அசாமில் உள்ள சோனிட்புர் மாவட்டத்தில் இன்று(ஏப்ரல் 28 ஆம் தேதி) காலை 07:51(இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய கண்டத்தட்டு மற்றும் ஆசிய கண்டத்தட்டின் எல்லைக்கு அருகாமையில் நிலநடுக்கத்தின் மையம் உருவாகியது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் முதற்கட்ட ஆய்வின்படி இந்த நிலநடுக்கம் இமாலய பிளவுக்கு (Himalayan Frontal Thrust) அருகில் உள்ள கொப்பிலி எனும் பிளவுக்கு(Kopili Fault) அருகில் தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப்பகுதி கண்டத்தட்டுகளின் எல்லைக்கு அருகாமையில் உள்ளதால் அபாயகரமான நிலஅதிர்வுகள் அதிகம் தோன்றும் மண்டலமாக மத்திய புவியியல் அமைச்சகம் பிரித்து வைத்து இருந்தது.
இதற்குமுன் தோன்றிய நிலநடுக்கத்தின் தரவுகள் மூலம், இப்பகுதி மிதமான அதிர்வு முதல் தீவிர அதிர்வுகள் உண்டாகும் பகுதி என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1960ஆம் ஆண்டு ஜூலை 29அம் (ரிக்டர் அளவு 6.0) அன்று தோன்றிய நிலநடுக்கம் அப்பகுதியில் அதிக ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய தினம் தோன்றிய நிலநடுக்கம் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், பிஹார்,மேற்குவங்காளத்தின் சில பகுதிகளிலும், வங்கதேசத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. எழுபதுக்கும் மேற்பட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மைய வலைதளத்திலும், அலைபேசி செயலியில் பதிவாகியது.
நிலநடுக்க மையத்திலிருந்து 100 கி.மீ சுற்றளவில் வரும் பகுதிகளான சோனிட்புர், நாகோன், கவுகாத்தி பகுதிகளில் சாலைகள் பாதிப்படைந்துள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மைய வலைதளத்திலும், கவுகாத்தி வானிலை ஆய்வு மைய வலைதளத்திலும் பதிவாகியுள்ளது. நிலநடுக்க அதிர்வு ஏற்பட்ட பின், அடுத்த இரண்டரை மணி நேரத்துக்குள் ஆறு முறை ரிக்டர் அளவு 3.2 முதல் 4.7 வரையிலான அதிர்வுகள் பதிவாகியதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முழு அறிக்கை
– லோகேஷ் பார்த்திபன்