற்ற நெருக்கடி மற்றும் அடித்தட்டு மக்களின் தேவைகளின் பின்னணியில்) அத்தியாவசியமானவை அல்ல. கட்டிடங்களை எடுத்துக்கொண்டாலே இரும்புக் கம்பிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மிடமிருக்கின்றன. உற்பத்தியை அதிகரிக்காலமேயே (ஏன் குறைத்தும்கூட) உற்பத்திப் பொருட்களை நியாயமாகப் பகிர்ந்தளிப்பதன்மூலம் அனைவருக்குமான அடிப்படைத் தேவைகளை நாம் பூர்த்தி செய்வதோடு சூழல் நீதியையும் சமூக நீதியையும் நாம் அடையமுடியும்.
இப்படியான மட்டுறு வளர்ச்சியையே (Degrowth) சமீபத்திய ஐ.பி.சி.சி. அறிக்கையும் பேசுகிறது. சந்தைப் பொருளாதார அர்த்தத்திலான வளர்ச்சியால் ஒருபோதும் சூழல் நீதியைப் பெற்றுத்தர முடியாது. சூழல் நீதியை உள்ளடக்காத வளர்ச்சி மானுட சமூகத்தின் நலனுக்கானதாக இருக்க முடியாது. மட்டுறு வளர்ச்சி ஒன்றே நாம் பிழைத்திருப்பதற்கான வழியாகவும் இருக்கும். சந்தை சக்திகளின் கருணைப் பார்வையால்தான் இவ்வுலகம் மீட்படையமுடியுமென்று நம்புவது கெடுவாய்ப்பாக ஒரு பேரழிவாகவே இருக்கும்.
- ஜீயோ டாமின்
- [email protected]
Excellent.