திகில் சினிமா- ஒரு சூழலியல் பார்வை

6 godzilla

சினிமா தோன்றிய காலத்திலிருந்தே சூழலியல் திகில் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன என்பதை நம்ப முடிகிறதா? உலக சினிமாவில் மூன்றாம் தர சினிமா எனக் கருதப்படும் திகில் சினிமாவில் சூழலியல் கருத்துக்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்று பார்ப்போம்.

 

மனிதன் X இயற்கை

 

மனிதன் X இயற்கை. இதுதான் பெரும்பாலான திகில் படங்களின் அடிநாதம். இயற்கைக்கு எதிராக மனித இனத்தின் செயற்பாடுகள், இயற்கையுடனான அதன் போராட்டம், இயற்கையைக் கட்டியாள நினைக்கும் அதன் நோக்கம் ஆகியவற்றைத்தான் இந்தப் படைப்புகள் பேசுகின்றன. இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் ஹெர்மன் மெல்வில் எழுதிய ‘மோபி டிக்’ (Moby Dick) நாவல் இந்தப் போராட்டத்தைச் சொல்கிறது. இன்றுவரை அது இயற்கையியல் ஆய்வாளர்களால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய நாவலாக இருக்கிறது. மைக்கல் க்ரைட்டன் எழுதிய ‘ஜுராசிக் பார்க்’ நாவலும், அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படமும் இயற்கையை மீறிச் செல்லும்போது ஏற்படும் விபரீதங்களைப் பேசுகின்றன.

 

Creature from the Black Lagoon (1954) திரைப்படத்தை ‘மான்ஸ்டர்’ மற்றும் திகில் படங்களுக்கான வார்ப்புருவை வரையறை செய்த படமாகக் கருத முடியும். அமேசான் காட்டுப் பகுதியில் ஆராய்ச்சி செய்யப் போகும் ஆய்வுக் குழு ஒன்று, அமேசான் ஆற்றின் அடியில் வாழ்ந்துவரும் ஒரு பயங்கரப் பிராணியை எதிர்கொள்கிறது. அந்தப் பிராணி ஆய்வுப் படகில் இருக்கும் ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்ல முயல்கிறது. இந்தப் படம், அது வந்த காலத்தில் அமெரிக்க சினிமா பழங்குடி மக்களையும் கறுப்பர்களையும் எப்படி இன/நிற ரீதியாகக் காட்சிப்படுத்தியது, காட்டுமிராண்டிகளாகச் சித்தரித்தது என்பதற்கு நேரடியானதும் மறைமுகமானதுமான ஒரு எடுத்துக்காட்டு.

 

இந்தப் படத்தில் வரும் பயங்கரப் பிராணிக்கான தோற்றம் மற்றும் பின்னணி குறித்து விரிவாகக் கூறப்படுவதில்லை. மேலோட்டமாக அமேசான் ஆற்றோரம் வசிக்கும், பழங்குடியினர் தெய்வமாக வழிபடும் ஒரு உயிரியாகவே காட்டப்படுகிறது. அது ஆய்வாளர்களைக் கொல்வதும் அவர்கள் அதை அழிக்க முற்படுவதுமாகப் படம் நகர்கிறது. இப்படம் மான்ஸ்டர் க்ளாசிக் வரிசையில் முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. இயற்கையை அத்துமீறுவது மனிதப் பண்பு என்கிறது இந்தப் படம். மனித இனம்தான் பரிணாமத்தின் உயர் அடுக்கில் இருக்கும் விலங்கு என்பதால் அந்த அத்துமீறலில் வரும் ஆபத்துகளை மனிதர்கள் வெற்றியடைவதாக அது காட்டுகிறது. அதாவது மனிதர்களைக் கொல்வது இந்தப் பிராணியின் இயல்பு என்றும் இது மனிதனின் எதிரி என்றும் சித்தரிக்கப்படுகிறது.

 

இதே அமேசான் காடுகளின் தொன்ம உயிரியைத் தனது இரண்டு படங்களில் கொண்டுவந்தார் இயக்குனர் கியர்மோ டெல் டோரோ. அவரது உலகில் வெளிப்படும் பயங்கரப் பிராணிகள் எப்போதும் மனிதர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவையாகவே சித்தரிக்கப்படுகின்றன. அவரது திகில் மற்றும் மான்ஸ்டர் தத்துவம், இயற்கையின் மழை, காற்று, வெயில் போன்று நல்லது x கெட்டது என்று வகைப்படுத்த முடியாததாக அமைந்திருக்கிறது. அவரது The Shape of Water திரைப்படம் Creature from the Black Lagoon படத்தின் மீட்டுருவாக்கம் என்று கூற முடியும்.

 

அதிகம் திகில் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் ஹாலிவுட்தான் முன்னணியில் இருக்கிறது. கறுப்பு-வெள்ளைக் காலம் முதற்கொண்டு இன்றுவரை உள்ள பெரும்பாலான திகில் படங்களின் பிரதான வில்லன்களாகப் பேய்/பிசாசு, வேற்றுக்கிரக உயிரிகள், சீரியல் கில்லர் (ஸ்லாஷர்), இயற்கை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

 

இயற்கை x மனிதன் படங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, இயற்கை இயல்பாகவே அழிவு சக்தியாக வெளிப்படுவது. இதன் உதாரணங்களாக அனகொண்டா, Creature from the Black Lagoon, Jaws, Crawl போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது, மனிதனின் அத்துமீறல். இயற்கை உயிரி வாழும் இடத்திற்குப் போய் அதைத் தொந்தரவு செய்து பின்விளைவுகளை எதிர்கொள்வது, உதாரணமாக The Cave, The Ruins போன்ற படங்கள். மூன்றாவது, இயற்கையின் இயல்பை மீறிய செயல்களைச் செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள். அதாவது மரபணு மாற்றம், மரபணுப் பிறழ்வு (mutation), க்ளோனிங் போன்ற செயற்பாடுகளின் மூலம் ஏற்படும் விளைவுகள். இதற்கு உதாரணமாக Jurassic Park, Mimic, Godzilla போன்ற படங்களைச் சொல்லலாம்.

 

இவை இயற்கை x மனிதன் திகில் படங்களாக இருந்தாலும், சில படங்கள் அவற்றினுள் ஆழமான அரசியல், சூழலியல் பின்புலங்களையும் கொண்டிருக்கின்றன. அணு ஆயுத உற்பத்தியின் விளைவால் பூமியின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருந்த காட்ஜில்லா வெளிவந்து அணுக்கதிரி நிலையங்களை அழிக்கிறது. ஜப்பானில் 1954இல் வெளிவந்த காட்ஜில்லா படம், அமெரிக்கா ஜப்பானுக்கு அருகில் இருக்கும் ஒரு கடற்பகுதியில் நடாத்திய அணு ஆயுதப் பரிசோதனையில் பாதிப்படைந்த கப்பலையும் அதன் பயணிகளுக்கு ஏற்பட்ட கதிரியக்க பாதிப்பின் பின்னணியையும் வைத்து எடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் நேரடியாக அரசை விமர்சித்து எதையும் செய்துவிட முடியாத நிலையில் திரைப்பட இயக்குநர்கள் காட்ஜில்லாவைக் கையில் எடுத்தனர். இந்த மான்ஸ்டர்களின் மூலம் தங்கள் விமர்சனங்களை மறைமுகமாக முன்வைத்தனர். ‘உலக சினிமா’ என்ற வரைறைகளுக்குள் அடங்காத இந்தப் படங்கள் மக்களிடம் அரசியல் சிந்தனைகளை எடுத்துச் சென்றன. காட்ஜில்லா படம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது இதன் மூல வடிவத்தையும், திரிக்கப்பட்ட அமெரிக்க வடிவத்தையும் பார்த்தால் புரியும்.

 

மனிதன் மற்றும் இயற்கை

 

மனிதன் x இயற்கையை முன்வைத்துப் படங்கள் வந்தது போல மனிதன் மற்றும் இயற்கைக்கு இடையிலான உரையாடலை வைத்தும் படங்கள் வந்தன. இந்தப் போக்கைச் சமீப காலமாக வரும் திகில் படங்களில் அதிகம் பார்க்கலாம்.

 

இந்த வகைப் படங்கள், இயற்கையை எதிரியாகக் கட்டமைக்காமல் மனிதனின் சிந்தனையில், புரிந்துகொள்ளும் விதத்தில் கோளாறு இருப்பதாக நிறுவ முயல்கின்றன. Sea Fever (2019) எனும் படத்தில், கப்பலில் ஒரு கடல் உயிரியல் ஆய்வு மாணவர் அட்லான்டிக் கடற்பரப்பில் தன் நாட்களைக் கழிக்கச் செல்லும்போது ஒரு கடல் உயிரினத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. அது அந்தக் கப்பலை கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுள் ஈர்க்க, அதன் பயணிகளுக்கிடையில் முரண்பாடுகள் தோன்றி இறப்புகள் நிகழ்கின்றன. இந்த படம் ஜான் கார்ப்பென்டரின் The Thing (1982) படத்தின் நேரடி பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். பொதுவாக இம்மாதிரியான கதைக்களங்களில் இயற்கையுடன் போராடி வெல்வதைhd போன்று காட்டாமல், அதனை புரிந்துகொள்ள முயன்று தோற்றுப்போகும் விதமாகவே சித்தரித்திருப்பார்கள். கடல் சூழலியல் பற்றிய புரிதலை வழங்க முயலும் ஒரு திரைப்படம் Sea Fever.

 

அழிவில் இருக்கும் வனம் தன் இருப்பை பூமியில் நிலைநாட்டப் புதிய பரிணாமத்தை எடுக்கிறது. அது மனிதர்களை அழித்து ஒரு புதிய உலகை உருவாக்க நினைக்கிறது. இந்த பூமித் தாய் கோட்பாட்டை (Gaia Theory) வைத்து எடுக்கப்பட்ட படங்களில் எம். நைட் சியாமளன் எடுத்த The Happening படத்தையும் சமீபத்தில் வெளியாகிய Gaia (2021) படத்தையும் குறிப்பிடலாம். தமிழில் வெளிவந்த ‘பூமிகா’வும் இதே கருத்தாக்க்ததை வைத்துத்தான் எடுக்கப்பட்டிருந்தது.

 

The Ruins (2008) படத்தில் மாயன் கிராமத்தவர்கள் ஒரு இடத்தைத் தவிர்க்க வேண்டிய இடமாகக் கருதுகின்றனர். அந்த இடத்தில் தொன்மத் தாவரம் ஒன்று இருக்கிறது. அது மனிதர்களை இரையாகக் கொள்கிறது. அதன் இயல்பை மாற்றாமல் அவ்விடத்தைப் புனித இடமாகக் கருதும் மாயன் பழங்குடியினரின் எச்சரிக்கையையும் மீறிச் செல்லும் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த இறைச்சித் தின்னித் தாவரத்திற்கு இறையாகின்றார்கள்.

 

அலெக்ஸ் கார்லண்ட் இயக்கிய Annihilation, ரிச்சர்ட் ஸ்டான்லியின் Color Out of Space ஆகிய இரண்டு படங்களும் ஒருவித வேற்றுக்கிரக எரிகல்லின் மூலம் ஏற்படும் பரிணாம வளர்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இப்படங்களில் குறிப்பிட்ட பரப்பெல்லைக்குள் தாவர மற்றும் விலங்கினங்கள் மரபணுப் பிறழ்வு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகும். இந்தப் பகுதிக்குள் மாட்டிக்கொள்ளும் மனிதர்கள் அதன் விளைவுகளுக்கு பலியாவார்கள். Annihilation படத்தில் இயற்கையை விடுவிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் அந்த வேற்றுக்கிரக நிகழ்வும், Color Out of Space படத்தில் சூழலை ஒருவித ஒட்டுண்ணி ஆக்கிரமிக்கும் நிகழ்வும் பிரதானக் கதையம்சமாக இருக்கும். இவ்விரண்டு படங்களிலும் மனிதர்கள் உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள். Annihilation பரிணாம வளர்ச்சியுடன் ஒன்றி, இயற்கையாய் மாறி, ஒன்று கலந்து – அழிந்து இயற்கையாய் மீள்வதைப் பேசுகிறது, மறுபுறத்தில் Color Out of Space பரிணாமத்தை எதிர்கொள்ள முடியாமல் அழிந்துபோவதைப் பற்றிப் பேசுகிறது. இவ்விரண்டு படங்களையும் சூழலியல் திகில் சினிமாவின் முக்கியப் படங்களாகக் கருதலாம்.

 

கார்ப்பரேட் ஆதிக்கத்தினால் சூழல் மாசடைவதும், இயற்கை பேரழிவிற்கு உள்ளாவதும் மறுக்க முடியாத உண்மை. தொழிற்சாலைக் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், உயிரியல் கழிவுகள் என்று அவற்றின் அழிவுச் செயற்பாடுகள் எண்ணிலடங்காதவை. இவற்றின் பின்விளைவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திகில் படங்களைத் தனியாகப் பட்டியலிட முடியும்.

 

தென்கொரிய இயக்குனர் போங் ஜூன்-ஹோ எடுத்த The Host, Okja ஆகிய படங்கள் பெருநிறுவனங்கள் செய்யும் அழிவுச் செயல்களின் விளைவுகளைப் பற்றிப் பேசுகின்றன. இரசாயனக் கழிவுகளின் விளைவால் தோன்றும் ஒரு பயங்கரப் பிராணி சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சமூக அரசியல் விமர்சனங்களுடன் பேசுகிறது The Host. அதிக இறைச்சிக்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு பிராணியின் கதையை Okja சொல்கிறது. இந்த இரண்டு படங்களும் பெருவணிகம் மீதான விமர்சனங்களைக் காட்டமாக முன்வைப்பவை. இன்னொரு தென்கொரியப் படமான Train to Busan படமும் கார்ப்பரேட் செயற்பாடுகளின் விளைவையே காட்டுகிறது.

 

காடழிப்பு, இரசாயனக் கழிவு, பெருநிருவன இயற்கைச் சுரண்டல் என்று சூழலுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளின் விளைவுகளுக்கும் உயிர் கொடுத்து நடமாட விட்டால் எப்படி இருக்கும்? அப்படியொரு மான்ஸ்டர்தான் Swamp Thing. இயற்கையும் அமானுஷ்யமும் கலந்த உயிர் இந்த Swamp Thing. DC காமிக்ஸில் அறிமுகமான இந்த கொடிய விலங்கு மற்றும் ஹீரோ இயற்கைக்காகப் போராடுகிறது. இதனை மையமாக வைத்து ஜேம்ஸ் வான் ஒரு தொடரை எடுத்தார், வெகு சிறப்பாக அமைக்கப்பட்ட இந்தத் தொடர் ஒரே சீசனுடன் நின்று போனது.

 

திகில் சினிமாவை ஒரு சூழலியல் பார்வையில் பார்க்கும்போது நிறைய விஷயங்களைப் பேசலாம். திகில் இலக்கியமும் சரி (Frankenstein), சினிமாவும் சரி (Creature from the Black Lagoon), இயற்கையின் விதிகளை மீறும்போது ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை இன்னும் தொடர்கிறது. திகில் சினிமா எப்போதும் மூன்றாம் தர சினிமாவாகவே கருதப்பட்டுவந்திருக்கிறது. தமிழ் இலக்கிய உலகம் அதிகம் புறக்கணிக்கும் சினிமாவாக திகில் மற்றும் அறிவியல் புனைவுகள் இருக்கின்றன. இந்த மூன்றாம் தர சினிமாதான் அதிகம் சூழலியல் சார் படங்களைத் தந்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

இறுதியாக, Hellboy: The Golden Army பற்றியும் சொல்லலாம். கியர்மோ டெல் டோரோ இயக்கி. இந்தப் படத்தில் ஒரு காட்சி: ஹெல்பாய் மற்றும் வனதேவன் நுவாடாவிற்கு இடையே நடக்கும் மோதலின்போது வனதேவன் ஒரு அற்புத விதையை எடுத்து வீசுவான். அது நீரில் பட்டவுடன் ஒரு பிரம்மாண்ட தாவர உயிரியாக உருவெடுக்கும். ஹெல்பாய் அதனை வீழ்த்துவான். அது இறந்து வீழ்ந்த இடமெங்கும் பூக்களும் செடிகளும் படர்ந்து செல்லும். அந்தத் தருணத்தில் வனதேவன் சொல்வான், “இந்த உலகில் இருந்த ஒரே உயிரி அது, அதையும் அழித்துவிட்டாய், இதுதான் மனித இனம். இந்த இனத்திற்காகத்தான் நீ போராடுகிறாய்.” இந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஒரு காவியம். அந்த வன உயிரி இறந்த பின்னும் தன் மகரந்தங்களை காற்றில் அனுப்பும்போது மனித இனத்தின் மீது ஆத்திரம்தான் மிஞ்சும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments