1978ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் நாள், அந்த கோடரி தாங்கிய மனிதர்கள் குழு, சில போலீசாருடன் அந்த வனப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தனர். பொழுது விடிவதற்குள், போலீஸ் தம்மை சுற்றி ஒரு வட்டம் அமைக்க அந்த மரங்களை வெட்டிவிட வேண்டும் என்ற முடிவோடு அங்கு சென்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி! என்னவெனில், அங்கு இறங்கிய போதே கூட்டம் கூடமாக பலர் அந்த பகுதியின் அத்தனை மரங்களையும் ஒன்றுவிடாமல், மூவர் மூவராக கட்டிக்கொண்டு நின்றிருந்தனர். அதிலும் அத்தனை பேரும் பெண்கள்! அத்தனை பெரிய கூட்டம் இத்தனை விரைவாக, தாம் வரும் தகவல் அறிந்து எவ்வாறு வந்து சேர்ந்தனர் என்பது எவருக்கும் புரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் காத்திருந்தனர். இரவு வரை காத்திருந்துவிட்டு திரும்பி சென்றனர். அந்த நிகழ்வு வரலாற்று புகழ்மிக்க ‘சிப்கோ இயக்கத்தின்’ ஒரு நிகழ்வு. சிப்கோ இயக்கம் சுமார் 5 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இமய மலைகள் சூழ்ந்த இன்றைய உத்தரகண்ட் மாநிலத்தின் (அன்றைய உத்தர பிரதேசம்) ‘கார்வால் மலைப்பகுதியில்’ 1973ஆம் ஆண்டு, ‘சிப்கோ இயக்கம்’ துவங்கியது. அரசாங்கத்தால் ஒப்பந்ததாரர்களுக்கு தாரைவார்க்கப்பட்ட மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டமாக துவங்கியது இந்த இயக்கம்.
சிப்கோ போராட்டம்
சிப்கோ இயக்கத்தின் நிகழ்வுகளுக்குள் நாம் ஆழமாகப் போக வேண்டாம். இங்கு வந்த அனைவரும் பெண்களாக இருக்க என்ன காரணம் என்ற கேள்வியைப் பின்தொடரலாம். வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதால் பெண்களுக்கு என்ன பிரச்சனை? இங்கு மட்டுமல்ல. பொதுவாக சூழலியல் சார்ந்த போராட்டங்கள் அனைத்திலும் அணிதிரண்டு வருபவர்கள் பெண்களாகத்தான் இருக்கின்றனர். தமிழகத்தில் நடந்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், நியுட்ரினோ ஆய்வக எதிர்ப்புப் போராட்டம், கமுதியில் சூர்யமின் உற்பத்தி மையத்திற்கு எதிரான போராட்டம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுக எதிர்ப்புப் போராட்டம் என அனைத்திலும் முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள்!
பெண்களும் சூழல் போராட்டங்களும்:
இதற்கு மிக முக்கியக் காரணம், இது போன்ற ‘வளர்ச்சித்’ திட்டங்களால் முதலில் பாதிப்படைபவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். காட்டின் மரம்வெட்டுதல் போன்ற பெரும் நிகழ்வுகள் பற்றி ஆயிரம் பக்கங்களுக்கு மேல் படித்திருப்போம். அதனால் எப்படி காடு அழிகிறது, அதனை காக்க என்ன செய்ய வேண்டும் என்று பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறோம். இதில் குறிப்பிட்டு வனங்களின் ‘Minor Forest Products (MFP)’ பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. MFP என்பது வனங்களில் புற்கள், இலைகள், சுள்ளிகள், காய்கனிகள், எண்ணெய், பசை, மூங்கில் போன்ற சிறிய அளவில் சேகரிக்கப்படும் பொருட்கள்; அதாவது சிறு வனப்பொருட்கள். இந்த சிறு வனப்பொருட்களை வாழ்வாதாரமாகக் கொண்டு பல்வேறு சமூகங்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த சிறு வனப்பொருட்களை சேகரிக்கும் வேலையை பெண்களே செய்கின்றனர். ஆண்கள் நிலங்கள் சார்ந்த அல்லது தொழில் உற்பத்தி சார்ந்த ஏதேனும் வேலைகளில் இருக்கும்போது, MFP போன்ற பொதுவில் கிடைக்கும் பொருட்களை சேகரித்தோ, அதை சார்ந்தோ பெண்கள் உள்ளனர். இதனால் தான் காட்டின் மரங்கள் வெட்டப்படும் போது, அது தங்கள் மேல் விழும் கோடரியாக எண்ணி அதை தடுக்க முன்வருகின்றனர் பெண்கள். சிப்கோவில் மரங்களின் மேல் விழப்போகும் கோடரியை தான் ஏந்துவதாகக் கூறி மரங்களைக் கட்டிக்கொண்டு நிற்கும் பெண்கள் கூறிய காரணம் இதுவே. ஆண்களை விட பெண்கள் இன்னும் அதிகமாக அவர்களின் சூழலோடு இணைந்துள்ளதாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
சூழலியல் ஆய்வாளர் அமித்தா பவிஸ்கர் (Amita Baviskar), தான் எழுதிய ‘In the belly of the river’ புத்தகத்தில், பழங்குடி இனப்பெண்கள் எவ்வாறு காட்டினோடு பினைந்துள்ளனர் என்பதை பதிவு செய்கிறார். பெரும் அனையான (Large Multipurpose Dam LMD) சர்தார் சரோவர் அணையின் கட்டுமானத்தினால் மூழ்கப்போகும் ஒரு பழங்குடியின கிராமத்தில் உள்ளவர்களை ஆய்வு செய்கையில், அங்குள்ள பெண்கள் சுள்ளி பொறுக்குவது, மீன் பிடிப்பது, சிறு சிறு விலங்குகளை வேட்டையாடுவது, இலை தளை சேகரிப்பது, கால்நடை மேய்ப்பது என ஒவ்வொரு அடியும் வனத்தினை நம்பியே உள்ளனர் என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளார். இதனால் தான் அணையினால் காடு மூழ்கப் போகிறது என்ற தகவல் வந்ததும் சாரை சாரையாக பெண்கள் அதை எதிர்த்து அணிதிரண்டனர்.
தமிழகத்திற்கு வருவோம்! கமுதியில் சூரிய ஒளியிலிருந்து மின்னுற்பத்தி செய்ய, சூரிய மின்னுற்பத்திப் பூங்கா அமைக்கும் பணி துவங்குகிறது. 2500 ஏக்கர் தரிசு நிலம் என்று சொல்லப்பட்ட பகுதிகளையும், பிற கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் கொண்டு அதானி நிறுவனத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு இந்த உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. இதனை எதிர்த்து களத்திற்கு வந்தவர்கள் பெண்களே. காரணம், அரசு தரிசு நிலம் என்று பெயர்வைத்துள்ள புல்வெளி பகுதியை நம்பி, அதன் மூலம் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் இவர்கள். “அது தரிசுநிலம் அல்ல, மேய்ச்சல் நிலம்!” என்ற குரலோடு களம் வருகின்றனர். இந்த மின்னுற்பத்திப் பூங்கா அங்கிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தைத் தான் பாதிக்கப்போகிறது. ஆனால், அதையும் தாண்டி இன்று மின்னுற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பழவேற்காட்டில் அங்கிருக்கும் மீனவப்பெண்கள் ஒரு விருந்து வைத்தனர். தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்து இந்த விருந்து நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு சென்றபோது தான் புரிந்தது இது வெறும் விருந்து மட்டுமல்ல. பழவேற்காடு மீனவப்பெண்களின் போராட்ட வடிவம் என்று! ஒன்றிய அரசின் உதவியோடு Adani Ports and Special Economic Zone (APSEZ) நிறுவனத்தினால் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கும் திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. சுமார் 6000 ஏக்கர் பரப்பளவுக்கு காட்டுப்பள்ளி துறைமுகம் தற்போது இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கிராமங்கள், விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், அலையாத்திகள், கழிமுகங்கள், பிற சூழலுக்கு இன்றியமையாத அமைப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு விரிவாகப்போகிறது. இதன் கட்டுமானத்தினால் கடல் நீரோட்டங்கள் பாதிக்கப்படும், கடல் அரிப்பு தீவிரமாகும், பழவேற்காடு ஏரியையும் கடலையும் பிரிக்கும் நிலம் மொத்தம் அரிக்கப்பட்டால் பழவேற்காடு ஏரியே காணாமல் போகும். இதனை எதிர்த்து இந்த பகுதி முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில் ஒரு போராட்டம் தான் இந்த விருந்து!
மேற்சொன்ன அனைத்து போராட்டங்களிலும் போராடியவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி இன்னுமோர் ஒற்றுமை இருக்கிறது. இவை அனைத்தும் சூழல் பொதுவெளிகளை காக்கும் போராட்டங்கள்! இந்த சூழல் பொதுவெளிகளுடன் பெண்கள் எவ்வாறு பினைந்துள்ளனர் என்பதை பார்க்கும் முன் ‘சூழல் பொதுவெளிகள்’ (Ecological Commons) என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.
சூழல் பொதுவெளிகளும் பெண்களும்:
யாருக்கும் தனிநபர் உரிமையாய் இல்லாமல், ஒரு சமூகத்தின் அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ள உரிமையுள்ளவற்றை ‘பொதுவெளிகள்’ (Commons) என்கின்றனர். உதாரணமாக ஊரின் பொதுவான மந்தைவெளி, மேய்ச்சல்வெளி, ஊர் பொதுக்குளம், பொதுக்கிணறு, நகரங்களின் நடைபாதைகள், கடற்கரைகள், இன்னும் கூறப்போனால் ஆறு, குளம், கடல், மலை இப்படி பொதுவாக உள்ள அனைத்தும் ‘பொதுவெளிகள்’ தான். இவற்றை ‘புறம்போக்கு’ என்றும் கூறுகின்றனர். இது எந்த ஒரு தனிநபரின் சொத்தும் அல்ல. ஆனால் அந்த வெளியையும் அதன் வளங்களையும் சுற்றி வாழும் யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை தன் வாழ்வாதாரமாகக் கொண்டு ஒரு சமூகம் இயங்கும். மேற்சொன்ன உதாரணங்கள் எல்லாம் ‘சூழல் பொதுவெளிகளுக்கும்’ பொருந்தும். இது தவிர மொழி, எழுத்து போன்ற ‘கலாச்சாரப் பொதுவெளிகளும்’ உண்டு. அதற்குள் நாம் போக வேண்டாம்.
ஒரு சூழல் பொதுவெளியை சூழ்ந்து ஒரு சமூகம் வாழ்கையில், தனிநபர் சுயநலத்தினாலும் சுயலாபத்திற்காகவும் அந்த பொதுவெளியின் வளத்தை அதிகமாக உபயோகித்து, அதனை அழித்துவிடுவர் என்று ஹார்டின் (Garrett Hardin) என்பவர் 1968ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதுகிறார். இது தான் மிகவும் புகழ்பெற்ற அல்லது புகழ்பெற வைக்கப்பட்ட ‘The Tragedy of Commons’ கட்டுரை. ஆனால் இது என்றோ ‘மிகவும் குறுகிய அனுமானம்’ என்று நிராகரிக்க பட்டுவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக அழியாமல் உபயோகத்தில் உள்ள பொதுவெளிகள் இன்னும் இருக்கிறது என்று எலினர் ஆஸ்த்ரம் (Elinor Ostrom) நிரூபிக்கிறார். இதற்காக அவர் நோபல் பரிசு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வாளர்கள் எப்படி சூழல் பொதுவெளிகள், தற்போதைய முதலாளிய வளர்ச்சியில் கைவிடப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாய் இருக்கிறது என்பதை ஆராய்ந்து கூறுகின்றனர். முதலாளித்துவ உற்பத்தி முறையில் லாப நோக்கில் போடப்படும் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாருக்குமானதாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சொத்துக்களை சேர்த்துக் கொண்டே போகும். மற்றொன்று ஓரம்கட்டப் பட்டுக்கொண்டும், உறிஞ்சப்பட்டுக்கொண்டுமே இருக்கும். அத்தகைய சமூகங்கள் இயற்கையாய் அமைந்த இந்த பொதுவெளியையும் அதன் வளங்களையும் நம்பி வாழ்கின்றனர். பொதுவெளிகளை ‘Haven to excluded population’ என்கின்றனர் பொதுவெளிகளைப் பற்றி ஆராயும் அறிஞர்கள்.
இந்த இடத்தில் தான் பொதுவெளிகளுடன் பெண்களுக்கு உண்டாகும் இணைப்பு தெரிகிறது. ஆண்களை ஒப்பிடுகையில் கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், நகர்வு (Mobility) என அனைத்திலும் ஒதுக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். இன்னும் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்துகள், பழங்குடியினப் பெண்களின் நிலை கூற முடியாத அளவிற்கு பெரும் சாபம். இவர்கள் தான் இந்திய சூழல் பொதுவெளிகளை பெரிதும் நம்பும் சமூகமாக உருவாகின்றனர்.
காடுகளில் சுள்ளி முதலிய சிறு வனப்பொருட்களை சேகரிப்பது, புல்வெளிகளை கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக உபயோகிப்பது, பழவேற்காடு போன்ற ஏரிகளில் உற்பத்தி கருவிகள் எதுவுமின்றி ஒரு கூடையை முதுகில் மாட்டிக்கொண்டு கைகளில் மீன் பிடிப்பது, கடற்கரையில் சிப்பி சேகரிப்பது போன்று மிகவும் இணக்கமாக அந்த சூழல் பொதுவெளிகளுடன் இவர்களின் வாழ்வாதாரங்கள் பிண்ணிப் பிணைந்துள்ளது.
“காடுகள் அரசுடைமை ஆகாது; அதை நம்பியுள்ள பழங்குடி மக்களுக்கும் அதில் உரிமை உள்ளது” என்பன போன்ற கருத்தாக்கங்கள் வரத்துவங்கியபின் ‘Joint Management Committee’ (JMC) போன்ற அமைப்புகள் 1989க்கு பின் உருவாக்கப்பட்டது. காட்டைப் பாதுகாப்பதை பழங்குடி மக்களோட சேர்த்துப் பேசும் இந்நேரத்தில் கூட, அந்த காட்டோடு பெண்களுக்கு உள்ள தொடர்பு பேசப்படுவதில்லை. எந்த திட்டங்களிலும் கொள்கைகளிலும் இந்த பொதுவெளிகளின் மீதான பெண்களின் உரிமைகள் காணப்படுவதில்லை. இது எத்தனை பெரிய அநீதி! பொதுவெளிகளின் அழிப்பால் முதலில் பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்களுக்கு அதன் மீது உரிமையோ அதிகாரமோ பிறரை சார்ந்து தான் பெற வேண்டும் என்பது, நமது சமூகத்திலும் அரசிலும் இருக்கும் பெண்ணியப் பார்வையற்ற தன்மையையே எடுத்துரைக்கிறது.
இதை நீக்கி பொதுவெளிகளின் மீதான பெண்களின் உரிமையை சோமா கிஷோர் பார்த்தசாரதி போன்ற சூழல் களப்போராளிகள் கோரி வருகின்றனர். சூழல் பொதுவெளிகளில் பெண்களின் உரிமையை பற்றி தனியே பேச வேண்டிய தேவை இன்றுள்ளது. சூழலியலில் பெண்ணிய பார்வையின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. வெறும் ஆறுகளுக்கு பெண்களின் பெயர் வைத்தோம், கடலை கடலன்னை என்று கும்பிட்டோம் என்பதெல்லாம் வெற்று மேல்பூச்சுகள் தான். இன்னொரு முறை ‘குழாயடிச் சண்டை பெண்களைப் போல’ என்ற பதத்தை உபயோக்கிக்கும் முன், எத்தனை முறை ஆண்கள் தண்ணீர் பிடிக்க குழாய்க்கு சென்றிருப்போம் என்று சிந்தியுங்கள். பொது வளமாக நீர் இருந்த வரை எந்த சண்டையும் இல்லை. அதை சேகரிக்கும் பொறுப்பை பெண்களின் மீது மட்டும் தூக்கி போட்டுவிட்டு, அதை குழாயில் தருவதாகக் கூறி, அரசின் மோசமான மேலாண்மையால் அது அரிதான பின்பு தான் இங்கு சண்டை வந்தது. ஆக இதில் குறைகூற வேண்டியது முதலாளிய உற்பத்தி முறை, அதை காக்கும் அரசு, அதில் பல பொறுப்புகளையும் சுமைகளையும் பெண்கள் மீது தூக்கிப்போட்ட ஆணதிகாரம்.
சூழலியம் பேசுகையில் பெண்களின் உரிமைகளை விட்டுவிட்டு பேசுவதென்பது அரைகுறை தான். அனைவரையும் உள்ளடக்கிய ‘Inclusive Environmentalism’ஆக அது அமையாது. பெண்கள் பொதுவாகவே போர்க்குணம் கொண்டவர்கள், அதே நேரத்தில் அதிகம் சுரண்டப்படுபவர்கள். இதனாலேயே அனைத்து சூழல் போராட்டங்களிலும் பெண்களை முதல் வரிசையில் நாம் பார்க்க முடிகிறது. அவர்களின் சூழல் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளை பேச வேண்டியது சூழலியத்தில் மிக முக்கிய அங்கம்.
சூழலியல் பெண்ணியம் பேசுவோம்!
– த ஹரி பாரதி