எல்லாவற்றுக்கும் பச்சை சாயம் அடிக்காதீங்க ப்ளீஸ் ! (எத்தனால் திட்டத்திற்குப் பூசப்படும் சூழலியல் சாயம்)

 சமீப காலமாகக் கொண்டுவரப்படும் பல்வேறு திட்டங்களுக்கு சூழலியல் சாயம் பூசப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு மின் வாகனங்கள், சேலம் எட்டுவழிச் சாலை, ஈஷாவின் செயற்கை காடு வளர்ப்பு எனப் பல்வேறு திட்டங்கள், அவை  செயல்பாட்டுக்கு வந்தால் சூழலியல் பாதுகாக்கப்படும் என்பது போலப் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், ஆராய்ந்து பார்த்தால் உண்மையில்  அப்படி இருப்பதில்லை. 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்கும் ஒன்றிய அரசின் முயற்சியும் அப்படியானது தான். பெட்ரோல் உற்பத்தியில் வெளிநாட்டு இறக்குமதியைக் குறைப்பதற்காகவும், வாகனத்திலிருந்து வெளியேறும் நச்சுப்புகைகளை(கார்பன் உமிழ்வை) குறைப்பதற்காகவே பெட்ரோலில் எத்தனால் கலக்கும் இந்தத்  திட்டம் கொண்டுவரப்படுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. கடந்த ஜூன் 05 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடியும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வலியுறுத்தினார்.

இத்திட்டத்தின் சாதக பாதகங்களை பார்க்கும் முன் இத்திட்டத்தின் சாராம்சங்களைத் தெரிந்து கொள்வோம் .பெட்ரோலில் எத்தனால் கலப்பது பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது, இதில் அதிகபட்சமாக பிரேசில் நாட்டில்  27% எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது. அமெரிக்காவில்  30% எத்தனால் கலப்பை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா தற்பொழுது 10% எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துகிறது. ஐரோப்பிய யூனியன் தனது 10% வாகனங்களை உயிரி வாயு (bio fuel) க்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கடந்த 2013-14ம் ஆண்டு 1.53% எத்தனாலும், 2017-18ம் ஆண்டு 4.22% எத்தனாலும், 2019-20ம் ஆண்டு 5% எத்தனாலும் பெட்ரோலில் சேர்க்கப்பட்டுப்  படிப்படியாக முன்னேறி, தற்பொழுது 2020-2021ம் ஆண்டு 8.5% எத்தனால் பெட்ரோலில் கலக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 10% எத்தனாலும், 2025க்குள் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது அரசின் திட்டம்.  04.06.2018ல் வெளியிடப்பட்ட தேசிய உயிரி எரிபொருள் கொள்கை (National Policy on Biofuels) அறிக்கையில் 20% எத்தனால் கலப்பதற்கு 2030 வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21.12.2021ல் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அந்த இலக்கு 2025 ஆம் ஆண்டாகக்  குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, இந்தியாவில் 85% வாகன எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகின்ற சூழலில், பெட்ரோலில் உள்நாட்டில் உற்பத்தியாகும் எத்தனாலை  கலப்பது நிச்சயம் பெட்ரோல் இறக்குமதியை குறைக்க உதவும், அதனால் பெட்ரோல் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவு சற்று குறையலாம். மேலும், எத்தனாலுக்கு  தேவையான மூலப்பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் முறையை சரியாக நடைமுறைப்படுத்தினால் விவசாயிகளும் இந்த திட்டத்தினால் பயன்பெறக் கூடும். ஆனால், பெட்ரோலில் 10 சதவீதமோ,  20 சதவீதமோ எத்தனால் கலப்பதினால், அது சுற்றுச்சூழலைப்  பாதுகாக்க பெரிய அளவில் உதவ போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பெட்ரோலில் எந்த அளவிற்கு எத்தனால் கலக்கப்படுகிறதோ அதை பொறுத்துத் தான் அதன் கார்பன் உமிழ்வும் குறைகிறது. பெட்ரோலில் 85% எத்தனால் கலக்கப்படும் போது, அது 15-19% வரை பசுமை இல்ல வாயுக்கள்  வெளியேற்றத்தைக் குறைக்கிறது எனவும். அதுவே, 10% எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படும் பொழுது வெறும் 1% பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தையே  அது குறைக்கிறது  என்று (Centre for Transportation Research-Argonne National Laboratory) அர்கோன்னே தேசிய ஆய்வகத்தின் – போக்குவரத்து குறித்த ஆய்வு மையம்   நடத்திய ஆய்வில் தெரியவருகிறது. இதே போன்று, சூழலியல் அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப மையம் , என்விரோன்மென்ட் கனடா நடத்திய ஆய்வில் E-85 வகை  பெட்ரோல் பயன்படுத்தும் பொழுது நைட்ரஜன் ஆக்சைட்கள் Nox (-45%), மீத்தேன் அல்லாத ஹைட்ரோகார்பன்கள் NHMC  (-48%), 1-3 பூய்டாடையின் (-77%), பென்சின் (-76%) குறைவதாகவும், பார்மால்டிஹைடு   (73%), அசிடால்டிஹைடு  (2540%) உயர்வதாகவும். கார்பன் மோனாக்சைடு, கார்பன் டைஆக்சைடு  , மீத்தேன் அல்லாத கரிம வாயுக்கள் NMOG போன்றவைகளின் அளவுகளில் மாற்றம் இல்லை எனவும், அதுவே E-10 பெட்ரோல் பயன்படுத்தும் பொழுது கார்பன் மோனாக்சைடு CO (-16%) குறைவதாகவும், அதே வேலையில் மீத்தேன் அல்லாத ஹைட்ரோகார்பன்கள் NHMC (9%), மீத்தேன் அல்லாத கரிம வாயுக்கள் NMOG(14%), அசிடால்டிஹைடு (108%), 1-3 பூய்டாடையின் (16%), பென்சின் (15%) முறையே அதிகரிப்பதாகவும், நைட்ரஜன் ஆக்சைட்கள் (NOx), கார்பன் டைஆக்சைடு (Co2) ,  மீத்தேன் (Ch4) போன்ற வாயுக்களின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும்  தெரியவந்துள்ளது.

2018ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலைப் பயன்படுத்தும் பொழுது காற்று மாசிற்கு காரணமாக இருக்கும் நச்சுப் புகையின் அளவை அது 4% மட்டுமே  குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை நடைமுறைப்படுத்த 7.8 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை.   இந்த எத்தனால் தற்பொழுது மோலாசெஸ் –பி, மோலாசெஸ் –சி  மற்றும் நேரடி கரும்பு சாறுகளில் இருந்து என மூன்று முறைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எத்தனாலை சுத்திகரிக்க கொதிநிலை வடித்தல்  (Distillation) எனும் முறை கையாளப்படுகிறது. கொதிநிலை வடித்தல் செய்ய (Fossil Fuels) படிம எரிவாயு பயன்படுத்த வேண்டும், 7.௪ பில்லியன் லிட்டர் எத்தனாலை தயாரிக்க, சுத்திகரிக்க எரிக்கப்படும் படிம எரிவாயுவின் அளவு அதனால் வளிமண்டலத்தில் ஏற்படும் நச்சு புகை, 7.௪ பில்லியன் லிட்டர் எத்தனாலையும் அதன் மூலப் பொருளையும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல போக்குவரத்திற்கு தேவையான கார்பன் உமிழ்வை கணக்கில் கொண்டால், அது இந்த 20% எத்தனால் கலந்த பெட்ரோலைப்  பயன்படுத்துவதால் குறைக்கப்படும் கார்பன் உமிழ்வுக்கு கிட்டத்தட்ட இணையாகவே  இருக்கும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தி செய்ப்பட்ட 3.3 பில்லியன் லிட்டர் எத்தனாலில் 770 மில்லியன் லிட்டர் மோலாசெஸ் –பி மற்றும் கரும்பு சாறு கொண்டு தயாரிக்கப்பட்டவை, விவசாயத்தை பற்றிய ஒரு அடிப்படை அறிவு இருந்தால் கூட இவ்வளவு டன் கரும்பு விவசாயத்திற்கு எவ்வளவு நிறைய தண்ணீர் பிடிக்கும் என்பது புரியும். ஒரு கிலோ கரும்பு விளைய மட்டும் 2000முதல் 3000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில். இது நிச்சயம் இந்தியா போன்ற நிலத்தடி நீரை நம்பியே  விவசாயம் நடக்கும் நாட்டின் நிலத்தடி நீருக்கு நல்லதல்ல.  எப்படிப் பார்த்தாலும் சூழலியலுக்கு கேடு தரும் இத்திட்டத்தினைச்  சூழலைப்  பாதுகாக்க தான் கொண்டு வருகிறோம் என்று அரசு நம்மிடையே பிரசாரம் செய்வது வேடிக்கையின் உச்சம். இந்தியாவின் வாகனப்  புகையை குறைக்க வேண்டும் என்றால் வாகன நெரிசலை குறைப்பதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். வாகனத்தில் இருந்து வரும் (tail pipe) சைலன்சர்  மாசைக்  குறைக்க மின் வாகனம் உதவும். ஆனால். வாகனத்திலிருந்து வரும் மாசு தான் குறையுமே தவிர மின் வாகனங்களுக்கு தேவையான பெரும்பான்மையான மின்சாரம் அனல் மின் நிலையங்களில் இருந்து வருவதால் , வாகன சைலன்சர்களில் இருந்து புகை வெளியேறுவதற்குப்  பதிலாக, அதற்கு இணையான புகை அனல் மின்நிலையங்களின் புகைப்போக்கிகளில் இருந்து வெளியேறும்.

நாம் பயன்படுத்தும் மின்சாரம் பெரும்பான்மை அனல் மின்நிலையங்களில் இருந்து வரும் பச்சத்தில், மின் வாகனங்களும் இதற்கான தீர்வல்ல. இந்தியாவின் காற்றின் தரத்தை உயர்த்த, இந்தியாவின் கார்பன் உமிழ்வை குறைக்க நாம் செய்ய வேண்டியது அனல் மின் நிலையங்களில் இருந்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றலுக்கு மாறுவதே.

– வீ. பிரபாகரன்

இதையும் படிங்க.!