தயாராகிறது உலகத்திற்கான கருப்புப் பெட்டி

சமீபத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணம் இந்த தேசத்தை உலுக்கியது, இந்த விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்ய ஹெலியின் கருப்பு பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. இதே போல இவ்வுலகத்திற்கான கருப்பு பெட்டி இருந்தால் எப்படி இருக்கும்? ஆச்சரியம் வேண்டாம், அது தயாராகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள், காலநிலை மாற்றத்திற்கு உலகத்தை பொறுப்பாக்கும் வகையில் பூமிக்கான கருப்பு பெட்டியை உருவாக்கிவருகிறார்கள். விமானங்களில் உள்ள கருப்பு பெட்டி, விமானம் தொடர்பான அனைத்து தரவுகள், சமிக்கைஞள் என எல்லாவற்றையும் பதிவு செய்துகொள்ளும். எவ்வளவு மோசமான விபத்து ஏற்பட்டாலும் அந்த கருப்பு பெட்டிக்கு எதுவும் ஆகாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும், அதைப்போலவே பூமியின் கருப்பு பெட்டியை உருவாக்கிவருகிறார்கள் அறிவியலாளர்கள்.

எவ்வளவு மோசமான தட்பவெப்ப நிலையிலும், எவ்வித பேரிடரையும் தாங்கிகொள்ள கூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த கருப்புப் பெட்டி, காலநிலை மாற்றத்திற்கு பொறுப்பாக்கும் வகையில் தரவுகளை சேமித்து வைக்கும், ஆஸ்திரேலியாவில், புவியியல் ரீதியாக  நிலைத்தன்மை உள்ள டாஸ்மேனியா பகுதியில், அமைக்கப்பட்டு வருகிறது. கிளாஸ்கோவில் நடைபெற்ற #cop26 மாநாட்டிற்கு பிறகு “பூமியின் கருப்பு பெட்டியை”,அமைப்பதற்கான பணிகள் துவங்கின. இந்த பெட்டி 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் எனக் கூறுகிறார்கள்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகம் எடுக்கும்/எடுக்கத்தவறிய நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் பதிவு செய்யும் வகையில் இதன் கட்டுமானம் இருக்கும். இதுகுறித்து @reuters நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ள ஜிம் கேர்டிஸ், “இந்த பெட்டி வெறும் தரவுகளை சேமிக்கும் பெட்டியாக மட்டுமிருக்காது, உலகத்தலைவர்களை பொறுப்பாக்குவதற்கும், எதிர்கால தலைமுறையினருக்கு பாடமாகவும் அமையும்” என்கிறார்.

மேலும், “ஒருவேளை காலநிலை மாற்றத்தால் மானுட சமூகம் அழிவுற்றுப்போனால், இந்த 10 மீட்டர் நீளம் கொண்ட, எஃகினால் (steel) ஆன பெட்டி அனைத்து தரவுகளையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். இதன் மூலம் யாராவது தப்பி பிழைத்திருந்தாலோ அல்லது வேறு யாரோ வந்து கண்டு பிடித்துக் கொள்வதற்கு தரவுகளுடனும், பாடங்களுடனும் இருக்கும். சூரிய சக்தி, மற்றும் அனல் மின்சாரத்தால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தரவுகளை வகைமைப்படுத்தும்  மென்பொருள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள், குறிப்பாக சராசரி வெப்ப அளவு, ஆற்றல் பயன்பாடு, தீவிர நிகழ்வுகள் போன்றவை இப்பெட்டியில் சேமிக்கப்படும்.

இந்த முயற்சி உலகத்திற்கான எச்சரிக்கை போல் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments