“தமிழ்நாட்டில் உள்ள காப்புக்காட்டு பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு புதிய திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை. இப்பகுதிகளில் சுற்றுலாவை வளர்க்கும் பணியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளை மேலாண்மை செய்வதற்காக தமிழ்நாடு காட்டுப்பகுதிகள் அனுபவக் கழகம் பிரைவேட் லிமிடெட்” (Tamil Nadu Wilderness Experiences Corporation Private Limited) என்ற வணிக நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ள டாப்ஸ்லிப், சேத்துமடை, வால்பாறை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, சேலம் மாவட்டம் கருமாந்துரை (கல்வராயன் மலை) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தடியன்குடிசை, மன்னவனூர் ஆகிய இடங்களில் சுற்றுலாவை வளர்ப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். மேலும் சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுற்றுலாவாசிகள் இரவு நேர உலா மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
காட்டுப்பகுதி என்பது மிகப்பெரும்பாலான மக்களுக்கு புரியாத சிக்கலான தகவமைப்பினை கொண்டது. பல்லாண்டு காலம் காட்டில் வாழ்பவர்களால் மட்டுமே காடு குறித்த அறிவைப் பெற முடியும். இந்நிலையில் காடுகள் குறித்த அனுபவத்தை பெறுவது என்ற கருத்தாக்கம் அடிப்படையிலேயே தவறானது. அதற்கு அரசே ஊக்குவிப்பது அரசு அமைப்புகளின் புரிதலின்மையை காட்டும் நடவடிக்கையே! தற்போதைய நிலையில் காட்டுப்பகுதிகள் பொருளும், அதிகாரமும் படைத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களுடைய பொறுப்பற்ற செயல்பாடுகளே இயற்கை சமநிலையை குலைப்பதாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்களை சூழல் சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள் அனுமதிப்பது மிகப்பெரிய இடரையே தரும்.
காடு என்பது புதிரான உயிர்க்கோளமாகும். ஒவ்வொரு காடும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பிடம் வகிக்கும். உதாரணமாக நீலகிரி மண்டலம் உலகிலேயே ஆசிய யானைகள் அதிக அளவில் வசிக்கும் இடம். தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பரந்திருக்கும் நீலகிரி மண்டலம் முன்னொரு காலத்தில் காட்டுயிர்களாலும், ஆதிகுடி மக்களாலும் நிரம்பி இருந்தது. பல்வேறு சதித்திட்டங்களின் காரணமாக சட்டரீதியாக ஆதிகுடி மக்களை அப்பகுதிகளிலிருந்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மறு பரிமாணமாக காட்டுயிர்களும் கணிசமாக அழிக்கப்படுகிறது. பதிலாக தனியார்துறையினரின் முதலீட்டில் உல்லாச கேளிக்கை விடுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த உல்லாச கேளிக்கை விடுதிகளின் பயன்பாட்டுக்காக இயற்கையில் அமைந்த நீராதாரங்கள் திசை திருப்பப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. இது ஒட்டுமொத்த காட்டின் அமைவை மாற்றி விடுகிறது. இதனால் காட்டுயிர்களின் உணவு மண்டலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைத் தொடர்ந்து காட்டுயிர்கள் நீரும், உணவும் தேடி மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் அவலநிலை ஏற்படுகிறது.
காட்டுயிர்கள் பல்வேறு வகைகளில் அழிவை சந்திக்கின்றன. அண்மையில் மசினகுடியில் தனியார் சுற்றுலா விடுதி சார்பில் யானையின் மீது தீப்பற்றி எரியும் டயரை எறிந்ததால் அந்த யானை கடும் தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவத்தையோ, காட்சியையோ எளிதில் மறந்துவிட இயலாது.
மேற்கூறப்பட்ட உல்லாச கேளிக்கை விடுதிகள் இல்லாத பகுதிகளிலும் தற்போது விதிமுறைகளுக்கு உட்பட்டும், விதிமுறைகளை மீறியும் ஆங்காங்கே காடுகளுக்குள் செல்பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகள் குறித்த புரிதல் சிறிதுமற்று தங்கள் நடவடிக்கைகள் மூலம் காட்டுயிர்களுக்கு இன்னல் விளைவிக்கின்றனர்.
காடுகளுக்கு செல்பவர்களில் மிகப்பெரும்பாலானோர் காட்டுப்பகுதிகளுக்கு செல்லும்போது மது அருந்துகின்றனர். மதுபோதையில் உரத்து சத்தம் எழுப்புவது ஒரு பொதுவான செயல்பாடாக இருக்கிறது. இது காட்டுயிர்களின் இயல்பை தொல்லை செய்வதாகும். வாகனங்களில் செல்பவர்களின் ஹாரன் சப்தம் காட்டுயிர்களை அச்சுறுத்தும் தன்மை கொண்டது.
இரவு நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் செல்பவர்கள் காட்டுயிர்கள் இருக்கும் இடத்தை சூழ்ந்து கொண்டு திடீரென ஒரே நேரத்தில் அதிக திறன் கொண்ட முகப்பு விளக்குகளை எரிய விட்டும், ஹாரன்களை அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியும் தங்கள் மனிதத் தன்மை(!?)யை வெளிக்காட்டுகின்றனர். இதனால் திகிலடைந்து ஓடும் காட்டுயிர்களின் பரிதவிப்பை கண்டு களிப்படையும் மனநோயாளிகளாக இவர்கள் இருக்கின்றனர்.
மான், மயில் போன்ற எளிய காட்டுயிர்களை வேட்டையாடுபவர்களும் இருக்கின்றனர். கடும் தண்டனைக்குரிய குற்றங்களை செய்யும் இவர்கள் தங்கள் பொருள் மற்றும் அதிகார செல்வாக்கால் விசாரணைக்கே உட்படாமல் தப்பி விடுகின்றனர்.
போதை ஏறும்வரை மதுபானங்களை குடிக்கும் மதுப்பிரியர்கள் தங்கள் குதூகலத்தைக் கொண்டாடும்வகையில் மதுபான கண்ணாடி பாட்டில்களை பாறைகளில் வீசி எறிந்து உடைப்பதும் வழக்கம். இவை காட்டு விலங்குகளின் கால் பாதங்களில் குத்தினால் என்னவாகும் என்று யாரும் கவலைப்படுவதில்லை.
மதுப்பழக்கத்தோடு புகைப்பழக்கமும் கொண்டவர்கள் காட்டுப்பகுதிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றனர். அவர்கள் விட்டெறியும் ஒரு தீக்குச்சியோ, சிகரெட் துண்டோ பெரும் தீ விபத்துக்கு வித்திடலாம். இதில் காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலா செல்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அண்மையில் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலர் உயிரிழந்ததை அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது.
இவ்வாறு மதுபான வழக்கம் இல்லாதவர்கள்கூட பலவிதங்களிலும் காடுகளுக்குள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் பைகள் விலங்குகளின் உணவுப்பொருட்களோடு கலந்து விலங்குகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.
இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசின் காடுகள் துறை என்ன செய்கிறது என்று கேள்வி எழுகிறதா? நாட்டில் செயல்படும் அரசுத்துறைகளே பொறுப்பற்று நடந்துகொள்ளும் நிலையில் நாட்டில் பாதியும், காட்டில் மீதியும் செயல்படும் காடுகள்துறை மட்டும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்று மிகையாகத் தெரியவில்லையா?
பொருளும், அதிகாரமும் மிக்கவர்களுக்கு எதிராக செயல்படுவது காடுகள் துறை அதிகாரிகளுக்கு மட்டும் சாத்தியமாகுமா என்ன? அதைவிட தவறு செய்பவர்களுடன் இணைந்து கொள்வதுதானே அவர்களுக்கு தனிப்பட்ட பலன்களைத் தரும்!
சூழல் சுற்றுலா என்பது சுற்றுலாவாசிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எத்தனை முறை சென்றாலும் காடு என்பது பழகியவர்களுக்கும் புதிர்தான். ஒவ்வொரு காடும் ஒரு விதமாக இருக்கும். காட்டின் நடுவே இருக்கும் நீர்நிலைகள் கணிக்க இயலாதவை. எந்த நேரத்திலும் நீர்ப்பெருக்கு ஏற்படலாம். விலங்குகளின் நடத்தையும் கணிக்க இயலாதவைதான்.
உண்ணி (Tick) என்பது மிகச்சிறிய ஒரு பூச்சியினம். இது ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தது. ஒரு பெரிய உயிரின் உடலில் ஒட்டிக்கொண்டு அந்த பெரிய உயிரியின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டது. அட்டைப்பூச்சிகளைப் போல அல்லாமல் இந்த உண்ணிகள் மிகச்சிறிய உருவில் இருக்கும். எனவே இதனை உடனே கண்டுபிடிப்பது எளிதல்ல. உடலில் கண், மலவாய், பாலுறுப்பு போன்ற இடங்களில் ஒட்டிக்கொண்டு பலகாலத்திற்கு வாழும் தன்மை கொண்டது. இவற்றை கண்டுபிடித்து அகற்றுவதற்கு பல நேரங்களில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். இந்த உண்ணி போன்ற உயிர்கள் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதோடு, மனிதர்களுக்கு பல சிக்கலான நோய்களை பரப்பும் வாய்ப்புகளும் உள்ளன. இவையும் zoonotic disease வகையைச் சேரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த உண்ணியைப் போல் நூற்றுக்கணக்கான பூச்சியினங்கள் காட்டுப்பகுதிகளில் வசிக்கின்றன. இவற்றுள் பல பூச்சியினங்கள் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவை. இவற்றுள் சில பூச்சிகளின் நச்சு, மனிதர்களின் மூளை, தண்டுவடம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை பாதிக்கும் திறன் கொண்டவை.
எனவே காட்டுப்பகுதிகளுக்குள் சுற்றுலா போன்ற நோக்கங்களுக்காக தேவையற்று செல்வதை தவிர்ப்பதே மனிதர்களுக்கு பாதுகாப்பானது. காடுகளுக்குள் அதன் பூர்வகுடிகளான ஆதிகுடிகளைத் தவிர ஆய்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
காடுகளுக்குள் சுற்றுலா என்ற பெயரில் பொறுப்பற்ற மனிதர்களை அனுமதிப்பது சூழலை சிதைக்கவே பயன்படும். தமிழ்நாடு காட்டுப்பகுதிகள் அனுபவக் கழகம் பிரைவேட் லிமிடெட்” (Tamil Nadu Wilderness Experiences Corporation Private Limited) என்ற பெயரில் 4 கோடி ரூபாய் முதலீட்டில் லாப நோக்கில் தொடங்கப்படும் நிறுவனம் அரசுக்கு ஆண்டு தோறும் 40 கோடி ரூபாய் லாபம் ஈட்டலாம். ஆனால் சூழலுக்கு நிரந்தரமாக ஏற்படும் இழப்பு பல 400 கோடி ரூபாய்களை விட அதிகமாகவே இருக்கும். எனவே தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி முழுவதுமாக கைவிடப்பட வேண்டும். காடுகளுக்குள் அதற்கு தொடர்பில்லாதவர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.
நம்மால் புதிதாக காடுகளை உருவாக்க முடியாது. இருக்கும் காடுகளை அழிக்கும் பணியில் தனியார் வணிக நிறுவனங்களுக்கு இணையாக அரசே ஈடுபடக்கூடாது.
குறிப்பு(2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூவுலகு இதழில் வெளியான கட்டுரை)
– வழக்கறிஞர். பி.சுந்தரராஜன்
அரசாணை