செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி் ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள ஒன்றிய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சன் பார்மா மருந்து ஆலை நிறுவனமானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து 3.72 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக தவறான தகவலை சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006 வெளியான பிறகு ஆலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவாக்கத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாத காரணத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி செல்லுபடியாகது என்பதால் தற்போது விரிவாக்கப் பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ECஇந்த மருந்து உற்பத்தி ஆலையானது 1992ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. தற்போது சன் பார்மா நிறுவனம் தனது உற்பத்தித் திறனை மாதத்திற்கு 25.5 டன்னிலிருந்து 134.082 டன்னாக விரிவுபடுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தது. இந்த ஆலையானது சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை விதிகள் 1994ம் ஆண்டு உருவாக்கப்படும் முன்பே செயல்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. தற்போது வரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த மனுவானது பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு 09.05.2022 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஸ்டான்லி ஹெப்சான் வாதங்களை முன்வைத்தார். இவ்வழக்கின் அடுத்த விசாரணைத் தேதி வரைக்குமாவது ஆலை விரிவாத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு கோரினார். தேசிய காட்டுயிர் வாரியத்தின் அனுமதியின்றி ஆலை விரிவாக்கத்தைத் தொடங்க முடியாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என்று தெரிவித்த தீர்ப்பாயம், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கை மே 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
– செய்திப் பிரிவு