பரந்துபட்ட மின் உற்பத்தி… இந்தியாவுக்கு வழிகாட்டுமா தமிழ்நாடு?

‘நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அதன் உற்பத்திக்குச் சமம்’ என்பதுதான் மின்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் முன்வைத்த முக்கியமான கோஷம், “குவிக்கப்பட்ட மின் உற்பத்தி முறையிலிருந்து, பரந்துபட்ட உற்பத்தி முறைக்கு மாற வேண்டும்” என்பதுதான். அதாவது, மின்சாரம் எங்கு தேவைப்படுகிறதோ அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டு பகிர்மானத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும். அன்று ஆட்சி செய்த அரசு, மக்களின் இந்தக் கருத்தை உள்வாங்கவில்லை என்பது மட்டுமல்ல… புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி முன்னெடுத்த மின் தயாரிப்பில்கூட அதானியின் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட சூரியசக்தி உற்பத்தி முறைக்குத்தான் முக்கியத்துவம் அளித்தது.

இப்போது ஆளும் தி.மு.க அரசு, மாவட்டம்தோறும் சூரியசக்தி உற்பத்தியை மேற்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐந்து மெகாவாட் முதல் 20 மெகாவாட் வரை இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ‘சூரிய சக்தியில் மொத்தமாக 20,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, கிரிட்டுக்குக் கொடுக்கப்படும். அதில், மேலும் 10,000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜில் சேமிக்கப்படும்’ என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. நீண்டகால இலக்கான பரந்துபட்ட மின் உற்பத்தி முறைக்கு இது முதல் படி. நீண்ட தூரம் போக வேண்டியிருந்தாலும், நிச்சயமாகச் சரியான திசையைக் காட்டுகிறது இந்த அறிவிப்பு. இன்னும் ஸ்மார்ட் கிரிட், மைக்ரோ கிரிட் போன்ற கட்டுமானங்களின்போது பரந்துபட்ட உற்பத்தி முறை மேலும் சாத்தியமாகும்.

மின் உற்பத்திக்குப் போகும் முன், நமது மின் பயன்பாடு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்… ‘நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அதன் உற்பத்திக்குச் சமம்’ என்பதுதான் மின்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு. தமிழ்நாடு அரசின் மின்துறை வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டு கொள்கை அறிக்கையின்படி, ‘உற்பத்தியாகும் மின்சாரத்தில் 35 சதவிகிதம் வீடுகளுக்கும், 38.8 சதவிகிதம் HT மற்றும் LT தொழில் நிறுவனங்களும் சென்றுவிடுகிறது. இந்தத் தரவுகளின் மூலம் நம்மால் எவ்வளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

 

1960-களிலேயே தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற ஆரம்பித்தது. வாகன உற்பத்தி, ஜவுளித்துறை, தோல் தொழிற்சாலைகள் என குறு, சிறு தொழில்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் முதுகெலும்புகளாகின. ஆனால், இந்தத் தொழிற்சாலைகளில் உள்ள மின் மோட்டார்களும், இயக்கிகளும் திறன்மிக்கதாக இல்லை. எனவே, தமிழ்நாடு நம் மாநிலத்துக்கென மின்னாற்றல் திறன் மேம்பாட்டு நிறுவனத்தை அமைக்க வேண்டும். இந்த நிறுவனம், அதிதீவிர இலக்குகளை நிர்ணயித்து அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், மின் பயன்பாட்டை 35 சதவிகிதம் குறைக்கும் வகையில் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் திறன் குறைவாக உள்ள மோட்டார்களையும், மற்ற மின் சாதனங்களையும் திறன்மிக்கதாக மாற்றுவதற்குத் தேவைப்படும் கடன் மற்றும் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கை, புதிதாக அனல் மற்றும் அணு மின் நிலையங்களின் தேவையை இல்லாமல் செய்துவிடும்.

அடுத்ததாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னணுச் சாதனங்களையும் திறன்மிக்கதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விசிறிகள் சுமார் 70-90 வாட்ஸ் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. புதிதாக வந்துள்ள திறன்மிக்க மின்விசிறிகள் 40-50 வாட்ஸ் மட்டுமே பயன்படுத்தும். திறன்மிக்க மின்விசிறிகளுக்கு மாறுவதன் மூலம் மின்சாரம் அதிகமாகச் சேமிக்கப்படுவதுடன், மின்விசிறிகளின் வாழ்வுக்காலமும் அதிகரிக்கும். `வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒன்பது மின்னணுச் சாதனங்கள்தான் மிக அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன’ என்கிறது புனேயைச் சேர்ந்த பிரயாஸ் அமைப்பு. அதிலும் விளக்குகள், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ், தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் மட்டுமே 80 சதவிகித மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. எனவே, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த திறன்மிக்க சாதனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு திறன்மிக்க மின்விசிறிகள், விளக்குகளை இலவசமாக அரசு வழங்க வேண்டும். பிறருக்கு மானிய விலையில் வழங்கலாம்.

குளிர்சாதனப் பெட்டிகள்தான் மின்சாரத்தை உச்சபட்சமாகப் பயன்படுத்துபவை. அதனால், அவற்றைத் திறன்மிக்கதாக உற்பத்தி செய்ய, பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2019-ல் வெளியிடப்பட்ட நேஷனல் கூலிங் பிளான், ‘இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்; சில பகுதிகள் வெட்-பல்பு வெப்பநிலையை எட்டிவிடும் என்பதால் குளிர்சாதனப் பயன்பாடு பத்து மடங்கு அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கிறது. இந்தத் தரவுப்படி, குளிர்சாதனப் பெட்டிகளை தொடக்கம் முதலே மின்திறன்மிக்கதாக உற்பத்திசெய்ய கட்டாயமாக்க வேண்டும். மின்சாரத்தைச் சேமிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அறிக்கைகள் வெளியிட வேண்டும். இது மாற்று யோசனைகள் பெறுவதற்கு வழிவகை செய்யும்.

மின் உற்பத்தியை மேலும் பரவலாக்க, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை மேலும் பரவலாக்கி, கிராமம்தோறும் சூரியசக்தி, காற்றாலை உற்பத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உதாரணமாக, தென்காசி மாவட்டத்திலுள்ள முள்ளிக்குளம் கிராமத்துக்கு ஒரு நாளுக்கு 1,000 யூனிட் மின்சாரம் போதுமானது. அதை சூரியசக்தி மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் மூலம் பூர்த்தி செய்ய முடியும். அதை அங்குள்ள துணை மின் நிலையத்தில் அல்லது அரசு நிலத்தில் அமைப்பதன் மூலம் மின்சாரத்தைக் குவித்து உற்பத்திசெய்து பகிர்மானத்துக்குக் கொண்டுவரும்போது ஏற்படும் வணிகம் மற்றும் தொழில்நுட்ப இழப்புகளைத் தவிர்க்க முடியும். கிராமத்தில் அமைக்கப்படும் இந்த மின் நிலையத்தை ‘மைக்ரோ கிரிட்’ உடன் இணைத்துவிட்டால் ஒருவேளை இந்த மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டால்கூட பிற உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்று, தற்காலிகமாகப் பயன்படுத்த முடியும்.

சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்க அரசு மேற்கூரை சூரியசக்தி தகடுகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாகவும், மத்தியதர வர்க்கத்தினருக்கு மானிய விலையிலும் வழங்கி பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம். விளிம்புநிலை மக்களின் கைகளில் மின் உற்பத்தி செய்யும் கருவிகள் வழங்கப்படுவது சமூகநீதி பார்வையில் முக்கியமான மைல்கல் ஆகும். வணிக மால்கள், வளாகங்கள் மின்னாற்றலைச் சிக்கன மாகவும் திறன்மிக்கதாகவும் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தி, மேற்கூரைகளில் சூரியசக்தி உற்பத்தியை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

 

காற்றாலைகள் நிறுவுவதை 1980-களிலேயே தொடங்கியதால், நிறுவுதிறனில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. ஆனால், விரைவாகத் தொடங்கும்போது சில பாதகங்களும் உள்ளன. அந்தக் காலகட்டத்தில் காற்றாலை உற்பத்தியில் 200 கிலோவாட் இயந்திரங்கள் மட்டுமே இருந்தன. அதிக காற்றுள்ள பகுதியில் குறைந்த உற்பத்தித்திறன் இயந்திரங்களே நிர்மாணிக்கப்பட்டன. இப்போது 9 மெகாவாட் உற்பத்தித்திறன்கொண்ட காற்றாலைகள் வந்துவிட்டன. இவற்றை நிறுவி, பேட்டரி ஸ்டோரேஜ் சேர்ந்தால் அதிக காலத்துக்கு மின்சாரம் கிடைக்கும். அநேக காற்றாலைத் திட்டங்கள் தனியார் வசமுள்ளன. அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசு கடனுதவி அளிக்க வேண்டும். அப்படி இயலாதவர்களின் காற்றாலைகளை அரசு எடுத்து, திறனை அதிகரித்து உற்பத்தியைக் கையாள வேண்டும். இதன் மூலம் காற்றாலை உற்பத்தித்திறன் பன்மடங்கு உயரும். இதேபோல் நீர்மின் திட்டங்களிலும் புதிய இயந்திரங்களைப் பொருத்துவதன் மூலம் அதே அளவு நீரில் அதிகமான மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

சூரிய சக்தியில் இயங்கும் விவசாய பம்பு செட்டுகளைச் செயல்படுத்தும் பிரதம மந்திரியின் (PM-KUSUM) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. இதில், பயனீட்டாளர் பங்களிப்பாக 7.5 குதிரைத்திறன் பம்புசெட்டுகளுக்கு கொடுக்கவேண்டியுள்ளதால் இந்தத் திட்டம் விவசாயிகளிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. பயனீட்டாளர் பங்களிப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால், நிச்சயம் விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு எந்த நேரமும் இலவசமாக மின்சாரம் கிடைக்கும்.

புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது சமூகநீதி பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் ஏன் வடசென்னையிலும் கூடங்குளத்திலும் மட்டுமே அமைக்கப்படுகின்றன, ஏன் பெசன்ட் நகரில் அமைக்கப்படுவதில்லை?’ என்கிற கேள்வியே புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்திக்கான அடித்தளம். மி

  • கோ.சுந்தர்ராஜன்
  • குறிப்பு: இக்கட்டுரை முதலில் ஜூனியர் விகடனில் வெளியானது

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments